29

Aug

2025

வழிபடுவோம்…

ஊரெங்கும் கோவில் கொடை! தெருவெங்கும் தேர்த்திருவிழா! பார்க்குமிடமெல்லாம் வாணவேடிக்கை வானைப் பிளந்து கொண்டு இருக்கிறது! கோவில்கள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தூசி படிந்த கட்டிடங்கள் எல்லாம் துடைக்கப்பட்டு, கட்டிடங்கள் புதிதாகக் கட்டப்பட்டு கடவுள்கள் அங்கே வைக்கப்பட்டு விழாக்கள் படுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இது நமக்கு எதைத் தெரிவிக்கிறது? ஆன்மீகத்தின்; உள்ள ஆசையையா? இல்லை ஆர்வத்தையா? அப்படியென்றால் ஆன்மீகம் வளர்ந்து விட்டதா? ஆன்மீகம் வளர்ந்ததன் அடையாளம் என்ன? நீங்கள் சமுதாயத்;தில் என்ன பார்க்கிறீர்கள்? மனிதன் வாழ தன்னைக் கட்டுப்படுத்த, தன்னை நல்வழிப்படுத்த, பிறரை மதிக்க, பிறருக்கு உதவி செய்ய, பிறரை மன்னிக்க, பிறரை ஏற்றுக் கொள்ள, உயர்த்திவிட, உடனிருக்க, நம்மை நாமே நல்வழிப் படுத்த உதவுவதுதான் ஆன்மீகம். அதுதான் இப்போது வளர்ந்திருக்கிறதா?

ஆன்மீகம் என்பது இந்த நூற்றாண்டில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்று எண்ணுகிறேன். மதம் என்பது மனிதனைப் பக்குவப்படுத்துவது. அந்தப் பக்குவம் என்பது சமுதாயத்தோடு இணைந்து பயணிப்பதுதான்.

இருபதாம் நூற்றாண்டுக் காலத்தில் பல்வேறு மதத்தைத் தழுவினார்கள் ஒவ்வொருவர் விழாக்களிலும் பிற மதத்தவர்களை இன்முகத்தோடு வரவேற்றார்கள், விருந்துண்டு மகிழ்ந்தார்கள். ஆனால் இன்றைய விழாக்களிலும், விழாக்காலங்களிலும் மதக் கலவரம் இல்லாமல் மனிதர்களைக் காப்பாற்ற காவல்துறை படுகின்ற துன்பங்களை யாவரும் கண்டு கொண்டுதானே இருக்கிறோம்.!.

ஒவ்வொரு மதத்தையும் ஒரு மீளாய்வு செய்து பாருங்கள். எல்லா மதமும் அவர்கள் கடவுளை எப்படிப் பார்க்கிறார்கள்? இந்து மதத்தின் கடவுளான, இராமனோ, கண்ணனோ, முருகனோ, மற்ற பிறரோ, கிறிஸ்தவ மதக்கடவுளான இயேசு கிறிஸ்துவோ, இஸ்லாமியக் கடவுளான நபிகளோ, மனிதனாய்ப் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவர்கள்தானே! பிறகு ஏன் அவர்களை கடவுளாக்கினீர்கள் ? எப்போது கடவுளாக்கினீர்கள்? மனித அவதாரங்களாய் இன்றும் வேற்று உருவில் அவர்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? மனித உருவிலே கடவுளை நேசிக்க ஆரம்பித்து விட்டால் மனிதர்களை நீங்கள் வெறுக்க மாட்டீர்களே!

கடவுளுக்கு வழிபாடு எதற்கு? வழிநடக்கத்தானே அர்ச்சனை எதற்கு? தட்சனை எதற்கு? அர்ச்சனையை ஆண்டவனே உங்களிடம் கேட்டானா? தட்சனை என்பது இறைவனை வணங்குவதற்கு, இடைத்தரகர்கள் எதற்கு? காசுகொடுத்துதான் கடவுளின் ஆசீர் வாங்க வேண்டுமென்றால் அவன்தான் கடவுளா? செய்கின்ற பாவத்திற்கு பரிகாரம் வேண்டுமென்றால் அவன் கோவிலில் காணிக்கை போட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று எவன் கற்றுக்கொடுத்தான்? அப்படியென்றால் கடவுளுக்கு இலஞ்சம் கொடுத்துவிட்டு எந்தக்கருமத்தையும் செய்யலாமா?

இராமனை எடுத்துக்கொள்ளுங்கள் அவன் காட்டுக்குச் செல்லும்போது வேடன் குகன், பறவை சடாயு, குரங்கு அனுமான், அரக்கன் விடணன் என அனைவரையும் தன்னுடைய குடும்ப உறுப்பினராக எண்ணியவனை வணங்குகிறவர்கள் மற்ற மதத்துக்காரர்களை மறுதலிப்பார்களா? மரணத்தைத் தருவார்களா? தன் தம்பிக்கு அரியணையை கொடுத்த இராமர் பாபருக்கு அவர் கட்டிய மசூதியைக் கொடுக்க மாட்டாரா? கொடுத்ததை புடுங்குகிறவர்கள் அவர்கள் கொள்கையைக் கடைபிடிப்பவர்களாக இருப்பார்களா?

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைத் திருப்பிக்கொடு என்று சொன்ன இயேசுவின் சீடர்கள் பிறரைக் காயப்படுத்த பிரியப்படுவார்களா? ஏழைகளுக்கு இரக்கப்படுகிறவன் இறைவனுக்கே கடன் கொடுப்பவன் என்று சொன்னவரைப் பின்பற்றுகிறவர்கள் தன் சொந்த நாட்டு மக்களைக் கொல்ல வெடிகுண்டு வைப்பார்களா? அப்படியென்றால் ஆண்டவன் பெயரால் நடப்பவை அனைத்தும் அத்துமீறல்களா? யோசித்துப்பாருங்கள்.

நீங்கள் வணங்குகிற எல்லாக் கடவுள்களும் மனிதர்களும் மனிதர்கள்தான். உயிர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள் என்று சொன்ன புத்தனை வழிபடுகிறவர்கள்கூட உயிர்களைத் தேடித் தேடிக் கொல்கிறவர்களாகத்தானே இருக்கிறார்கள்.! ஒரு ஊரில் பசிக்கு உணவின்றி, படுக்க வீடின்றி வாழும் மானிடர்கள் இருக்கும்போது யாரைப் பற்றியும் கவலைப்படாமல்; வசதியோடு வாழ்கின்ற பணக்காரர்களைப் பார்த்து நாம் பரிகசிப்போம் அல்லவா? அதே போல்தானே நகரத்தில் பலர் நரகத்தில் வாழும்போது தங்க ஆபரணங்களால் மின்னும் கோயில்களும் அக்கிரமத்தின் அடையாளம்;தானே.

ஆன்மீகம் என்பது ஆட்டம் பாட்டம் அல்ல. நிம்மதிதேடி ஒரு சன்னிதி செல்வது. அங்குபோய் இறைவனிடம் மன்றாட்டு என்ற பெயரில் பிச்சை எடுப்பது அல்ல. நாம் கடவுளுக்கு செய்வதாக ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் ஏனென்றால் கடவுள் மனிதனாகத்தானே இருக்கிறான். கடவுளுக்கு செய்கிறேன் என்று கோயிலையும், கொடிமரத்தையும் புதுப்பித்துக்கொண்டிருந்தால் வாடியிருக்கின்ற மனிதர்களையும் வயிறு காய்ந்து இருக்கிற மக்களையும் எப்படிக் காப்பாற்ற முடியும்?

எப்போதாவது சாமியிடம் பேசியிருக்கிறீர்களா? சாமி பேசுவதை கேட்டிருக்கிறீர்களா? இடைத்தரகர்களுடன் தானே உங்களுடையே உறவு இருக்கிறது. யாரோ ஒருவன் கை தூக்கினால் இறைவன் வருகிறார் என்றால், உங்கள் அழைப்பிற்கு வரமாட்டாரா? கடவுள் உதவிதானே செய்யச் சொன்னார். உபதேசம் செய்யச் சொல்லவில்லையே. மன்னிக்கச் சொன்னார் மண்டியிடச் சொல்லவில்லை. நீங்கள் வணங்குகின்ற கடவுள் யாராவது மதத்தைப் பற்றி போதித்தார்களா? மதத்தின் பெயரால் மற்றவர்களை ஒதுக்கவோ, பகைக்கவோ, பழிவாங்கவோ எந்தக் கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? இல்லையே?

அப்படியென்றால் இப்போது இருக்கின்ற மதவெறியை எந்த மடையர்கள் கொண்டுவந்தது? அத்தனை அயோக்கியத் தனத்தையும் ஆண்டவன் பெயரால் செய்வதற்கு எவன் ஆணையிட்டது? எப்போது எல்லாம் அயோக்கியர்களும், அக்கிரமங்களும் பெருகும்போது ஆண்டவன் அவதரிப்பான் என்று தானே வேதம் சொல்கிறது அப்படியென்றால் அக்கிரமங்கள் இல்லையா? இல்லை ஆண்டவனே இல்லையா? அக்கிரமம் செய்கிறவன் எல்லாம் நல்லவனாகவும், ஒரு கூட்டத்தின் தலைவனாகவும் வசதியாக வாழத்தான் ஆண்டவன் வாய்ப்புக்கொடுத்தானா?

ஆன்மீகம் என்பது அனைவரையும் அன்புசெய்வது பிறருக்கு உதவிசெய்வது பெரியோர்களை மதிப்பது. யார் ஒருவரைக் கண்டு பூமியில் உள்ள உயிர்கள் அன்பையும், ஆறுதலையும் அடைக்கலத்தையும் தேடுகிறதோ? அவர்களே வாழும் தெய்வங்கள், வாய்பேசாத, வந்து உதவாத, வழிதவறும்போது தடுக்காத எதையும் கடவுளாகக் கருதாதீர்கள். அதற்கு விழா எடுத்து காட்டுமிராண்டிகளாக வாழாதீர்கள். நாம் வணங்குகிற அத்தனை தெய்வங்களும் மனிதர்களாய் இருந்து மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் எதைச் செய்தார்களோ! அதை மட்டுமே செய்யுங்கள். பூமியில் மனிதர்களுக்கு என்ன செய்தீர்களோ அதனை எனக்கே செய்தீர்கள் என்று கடவுள் சொல்கிறார் அப்படியே செய்வோம். ஆண்டவனாய் வாழ்வோம்.

“படைத்தவனுக்கு
படையல் எதற்கு?
பசிப்பனுக்கு அதை
கொடுப்பதற்கு”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES