12
Jun
2026

உலகம் முழுவதும் உலுக்கிக் கொண்டிருக்கிற ஒரே நோய் இதய நிறுத்தம் (Heart Attack). இது முதுமையின் கனவை முன்னரே முடித்து வதைத்த இந்த அதிர்வு இப்போது இளமைவரை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அதிர்ச்சிப் புயல் கரையைக் கடக்கும்போது பூவும் உதிர்கிறது. காயும் உதிர்கிறது கனியும் உதிர்கிறது.
இதயம் இறைவன் படைத்த இனிய புதையல். இறைவனுக்குள் இருக்கும் கருவறை, மனிதனை இறைவனாக்கும் மகத்தான சக்தி. இதயம் சிறுவர்களுக்குப் பிஸ்கட்(Little Heart) இளைஞர்களுக்குக் காதல் சின்னம். குடும்பங்களுக்குக் கோவில். முதியவர்களுக்கு சாவை நினைவுபடுத்தும் சதுரங்கம்.

இதயம் என்பது அறிவியல் ஆய்வாளர்களுக்கு தசை மட்டுமே!. இதயம், இரக்கம் இல்லாதவர்களுக்கு இரும்பால் செய்யப்பட்டது. காதல் தோல்விக்கு அது கல்லானது. கலைஞர்களின் கண்ணுக்கு கவிதையானது. இளைஞர்களுக்கு மட்டுமே இதயத்தை எடுத்துப் பிரியமானவர்களுக்குக் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் திளைப்பது.
இதயம் மனித உடலுக்குள் மறைந்திருக்கும் உன்னதமான உறுப்பு. இதயம் மட்டும் மனிதனுக்குள் இல்லாது போயிருந்தால் மனிதாபிமானம் எப்போதோ மறந்து போயிருக்கும். மனித இனமும் அழிந்து போயிருக்கும். கர்ணனின் கொடை! பாரி, பேகன், அதியமான் என்ற அந்தப் பட்டியலில் கடை ஏழு வள்ளல்கள், புறாவிற்குத் தசையைத்தந்த சிபிச் சக்கரவர்த்தி மானிடத்தின் மீட்புக்காய் மறித்த இயேசு கிறிஸ்து இவையெல்லாம் எழுதிவிட்டுப் போன வரலாறு என்ன? இதயம் உள்ள மனிதர்கள் இங்கு வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார்கள் என்பதுதான்.

தாயின் அன்பு, தோழனின் இழப்பு, காதலின் தவிப்பு, பிரியமானவர்களின் இறப்பு, பிரியமானதின் இழப்பு, இவற்றில் இதயம் தவிக்கின்ற துடிப்பும் அப்போது எழுகின்ற அழுகையும் இந்த அகிலத்தையே நடுங்க வைக்கும், இதயம் தாங்க முடியாத சுமையால் தவிக்கும்போது அது தற்கொலை செய்கிறது. மனிதனுக்குள் இருக்கிற, பாவம் செய்யத் தூண்டாத ஒரு உறுப்பு இதயம் மட்டுமே. இதயம் பலகீனமாக இருக்கும்போது யாரையும் நம்பும், இதனால் அதற்கு ஏமாற்றமே மிஞ்சும்.
இதயம் என்பது இறைவன் இருக்கின்ற இருப்பிடம்! 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிற இறைவனின் சீதனம். உடலை வழிநடத்தும் ஐம்பொறிகள் கூட மனிதனை ஆபத்தில் சிக்க வைக்கும் தீப்பொறிகள். தீயவை பார்க்கின்ற கண்கள், கேட்கின்ற காதுகள், பேசுகின்ற உதடுகள், செய்கின்ற கைகள், செல்கின்ற கால்கள் மனிதனைப் பாவத்தில் படுக்க வைத்துப் படுகுழியில் தள்ளிவிடுகின்றன. ஆனால் இதயம் மட்டுமே எந்தத் தீங்கும் செய்யாமலும், தீங்கு செய்பவர்களைத் தாங்கும் ஏமாளி இதயமாகவும் எப்போதும் இருக்கும்.
அன்பின் உச்சம், இதயத்தின் வெளிச்சம், இயேசு எனும் மகான் தன்னைச் சிலுவையில் அடித்தவர்களைக் கூட இறைவா இவர்களை மன்னியும்! இவர்கள் செய்வது இன்னவென்று தெரியாமல் செய்கிறார்கள் என்று எதிரியையும் மன்னிக்கும் இரக்கக் குணம் உள்ளவர் என்பதால் அவர் இதயம் உள்ளவராக இன்றளவும் கொண்டாடப்படுகிறார். இதனால்தான் கிறிஸ்துவை இன்றளவும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதயம் தன் நிலையை இழக்கும்போது மனிதனின் இரக்கச் செயல்கள் குறைவுபடுகிறது. மனிதனிடம் அரக்கக் குணங்கள் அம்பலம் ஏறுகிறது. மனிதன் மனிதனை மறக்கிறான். மானிடம் வளர்வதைத் தடுக்கிறான். ஆத்திரத்தில் உதைக்கிறான். அடுத்தவனைச் சிதைக்கிறான். ஆணவத்தால், அகம்பாவத்தால் பிறரை அழிக்கிறான் இதனால் இங்கு இரக்கம் இருக்கிறதா? இல்லை. இதனால் தன்னையும், பிறரையும் அழிக்கும் தற்குறிகள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

இரக்கமற்ற செயல் என்பது ஒருவன் தன்னுடைய அராஜகத்தால் அடுத்தவர்கள் மீது நடத்தும் அத்துமீறல்கள் என்று நினைக்கிறோம் இல்லை. மனிதனின் வளர்ச்சிக்கு மற்றவர்களின், பரிசங்களும், பக்கத்தில் இருப்பதும், பாதுகாப்பதும் பெரும்பங்கு வகிக்கிறது. அதனைக் கொடுக்க மானிடம் மறுக்கிறது!
தொட்டிலில் தூங்கிய குழந்தையைக் கல்விக்காகப் பள்ளியில் உதறிவிட்டுச் சென்ற தாய்களுக்கு இதயம் இருக்கிறதா? வேலைக்குப்போன தந்தை வீட்டுக்கு வரும்போது கைநிறையத் திண்பண்டங்கள் வாங்கி வருவார் என்று காத்திருந்த காலம்போய் கிடைத்த பணத்தையெல்லாம் குடித்து அழித்துவிட்டு வரும் வழியில் விழுந்து கிடப்பதை வழியில் பார்த்தவர்கள் வந்து சொல்ல தினந்தோறும் அவதிப்படும், அழுது வடியும் குடும்பத்தின் தலைவனுக்கு இதயம் இருக்கிறதா?

வறுமைக் கோட்டின்கீழ் வாடி, ஒருவேளை சோறுக்குக் கூட உத்தரவாதம் இன்றி பட்டினியோடு படுக்கைக்குச் செல்லும் மனிதர்கள் வாழும் நாட்டில் நட்சத்திர ஒட்டல்களில் விரயமாகும் உணவுகளைப் பார்த்தபிறகு உணர்வுள்ளவர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.
வீட்டு வேலைகள் பெண்களுக்கும், வீட்டை வாழ வைக்கும் வேலைகள் ஆண்களுக்கும் இருந்த காலம்போய் வீட்டு வசதிக்காய் வேலைக்குப் போன பின்பும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளாத ஆண்களை இதயம் உள்ளவர்கள் என்று எப்படிச் சொல்லுவது?
நாளைக்குச் சாகப்போகிறோம் என்ற வாழ்க்கைத் தத்துவங்களை கொண்ட மானிடம் அடுத்தவர்களிடம் இருந்து அகப்பட்டதை எல்லாம் சுருட்ட நினைப்பவர்களை இதயம் இருக்கிறது என்று எப்படி நம்புவது?

கல்வி என்ற பெயரில் பாமர மக்களிடம் உயிரைத்தவிர ஒவ்வொன்றையும் உறிஞ்சி எடுக்கின்ற கல்வியாளர்களின் இதயங்கள் கல்லாகி விட்டதா?
இயற்கை வளங்களையெல்லாம் சுரண்டி எடுத்துவிட்டு அடுத்த தலைமுறை வாழ வழியில்லாமல் செய்துவிட்ட தொழிலதிபர்களுக்கும் அரசியல்வாதிக்கும் இதயம் இருக்குமா?
இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்! அன்பைச் சுவைப்பவர்கள் பிறரின் இதயத்திலிருந்து அதனைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இரக்கம் இல்லாதவர்கள் இதயத்தைக் கடினமாக்கிக் கொள்கிறார்கள்.

அன்னைத் தெரசாள் அழகாகச் சொல்லுவாள். வெறுப்பது யாராக இருந்தாலும் அன்பு செய்வது நாமாக இருப்போமே! குழந்தைகளுக்காகக் கையேந்தும்போது காறி உமிழ்ந்தவனிடம் இது எனக்கு! என் குழந்தைக்கு ஏதாவது கொடு! என்றாரே இது இதயம் உள்ளவர்களால் மட்டுமே முடியும்!
அடித்து நொறுக்கியவர்களை அணைத்து முத்தமிட இயேசுவால் மட்டுமே முடியும். சுட்டு வீழ்த்தியவனை விட்டுவிடுங்கள் என்று காந்தியால் மட்டுமே சொல்ல முடியும். இப்படி எத்தனையோ வரலாறுகள் நமக்கு முன் இருக்கத்தான் செய்கிறது.

இங்கு அன்பு அளந்துபோடப் படுகிறது. தன் குடும்பத்திற்கு மட்டுமே குத்தகை எடுத்திருக்கிறார்கள். பட்டம், பதவிக்கு, தன்னுடைய சுயநலத்திற்காய் இங்கு அன்பு அரிதாரம் பூசிக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறது.
ஆகவே நாம் அன்பு செய்வோம். அன்பு செய்பவர்களுக்கு அவமதிப்பு அதிகம்! பொறுத்துக் கொள்ளுங்கள். அலட்சியம் உண்டு! தாங்கிக் கொள்ளுங்கள். துரோகங்கள் உண்டு! மன்னித்து விடுங்கள். தூக்கி எறிந்துவிட்டுச் செல்வார்கள். அவர்களை மறக்காமல் மனதில் வைத்துக் கொள்வோம். அன்பு செய்பவர்களுக்கே அன்பு செய்து என்ன சாதிக்கப்போகிறோம்? அன்பை அலட்சியப்படுத்துபவர்களையும் அன்பால் வெல்வோம் ஏனென்றால் அன்பே சிவம்!
“அன்பு வலிமையானது – கொஞ்சம்
வலியும் ஆனது
வலியைத் தாங்குவோம் – எந்த
பழியையும் தாங்குவோம்”