05

Dec

2025

கதை சொல்லப் போறேன்…

கதைகேட்டு கதைகேட்டு வாழ்ந்த நம் சமூகம் இப்போது கதை(பொய்) விட்டு வாழ்கின்ற சமூகமாக மாறிவிட்டது. சாதனைகள் செய்யத் துடித்த இளைய தலைமுறை சாக்குப் போக்குச் சொல்லி வாதாட ஆரம்பித்துவிட்டது. எதிர்காலத்தைக் கனவுலகில் தேடுகின்ற தலைமுறை எதிர்காலத் தேவைகளை கடுகளவும் கண்டுகொள்ளாமல் நாகரீக உலகில் காணாமல் போய் விடுகிறது. இதனை எப்படி மாற்றுவது? இப்படி ஆகிவிட்டதே என்று அங்கலாய்ப்புகள் அதிகம்! இப்படியே விட்டுவிட முடியுமா? சிந்திக்க வேண்டிய தருணம் இது!

இலங்கை தற்போது வெள்ளத்தில் போய்க்கொண்டு இருக்கிறது. இந்தோனிசியா வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. பொழுது போகாத மனிதன் எங்யோவது போய் வருவோம் என்று புறப்பட்டுச் செல்வது போல எங்கிருந்தோ! எப்படியோ! புயல்கள் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. புயலுக்குப் பெயர்வைக்கத் தெரிந்ததே தவிர அது வருவதை அறியவோ? எப்படி அதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவோ இன்னும் நமக்குப் புரியவில்லை.

இது ஒருபுறம் இருக்க இஸ்ரேல் ஏவுகணைகளை அனுப்பிப் பக்கத்து நாடுகளைப் பதம் பார்க்கிறது. ரஷ்யா நாடு, உக்ரைன் நாட்டை உக்கிரப் பார்வை பார்க்கிறது. எதற்கு இவ்வளவு வன்மம்? கொஞ்சம் பொறுங்கடா… பூமியே நம்மை அழித்துவிடும். அதுக்குள் நமக்கு போர் ஒரு கேடா? அழியப்போற நாம் எதற்கு அடுத்தவனை அழிக்க ஆசைப்படுகிறோம்!

சின்ன வயசிலே பெரிய மனிதர்கள் நிறையக் கதை சொல்வார்கள். அது முழுவதுமே கடவுளுக்கும், அரக்கர்களுக்கும் நடந்த சண்டையைப் பத்திச் சொல்வார்கள். கடவுள்கள் அத்தனைபேரும் மனிதர்களாக இருப்பார்கள். அரக்கர்கள் அத்தனை பேரும் காட்டுக்குள் வசிப்பார்கள். அவர்கள் நம்மை அழித்துக் கொண்டு இருப்பார்கள். உடனே இதனைக் கண்டு பொறுக்காத மனித உருவில் இருக்கிற கடவுள் காட்டுக்குள் சென்று அரக்கர்களை அழிப்பார்கள். மக்களைக் காப்பார்கள் இது பழைய கதை.

சின்ன வயசில கேட்ட இந்தக் கதைகள் எனக்கு இப்போது சிந்திக்க வைக்கிறது. மனித உருவில் இருக்கிறவர்கள் எல்லாம் மகத்தானவர்களா? தப்பே செய்யாதவர்களா? தப்பு செய்கிறவர்களை எல்லாம் தண்டிக்க உரிமையுள்ளவர்களா? அப்படித் தண்டித்தால் தண்டனை பெற்றவர்களின் சுற்றத்தார்கள் நம்மை சும்மா விடுவார்களா? இந்தக் கேள்வியை சிலமுறைக் கேட்டுப்பாருங்கள். நமக்குச் சிந்திக்கத் தோன்றும். நமக்குள் சீர்திருத்தமும் தோன்றும்.

அந்தக் கதை நமக்கு எத்தகைய மூடநம்பிக்கையை வளர்த்து இருக்கிறது பாருங்கள். அரக்கர்கள் எல்லாம் காட்டிற்குள்தான் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக கொம்பு, வாலு உடையவர்களாக… எருமை, பன்றி, சிங்கம், புலி போன்று உருவம் கொண்டு அலைவதாகக் காட்டுவார்கள். அதனைக் கொன்றால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்ற விசத்தை நமக்கு விழுங்கக் கொடுத்துள்ளார்கள் புரிகிறதா? அமுதென்று நஞ்சைக் கொடுத்தவர்கள் யார்?

இதையும் தாண்டி நமக்கு என்று ஒரு தெய்வத்தை வைத்துக் கொள்கிறோம். அவர்களுக்கு அடையாளமாக அல்லது அடிமையாக ஏதாவது விலங்கு, பறவையினைப் பக்கத்தில் வைக்கிறோம். இதனை முன்னோர்களால் பக்தியை வளர்க்க நமக்குள் உருவாக்கப்பட்டவை. ஆனால் மனிதனின் பாழ்பட்ட மூளை எப்போதுமே தப்பாகச் சிந்தித்ததால் அனைத்தையும் பாழ்படுத்தி, மனித இனத்தைப் படுகுழியில் தள்ளி இன்று பால் ஊற்றிக் கொண்டிருக்கிறது.

இன்றும் மனித இனம் மகத்தானது என்று எண்ணுகிறீர்கள்! ஆனால் இன்று மனித உருவில் அரக்கர்களின் செயல்பாடுகள் அரங்கேறுகிறது. காட்டில் இருக்கிற இயற்கைகள் இறையுருவில் நம்மை எப்போதும் காப்பாற்றி வருகிறது. இது புரியாத மானிட இனம் தன்னுடைய சுயநலத்திற்காகத் தன்னைக் கடவுளாக நினைத்தும் காட்டுக்குள் இருக்கும் இயற்கையை அரக்கனாக நினைத்தும் அதனை அழித்துக் கொண்டிருக்கிறது. கதையில் வந்த அரக்கன் இறந்து போயிருக்கலாம். ஆனால் நடைமுறையில் காடுகள் அரக்கர்கள் அல்ல. அதனை அழிப்பதனால் இயற்கை நம்மை அழிக்கும்போது, அது நம்மைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கிறது இதனால் நாமும் இயற்கைப் பேரிடர்களால் இயற்கை எய்துகிறோம்.

நகரெங்கும் மரங்கள் இருக்கும்போது நடைபயணத்தில் மரத்தின் நிழலில் இளைப்பாறினோம். ஆனால் மரங்களை அழித்துச் சாலைகள் அமைத்து சொகுசுக் காரில் சென்றாலும் களைத்துப் போகிறோமே என்ன காரணம்? காடுகளை அழித்ததனால் மூலிகைச் செடிகளை அழித்தோமே! மூளை இருக்கிறதா? இதனால் எத்தனை மருத்துவமனை! அத்தனையும் இருந்தும் நாம் அழிந்து கொண்டுதானே இருக்கிறோம்!

பனை மரத்தை இழந்த பிறகு, மழை பெய்யும் போதெல்லாம் இடிகள் விழுந்து எவ்வளவு மின்சாதனப் பொருட்களை இழந்திருக்கிறோம்? நமது கிராமத்தில் உள்ள ஒத்தைப் பனைமரம் எத்தனையோ இடியைத் தாங்கி மொட்டையாய் நிற்கிறது. மொத்த ஊரும் நிம்மதியாய் இருக்கும் இப்போது அத்தனை விளக்குகளையும் அணைத்துவிட்டு இடி விழுந்துவிடும் என இருட்டில் இருக்கிறோமே! இது பனைமரத்தை அழித்த பாவமல்லவா?

காடுகளை அழித்ததால் நிலச்சரிவுகள் வந்தது அதனால் எத்தனை பேரை கண்மூடுமுன் மண்மூடி விட்டதை நாம் மறக்கமுடியுமா? இயற்கை உணவுகள் வீடுதேடி வந்ததை விட்டுவிட்டு இப்போது இயற்கை உணவிற்குத் தேடித் தேடி அலைகிறோமே! இது என்ன கண்களை விற்று ஒவியம் வாங்கிய கதையாகிப் போனது? ஆற்றுக்குள் மணல் எடுக்கும் போதெல்லாம் அந்தக் குழி எல்லாம் என்னைப் போட்டு மூடத்தான் என்பது இப்போது வெள்ளம் வந்த பிறகுதான் எனக்கு விபரம் புரிகிறது!

காட்டில் அரக்கன் இருந்தான் அவனை அழித்தோம் என்று கதை சொன்னீர்கள். இப்போது காட்டை அழிக்கிறோம்! விலங்கு, பறவை, இயற்கை என எல்லாம் அழிக்கிறோம். இப்போது இயற்கையே எழுந்து வருகிறது. எங்கே ஓடப்போகிறோம்? எரிமலைகள் தேடி வருகிறது எப்போது எரியப் போகிறோம்? பூமி பிளக்கப் போகிறது. எப்போது புதைக்குழிகளுக்கு நம்மை திண்ணக் கொடுப்போம்? காற்று கட்டுப்பாட்டினை கழற்றி வைத்துவிட்டது. எப்போது தூக்கி எறியப்படப்போகிறோம்? ஒன்று மட்டும் நிச்சயம் நமது தலைமுறை மட்டும் தான் உயிரோடு அடக்கம் பண்ணப்படப் போகிறது. புரிந்து கொள்வோம்.

காடும்… காட்டுக்குள் இருப்பதும், அரக்கர்கள் அல்ல! அது நமது காவல் தெய்வங்கள் அதனைக் கண்டுபிடியுங்கள். காடு இருக்கும்வரை அது நம்மைக் காப்பாற்றி விடும். அதனைக் காக்கத் தவறினால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது? எனவே காடு இனி அரக்கன் அல்ல. காடுகள்தான் கடவுள் அதனை அழிக்கின்ற மனிதர்கள்தான் அரக்கர்கள்! என அறிவியுங்கள். அவர்களைத்தான் அழிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளுங்கள்.

இயற்கையே இறைவன் அதனை வழிபட வேண்டாம் வளர விடுங்கள். பொய்யான தெய்வங்களை உருவாக்கி அதற்கு கோயில் கட்டுகிறேன் விழா எடுக்கிறேன், சாலை அமைக்கிறேன், நினைவிடம் கட்டுகிறேன் என்று இனியும் கதைவிடாதீர்கள். காடுகளை அழித்து தியான மண்டபம் கட்டினால் அது நமக்கு மயான மண்டபமாகிவிடும். காடுகள் அழிக்கின்ற ஒவ்வொரு இடமும் மனிதக் கல்லறைகள்தான் உருவாகும். காடுகள் அழியும்போது மனித அழிவுகளும் ஆரம்பமாகிவிடும் காடுகள் வளரட்டும்…

உங்களைச் சுற்றியுள்ள காடுகளை நீங்கள் இனியும் பாதுகாக்காவிட்டால் இனிவரும் தலைமுறைகள் சுடுகாடுகளை மட்டுமே பார்க்கும்!. வாருங்கள் விதையிடுவோம். செடி வளர்ப்போம்! மரம் காப்போம், சொர்க்கம் என்பது காடுகளில் இருக்கிறது அதனைக் காப்பதை ஆன்மீகமாக்குவோம் வாருங்கள் வழிபடுவோம்! இயற்கையே இறைவன்! இறைவனே இயற்கை!

“இயற்கையை உண்டால்?
குணமாவோம்….!
இயற்கையை கொன்றால்?
பிணமாவோம்….!”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES