17
Oct
2025

திருவிழா என்றாலே கொண்டாட்டம்தானே அதற்காகத்தானே திருவிழாவை அமைத்தோம் ஒடி ஆடி உழைத்துக் களைத்தவர்கள் ஆடிப்பாடி மகிழ்வற்குத்தானே இந்தத் திருவிழாக்கள் அதற்காகத்தானே பல்வேறு புராணக்கதைகளை இணைத்து அதில் ஆண்டவனையும் சேர்த்து அக்களிப்போடு இருப்பதற்குத்தானே திருவிழாக்கள் இப்போது அப்படியா இருக்கிறது?
என்னைப் போன்று நடுத்தர வர்க்கத்து அப்பாக்களுக்கு திருவிழா என்றாலே நடுக்கம் வந்து விடுகிறது. இதற்காக நாங்கள் உழைக்காமல் இல்லை. ஆனால் நாங்கள் உழைக்கின்ற உழைப்பை மட்டுமல்ல எங்கள் உயிரையும் இந்த நாகரீகமும், கலாச்சாரமும், ஆடம்பரமும் உறிஞ்சி எடுத்து விடுகிறது. நால்வரைப் போல் நாமும் இல்லாவிட்டால் நம்மை யார் மதிப்பார்? என்ற வறட்டுக் கௌரவம் தான் என்னை இந்த வறுமை நிலைக்குத் தள்ளியிருக்கிறது வேறு வழியில்லாமல் வேறு வழியும் தெரியாமல் வாடிய முகத்துடன் ஊருக்குத் தீபாவளிக்கு வருகிறேன்.
நமக்குத் தகுந்தாற்போல் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம் என்று சிக்கனமாக இருந்தால் கஞ்சத்தனமாய் இருக்கிறேன் என்று குடும்பமே கொடுந்தேளாய் கொட்டித் தீர்க்கிறது. எதற்குமே தகுதியில்லாதவன் என்று என் குழந்தைகள் வெறுப்பாய் பார்த்துவிடுவார்களோ! என் மனைவி அலட்சியமாய் நடந்து விடுவாளோ! என நினைக்கும்போது வெந்தீயில் வெந்து கொண்டு இருக்கிறேன். வெளியில் சொல்ல முடியாமல் அவமானத்தில் அழுகிறேன்.

நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் நரகத்தில்தான் இருக்க வேண்டுமா? நாங்கள் எல்லாம் இந்தப் பூமியில் வாழத் தகுதியற்றவர்களா? எங்களது பெற்றோர்கள் எல்லாம் எங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படிப் படிக்க வைத்தார்கள் தெரியுமா? ஆனால் அவர்களால் முடிந்தளவு படிக்க வைத்த எங்கள் படிப்பு! இந்தக் கணினி உலகத்திற்கு ஏற்றதாக இல்லாததால் நாங்கள் கழிக்கப்பட்டு விட்டோம்! கிடைத்த வேலைக்குப் போக வேண்டும் என்று நாயாய் அலைந்து கொண்டு இருக்கும்போது கிடைக்காத வேலைக்காய் இதுவரை அலைந்து கொண்டிருக்கிறேன். காலம் என்னோடு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கிறது.
கல்வியும், மருத்துவமும் இலவசமாகக் கிடைக்கிற வரையில் என்னைப் போன்றவர்களுக்கு வீடே கல்லறையாகத்தான் தெரிகிறது. ஊர்தோறும் எழுகின்ற கல்விக் கூடங்களும் திருவிழாக்களில் முளைக்கின்ற கடை வீதிகளும் எங்களின் உயிரைக் குடிக்க உதித்தவையாகும். தவணை முறையில் என் மனைவியின் தாலியைக் கேட்கும். தங்கமே தரம் இழந்த பிறகு அதைக் கட்டியவனின் கண்ணியமா காக்கப்படப் போகிறது? என் மானமெல்லாம் எப்போதோ காற்றில் பறந்து விட்டது! இன்னும் பறந்து கொண்டேதான் இருக்கிறது.
நான் படிக்கும்போது கல்வி எட்டாக் கனியாகத்தான் இருந்தது. இவ்வளவு இலவசங்களும் இல்லை நடுத்தர வர்க்கத்து குடும்பத்திற்கு அரசுப்பள்ளிகள்தான் அடைக்கலம் அந்த வழியில் வந்து இந்த நிலையை அடைவதற்கு இமயமலையே ஏறிய சாகசம் போன்று தெரிகிறது. ஆனால் இன்றைய நிலை எல்லாம் தலைகீழாகி விட்டது. நான் அடைந்த உயரம் ஏதோ தற்கொலை செய்ய நிற்பது போல் காட்சி அளிக்கிறது. கிடைத்த ஊதியத்தில் வாழ்க்கையைக் கடத்துவதே பெரும்பாடாக இருக்கும்போது சொந்தக்காரர்களின் நல நட்டங்களில் எப்படிப் பங்கெடுப்பது? இதனால் பலரை நான் இழந்து விட்டேன். அவர்கள் நலமாக இருந்தாலும் அவர்களை அணுக முடியாத அனாதையாகத் திரிகிறேன்.

ஏதாவது உறவினர்களின் வீட்டிலிருந்து பத்திரிக்கை வந்தால் என் உயிர் ஊசலாடும். இப்போதெல்லாம் பலர் எனக்குப் பேருக்கு பத்திரிக்கை கொடுப்பார்கள். என் உறவினர்களே என்னை ஒதுக்கித்தான் வைத்திருக்கிறார்கள்? இது யார் குற்றம்? நான் பிறந்ததா? நான் படித்ததா? திருமணம் முடித்ததா? குழந்தை பெற்றதா? இதுதானே வாழ்க்கை! ஒரு வாழ்க்கையை நடத்துவதற்கே எத்தனை சத்தியாக்கிரகங்களையும், சத்திய சோதனைகளையும் கடந்து வர வேண்டி இருக்கிறது.
இந்த நிலையில்தான் இந்தத் தீபாவளி வருகிறது. எல்லோருக்கும் வருவதுபோல் வசதியாக எனக்கு வரவில்லை. பணமில்லாதபோது பண்டிகை வந்தால் பாராங்கல் உருண்டு மண்டையில் விழுவதுபோல் இருக்கும். என் பிள்ளைகளுக்கும் எத்தனை ஏக்கங்கள் இருக்கும்? அப்பா வருவார் புத்தாடை கொண்டு வருவார்! வேடிகள் வாங்கித் தருவார் என எத்தனைபேரிடம் சொல்லி இருப்பார்கள். ஆனால் இன்று என் நிலை? வெடி வெடிக்காமலே என்னுடைய உணர்வுகள் சிதறுகிறதே! எதையும் பற்ற வைக்காமலேயே என் குழந்தைகளின் கனவுகள் புஷ்வானமாகி விடுகிறதே! இறைவா! என் பிள்ளைகள் செய்த குற்றங்கள்தான் என்ன? எனக்குப் பிள்ளைகளாகப் பிறந்ததைத் தவிர வேறு எந்தக் குற்றமும் செய்திருக்கமாட்டார்களே!
வீட்டைச் சுற்றி வெடிச்சத்தம் கேட்கும்! என் பிள்ளைகள் இதயங்கள் மட்டும் நொறுங்கிக் கிடக்கும். புத்தாடைகளை அணிந்து கொண்டு ஒவ்வொரு வீடாய்ச் சென்று அதன் விலையைச் சொல்லும்போது குழந்தைகள் அடையும் குதுகலம் என் பிள்ளைகளுக்குக் கொடுத்து வைக்கவில்லை. பள்ளியில் சொல்லி விட்டார்களாம்! பள்ளி முடிந்து வரும்போது பள்ளிச் சீருடை வேண்டாம். தீபாவளி புதிய ஆடையை அணிந்து வாருங்கள் என்றார்களாம் என் பிள்ளைகளுக்கு நான் என்ன சொல்லி அனுப்பப்போகிறேன்.

என் அக்கா எனக்கு கடவுள் மாதிரி. என் உடன்பிறந்தவள் மட்டுமல்ல என் உணர்வுகளையும் புரிந்து கொண்டவள் நம்ம தம்பி தலைகவிழ்ந்து விடக் கூடாது என்று பலநேரங்களில் என்னைத் தாங்கி நிறுத்துபவள் என்னையும் என் குடும்பத்தையும் சுமையாகக் கருதாமல் எனக்கு இமையாக இருந்து இன்னும் காத்து வருபவள். எப்போதும் ஒரு அக்காள் தம்பி உறவு எப்படி இருக்க வேண்டுமென்று என் பிள்ளைகளே புரிந்து கொள்ளும் அளவிற்கு பாசம் காட்டுபவள் என் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அவள்தான் ஒளியேற்ற வேண்டும்.
என் குழந்தைகளும் எனக்குக் கிடைத்த வரங்கள் எதுவும் வேண்டும் என்று அடம்பிடிப்பதில்லை. தந்தையின் நிலைமையைப் புரிந்து எனக்கு வருத்தம் கொடுக்கக் கூடாதென்று தன் ஆசைகளைப் புதைத்துக் கொள்வார்கள். அவர்கள் மௌனம் தான் எனக்கு மயானத்தில் இருப்பதுபோல இருக்கும். ஆனாலும் அவர்களின் ஒரளவுத் தேவைகளை எங்கள் அக்காள் பார்த்துக் கொள்வாள்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் குடும்பத்தின் நிலை அறிந்து, கொண்டவனின் நிலை புரிந்து, வாழக்கற்றுக் கொண்டவள் ஆண்டவா அடுத்த பிறவியிலாவது அவளை வசதியாக வாழ வை இன்னும் எத்தனை பிறவிகள் என்னைப் போன்றவர்களுக்கு மனைவியாய் பிறந்து துன்பப்படுவாள் அவளுக்கு ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்.

இன்னும் இந்தப் பூமியில் நல்லவர்கள் வாழந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தன் குழந்தைகளுக்குப் புத்தாடை எடுப்பவர்கள் பிறர் கொடுக்கின்ற பெற்றோர்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் பணமில்லாமல் என்போல் வாழ்கின்ற பாதிப் பெற்றோர்களின், குழந்தைகள் பசியாறுகின்றன. பள்ளியில் கூட சில குழந்தைகள் பிற குழந்தைகளுக்குப் புதிய ஆடைகள் எடுத்துக் கொடுக்கின்றன.
பூமியில் பிறப்பதே குடும்பமாக வாழத்தானே அந்தக் குடும்பத்தைக் கூட வாழவைக்க வசதியான வேலையில்லையே! அரசாங்கம் கூட வசதியானவனுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வாய்க்கால் வெட்டுகிறது என்னைப் போன்றவர்களுக்கோ வரிக்கு மேலே வரியைப் போட்டு வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளுகிறது.
இதே வீட்டிற்குப் பக்கத்தில் வந்துவிட்டேன் வெறுங்கையோடு வீட்டுக்கு வரும் ஒரு ஆண்மகனின் வலி எத்தனை பேருக்குத் தெரியும்? உயிரோடு நெருப்பு உலையில் போட்டு உருக்குவது போல உணர வைக்கும் ஆனாலும் என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள் எதையும் காட்டிக் கொள்ளாமல் சந்தோசமாக என்னை கட்டி அணைப்பார்கள். அந்த சந்தோசம்தான் இன்னும் என் இறப்பை தள்ளி வைத்திருக்கிறது. எனக்கு சொர்க்கம் என்று ஒன்று இருக்கிறது என்பதையே என் குழந்தைகளோடு இருக்கும்போதுதான் தெரியும். இதோ சொர்க்கத்திற்குப் பக்கத்தில் வந்துவிட்டேன். இன்னும் சிறிது நேரத்தில் என் குழந்தைகள் ஒடிவந்து என்னை அனைத்துக் கொள்ளும் ஆனால் இயலாமையால் என் கண்களில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் கீழே விழுகிறது.
தீபாவளிக்குக் காரணம் பீமன் நரகாசுரனைக் கொன்ற நாளாம். அதனால் அந்த நாள் இன்னும் எங்களைக் கொன்று கொண்டு இருக்கிறது. பீமன் கொஞ்சம் பெரிய மனசு வைத்து அவனைக் கொல்லாமல் மன்னித்து அனுப்பி இருக்கலாம். அப்படி அனுப்பி இருந்தால் இப்போது தீபாவளி வந்திருக்காது. நாங்களும் இப்படி வெடித்துச் சிதறாமல் இருப்போம். என்ன செய்ய என் இயலாமை என்னை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது. இருப்பினும் நல்ல உள்ளங்கள் இன்னும் என் வீடுதேடி வந்து உதவுதால் நன்றியோடு கூறுகிறேன் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
“இலவசமாக எல்லோருக்கும்
சந்தோசத்தை கொடுப்பது
குழந்தைகள் மட்டுமே!”