27
Jun
2025

உடலில் தெரிகின்ற காயங்களுக்கு உடனடியாக மருத்துவம் செய்வோம். மற்றவர்களும் நம்மை நன்கு கவனித்துக் கொள்வார்கள். நமக்கு ஏற்படும் மனக்காயங்களுக்கு யார் மருந்து தடவுவது? உடல் காயத்தில் உலகில் வாழ்பவர்களைவிட மனக்காயத்தால் தினமும் நொந்து வாழ்கிறவர்கள் இந்த மண்ணில் ஏராளம்!.
சிறுவயதில் இருக்கும்போது நினைத்த பொருளை வாங்க ஆசைபட்டு, நினைத்த இடத்திற்குப்போக விரும்பி, நினைத்த உணவை உண்ண ஆசைப்பட்டு, நினைத்த ஆடையை உடுத்த ஆசைப்பட்டு கிடைக்காதபோது மனம் வருந்தியிருப்போம்.
கிடைத்த நண்பனின் பிரிவு, நாம் விரும்பிய காதல் கை நழுவும்போது, நினைத்த படிப்பு, வேலை, மனைவி, மக்கள், அமையாதபோது சிலருடைய மரணங்கள், தொழிலில் ஏற்பட்ட தோல்விகள், உறவினர்களின் அவமதிப்பு, தகுதி அடிப்படையில் புறக்கணிப்பு இவை அனைத்தும் நமக்கு மனத்துயரத்தை ஏற்படுத்தியிருக்கும்.
பேருந்தைத் தவறவிட்டது, சில பொருட்களைத் தொலைத்தது. நல்ல ஆடை கிழிந்தது, சிலரோடு தேவையில்லாமல் சண்டையிட்டு பிறர் நம்மைத் தவறாகப் புரிந்து கொண்டது. காரணமில்லாமல் வம்பிழுப்பது இப்படியும் சின்னச் சின்ன வருத்தங்களையெல்லாம் நம் சந்தித்து வந்து கொண்டு தான் இருக்கிறோம்.
இதனை ஒருமுறை எண்ணிப்பாருங்கள். ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு நேரத்தில் ஏதாவது ஒன்று நம்மை ரணப்படுத்தியிருக்கும் நீங்கள் ஒருமுறை இதனை எண்ணிப் பாருங்களேன். சில அவமானங்கள், அவமதிப்புகள் தவறான புரிதல்கள், தேவையற்ற விமர்சனங்கள் இவற்றையெல்லாம் கடந்துதான் வந்திருப்பீர்கள். அவை அப்போது நமக்கு மிகவும் துயரமாக இருந்தாலும் காலம் கடந்ததும் காயங்கள் மெல்ல மெல்ல மறைந்து விட்டது. அது இப்போது அவ்வளவு பெரிய துயரமாகத் தெரியவில்லை.
ஆனால் காலம் முழுவதும் கல்லறைக்குப்போகும் வரை ஆறாத புண்ணாக மாறாமல் இருப்பது துரோகங்கள்தான். துரோகம் என்பதனை வாழ்க்கையில் சந்திக்காத மனிதர்களே கிடையாது. நட்போடு, அன்போடு வாழ நினைக்கிறவர்கள் காதலைக் காதலிக்க ஆசைப்படுகிறவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி வீழ்த்தப்படுவது துரோகங்களால்தான். உலகில் அன்பு இருக்கும்வரை மன்னிப்பு இருக்கும்வரை குறிப்பாக இதயம் நமக்குள் இருக்கும் வரை துரோகத்தால் நாம் வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது.
எதிரிகளால் இந்த மானிடச் சமூகம் அழிந்ததைவிட துரோகிகளால் வீழ்ந்ததுதான் அதிகம். காரணம் அன்புக்கு முன்னால் நாம் அனைவரும் பலகீனமானவர்களே… காந்தியைக் கண்டு வெள்ளைக்காரன் பயந்தான் காரணம் காந்தி கத்தியோடு வந்தால் நாங்கள் துப்பாக்கி தூக்கியிருப்போம். துப்பாக்கியோடு வந்தால் பீரங்கியால் அடக்கியிருப்போம். ஆனால் அகிம்சையால் வந்ததால் அதனை எதிர்க்க எங்களிடம் ஆயுதங்கள் இல்லை என்றார்கள். அதனால் காந்தியின் முன்னால் சரணடைகிறேன் என்றார்கள்.
அதுபோல் எவர் வந்தாலும் போராடுவோம். எந்தக் கருவிகளைக் கொண்டு வந்தாலும் நின்றாடுவோம். ஆனால் அன்பை வைத்து நம்மை நம்ப வைத்து கழுத்தை அறுக்கும்போது நமது அன்பு நமது கையைக் கட்டிவிடும் மனதிற்குள் அழுவதை விட மற்றென்ன செய்ய முடியும்?
ஒருவர் ஏன் நமக்குத் துரோகம் செய்கிறார். நமது வாழ்க்கை அவருக்குப் பிடிக்கிறது. அதனால் அதனின் நிழலில் வாழ ஆசைப்படுகிறார். அதற்காக நமது அன்பைப் பயன்படுத்திக் கொள்கிறார். அதிகமாகப் புகழ்வார்கள், குழைவார்கள், அழுவார்கள், துடிப்பார்கள். இப்படியெல்லாம் நடிப்பார்கள் இதனை உண்மை என்று நம்பி அந்த சீரியல் நடிப்பினை நம்பி நாமும் உயிரைக் கொடுக்கத் துணிவோம். அவர்கள் நம்மைப்போல் வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு நம்மைக் காலி செய்து அந்த இடத்தில் அமர குறுக்கு வழிதேடுவார்கள். விசத்தைக் கக்குவார்கள், முகவரி இல்லாமல் எழுதுவார்கள். எதிராகப் பல புகார்களை எழுப்புவார்கள். பொய்யான தகவல்களைப் பரப்புவார்கள். இடம் பார்த்து அடிப்பார்கள் எதிரியின் கூடாரத்தில் இருப்பார்கள். இவை அனைத்தும் நம் கண்முன்னே நடக்கும். கழுத்தறுப்பும் இருக்கும் ஆனால் எதுவுமே செய்ய முடியாமல் அன்பு, உறவு, கட்டிப்போட்டதால் நாம் கையறு நிலையில் கண்ணீர் மல்க கல்லறையில் உயிரோடு வைக்கப்பட்டிருப்போம்.
துரோகத்திலேயே மிகக்கொடுமையானது எது? என்று யோசித்துப் பாருங்கள். அதனைச் செய்தவர்கள் அது யாருக்குமே தெரியாது என்று நம்புவது! ஆகவே நம்மிடமும் பழைய நட்போடு பழகுவது தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும் இவ்வளவு கொடுமையாக நம்மை உயிரோடு இரண களப்படுத்தியபோதும். கோபத்தில், ஆத்திரத்தில் அவர்களைக் காயப்படுத்திவிடக் கூடாது என்று எண்ணுகிறோமே! அதுதான் நம்மிடம் இருக்கும் கடவுள் தன்மை.
துரோகத்தால் வீழ்ந்தவர்களை கணக்கிட்டுப் பார்த்தால் முதலில் வருவது இயேசு கிறிஸ்து இவரை யூதாஸ் என்பவர் காட்டிக்கொடுத்தார் என்று இன்றுவரை கிறித்தவ மதம் அவரைக் கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கிறது. இயேசு அதனால் ஆடைகள் பறித்து சவுக்கால் அடித்து, ஆணியால் சிலுவையில் அறைந்தபோதும் இவர்களை மன்னியும் என்று இறைவனிடம் வேண்டினார். ஆனால் அவரைக் காட்டிக்கொடுத்தவன் நேரில் வரும்போது இவன் பிறவாமல் இருந்தால் பூமி நலமாக இருக்கும் என்று சபிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் பாடுகளைப் படுமுன் அவர் காட்டிக் கொடுக்கும் நிகழ்வினையும் நினைத்து தனியாக அழுதுகொண்டு இருக்கும்போது அவரது வியர்வையையும் இரத்தமாக வெளியேறியது. நண்பன் பகையானான் நஞ்சை அமுதாக ஏமாற்றிக் கொடுத்து மெல்ல மெல்லச் சாவதை அருகிலிருந்து இரசிக்கும் ஒருவனைத்தான் நான் கள்ளமில்லா அன்பு செய்தேனா? அதன் வலி எவ்வளவு கொடூரமாய்க் கொல்லும் யோசித்துப் பாருங்கள். ஆண்டவனால் கூட தாங்க முடியாததை நாம் அனுபவித்துத் தானே ஆக வேண்டும். மனதிற்குள் அழுது கொள்ளுங்கள் மருந்து கிடையாது!
துரோகம் என்பது நம்மை வீழ்த்துவதற்காக வதந்திகளைப் பரப்புவது, இல்லாதது பொல்லாதது கூறி சாட்சிகளை நிறுத்துவது அல்லது முகத்தை மறைத்துக் கொண்டு, முகவரி இல்லாமல் கடிதம் எழுதுவது நம்மை வீழ்;த்துவதற்கு நமக்கு மேல் அதிகாரிகளை நம்ப வைக்க இந்த நாடகத்தை நடத்துவார்கள். நாம் கூடப் பயணிக்கும் அந்த நரிகள்!
குறிப்பாக அரசுப் பணிகளிலும், ஆண்டவன் பணியைச் செய்ய வந்ததாகச் சொல்கிறவர்களிடத்திலும் முதுகில் குத்துகிற, முகவரி இல்லாக் கடிதங்கள் அதிகமாக நடமாடும். இவர்கள்தான் பதவிக்கு ஆசைப்பட்டு கூட இருப்பவர்களை குறுக்கு வழியில் குழிகள் பறித்து அதில் அவர்களை வீழ்த்தி நாற்காலியைப் பிடிக்க அல்லது பிடித்தவர்களை நாற்காலியில் அமரவைக்க இந்த நாடகமாடுவார்கள் அல்லது அடுத்தவர் வளர்ச்சி பிடிக்காமல் அவர்கள் திறமையைக் கண்டு பொறாமையில் அவர்களுக்கு மட்டும் கிடைக்கிறதே என தகுதியில்லாமல் பதவிக்கு ஆசைப்படும் அயோக்கியர்களே இந்த நாடகத்தை நடத்துவார்கள். எப்போதாவது அவர்களிடம் நாமும் சிக்கி மனசு உடைந்து மரணித்துப் போயிருப்போம்! நாம் செய்த குற்றமென்ன? அந்த நச்சுப் பாம்பு வளர்வதற்கு நாமும் காரணம்தானே! நண்பன், தோழன், உறவு என்ற போர்வையில் நம்மிடம் வளர்ந்ததுதானே! அதே வேளையில் ஆண்டவன் அவர்களுக்கு எழுதிய தீர்ப்பு நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் பரிதாபத்திற்குரிய மரணத்தைத் தழுவுவார்கள் என்பதும் இறைவன் வகுத்த நீதி. இருத்துவோம்!
துரோகத்தால் விழும்போது ஏற்கனவே எறிந்து கொண்டிருக்கிற உடம்பில் இரும்பைக் காட்சி ஊற்றினால் போல மரண வலி இருக்கும் மன்னித்து விடுங்கள். அவர்கள் போலியானாலும் நீங்கள் காட்டியது உண்மையான அன்பு. நேரிடையாக உங்களை வீழ்த்தத் தெரியாமல் உங்கள் வாழ்க்கையை ஏற்கவும் முடியாமல் குறுக்கு வழியில் புத்தி தடுமாறுகிறார்கள். உங்களைக் காட்டிக் கொடுக்கும்போது மாட்டிக் கொள்ள மாட்டோம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதுவரை அவர்கள் நம்பும்படி வாழ்ந்த நீங்கள் தெரிந்தும் தெரியாததுபோல் இருந்துவிடுங்கள் கேட்டாலே கொடுத்திருப்போம். இப்படிக் கெடுத்துட்டானே என்று வருந்தாதீர்கள். நான் கொடுத்தது உண்மையான அன்பு. நண்பன் எனக்கு எதிராக நச்சுவேலை செய்கிறான். சகோதரன் எனக்கெதிராக சதிவேலை செய்கிறான். பணியாளன் எனக்குப் படுகுழி வெட்டுகிறான் என்று தெரிந்திருந்தும் அவர்கள்மேல் உள்ள பாசத்தைக் குறைக்காதீர்கள்.
வெறுப்பது யாராக இருந்தாலும் அன்பு செய்வது நீங்களாக இருங்கள் அவர்கள் சதிவலையில் நீங்கள் மாட்டுங்கள் அதனால் துன்பப் படுங்கள் அவர்கள் கொஞ்சம் மகிழட்டும் ஏனென்றால் அவர்களும் நீங்கள் அன்பு செய்தவர்கள் தானே! உயிரை காதலுக்கும் கொடுப்பேன் என்று சொல்பவர்களே! நண்பனுக்கும் கொடுங்கள்! அவன் துரோகத்திற்காக! ஏனென்றால் அவனது நடிப்பு அவனுக்குத் தெரியாமலேயே கலைந்து கொண்டு இருக்கும். இனி அவன் நண்பனல்ல துரோகி! உலகிற்கே தெரிந்தும் அவனுக்கு மட்டும் தெரியாமல் ஒரு சில உதவாக் கரைகளோடு சேர்ந்து குட்டிச் சாத்தானாய் நடமாடுவான். எதிரில் வருபவர்கள் எச்சிலை உமிழ்ந்து எதிரியாய் நினைத்து துரோகியை தூக்கி எரிவார்கள். அவர்கள் பக்கத்தில் செல்லாதீர்கள் அந்த எச்சில் உங்கள் மீதும் படும். துரோமில்லா வாழ்வு உங்களோடு தொடரட்டும்!
“நண்பா…
முத்தமிட்டாலும்
முதுகில் குத்தினாலும்
சத்தமில்லாமல் செய்…”