22
Aug
2025

பாரதி தொடங்கி படிப்படியாக ஒவ்வொருவராகக் குரல் கொடுத்து பெரியாரின் போராட்டங்கள் ஐயா வழிப் புரட்சிகள் பெண்கள் விடுதலை, சமத்துவத்திற்குப் போராடி பெரும் புயலைக் கிளப்பியும் நினைத்த இடத்தைப் பெண்கள் அடைந்து விட்டார்களா? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்? என்னைப் பொருத்த மட்டில் இல்லை என்றுதான் சொல்வேன் காலம் செய்த கோலம் அவர்களைக் கட்டிப் போட்டு இருக்கிறது.
பெண்களுக்குக் கல்வி கொடுத்தால் இந்தச் சமூகம் எழுந்து நிற்கும் என்று எண்ணிப் பெண்கள் கல்வி பரவலாக்கப்பட்டது. ஆனால் வளரும் அறிவியலுக்கு ஏற்ப அவர்கள் வாழ்க்கை உயரவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
ஒருவன் மிகுந்த சுமைகளோடு சாலை ஒரத்தில் நடந்து சென்றான். அதனைப் பார்த்த ஒரு மாட்டு வண்டிக்காரன், இவன் சுமைகளோடு செல்வதைப் பார்த்து வண்டியில் ஏறிக்கொள் என்கிறான். பின்பு சிறிது நேரம் கழித்து திரும்பிப் பார்த்தான். வழிப்போக்கன் வண்டியில் ஏறிய பிறகும், அவன் சுமைகளை சுமந்து கொண்டேதான் இருந்தான். உடனே வண்டிக்காரன் உன் சுமையை குறைப்பதற்குத்தான் வண்டியில் ஏறிக்கொள் என்றேன். ஆனால் நீயோ ஏறிய பிறகும் சுமந்து கொண்டுதான் இருக்கிறாய். அப்படியென்றால் நீ வண்டியில் ஏறி என்ன பயன்? என்கிறான்.
இதேபோல்தான் இங்குள்ள பெண்கள் நிலை. நமது சமூகக் கட்டமைப்பு மதத்தின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்திவிட்டது. காலம் கடந்தது. கலிகாலம் தொடங்கியது மானிடம் விழிப்புற்றது ஆங்காங்கே பெண்ணியம், பெண்கள் விடுதலை, பெண்கள் சமஉரிமை எனப்பேசத் தொடங்கினார்கள் இங்கிலாந்தில் தோன்றிய இந்த சமத்துவப் புரட்சி இந்தியாவிற்குக் கால தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது. பலரது தொடர் போராட்டத்தினாலும், அர்ப்பணிப்பினாலும், மிஸனரி கல்வித்தளங்களாலும் பெண்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வியானது எட்டிப் பிடிக்கும் நிலைக்கு வந்தது. கல்வியில் முன்னேறினார்கள், முதலிடம் பிடித்தார்கள், கல்வியில் மட்டுமே!
இப்படிக் கல்வி வந்தவுடன் பாரதி கண்ட புதுமைப் பெண் கிடைத்துவிட்டாளா? உருவாளானாளா? உருவாக்கப்பட்டாளா? இல்லையே? அறைகள் மாறியிருக்கிறதே தவிர அவர்கள் இருக்கின்ற சிறைகள் அப்படியே தான் இருக்கிறது. அவர்களது உடைகள் மாறியிருக்கிறது. அதுவும் கல்வியால் அல்ல, நமது உணர்வோடு கலந்த சினிமாவால்தான் விரும்பிய கதாநாயகி அணிந்த ஆடையின் நாகரீகத்தை தன் வீட்டுப் பெண்கள் அணிய அனுமதித்தார்கள் இல்லையென்றால் இவ்வளவு விரைவாக ஆடை மாற்றம் வந்திருக்காது. மதங்களும் அனுமதி அளித்திருக்காது. பெண்களின் சோம்பேறித்தனத்தால் உணவு விடுதியில் மூலமாக உணவு வகைகளில் மாற்றம் வந்துள்ளது.
வேறு எந்த வகையிலும் பெரிதாக மாற்றம் நிகழவில்லை சீனாவில் முடிகள் நீளமாக வைத்திருப்பவர்கள் அடிமைகள் ஆகும். அப்படியென்றால் பெண்கள் நீளமாக முடி வைத்திருப்பது அடிமையின் அடையாளாமா? அது அழகு என்று சொல்லியல்லவா ஏமாற்றி இருக்கிறோம்! மேலை நாடுகளில் அடிமைகளை விலைக்கு வாங்கி அவர்கள் கழுத்தில் முத்திரை அணிவார்களாம் அப்படியென்றால் தாலியின் அடையாளம் அதுதானா? அடிமைக்கு சொத்துரிமையோ, அதனை ஆளுவதற்கோ உரிமை கிடையாது அதுதானே இன்று வரை பெண்களுக்குச் சொத்தில் பங்கு இல்லை என்று வைத்திருக்கிறோம்!
பிறகு எப்படிப் பெண்கள் சம உரிமைகள் அடைந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியும். எந்த மதத்திலாவது அவர்கள் குருக்களாக வரமுடியுமா? எல்லாக் கோவில்களிலும் அவர்கள் உள்ளே வரை சென்று வர அனுமதி உண்டா? அப்படியென்றால் கல்வி என்ன மாற்றத்தைக் கொடுத்துவிட்டது என்றுதான் எனக்குள் கேள்வி எழும்புகிறது!
பெண்கள் இப்போது கல்வியில் முதலிடம் பிடித்து இருக்கிறார்கள், மற்றக் கலைகளில், விளையாட்டுக்களில் அவர்கள் ஆதிக்கம் இல்லையே! அவர்களுக்கு என்று இருந்த பரதநாட்டியம், நாட்டியங்கள் எல்லாம் நலிவுற்றல்லவா வருகிறது. வேலைவாய்ப்பு என்றாலும் அதனை முடிவு செய்வது ஆணாகத்தானே இருக்கிறான். அரசியலில் நின்றாலும் யாரோ ஒரு ஆணின் நிழலில்தானே ஆட்சி செய்கிறார்கள் இந்தக் கல்விமுறையால் எந்த மாற்றத்தையும் கொடுக்க முடியவில்லையே!
ஒரு ஆண் படுக்கை அறையிலிருந்து அலுவலகத்திற்குச் செல்கிறான். ஆனால் ஒரு பெண் சமையலறையிலிருந்து தானே அலுவலகம் செல்கிறாள். இன்னும் அவள் படுக்கையறை, சமையலறையில் அடுத்தவர்கள் தேவையை நிறைவேற்றி விட்டுத்தானே இங்கு அவளது தேவையை தேடிப் பிடிக்க வேண்டியுள்ளது. ஒரு ஆண் என்பவன் ஒரு பெண் சில குழந்தைகளின் உதவியைப் பெற்றுக் கொண்டு தன் பணிக்குச் செல்கிறான். ஆனால் ஒரு பெண் ஆண் சில குழந்தைகளுக்கு உதவிசெய்து விட்டுப் பணிக்குச் செல்கிறாள். ஆண்களைவிட பெண்கள் உயர்ந்த பணியில் இருந்தாலும், சலவை செய்யவும், சமையலறையும் தானே! அவளை வரவேற்கிறது.
எந்தப் பணிக்குச் சென்றாலும் இரவுக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. வேலையே இல்லையென்றாலும் வெளியில் நண்பர்களுடன் இருக்கிறேன் வருவதற்கு லேட்டாகும் நீ தூங்கு என்று இந்தியாவில் எந்தப் பெண்ணாவது கூறிவிட முடியுமா? கொஞ்சம் தாமதமானாலும் கோர்ட்டில் கேட்பதைப் போல கேள்விக் கணைகள் அவளைத் துளைக்குமே!
உடல் பொருள் ஆவியை ஒப்படைத்து உத்தமி என்று பெயரெடுத்தும் கணவன் நம்புவான் ஆகவே கவலையின்றி இல்லம் செல்வோம் என்று எண்ணாமல் கால தாமதமானால் கலக்கத்தோடு இல்லம் செல்லும் கற்புக்கரசிகள்தானே இங்கு அதிகம். பள்ளிக்குச் சென்று முதல் மதிப்பெண் பெற்றோம். வேலைகளும் பெற்று விட்டோம். ஆனால் விடுதலை? கேள்விக்குறியாக நிற்கிறதே!
இன்றும் பெண்களை ஒப்பனை செய்து கல்யாணச் சந்தையில் விற்பனை செய்யத்தானே தயாராகிறார்கள். அன்னை இந்திரா, அன்னைத்திரசாள், ஜெயலலிதா என்று இங்கு ஆங்காங்கு சிலரைச் சொல்லலாம் அவ்வளவு தானே! தொடக்கக் காலத்தில் கூட சில பட்டத்து ராணிகள் இருந்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள். ஆனால் இன்றும் வீட்டுக்குள் பூட்டி வைக்கப்படும் பெண்களும் உண்டு விருப்பமில்லா கல்யாணம் செய்பவர்களும் உண்டு.
கல்வி பெண்களுக்கு கை கொடுக்கிறதா? இல்லை காதலைக் கொடுக்கிறதா? காதல் காமத்தை வளர்;த்து பெற்றோருக்குத் தெரியாமல் பெயரையும் கெடுத்து சமுதாயமே முகம் சுளிக்கும் அளவிற்கு அவர்கள் முன்னால் ஆட்டம்போட்டு, முகத்தை மூடிக்கொண்டு மோட்டார் வாகனத்தில் முதுகில் படுத்து அனைவரும் உறங்கிய பின் அலைபேசியை எழுப்பி அத்துமீறும் செயலைச் செய்யத்தான் இந்தக் கல்வி சுதந்திரம் தந்ததா? இல்லை கல்விதான் இந்தக் கருமத்தை எடுத்ததா? பெண்களே இந்தக் கல்வி உங்களை உங்கள் வீட்டிலிருந்து சமுதாயத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இதனை சரியாய்ப் பயன்படுததினால் சரித்திரம் படைக்கலாம். நீங்கள் உங்களையே சரிசெய்தும் கொள்ளலாம். ஆனால் இப்போது உள்ள கல்விமுறையால் உங்களை கட்டமைக்க முடியாது. ஒட்டுமொத்த மாற்றத்தை உங்களால் உங்களது பங்களிப்பால் உங்கள் அர்ப்பணிப்பால் தொடர் போராட்டத்தால் தொட்டுவிட முடியும் தொடரட்டும் உங்கள் பயணம்.
“பெண்கள்
அடிமைகள் அல்ல
ஆக்கப்படுகிறார்கள்
சட்டத்தால்… சமுதாயத்தால்”