14

Aug

2025

தடம் பதித்தவர்கள்…

வாழ்நாளில் மிக முக்கியமானது வந்த பாதையை நினைத்துப் பார்ப்பது. நாம் கடந்து, வந்த நடந்து வந்த, பாதையில் நம்மை கைதூக்கிவிட்டவர்கள், கண்கலங்கி நிற்கும்போது கண்துடைத்து விட்டவர்கள் இவர்களையெல்லாம் காலமும் மறக்கக் கூடாது என்பதுதான் மானிடத்தின் பண்பு அதே வேளையில் நாம் உண்ணுகின்ற உணவு, உடுக்கின்ற உடை கொடுத்தவர்களை நினைத்துப் பார்த்தோமா? நாம் வசிக்கின்ற வீடு, இருக்கின்ற பூமி யார் கொடுத்தது? நாம் வகிக்கின்ற பதவிகள், இருக்கின்ற வசதிகள் யார் அமைத்துக் கொடுத்தது நன்றி சொன்னோமா? நன்றி சொல்ல முயற்சிப்போம்!

நான் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த நிறுவனம் ஓங்கித் தளைத்து உயர்ந்த சிகரத்தை அடைந்துள்ளது. ஆனாலும் ஒவ்வொரு ஆலமரமும் ஒரு சிறு விதையிலிருந்துதானே தோன்றுகிறது. இந்த நிறுவனமும் அப்படித்தானே வளர்ந்திருக்கும்! இதற்கு உயிர் கொடுத்தவர்கள் எத்தனை பேர்? உருக்கொடுத்தவர்கள் எத்தனை பேர் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

நமது நிறுவனத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற சிலரை சந்திப்போம் என்று ஒரு நாள் சிலரைச் சந்திக்கச் சென்றேன். ஒவ்வொருவருமே இந்த நிறுவனத்திற்கு கிடைத்த புதையல் என்பதனைப் புரிந்து கொண்டேன். இப்படி நிறுவனத்திற்காகத் தன்னையே கொடுத்தவர்களைப்போல் இன்றும் கிடைப்பார்களா? என ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். வாழ்ந்து விட்டுப் போனவர்கள்தானே என்று எண்ணிக் கொண்டு இருக்கும்போது இல்லை இல்லை அவர்கள் இன்றும் அந்த நிறுவனத்தில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதனைக் கண்டு வாயடைத்துப்போனேன்.

முதலில் எனக்கு நன்கு தெரிந்த முகம் நான் உள் நுழையும்போதே உவகையுடன் வரவேற்றார்கள். முதல் வார்த்தையே நமது பள்ளி எப்படி இருக்கிறது? என்றார்கள். அதன் பின்பு படிப்படியாக பள்ளியில் அவர்களது பசுமையான பக்கங்களைப் படம்பிடித்துக் காட்டினார்கள். பள்ளியை விட்டு வந்து பல காலம் ஆன பிறகும் அந்த நினைவுகளை எந்த நினைவுகளாலும் அழிக்காமல் வைத்திருக்கிறார்கள். பல தகவல்களைப் பேப்பரில் எழுதியவர்கள் பள்ளியின் நினைவுகளை மட்டும் கல்வெட்டாக நெஞ்சில் வைத்திருக்கிறார்கள். கடைசிவரை பிரிய மனமில்லாமல் விடை கொடுத்தார்கள் காரணம் அவர்கள் வளர்த்த பள்ளியில் இன்று நான் இளைப்பாறுகிறேன் என்ற உறவைத் தவிர எங்களுக்கு எந்த உறவும் இல்லை.

அடுத்து ஒரு ஆசிரியர் இல்லம் சென்றேன். நம் பள்ளியின் பெருமையைப் பற்றியே பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் மூச்சுவிடாமல் பள்ளியைப் பற்றிப் பேசுகிறீர்களே? என்றேன். அவர்களோ மூச்சு நிற்கும் வரை நான் பள்ளியைப் பற்றித்தான் பேசுவேன் என்றார்கள். மூச்சடைத்துப் போனேன். பள்ளியின் முரட்டுப்பக்தராய் இருக்கிறாரே என்று மிரண்டு போனேன்.

அடுத்த ஆசிரியரைச் சந்திக்கும்போது அவர்கள் இல்லத்தரசியும் இருந்தார்கள். அவர்களைப் பார்த்து இப்போது சாரிடம் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கலாம் என்றேன் அவர்கள் என்ன பேச? பள்ளி இருக்கும்வரை பள்ளிதான் அவர் குடும்பம் நாங்க லீவு நாள் விருந்தாளி, பள்ளியில் பேசுவார் அல்லது பள்ளியைப் பற்றி பேசுவார். நாங்கள் எல்லாம் யாரென்று அவருக்குத் தெரிமான்னு தெரியல என்றார்கள். சார் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள் இவரெல்லாம் ஒரு சம்சாரம் கட்டிய சன்யாசி!

மற்றொரு ஆசிரியரை சந்திக்கச் சென்றேன் அவர்கள் அதே புராணம்தான். நீங்கள் தான் பள்ளியை விட்டு வந்துவிட்டீர்களே பிறகு ஏன்…? அதற்குள் அவர் இடைமறித்து சில மரங்களைப் பற்றிச் சொல்லி அவற்றை நான் நட்டினேன் அதன் மூலம் அங்குதான் இருக்கிறேன் என்று சொன்னார்கள் நான் மெய்சிலிர்த்துப் போனேன். இப்படியும் மனிதர்களா? அதை எப்படிச் சொல்வது?

ஒரு சார் அவர்களை நாம் சந்திக்கப் போனாலும் அவர்கள் நம்மை அடிக்கடி வந்து நம்மை உற்சாகப்படுத்தி உடனிருப்பை உறுதி செய்துவிட்டுப் போவார்கள். இவர்கள் மாணவர்கள் வெறித்தனமாக அன்பு செய்வார்கள் இவர்களை மாணவர்கள் சந்திக்க விரும்பும்போது பள்ளிதானே தந்தது பள்ளியில் வந்து சந்தியுங்கள். பள்ளிக்கு வரவழைத்துத்தான் அவர்களை சந்தித்தார்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் சொல்லும்போது பள்ளிக்கே செய்துவிடுங்கள் என்றார். என் ஆன்மா பள்ளியில்தான் இருக்கிறது. கட்டைதான் வீட்டில் கிடக்கிறது என்றார்கள் மூச்சடைத்துப் போனேன்.

பிறகு ஒரு சார் இறப்பிற்குச் சென்றேன் அவர்கள் பேசவில்லை. அவர்கள் பேசியதை அங்கிருந்தவர்கள் என்னிடம் பேசினார்கள் பள்ளியில் இருந்து நிச்சயம் வருவார்கள் பார்த்துக்கோங்க, ஐயா வருவாங்க காக்க வைத்துவிடாதீர்கள் என்றவுடன் நான் கண்கலங்கிப் போனேன். சார் நான் வரும்வரை நீங்கள் காத்திருக்கவில்லையே? நான் இன்னும் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் வந்து கூப்பிடும் வரை…

இன்னும் நிறைய சொல்ல வேண்டும். சொல்கிறேன் அடுத்தடுத்து எழுதுகிறேன். ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளியை விட்டுச் செல்லும்போதும் அவர்கள் விட்டுச்சென்ற நினைவுகள் ஏராளம் வாங்கித்தந்த பெயர்கள், பொருட்கள் தாராளம்.

ஒவ்வொரு நிறுவனத்திலும் ஓய்வு பெறும்போது அணியப்படும் மாலையில் உதிரும் பூக்களைக்கூட அள்ளிச் செல்லும் உலகத்தில் ஒய்வு பெறும்போதும் பள்ளிக்கு ஏதாவது செய்து விட்டுப்போக வேண்டும் என்று எண்ணுகின்ற எங்கள் ஆசிரியர்களை எண்ணும்போது இதயம் இனிக்கிறது. எழுதும்போது வார்த்தைகள் வர மறுக்கிறது இருப்பினும் ஆசிரியர்களும் வீட்டில் ஒய்வில் இருந்தாலும் ஆன்மாக்கள் பள்ளியில்தான் இருக்கிறது. எங்களுக்கு பக்கபலமாய்த்தான் நிற்கிறது. இன்னும் இதயம் திறந்து நிறைய பேசுவேன் சிறகுகள் விரியும்.

“இருக்கும்போது
மரமாய்….
இல்லாதபோது
உரமாய் இருப்போம்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES