09
Aug
2025

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தற்செயலாகக் காண நேர்ந்தது. கண்கள் பனிக்க இதயம் இனிக்க உடலெல்லாம் மெய்சிலிர்க்க ஒவ்வொரு காட்சியும் உணர்ச்சி ததும்ப நகர்ந்து கொண்டு இருந்தது. அகரம் பவுண்டேசன் 15ஆம் ஆண்டு விழா ஒவ்வொரு பயனாளிகளும்; உணர்ச்சி வசப்பட்டு தாங்கள் கடந்து வந்த ஏழ்மையின் இறுக்கமும், இப்போது அவர்கள் அடைந்திருக்கின்ற சிகரத்தின் நெருக்கமும் அகரம் என்ற அமுதசுரபி அள்ளி வழங்கியதையும் அதற்குக் காரணமாக சூர்யா என்ற மாமனிதர் மறைந்து இருந்ததையும் உயிர் ததும்ப, உணர்ச்சிகள் கரையை மீற கண்ணீரோடு கூடிய களிப்பு அந்த கலையரங்கத்தில் நிரம்பி வழிந்தது.
யார் அந்த சூர்யா? ஒரு சினிமா நடிகனுக்கு எதற்கு மானிட உயர்த்துடிப்பு? பிறக்கும் போதே மகா நடிகரின் மகனாகப் பிறந்தவர் தானே? ஏழ்மை என்பது இவர் வாழ்வில் எட்டிப் பார்க்காத ஒன்றுதானே! அப்படியென்றால் ஏழ்மையின் வலியை எப்படி உணர முடிந்தது? எல்லாம் மாயவித்தையாகத்தான் இருக்கிறது. இருப்பினும் ஒரு மகத்தான மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
சூர்யா என்ற நடிகன் இவரது இயற்பெயர் சரவணன் புகழின் உச்சியில் தந்தை இருக்கும்போதும் அலட்டிக்கொள்ளாத மாணவனாக, இளைஞனாக வாழ்க்கை பயணத்தைக் கடந்து வந்தவர். சினிமாக்காரர்களின் வாரிசுகள் எதுவும் கல்லூரிப் படிப்பை முடிந்ததில்லை என்ற வரலாற்றை உடைத்து புகழ்பெற்ற லயோலாக் கல்லூரியில் B.Com படித்து வெற்றிகரமாக முடிந்தவர் பின்பு சாதாரணமாக நடிப்பைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி பாத்திரங்களுக்கு மெருகேற்றி சிறந்த நடிகராக உயர்ந்தவர்.
புகழின் உச்சியை அடைந்ததும் இரசிகர்களின் வெள்ளத்தில் மிதக்கும்போது நடிகர்களுக்கு நாடாள எண்ணம் வந்து விடும். இதனால் நலத்திட்டங்கள் அள்ளி வழங்குவார்கள். எடுபுடிகளை ஏவி விட்டு நான்; அதிசய பிறவி என்று அடையாளம் காட்டுவார்கள். நாளைய முதல்வர் என்று நாகூசாமல் பேசுவார்கள். நம்மைக் காக்க வந்த நாயகன் என்று சுவரொட்டிகளால் நாரடிப்பார்கள். இவையெல்லாம் துளிகூட இல்லாமல் சத்தமில்லாமல் ஒரு சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார்; இந்த சரவணன் என்ற சூர்யா!
இவருக்கு ஏன் இவ்வளவு மதிப்பு? என்றால் இங்குதான் நமக்கு ஒன்று தெரிய வேண்டியது உள்ளது இன்று நல்லவர்களை வீழ்த்தத் தானே நாடே துடித்துக் கொண்டு இருக்கிறது! இதற்கு மதம் வெறிபிடித்து அலைகிறது. சாதி சாக்கடையை அள்ளி வீசுகிறது. கும்பல்களை வைத்துத் தாக்குகிறது. கொடியவர்கள் கூடாரம் அமைத்து இணையத்தில் அவர் பெயரைக் கெடுக்க வெடிவைப்பார்கள். எவ்வளவு தரக்குறைவான விமர்சனங்களை அள்ளித் தெளித்து அசிங்கப்படுத்த முடியுமோ அத்தனையும் செய்வார்கள். அத்தனையும் சூர்யாவிற்கும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பினும் நல்லது செய்கிறவன் செய்து கொண்டேதான் இருப்பான் அவன் எந்த நாய்களின் சத்தங்களுக்கும் பயமின்றி பயணம் தொடர்வான்! எனவே சத்தமில்லாமல் சலனமில்லாமல் கடந்து போகிறது தான் சூர்யாவின் வாழ்க்கையாக அமைகிறது.
“Cancel Culture” என்று இணையத்தில் ஒரு சொல் உண்டு. இதற்கு என்ன பொருள் என்றால்? யாரை நமக்குப் பிடிக்காதோ அவரை இலக்காக வைத்து அவரை அடக்கும் வரை அல்லது அழிக்கும் வரை அசிங்கமான அம்புகளை எறிந்த கொண்டே இருப்பது. அவருக்கு எதிராக போலிக் கருத்துக்களை பூதங்களாக, பூகம்பங்களாக கிளப்பி விடுவது. அவர் என்ன செய்தாலும் கேலி செய்வது, கிண்டலடிப்பது அவர்கள் பெண்களாக இருந்தால் அவர்களுடைய நடத்தையையே சாக்கிடை ஆக்குவது. அவர்களுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களையும் அசிங்கப்படுத்துவது. பக்கபலமாய் இருப்பவர்களை மிரட்டி விரட்டி விடுவது என டிஜிட்டல் குண்டர்கள் ஒரு குழுவாக வேலை செய்து ஒருவருடைய வாழ்வை வாழவிடாமல் பரிதவிக்க வைப்பதே இந்த Cancel கலாச்சாரம் ஆகும். இதைத்தான் ஒரு மாமனிதர் விஜயகாந்த் என்பவருக்கு இந்த மானங்கெட்ட சமுதாயம் செய்துவிட்டு இறந்த பிறகு அவரை இறைவனாகக் கொண்டாடுகிறது.
இப்போது இதில் மிகவும் பாதிக்கப்படுபவர் நமது சூர்யாவும் அவரது குடும்பங்களும்தான். சூர்யா படம் ஆரம்பித்தால் அந்தப் படத்திற்கு ஆயிரம் சிக்கல் என்பார்கள். இயக்குனருக்கும் இவருக்கும் சண்டை என்பார்கள் இவரது மனைவி ஜோதிகா வாய்த்திறந்தாலே நஞ்சைக் கக்குவார்கள். பல வழிகளில் சர்ச்சைகளுக்கு சலங்கை கட்டி நடுத்தெருவில் ஆடவிடுவார்கள்;. இவர்கள் மதத்திற்கு எதிராகக் கருத்துக்களை சொல்கிறார்கள் என்று கதைகட்டுவார்கள்;. இதனால் இவர்களது படம், தொழில், கருத்துச் சுதந்திரம் அத்தனையையும் கழுத்தை நெறிக்கப் பார்ப்பார்கள். இத்தனைக்கும் இவர் அரசியலில் இல்லை. ரசிகர்கள் என்ற பெயரில் கட்டுக்களை மீறி காட்டுத் தர்பார் நடத்தியதும் இல்லை இவ்வளவு எதிர்மறைத் தாக்குதலுக்குக் காரணம் என்ன? சூர்யா நல்லது செய்கிறார். நல்லது மட்டுமே செய்கிறார். ஏழைகளுக்கும் செய்கிறார் எளியவர்களுக்குச் செய்கிறார் முகம் அற்றவர்களின் முகமாக முகவரி இல்லாதவர்களுக்கு விலாசமாக தன்னை அடையாளம் காட்டியதால்தான் இவ்வளவு அசிங்கப்படுகிறார் ஆனாலும் ஆண்டவர் அவர் பக்கம்தான்.
இந்தியச் சமூகத்திற்கு எப்போதும் ஒரு இருமாப்பு உண்டு. அது உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதுதான். தாழ்ந்தவர் உயர்ந்து விடாதபடி சாதியைச் சொல்லித் தடுப்பார்கள் மதத்தை வைத்து நமது உரிமையை மறுப்பார்கள். அவர்கள் மீது யாராவது இரக்கம் காட்டினால் அதுவும்; சிறப்பாக பெண்களுக்குச் சமத்துவம் கொடுக்க ஒருவன் துணிந்துவிட்டால் இந்த மதவாதிகளும் அவர்களை நம்புகின்ற மடையர்களும் அவனை மாறுகால் மாறுகை வாங்காமல் விடமாட்டார்கள். அதுவும் கல்வியை எவர் கொடுத்தாலும் அவன் கதையை முடிக்காமல் அல்லது கட்டுக்கதை வைத்துத் தடுக்காமல் விடமாட்டார்கள் என்பது எழுதப்படாத சட்டம்.
சூர்யா இதனைச் செய்கிறார் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள், தாயற்ற பெண் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பெற்றோர்களை இழந்தவர்கள் எனத் தேடித் தேடி இந்தத் தெய்வ மனிதன் அவர்களைப் படிக்க வைத்து சமூகத்தில் உயர்ந்த பணிகளில் அமர்த்தி, அவர்கள் கனவில் கூட காணமுடியாத வாழ்க்கையை அவர்கள் கையில் கொடுத்து வருகிறார். அதனைத் தடுப்பதற்கு கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு கயவர்கள் திரிவதுதான் நம் நம் இந்திய தேசத்தின் இழி நிலை.
இவர்மீது நிகழ்த்தப்படும் இந்தத் தாக்குதல் இவர் இலக்கை முடக்கி நொறுங்க வைத்து இலவசக் கல்வியும், மருத்துவக் கல்வியும் எல்லோருக்கும் கிடைத்துவிடக் கூடாது என்று தடுத்துவிட நினைத்த இந்தத் தர்க்கர் கூட்டத்தின் தந்திரங்களைத் தகர்த்தெறிந்து இப்போது 2000த்துக்கும் மேற்பட்ட முதல் தலைமுறைப் பட்டதாரிகள், 51 மருத்துவர்கள் இந்தியாவை பல பதவிகளில் அலங்கரிப்பவர்கள் இங்கிருந்து புறப்பட்டவர்களே என்பது மட்டற்ற மகிழ்ச்சி.
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சத்தமில்லாமல் தன் சாதனையை செய்வதிலும், குரைத்துக் கொண்டே இருக்கிற நாய்களுக்கு மத்தியில் குரலற்றவர்களைக் கோபுரத்தில் நிறுத்துவதும், முடிக்க நினைத்து முண்டியடித்தவர்களையெல்லாம் தனது மௌனத்தால் உடைத்து எறித்து வருவது நம்ம சூர்யாதான்.
பெண்கள் சமையலறை படுக்கையறை இவற்றில் மட்டுமே பயன்படுத்த நினைத்த ஆணாதிக்கச் சமுதாயத்தையும் ஆன்மீகத்தின் துணைகொண்டு அடக்க நினைத்தவர்களையும் அப்புறப்படுத்த பெண்கள் கையில் கல்வியைக் கொடுத்து அவர்கள் பேசுவதற்கும் உயர்வதற்கும் பயிற்சியும் கொடுத்து அவர்கள் திறமைக்கு வாய்ப்பும் கொடுத்து ஒரு வரலாற்றுப் புரட்சியை தன் வாழ்நாளில் விதைத்துக் கொண்டு இருக்கிற சூர்யா நீர் வாழ்க!
“பிறருக்காக இங்கு
வாழ்பவன் மட்டுமே
பிதாமகன் மற்றவன்
பிழைக்க வந்தவன்”