18

Jul

2025

கடைசிப் பெஞ்ச்…

இப்போது கடைசிப் பெஞ்ச் கலாச்சாரம் என்று நினைக்கிறேன் அதனைப் பற்றி அடிக்கடி விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில் ஒரு ஆசிரியனாய் இதைப் பதிவு செய்கிறேன். கடைசிப் பெஞ்ச் என்று சொல்பவர்கள் வகுப்பறைச் சூழலைப் பற்றி கடுகளவும் அறியாதவர்கள், புரியாதவர்கள் அவர்கள்மேல் இரக்கப்படுகிறேன்.

சமீபத்தில் கேரளாவில் ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. அதில் வகுப்பறைச் சூழலைப் ‘ப’ வடிவில் அமைத்து அதனை சிறப்பாகக் காட்டியிருக்கிறார்கள். இதில் தப்பே இல்லை. ஏனெனில் இங்கு எல்லோரும் சிந்திக்கப் பிறந்தவர்களே. அதில் இறுதியில் மாபெறும் வெற்றி அடைவதாகக் காட்டியிருக்கிறார்கள். அதுவும் தப்பில்லை. ஆனால் இனிமேல் எல்லோரும் இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என்று சொன்னால் அது அறிவு சார்ந்த உலகில் சொல்லப்பட வேண்டிய அறிக்கையில்லை.

கடைசிப் பெஞ்ச் என்பது கரும்பலகைக்கும் பெஞ்சுக்கும் உள்ள உறவுதான். அவைகள்தான் அதே இடத்தில் இருப்பது, மற்றபடி மாணவர்களும், ஆசிரியர்களும் நகர்ந்து கொண்டு இருப்பவர்கள். வட்டத்தில் ஒடுபவர்களை எவர் முதலில் ஒடுகிறார் என்று கணிக்க முடியாதோ! அதுபோல நகர்ந்து கொண்டிருக்கிற, நடமாடிக் கொண்டிருக்கிற ஆசிரியரை முடமாக்கி வைத்துக் கொண்டு கடைசியில் இருப்பது கடைசிப் பெஞ்ச் என்று சொல்லாதீர்கள்.

ஒரு தமிழாசிரியர் ஒரு பாடலைப் பாடிக்கொண்டே மாணவர்களைச் சுற்றிக் கொண்டு வருகிறார். அவருக்கு எது கடைசிப் பெஞ்ச்? ஒரு ஆங்கில ஆசிரியர் கடைசியில் இருப்பவர்கள் கவனிப்பார்களா? என்று சந்தேகம் வந்துவிட்டது என வைத்துக் கொள்ளுங்கள். அவர் கடைசிப் பெஞ்சிற்கு வந்து அந்த மாணவனை வாசிக்கச் சொல்கிறார். அவன் அருகில் வந்து நின்று அவனது பிழைகளைத் திருத்துகிறார். இப்போது அவருக்கு எது கடைசிப் பெஞ்ச்?

ஒரு கணித ஆசிரியர் கரும்பலகையில் கணக்குப் போட்டுவிட்டு அனைவரும் எழுதிவிட்டார்களா? எனப் பார்த்துக் கொண்டு வந்து கடைசியில் இந்த கணக்கு எப்படி படிப்படியாக வந்தது? என்று அவரோ அல்லது மாணவர்களையோ எழுப்பிக் கேட்டு வந்தால் அவர்களுக்கு எது கடைசிப் பெஞ்ச்? ஒரு அறிவியல் ஆசிரியர் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது சுற்றி மாணவர்கள் நின்று அதன் ஆய்வினைக் கவனிப்பதும் அவர்கள் தானே ஆய்வினை பலரோடு மேற்கொள்ளும்போது பெஞ்சே இருக்காதே! அவர்களுக்கு எது கடைசிப் பெஞ்ச்?

ஒரு வரலாற்று ஆசிரியர் வகுப்பறைக்கு வரும்போது பேரரசுகளின் வரைபடங்களையோ அல்லது பூகோள அமைப்புகளையோ கொண்டு வந்து காண்பித்து விட்டு பின்பு வகுப்பறையில் ஏதாவது ஒரு பகுதியில் நின்று கொண்டு ஒவ்வொரு மாணவனாக அழைத்து சில இடங்களை பூகோள வரைபடத்தில் சொல்லச் சொன்னால் அங்கு முதல் பெஞ்சுக்கு முக்கியத்துவம் இல்லையே!

வகுப்பறையில் ஒரு ஆசிரியர் என்ன கற்றுக் கொடுக்கிறாரோ! அது வகுப்பறையில் மட்டுமல்ல அதுதான் அவனுக்குப் படிப்பினையாக மாறும். ஒரு பெற்றோர், ஆசிரியரிடம் வந்து என் மகனை முதல் பெஞ்சில் வைத்துப் பாடம் நடத்துங்கள் என்று சொன்னால் அதைவிட அந்த ஆசிரியருக்குக் கேவலம் வேறொன்றுமில்லை. அந்த ஆசிரியர் நகராமல் நாற்காலியில் இருப்பவராக இருக்கலாம்;. இல்லையென்றால் அவரது சத்தம் அருகில் உள்ளவர்களுக்கு மட்டும் கேட்டால் மட்டுமே அவர்களிடம் பெற்றோர்கள் இப்படி முறையிடுவார்கள். இது வகுப்பறைக்குற்றம் அல்ல! ஆசிரியர்களின் இயலாமை!

கல்வி என்பது புத்தகத்தில் இருப்பதாகவும் அது வகுப்பறையில் மட்டும்தான் நடைபெறும் என்று நம்பினால் அதுதான் நாகரீக முட்டாள்தனம். இது என்னைப் பொறுத்தமட்டில் பெற்றோர்களுக்கும் புரிவதில்லை. பிள்ளைகளுக்கும் விளங்கவில்லை. கல்வி என்பது நிறைவிலிருந்து தருவது! அறியாமையை அகற்றப் பெறுவது! அறிவை வளர்ப்பது மட்டுமல்ல, உடல், பொருள், ஆன்மா என்பதன் ஒட்டுமொத்த வளர்ச்சியே கல்விதான்.

கல்வி என்பது ஒரு அறிவு, ஞானம், புத்தி விளையும் விளைநிலம். அது அனுபவத்தின் மூலம் செழிப்புற்று வளரும். ஆனால் இன்று பெற்றோர்கள் பிள்ளைகளைப் பக்குவப்படுத்துவதில்லை. பாதுகாப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்! என்ன செய்தாலும் குழந்தைகளைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருக்கிறார்களே தவிர, உண்மையாக நடக்கக் கற்றுக் கொடுப்பதில்லை. பெரியோர்களை மதிக்க வேண்டும் என்பது வீட்டிலேயே வளர வேண்டும். தவறு செய்யும்போது கண்டிக்க வேண்டும், புத்தி சொல்ல வேண்டும். வழிகாட்ட வேண்டும் பெரியோர் சொல் கேட்க வேண்டும் இத்தனையும் இன்று குழந்தைகளுக்குக் கிட்டவில்லை குழந்தைகளுக்குச் செல்லம் கிடைக்கிறது! செல்லும் கிடைக்கிறது! அனுமதி கிடைக்கிறது! இதனால் தானே கெட்டுப்போகிறது. தடுப்பார் யாருமின்றி தன்னையே அழித்துக் கொள்கிறது.

இப்போது ஆசிரியர்கள் பணி பக்குவப்படுத்துவதா? அல்லது பாடம் சொல்லிக் கொடுப்பதா? பண்படுத்தாத நிலத்தில் எப்படி பயிர் வளர்ப்பது? அரசு பாடத்திட்டம் கொடுக்கிறது. ஆசிரியர் இருபக்கமும் இடிபடுகின்ற மத்தளத்தைப் போல கடும் நெருக்கடியில் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்.

பாடம் நடத்தக் கூட நேரம் கிடைக்காத அளவு அவரது பாடதிட்டத்தைக் கொடுத்து அதை நிறைவேற்ற அரசு நிர்பந்திக்கிறது. அவர் மாணவர்கள் மனசைப் புரிந்து எப்படி வழிகாட்டுவது? எப்போது வழிகாட்டுவது? மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள் ஆனால் நம்பிக்கையை எப்போது கற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? உலகம் மாணவனை விரட்டி, விரட்டி வெற்றியைப் பறித்துக் கொள் என்று மிரட்டுகிறதே தவிர, தோல்வியையும் கற்றுக் கொள், அதற்குரிய துணிவையும் பெற்றுக்கொள் என்று சொல்லித்தரவில்லையே!

கல்வி ஒரு கலைதான்! அது வாழ்க்கையில்லையே? அதில் தான் வாழ்க்கையே இருக்கிறது என்று அதற்காக இங்கு வாழ்வினையும், பொருளாதாரத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்பவர்கள் ஏராளம்பேர்! இந்தச் செம்மறியாட்டுக் கூட்டம் திடிரென்று பொறியியல் வல்லுநராகப் பாய்கிறார்கள். திடிரென்று மருத்துவத்தை நோக்கி ஒடுகிறார்கள். திடிரென்று கணிணி என்று பிடித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு என்று இலக்கோ, இலட்சியமோ இல்லாமல் சோற்றைக் கண்டு ஓடும் பிச்சைக்காரக் கூட்டம் போல் இன்று வயிற்றுப் பிழைப்பிற்காக ஒடும் கூட்டமாக குழந்தைகளைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பித்துப் பிடித்து அலையவிட்டிருக்கிறார்கள்.

பிள்ளைகளுக்கு நம்பிக்கையைக் கொடுங்கள், எச்சூழலிலும் உண்மையைப் பேசக் கற்றுக்கொடுங்கள். பெரியோர் சொல்கேட்டு அவர்களுக்கு உரிய மரியாதை கொடுங்கள். சகோதரத்துவ உணர்வோடு பிறர் மனதைப் புரிந்து யார் மனதையும் புண்படுத்தாமல் வாழக்கற்றுக் கொடுங்கள் மண்ணையும், பெண்ணையும் மதிக்கச் சொல்லுங்கள் மனிதர்களிடம் வேறுபாடு காட்டாது வளரச் சொல்லுங்கள் உங்களால் ஒரு சமூதாயம் வளர என்ன செய்ய முடியுமோ! அதைச் செய்யச் சொல்லுங்கள்.

வகுப்பறையில் கடைசிப் பெஞ்ச் கிடையாது அது வாத்தியார்களால் உருவாக்கப்படுவது சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருப்பவர்களை உலகம் ஊனமுற்றவர்கள் என்று சொல்கிறது. நாற்காலியில் சக்கரங்களே இல்லாமல் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் உட்கார்ந்து இருந்தால் அவர்களும் ஒருவிதமான ஊனமுற்றவர்கள்தான். இவர்களால் தான் கடைசிப் பெஞ்ச் உருவாகிறது. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது அல்லது உடல் வயதாகிவிட்டது என்று நொண்டிச் சாக்குச் சொல்லி இன்றும் கல்விக்கூடத்தில் ஒண்டிக் கொண்டு இருக்கும் ஆசிரியப் பெருமக்களே! நாற்காலியை விட்டு நகருங்கள், எழுந்து நில்லுங்கள். இல்லையேல் இடத்தைக் காலி செய்யுங்கள். கல்வியில் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியைப் பெறும்போது இடையில் எதற்கு நந்திபோல் நீங்கள் நாற்காலியில் அமர்ந்து இருக்க வேண்டும்? நல்லது நடக்க நடக்க முடியாதவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாமே!

“நாற்காலியில் மட்டும்
அமர ஆசைப்பட்டால்
நாட்டுக்கு நல்லதல்ல”…

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES