01

May

2026

குற்றம் பார்த்தால்…?

வெயில் இப்படியா அடிப்பது? பள்ளிக்கு ஏன் லீவு விட்டாங்க? இந்தப் பள்ளியில் ஏன் இவ்வளவு பீஸ் கேட்கிறாங்க? இந்தக் காலத்துப் பிள்ளைங்க எது நம்ம சொன்னபடி கேட்குது? எவன் செயிச்சு வந்தா எனக்கென்ன? ஏன் எங்க வீட்டில் மட்டும் பணம் கொடுக்காமல் போய்விட்டார்கள்? வயதாகி விட்டாலே புத்தி தடுமாறுமோ? பெரியவர்கள் எல்லாம் பெரியவங்க மாதிரியா இருக்காங்க…? இந்த அதிகாரியிடம் வேலை செய்வதை விட மாடுமேய்க்கப் போகலாம்? இப்படி எத்தனையோ..! இன்னும் நீங்கள் அதிகமாகக் கேட்டிருப்பீர்கள் ஏன் இவ்வளவு அலுப்பு ? சலிப்பு ? முட்டல்கள் ? மோதல்கள் ?

எல்லோருக்கும் இங்கே எதிர்பார்ப்புகள் அதிகம். நடப்பதுதான் நடக்கும். எதிர்பார்ப்பு நடக்காதபோது இங்கு எவர் முகத்திலும் சாணியடிக்கத் தயங்காத இளைய சமுதாயம் பெருகிக் கொண்டே போகிறது. தகுதிக்கு மீறி பிள்ளைகளிடத்தில் எண்ணங்களை வளர்த்து விடுவதால் அவர்கள், தான் என்ற ஒன்றைத் தக்க வைத்துக் கொண்டு மற்றதையெல்லாம் மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள்.

இயேசுவை ராஜா என்றவர்கள் ஒரே வாரத்தில் சிலுவையில் அறைந்து சீரழித்தார்கள். புத்தனை இரவோடு இரவாகக் காட்டுக்குள் கொண்டு போய் தொலைத்து விட்டு வந்தார்கள். நபியை மெக்காவிலிருந்து மெதினாவிற்குத் துரத்தினார்கள். இராமரைக் காட்டுக்கு அனுப்பிய கூட்டம், சீதையைத் தீக்குளிக்க வைத்தது. காந்தியைச் சுட்டார்கள், காமராஜரைத் தோற்கடித்தார்கள், கக்கனைக் கண்ணிர் சிந்த வைத்தார்கள். இப்படி எத்தனையோ எடுத்துக் காட்டுகளை இங்கு கூறலாம்.

இன்னொரு புரத்தில் வேறு ஒரு பார்வையையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். கடந்த வாரத்தில் நான் பகிர்ந்த சாத்தான்குளம் விவகாரம். அதில் ஒன்பது காவலர்களுக்கும் தூக்குதண்டனை கிடைத்தது உடனே ஒட்டுமொத்த உலகமும் அவர்களைத் திட்டித் தீர்த்தது. காக்கிச் சட்டைக்குக் களங்கம் வந்து விட்டது. இவர்கள் செய்தது காட்டுமிராண்டித்தனம்! என்று யார் யாருக்கெல்லாம் காவல்துறை மீது அரிப்பு இருந்ததோ அத்தனைபேரும் தேவைப்படும் அளவிற்கு அதனைச் சொரிந்து தீர்த்துக் கொண்டார்கள்.

ஒரு நிமிடம் கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் பாருங்கள். அந்த ஒன்பது காவலர்களையும் விருப்பு வெறுப்புகளை விலக்கி வைத்துவிட்டுப் பாருங்கள். அவர்கள் கடந்து வந்த காவல் நிலையங்களில் மக்களைக் காக்கும் காவல் தெய்வமாகவே இருந்திருப்பார்கள். எத்தனையோ ஏழைகளுக்குப் பக்கபலமாய் நின்று அவர்கள் பக்கம் இருந்த நியாயத்தை தேடித்தந்திருப்பார்கள். வெயில், மழை பாராது சோறு தண்ணி இல்லாமல் கூட சுற்றி வந்திருப்பார்கள். சோர்வில்லாமல், சுற்றத்தாரைப் பார்க்க முடியாமல், மனைவி மக்களைப் பிரிந்து பல நாட்கள் தனிமரமாய் தவித்திருப்பார்கள். மக்களின் தேவையை நிவர்த்தி செய்ய முடியாமலும், அதிகாரிகளின் ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி தலை கவிழ்ந்து நின்றிருப்பார்கள்.

நாய்களை அழைப்பதுபோல பலநேரங்களில் நம்பர் வைத்து அழைத்திருப்பார்கள். தவறான அதிகாரிகளிடமும் மோசமான அரசியல் தலைவர்களிடமும், சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார்கள். அவர்கள் அனுபவித்த துயரங்கள் ஒரு எல்லைக்குமேல் இதயம் தாங்காமல் மனதிற்குள்ளேயே அழுது மரணித்துப் போனது யாருக்குத் தெரியும்?

அப்படியென்றால் அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? எது அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது? யோசித்துப்பாருங்கள். சண்டையைத் தீர்த்திருப்பார்கள், சமரசம் செய்து வைத்திருப்பார்கள், தனிமைக்குத் துணையாய், தன்னம்பிக்கை விதையாய், போதையைத் தடுத்து ரௌடிகளை ஒடுக்கி, மக்களுக்கு நல்லது செய்தவர்கள்தானே! எங்கு அவர்கள் தன்னிலை மறந்து போனார்கள்?

எல்லா மனிதர்களுக்கும், பணம், பதவி, ஆடம்பரம், மக்கள் செல்வாக்கு என்பது ஒரு விதமான அகங்காரத்தைத்தரும். அது தான் என்ற தான்தோன்றித் தனத்தை உருவாக்கும். அதுதான் அவர்கள் தனக்குத்தானே வெட்டிக் கொள்கிற மரணப்படுகுழி.

உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள், நான் உயர் அதிகாரி என்ற தலைக்கனம் இருப்பதால்… உடனே அனைவரும் தனக்குப் பணிய வேண்டும் மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு மாறாக நடந்தால் மாறுகால் மாறு கை வாங்க வேண்டும் என்ற மமதை பல மனிதர்களுக்கு வந்துவிடுகிறது. அதனால்தான் ஏதாவது ஒரு நிகழ்வில் அவர்கள் பேசியது தன்னை எதிர்த்துப் பேசியதாகவும், கௌரவக் குறைவாக நடந்து கொண்டதாகவும் எண்ணிக்கொண்டு தனது மனதில் கிடந்த மிருகத்தை வெளியே நடமாட விட்டு காட்டுமிரண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

மேல் அதிகாரி சொல்லி விட்டாரே என்று கடமையைச் செய்தவர்கள் இந்தக் கருமத்தையும் சேர்த்தே செய்து விட்டதால் காலனையும் தனக்குத்தானே அழைத்துக் கொண்டார்கள். மேல் அதிகாரியின் விருப்பப்படி நடந்தால் அவர்கள் கருணையின் நிழலில் குளிர் காயலாம் என நினைத்து சிலர் இந்தத் தீக்குள் விழுந்துவிட்டார்கள். மேல் அதிகாரி செய்வது தவறு என்று தெரிந்து இருந்தும் தட்டிக்கேட்கத் தைரியம் இல்லாமல் மௌனமாய் இருந்ததால் சிலருக்கு இந்த மரண தண்டனைப் பரிசு கிடைத்திருக்கிறது. சிலர் இரத்தத்தை கழுவியவர்களாக இருக்கலாம். சிலர் லத்திகளை அப்புறப்படுத்தியவர்களாக இருக்கலாம். சிலர் அந்தக் காவல் நிலையத்தை சுத்தப்படுத்தியதால் மனதை அழுக்காக்கி விட்டார்கள். பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்று சொல்லாதீர்கள். ஆனால் பாவத்தின் பக்கத்தில் நின்றால் கூட சாபம் மட்டுமல்ல சாவும் உங்களைத் தேடி வரும் என்பதனையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இதன் மூலம் நமக்குத் தெரிவது என்ன? எவ்வளவு பெரிய தகுதிகள் நமக்கு இருந்தாலும் அவையெல்லாம் நமக்கு ஒப்பனைகளே. அந்த வேசம் மேடையில் மட்டுமே வாழ்க்கைக்கு உதவாது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள். உடனிருப்பவர்கள் இருக்கும் வரைதான் தேரு! அவர்கள் உதறிவிட்டால் நாம் விழ வேண்டிய இடம் சேறு! என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள். எச்சுழலிலும் உடனிருப்பவர்களைவிட நான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் மட்டும் நமக்கு இல்லையென்றால் நாம் எந்த உயரத்திலிருந்தாலும் இறக்க முடியாது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள். தரையில் நடப்பவர்களைக் கண்டுதான் உயரம் தேடி வரும்.

நாம் பல்வேறு நிறுவனத்தில் பணிபுரிவோம். சரியான தலைவன் நமக்கு அமையவில்லை என்றால் நமக்கு அது சமாதிதான். தலைவனுக்கும் பாவத்தைத் தவிர அத்தனையிலும் ஒத்துழையுங்கள். ஏனென்றால் நல்ல தலைவன் உங்கள் அன்பையும், உழைப்பையும் உடனிருப்பையுமே நம்பி எண்ணற்ற கோட்டைகளை கட்டிக் கொண்டு இருப்பான். அதனை உங்கள் விருப்பு வெறுப்பால் வீழ்த்தி விடாதீர்கள். மதம், இனம், சமுதாயம், சம்பிரதாயம் என்ற விலங்குகளை நீங்கள் பூட்டிக் கொண்டு அவர்களைச் செயல்பட விடாமல் செத்த பிணத்திற்கு ஒப்பாரி வைக்க நினைக்காதீர்கள்.

தலைவன் புலி வேட்டைக்குப் போகும்போது நீங்கள் தூண்டில் எடுத்துக் கொண்டு வராதீர்கள். சரியான தலைவன் என்றால் அசோகன், அலெக்ஸாண்டர், செங்கிஸ்கான், நெப்போலியன் என்று சொல்லிக் கொண்டே போவார்கள். ஆனால் இவர்கள் ஒளிர உயிர் கொடுக்கும் அளவிற்கு இருந்த அவரது தளபதிகளும், படைவீரர்களும்தான். ஆகவே உங்களால்தான் ஒரு தலைவன் உருவாகிறான். உயர்ந்து நிற்கிறான். எச்சுழலிலும் அவர்கள் நம்பிக்கையைத் தகர்க்கும் எந்த வார்த்தையையும் உங்கள் உதடுகளிலிருந்து உதிர்த்து விடாதீர்கள். நம்பிக்கை தாருங்கள் நல்லது தேடி வரும்!

“குறையில்லாத மனிதர்களும்
இல்லை… யாரையும்
குறை சொல்லத்…
தேவையுமில்லை…”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES