20
Jun
2025

வாகா எல்லையில் சாகாவரம் பெற்றவன் போல் கம்பீரமாய் நின்றிருந்தேன். ஏனெனில் நான் ஒரு இராணுவ வீரன். பிறக்கும்போதே எனது தாய்நாட்டைக் காக்க தனி அவதாரம் எடுத்து வந்ததாக எண்ணிக் கொண்டிருந்தேன். கடவுள் பெயரைச் சொன்னதைவிட ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையே எனது மந்திரச் சொல்லாக நின்றது ராணுவ உடை மீதுதான் எனக்கு இரகசியக் காதல் இருந்தது. என்பேச்சு, என்மூச்சு எல்லாமே ராணுவ வீரன் என்பதுதான். இது என் பிறவிப் பயன் என்று பெருமையோடு முழங்கிக் கொண்டிருந்தேன்.
நாட்டைக் காப்பதால், நாட்டுக்குத் தொல்லை கொடுப்பவனை அழிப்பதால் என்னை நானே இறைவன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இந்தக் காலத்தில் எனது நாட்டைக் காக்க இறைவன் அனுப்பிய இறைத்தூதனே நான் என்று எண்ணிக் கொண்டேன். என் மீசை முளைக்குமுன்னே மிலிட்டரி மேனாக வேண்டும் என்ற ஆசை முளைவிட்டு வளர்ந்து படர்ந்து என் வாலிப வயதை நிறைத்திருந்தது. யார் யாரோ வந்து என்ன என்ன ஆசைகளைக் காட்டியும், என் பெற்றோர்கள் தடுத்தும் அடம்பிடித்து நான் அணிந்து கொண்ட உடை இந்த இராணுவ உடை.
பல்வேறு திரைப்படங்களின் கதாநாயகன் என் வரலாற்றுப் பக்கங்களின் நாயகனாக வாழ்ந்தார்கள். அவர்கள் நிழலில் வில்லன்களோடு மோதுவதுபோல நிசத்தில் எதிரிகளோடு மோதி என் மக்களுக்காக உயிர் துறப்பேன் என உயிர் துடித்தேன்.
ஆனால் நினைத்தது ஒன்று நடக்கிறது ஒன்று. நான் ஆசைப்பட்டது எல்லாம் நடந்தது. படித்தேன், பயிற்சி எடுத்தேன், பதவியைப் பிடித்தேன் கம்பிரமாய் எல்லையில் காட்சியளித்தேன் குளிரிலும், வெயிலிலும், வேட்டை நாயைப் போல் காவல் காத்தேன். எல்லாம் சரிதான்! ஆனால் யாருக்காகக் காவல் இருந்தேன்? எதற்காகக் காவல் இருந்தேன் என்று எண்ணிப் பார்க்கும்போதுதான், நாடுகெட்டு நாசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. அடுத்தவர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவதைவிட நம்மக்களிடமிருந்து அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்றுதான் அழுது கொண்டிருக்கிறேன். இரவுப் பகலாகத் தூக்கமில்லாமல் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். நாயையும், பேயையும் காத்து நின்றுகொண்டு நாட்டைக் காப்பாற்றுகிறேன் என்று எப்படிச் சொல்ல முடியும்? வீடு தீப்பற்றி எரியும்போது பூட்டைக் காப்பாற்றி என்ன செய்ய? வீடு திருடப்படும்போது கேட்டைப் பாதுகாத்து என்ன பயன்?
நாற்றங்கால்களை பாதுகாக்கலாம்! வேலிச் செடிகளை எதற்குப் பாதுகாக்க வேண்டும். காக்கை குருவிகளை பாதுகாக்கலாம். கருநாகத்திற்கு ஏன் காவல் நிற்க வேண்டும்? பாதசாரிகளைப் பாதுகாக்கலாம் இந்தப் பாவம் செய்யப் பழகிப் போனவர்களை எதற்குப் பாதுகாக்க வேண்டும்? என்று பல கேள்விகள் எனக்குள் வந்து படாதபாடுபடுத்துகிறது.
பொள்ளாச்சிப் பகுதியில் அப்பாவிக் கல்லூரி மாணவிகளை வறுமையைக் காரணம் காட்டி காதல் வலையில் வீழ்த்தி அண்ணா விட்டுடுங்க என்று அலறிய போதும் வக்கிரப்புத்தியால் அவர்கள் வாழ்வை நாசப்படுத்திய பாவிகளைப் பாதுகாக்கவா? நான் பார்டரில் நிற்கிறேன்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் எண்ணற்ற கனவுகளோடு படிக்க வந்த மாணவியை மிரட்டிச் சீரழித்த அந்த மடையனைக் காக்கவா? நான் எல்லையில் எதிரியோடு போராட நிற்கிறேன்?.
திருமணம் என்ற நிலையில் ஆணும் பெண்ணும் குடும்பமாக வாழ்வது இயற்கையின் நியதி. இது சாதி பார்த்தா சங்கமமாக வேண்டும்? இதற்காகக் காதலர்களைத் தாங்கள் சாதிவலையால் சதி செய்து ஆணவக் கொலை என்ற பெயரில் அத்துமீறும் அயோக்கியர்களையும் அரசியல்வாதிகளையும் பாதுகாக்கவா நான் இராணுவ வீரன் ஆனேன்?
மருத்துவத்தின் பெயரால் நடக்கின்ற அழிவுகளையும் மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்க வெள்ளைக் கோட்டுக்குள் நடமாடும் கொள்ளைக் கூட்டத்தை வெளிஉலகிற்குக் கொண்டு வந்துவிடுவேன் என்று சொன்னதற்காக மருத்துவமனையிலேயே இளம் மருத்துவரை மானபங்கப் படுத்திய மானங்கெட்ட பயல்களைக் காக்கவா இந்த உடை அணிந்தேன்?
இந்தியா சமயச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டு அடுத்த மதத்துக்காரர்களின் கோவில்களை இடிப்பதும் அவர்கள் வழிபாட்டுக்கு இடையூறும் செய்கின்ற வக்கிரபுத்தி உள்ளவர்களை வாழ வாழவைப்பதற்காகவா நான் வாகாவில் நிற்கிறேன்?
கடவுளைத் தவிர கேட்க நாதியற்ற அப்பாவித் தமிழர்களின் வீடுகளை அதிகாரத்தைக் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கி அவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து வேடிக்கை பார்க்கும் தெருநாய்களைக் காக்கவா நான் இங்கு நிற்கிறேன்?
கள்ள ஓட்டுப்போடுவதும், கருப்புப் பணத்தை மாத்துவதும், எதிரிகளைச் சோதிப்பதும், யதார்த்த வாதிகளை அடக்குவதும் முடிந்தவரை கொள்ளையடிப்பதும், பிடிபட்டால் மருத்துவமனைச் சென்று அவசரச் சிகிச்சையில் படுப்பதும், வெள்ளை உடையில் நடிப்பதும், இந்தப் பச்சோந்திகளைப் பாதுகாக்கவா நான் கம்பீரமாய் நிற்கிறேன்?
போலிச் சாமியார்களாய் போதைப் பொருளில் மூழ்கிக் கோவிலுக்குள் குமரிப் பெண்களுடன் கூத்தடிப்பதும், காமக் களியாட்டத்தில் ஏமாளிகளை பயன்படுத்தி கடவுள் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு பெண்களைச் சீரழிக்கும் அந்த நடமாடும் மிருகங்கள் நலமாய் வாழ்வதற்கா நான் இங்கு பாதுகாவலாய் நிற்கிறேன்?
இந்தியாவின் எதிர்காலமே எங்கள் இளைஞர்கள்தான். ஆனால் அது இன்று போதையில் தள்ளாடுவதை வேடிக்கைப் பார்க்கும் மனிதர்களையும், அவர்களை போதை என்ற புதைகுழியில் தள்ளும் வியாபார நாய்களையும் நாட்டுக்குள் விட்டுவிட்டு நான் எதற்கு இங்கு நிற்கிறேன்?
காதல் என்ற பெயரில் காமத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் நெறிதவறி, தறிகெட்டு ஓடும் எங்கள் கண்ணகிகளே தன் காதலுக்கு இடையூறாக இருக்கிறான் என்று கணவனையே கூலிப்படை வைத்துக் கழுத்தறுப்பதும் உயிரில் பாதியான மனைவியின் உயிரை எடுக்கின்ற மானங்கெட்ட மனிதர்களை விட்டு விட்டு எல்லையில் என்ன செய்கிறேன்?
வீட்டுக்குள் நாகப்பாம்பு வந்துவிடக்கூடாது என்று கண்கொத்திப் பாம்பாய் காவல் நிற்க வீட்டுக்குள் இருந்த பெருச்சாளிகள் என் வீட்டை நாசப்படுத்திவிட்டதே. இனி எப்படிப் பொறுப்பேன்?
எல்லோரும் மன்னித்துவிடுங்கள் புனிதமான பணி என்றுதான் நான் இந்த இராணுவ வீரனை நினைத்தேன். புனிதமான பணிதான்! ஆனால் இந்தப் பாதகர்களுக்கு காவல் காக்கவா? இத்தனை பயிற்சி எடுத்தேன்? எந்நாட்டுக்கு அழிவு எதிரிகளால் அல்ல! என் தாய்நாட்டில் வாழ்கின்ற இந்தத் தறிகெட்ட மனிதர்களால்தான் என்பதனை புரிந்து கொண்டேன். என் பணி புனிதமாக வேண்டுமென்றால் இன்னொரு போர் எனக்குள் தொடங்க வேண்டும். என் துப்பாக்கிகளும், பிரங்கிகளும் என் நாட்டுக்குள் திரும்ப வேண்டும்.
எனது நாட்டுக்குள் நடமாடுகின்ற மனித மிருகங்களை வேட்டையாட உத்தரவு வாங்க வேண்டும். தூங்காமல் அவர்களைப் பொறுக்கி தூக்கிலிட வேண்டும். அரபு நாடுகளின் மரபுகளைப் பின்பற்ற வேண்டும். அறுக்க வேண்டியதை அறுத்து, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். அதுவே என் பணியாக ஆண்டவன் கொடுத்ததாக எண்ண வேண்டும்.
சாதி, மதம், இனம், கட்சி என்று கூட்டத்தை வைத்துக் கொண்டு கொள்ளையடித்துக் கொலை செய்து, பெண்களைச் சூறையாடும் பித்தலாட்டக்காரர்களை கூண்டோடு அழிக்க வேண்டும். என் கண்ணியமான பதவியை களங்கப்படுத்திய அதாவது பயிரைப் பாதுகாக்க வந்த என்னை வேலிக்கு வேட்டி துவைக்கவிட்ட விளங்காத நாய்களை விரட்டி அடிக்க வேண்டும். இராணுவ வீரனுக்கு அரசு கொடுக்கும் மரியாதை இதுதான்! நான் செய்வது கொல்லையல்ல அறுவைச் சிகிச்சை! இது இப்போது அவசரச் சிகிச்சை! அறுத்திடுவோம். அதற்குத் தடையாய் இருப்பவர்களை வெறுத்திடுவோம். உண்மைக்காய் உயிர் கொடுப்போம்! இது ராணுவ வீரன். இருக்கட்டும்! தேவைப்பட்டால் உயிர் எடுப்போம்! இதுவும் இராணுவ வீரன்!
“நாட்டுக்குள் பல
மிருகங்கள்…
நடமாடுகின்றன
மனித உருவில்…”