25
Jul
2025

போதை ஒழிப்போம்! நல்லசெயல்தான். அதற்கு பல முன்னெடுப்புகளை எல்லோரும் செய்வோம்! ஆதரவு தருவோம். ஆனால் எங்கு எப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? சொல்லுங்கள். என்று கேள்வி கேட்டால்! பள்ளிக்குச் செல்வோம், போதைக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்வோம். என்கிறீர்கள்! நமக்கு தலை சுற்றுகிறது போதைப் பொருளைப் பயன்படுத்தாமலேயே!
போதை இல்லா தமிழகத்திற்குப் பாதை அமைப்போம் என்று சொல்கிறோம். நாம் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு இல்லையா? அனைவருக்கும் தெரிந்த போதை டாஸ்மார்க் தானே! அதுவும் திருவிழா நாட்களில் டார்க்கெட் வைத்து அரசாங்கம் தொழிலாளியின் அடிமடியில் கைவைக்கிறது. அவனும் கட்டியிருக்கிற வேட்டி களவு போகிறது என்று தெரியாமல் தண்ணியில் மிதக்கிறான். இது அரசுக்குத் தெரியாதா?
பள்ளிகளில், மாணவர்களிடத்தில் போதை இல்லை என்று நான் சொல்லவில்லை, ஆனால் பள்ளி முழுவதும் போதையிருக்கிறதா? பள்ளி மாணவனுக்கு எப்போதுமே ஒரு பயம் இருக்கும். அவன் அந்தப் பயத்தையும் மீறி வாங்குகிறான் என்றால் அவனுக்குக் கொடுப்பவன் யார்? இது அரசுக்கோ, காவல் துறைக்கோ தெரியாமல் இருக்கிறதா?
ஒருவேளை அவனைக் கண்டிக்க வேண்டிய அவனது தந்தை அவனை கண்டிக்கத் தவறுவதால் காரணம் அவனும் போதையில் இருப்பதால் தவறு என்று அவருக்கோ அவர் மகனுக்கோ தெரிவதில்லை. தன் மகனைக் கண்டிக்க அவருக்குத் தகுதியில்லை அவரையும் ஆசிரியர் தான் கண்டிக்க வேண்டுமா? தண்டிக்க வேண்டுமா? திருத்த வேண்டுமா?
கள் இறக்கினால் கடும் தண்டனை என்று விரட்டி விரட்டிப் பிடிக்கிற காவல்துறை டாஸ்மார்க் மட்டும் கண்ணுக்குத் தெரிவதிpல்லையா? அரசுக்கு என்ன மாலை கண்ணா? எங்கோ ஒரு மரத்தின் உச்சியில் நிற்பவரை மோப்பம் பிடித்துப் பிடிக்கிற அரசுக்கு சாலை ஒர கடைகள் கண்ணுக்குத் தெரியவில்லையா? இந்தக் கடைக்குப் போட்டியாக கள்ளு வந்து விடக்கூடாது என்று தானே கள் இறக்குவதை கழுத்தை நெறிக்கிறீர்கள்! இதே நெருக்கடியை டாஸ்மார்க் கடைகளில் காட்டுங்கள் போதையை ஒழிக்க வேண்டியதே இல்லை காலப்போக்கில் அது தானே காணாமல் போய்விடும்.
இதனை யார் ஒழிப்பது? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் குளத்து ஆண்டி கதையாக ஆசிரியர்தான் ஊர்வலம் நடத்த வேண்டும். காவல்துறையைக் கூட்டி வந்து விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். புகைப்படம் எடுக்க வேண்டும். அதனை பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்துவிட்டால் இனிமேல் தமிழகத்தில் போதையே இல்லாமல் போய்விடும்! அப்படித்தானே! உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் வாங்குகின்ற சம்பளத்திற்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்வதற்காக எல்லோரும் இப்படி அரசு ஆட்டுவிக்கும்படி ஆடும் பொம்மைகளாக ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்!.
கர்நாடகாவில் புத்தூருக்குப் பக்கத்தில் தர்மசாலா என்ற இடத்தில் ஒரு கோவிலில் சுமார் 450 பெண்கள் கற்பழிக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக இப்போது இந்தியா முழுவதும் பூகம்பம் வெடித்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமானவருக்கு அரசு ஆன்மீகப் பணியைச் சிறப்புற செய்ததற்காக அரசு கௌரவித்து மகிழ்ந்தது அரசியலில் பதவியும் கொடுத்தது. அவர்தான் அந்த இடத்திற்கு அருகிலுள்ள மருத்துவ, பொறியியல் கல்லூரி மாணவிகள் உட்பட கோவிலுக்கு வந்தவர்களை குறிவைத்து ஒரு கூட்டமே பெண்களை நாய்கள் போலர் கடித்துக் குதறியிருக்கிறது. சிறு குழந்தைகள் பல பள்ளிச் சீருடையோடு நாசப்படுத்தப்பட்டு புதைத்ததாக அந்தப் பிணங்களைப் புதைத்தவரே இப்போது கண்ணீர் மல்கப் பேட்டி கொடுத்திருக்கிறார்.
இந்தச் செய்திகள் ஏறக்குறைய 90,92 ஆண்டுகளிலேயே கசியப்பட்டு, காவல்துறைக்குத் தெரிய வந்துள்ளது. காவல் துறையின் காதுகள் கேட்கப்படாததால் இத்தனை இளம் பெண்கள் அவர்கள் இச்சைக்கு ஆட்பட்டு கல்லறைக் குழியில் காணாமல் போயிருக்கிறார்கள். இப்போது தமிழகத்தில் அனைவரும் அறிந்த ஒருவர்தான் அங்கு உயர் அதிகாரியாக இருந்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது. இப்போது துணிச்சலுடன் அதனைத் தோண்டி எடுக்கும் காவல்துறை அதிகாரியாக திரு. அருண் என்பவர் செயல்பட்டு அயோக்கியர்களது காம விளையாட்டுக்கு கழுவேற்றி இருக்கிறார் இவர் திருச்சி மாவட்;டத்தைச் சேர்ந்தவர் என்பது தமிழனுக்கு மேலும் ஒரு மணிமகுடமாகும்.
காஷ்மீரில் கோவில் கருவறையில் ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்டு களங்கம் ஏற்பட்டது முதல் கர்நாடகக் கோவிலில் தோண்டத் தோண்ட பிணக்குவியல்கள் எடுப்பது வரை, ஆண்டவன் இருக்கும் ஆலயத்திற்குள் தானே நடக்கிறது. இந்த அக்கிரமங்களுக்கு முடிவு கட்டுவதுதான் யார்? எந்த மதமும் கோவில்களை பற்றிச் சொல்லவில்லை. ஆனால் கிறிஸ்தவ மதம் மட்டும் கோவில்களைப் பற்றிச் சொன்னாலும் அங்கு இயேசு வந்து சாட்டையை எடுத்து வியாபாரிகளை வெளுத்து வாங்கி, அங்கு இருப்பவர்களையெல்லாம் விரட்டி அடிப்பார். அதுபோல் ஒருவர் மீண்டும் வருவாரா? இவர்களையெல்லாம் விரட்டி அடிப்பாரா?
கோவிலுக்குள் வருவது எல்லாம் புனிதப் பொருட்களாகத் தானே வெளிவருகிறது. அர்ச்சிக்கப்பட்டு புனிதப் பொருளாகத்தானே வருகிறது. இந்த மனிதர்கள் மட்டும் ஏன் அர்ச்சகர்கள் கூட அயோக்கியர்கள் ஆகிறார்கள்? கடவுளின் அவதாரங்கள் என்று சொல்பவர்கள் கூட ஏன் காம விளையாட்டுகளில் கன்னியர்களைச் சீரழிக்கிறார்கள்?. ஏனென்றால் ஆன்மீகம் என்று வந்தால் யாரும் கேள்வி கேட்கக் கூடாது கேட்டாலும் முட்டாள்களிடம் மதத்தை ஏவிவிட்டால் அவர்களே அவர்களை அழித்துக் கொள்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான். இந்த மதவாதிகளின் களியாட்டங்கள் கரையைக் கடக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி ஒரு கட்டுரை வரும்போது ஆட்டம் முடிந்து இந்த போதை ஆட்டம் தொடங்கும். பல இடங்களில் பிடிபட்ட போதை பொருட்கள் எல்லாம் யாரும் பிடிபடாமல் அங்கு பயன்படுத்தப்படும். அங்கு அரசியல்வாதிகள்,; அலுவலர்கள், அதிகாரிகள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள் என அத்தனை துறையும் போதையில் மிதக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. இப்போது கதாநாயகர்கள் எல்லாம் இந்தப் போதைப் பொருட்களால் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பெட்டிக்கடைகளில் கப்பம் கட்டியதால் இன்று அது பயமின்றி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதனையெல்லாம் கட்டுப்படுத்த ஒரேவழி பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விழிப்புணர்வு கொடுப்பது தானா?
மனசாட்சியைத் தொட்டு ஒரு கேள்வி! காவல்துறையோ, ஆசிரியர்களோ இதனைக் கட்டுப்படுத்த முடியுமா? கண்டித்தாலே தண்டிக்கப்படுகிறோம் தண்டித்தால் என்ன நிலைக்கு ஆளாவோம்? எண்ணிப்பாருங்கள். போதையில் பொழுதைக் கழிப்பவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தானே இதனை சமுதாயத்தில் சாதாரண நிலையில் வாழ்கின்ற ஆசிரியர்களும் காவல் துறையும் சேர்ந்து என்ன செய்திட முடியும்?
ஒ
ரு கதை உண்டு. ஒருவன் ஒரு தெருவிளக்கின் அடியில் எதையோ தேடிக்கொண்டு இருந்தானாம்! அருகிலுள்ளவன் எதைத் தேடுகிறாய்? என்று கேட்டானாம். சாவியைத் தேடுகிறேன் என்றான். மீண்டும் அவன் எங்கே தொலைத்தாய்? என்று கேட்டு இருக்கிறான். தொலைவில் ஒரு இருட்டான பகுதியை காட்டியிருக்கிறானாம். அப்படியென்றால் நீ அங்குதானே தேட வேண்டும்? என்று கேட்டிருக்கிறான். அதற்கு அங்கு இருட்டாக இருக்கிறது இங்கேதான் வெளிச்சமாகத் தெரிகிறது அதனால் இங்கு தேடுகிறேன் என்கிறான். அவனுக்கு ஆச்சரியமாகிவிட்டது தொலைத்த இடத்தில் தேடாமல் இங்கு வந்து தேடுகிறாய் என்று சிரித்தானாம்.
இதே போல்தான் இந்த போதை ஒழிப்பு முறை எனக்குத் தோன்றுகிறது. போதையின் ஆணிவேர் டாஸ்மார்க் அதனை அடைக்க முடியுமா? அதனால் ஆங்காங்கு எழும் இரகளை செய்பவர்களை கைது செய்யமுடியுமா? எவராயிருந்தாலும் தண்டிக்க, காவல் துறைக்கு அதிகாரம் கொடுக்கமுடியுமா? ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களின் குழந்தைகளை துணிந்து தூக்கி ஜெயிலில் வைக்க முடியுமா? போதையை ஒழிக்க வேண்டுமா? அல்லது பல்வேறு போதையில் இருப்பவர்களை, போதைப் பொருட்கள் விற்பவர்களை ஒழிக்க வேண்டுமா? அதிகாரப் போதையில் இருப்பவர்களுக்கு புரிந்தவர்கள் சரியான பாதையைக் காட்டுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
“தொலைத்த இடத்தில்
தேடா விட்டால்…
தொலைந்த பொருள்
கிடைக்காது”…