07
May
2026

தமிழ்நாடே தகித்து நிற்கிறதா? திகைத்து நிற்கிறதா? தேர்தல் முடிவுகள் எல்லாமே நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறதே! தமிழ்நாடே அரண்டுபோய் கிடக்கிறது. ஆனால் இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? வேட்பாளர்கள் தோற்றுவிட்டார்கள். மக்கள் வெற்றியடைந்து விட்டார்கள். இனி வந்தவர்களை வசைபாடுவதை விட்டு விட்டு நடுநிலையோடு நின்று யோசித்துப் பாருங்கள் நாலும் புரியும்.
1.கட்சிகளின் ஓட்டுக்களை கணக்கெடுத்துப்பாருங்கள் தொகுதிக்குத் தொகுதி மாறுபடுகிறது. முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க என மாறி மாறித்தான் வருகிறது. மேலும் ஒரே இடத்தை அவர்கள் தக்க வைக்கவில்லை. எனவே இங்கு கட்சி ஆதிக்கம் குறைந்துவிட்டது.

2.சில மாவட்டங்களில் தா.வெ.க இல்லை சில மாவட்டங்களில் அ.தி.மு.க இல்லை சில மாவட்டங்களில் தி.மு.க இல்லை. எனவே கட்சியில் ஆதிக்கமும் அப்பகுதி தலைவர்களின் ஆதிக்கமும் குறைவு.
3.ஆட்சி செய்தவர்கள் ஏன் மீண்டும் வரவில்லை என்றால், அவர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகளே இல்லை. நம்மை வீழ்த்த இங்கு யார் இருக்கிறார்கள்? என்று தவறான அவர்களது நினைப்பினால் பொழைப்பைக் கெடுத்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் இரு பெரிய கட்சிகளிலும் தாங்கள்தான் மன்னர்கள் என்று நினைத்தவர்கள்கூட மண்ணைக் கவ்வி விட்டார்கள்.
4.ஆங்காங்கு கட்சியின் சார்பாக வெற்றி பெற்றவர்களை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். அவர்கள் தொகுதிக்கு அவர்கள் உண்மையுள்ளவர்களாகவும், நன்மை செய்பவர்களாகவும் இருந்ததால் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறார்கள். ஆகவே இந்த முறை வெற்றி பெற்றவர்கள்தான் கட்சியைக் காப்பாற்றினார்களே தவிர கட்சி என்ற மாய பிம்பமோ மக்கள் மனதில் அழிக்க முடியாத மனதில் பதிந்த சின்னங்களோ யாரையும் இந்த முறை காப்பாற்றவில்லை.

5.தினந்தோறும் ஊடகங்களில் நன்மை செய்வது போலவும் நேர்மையாக நடப்பது போலவும் படம் காட்டியவர்கள் மக்கள் நம்மை மதிப்பார்கள் என்று நினைத்து அவர்கள் சார்ந்த துறையில் ஒரு தவறுகூட நடக்காத அளவுக்கு பார்வையிடுவதாகக் காட்டியவர்களைக்கூட தன்னைத் திருத்தாதவர்களை எல்லாம் மக்கள் தூக்கி எறிந்திருக்கிறார்கள்.
6.தோல்விக்கு முக்கிய காரணம் என்று நான் கருதுவது ஐந்து ஆண்டுகளில் என்ன வேண்டுமென்றாலும் செய்துவிட்டு கடைசிநேரத்தில் ஓட்டுக்குக் காசு கொடுத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைத்தவர்கள் இப்போது ஏமாந்து போனார்கள்.
7.இரு பெரும் பழைமையான கட்சிகள் தாங்கள் அனுபவத்தின் மூலம் செய்யப்போகும் திட்டங்களைப் பற்றிச் சொல்லாமல் ஒருவர் மற்றொருவரைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கின்ற இழிநிலையை நம் மக்கள் ரசிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்று நாசுக்காகச் சூடுபோட்டு இருக்கிறார்கள்.

8.இன்று நாடு நாசமாய்ப் போவதற்குக் காரணம் போதைப்பொருள். இதனால் நம்ம வீட்டுப் பெண்களும் நாசப்படுததப்பட்டு இருக்கிறார்கள் என்ற வெறித்தனமான கோபம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும்போது டாஸ்மார்க்கைத் தொடர்ந்ததால் மக்கள் அவர்கள் சின்னத்தைத் தொடவில்லை. இதனால் பெரும் தலைவர் என சொல்லப்பட்ட ஜெயக்குமார் டெபாசிட் இழந்தார் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்த முதல்வர்கூட தோல்வியடைந்தார் என்ற அதிர்ச்சி செய்தியும் உண்டு.
9.பா.ஜா.க ஒரு இடம் மட்டுமே. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், அ.தி.மு.க சார்பில் நின்றும் தோற்கக் காரணம் மக்கள் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எங்களைச் சரியாய் உங்களுக்கு எடைபோடத் தெரியவில்லை என்று கட்சிகளுக்குக் கற்றுக் கொடுத்துவிட்டார்கள்.
இவர்கள் எல்லாம் இன்னொரு மாற்று வேண்டுமென்று நகர்ந்தவர்கள்தான். த.வெ.க பக்கம் தாவியிருக்கிறார்கள். இது சினிமா மோகம் அல்ல. சினிமா மோகம் என்றால் சிவாஜி, கமல், பாக்கியராஜ், ராஜேந்தர், ராமராஜன், சரத்குமார் போன்ற நடிகர்கள் போன இடம் தெரியவில்லையே! அதற்கு விஜய்தானா கிடைத்தார்? என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது.

விஜய்க்கு அறுதிப் பெரும்பான்மையை மக்கள் அள்ளிக் கொடுத்துவிடவில்லை. வேறு கட்சிகள் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படியென்றால் இங்கு தொங்கு சட்டசபைதான். ஆகவே ஐந்தாண்டுகள் அனுபவமில்லாதவர்கள் ஆட்சி செய்ய வேண்டுமென்றால் அடக்கி வாசிக்க வேண்டும். அதற்கு மாறாக நடந்தால் ஆபத்து மக்களுக்கல்ல, ஆள்பவர்களுக்குத்தான். மக்கள் வெகுண்டால் மகேசானாலும் தடுக்க முடியாது.
இதற்கு மாற்று மக்களுக்கு இதுவரை யாரும் நம்பிக்கை தரவில்லை. சீமான் வந்தார் கருத்துக்களைப் பேசினார். ஆனால் கண்ணியமாகப் பேசவில்லை. நன்றாகப் பேசியவர் நம்பகத்தன்மை இல்லாமல் பேசிவிட்டார். பெரியார் வாழ்ந்த மண் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் இன்றும் இரத்தத்தில் கலந்து சித்தத்தில் ஒளிர்ந்து நரம்புகளில் நடமாடிக் கொண்டு இருக்கிறார். அவரைப் போய் என்றைக்கு மண் என்று சொன்னாரோ அன்றே அவர் வாயில் அவரே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார். இதனால்தான் இளைஞர்க் கூட்டம் இன்று விஜயை நோக்கி நகர்ந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
1.விஜய் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. இதை அவரே எதிர்ப்பார்க்கவும் இல்லை. அப்படியென்றால் ஆட்சியமைப்பதும், மந்திரி இலாகா பிரிப்பதும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும், அவர் எடுக்கும் முயற்சிகளை பொறுத்திருந்து பாருங்கள். தவறு என்றால் தட்டிக்கேளுங்கள்.

2.அவர் கட்சியிலேயே அனுபவம் வாய்ந்த கு.ப. கிருஷ்ணணன் கூட தோற்கடிக்கப்பட்டார். திரு. செங்கோட்டையனைத் தவிர சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அங்கு யாரும் இல்லை என்று எண்ணுகிறேன்.
3.இனிமேல் மக்கள் பணியாற்றாமல் மக்களோடு மக்களாக இல்லாமல் எந்த காசும் காப்பாற்றாது. பெரிய கட்சியும் காப்பாற்றாது என்பதனை மக்கள் அரசியல்வாதிகளுக்குக் கச்சிதமாகச் சொல்லிய தேர்தல்.
4.ஆர்ப்பாட்டம், ஆடம்பரம், ஆள் செல்வாக்கு, அதிகாரம், அனைத்தையும், மௌனப்புரட்சி என்று மண்ணைக் கவ்வ வைத்து விட்டது. இனி எவர் தவறு செய்தாலும் இப்புரட்சித் தொடரும்.

5.இது வேறெங்கும் இல்லை நம்ம வீட்டில்தானே நடந்திருக்கிறது. நமக்குத் தெரியாமல் நடந்திருக்கிறது. சிறுபிள்ளைகளும், இளைஞர்களும் நடத்திய இன்னொரு புரட்சிதான் இது. இதிலிருந்து அனுபவம் உள்ளவர்கள் கற்றுக்கொள்ளும் பாடம் எது? இளைஞர்களை எளிதில் எடைபோடாதீர்கள்.
6.இனி யாரும் நம்மைக் காப்பாற்றப்போவதில்லை இனி மக்கள் புரட்சிதான் மண்ணைக் காப்பாற்றும், உன்னைக் காப்பாற்றும், என்னைக் காப்பாற்றும் இனியாரும் காசு கொடுத்து ஏமாற்ற நினைக்கமாட்டார்கள். ஏனென்றால் ஏற்கனவே ஏமாந்தவர்கள் இந்த அரசியல்வாதிகள், மீண்டும் ஒருமுறை சூடுபோட்டுக் கொள்ள விரும்பமாட்டார்கள்.
இருபெரும் கட்சிகளும் இனி ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து திட்டிக் கொள்ளாமல் பொறுப்பான எதிர்க்கட்சியாய் செயல்படுவார்கள். மக்களுக்காகக் குரல் கொடுப்பார்கள். மக்களோடு இருப்பார்கள். இனிமேல் மக்களோடு இருப்பவர்களுடன்தான் மக்களும் இருப்பார்கள். மக்களோடு இல்லையென்றால் அவர்கள் வேறிடம் நோக்கி நகரும்போது சில நேரங்களில் தகுதியற்றவர்களிடம் கூட தன்னை ஒப்படைத்து விடுவார்கள். எனவே பொறுப்பானவர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் வெறுப்பான செயல்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

விஜயைப் பற்றி யாரும் கவலைப்படாதீர்கள் இதுவரை அவர் திரைப்படத்தில் கதாநாயகன் இனிமேல் அவர் படம் நடிக்கமுடியாது.
அந்தக் கதாநாயகன் பிம்பம் உடைந்துவிடும் மக்களுக்குப் பிரச்சனை வரும்போது அவர் வில்லனாகி விடுவார். திரைப்படத்தைபோலத் தாவி வந்து தடுக்கவும் முடியாது. எனவே அவரது கதாநாயகப் பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடமிருந்துக் காணாமல் போகும். வில்லன் வேசம் வெளியே வரும். அப்போது தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். வெளியே வருவார்கள், வீதியில் அமர்வார்கள், ஓட்டுப்போடும் போது மௌனப்புரட்சி நடத்தியவர்கள் இனிமக்கள் புரட்சியாளராக மாறுவார்கள். நல்லது செய்யும்போது நாமும் அவர்களோடு இருப்போம். அதற்கு மாறாக நடந்தால் நாமும் வேறாக நிற்போம் வேரோடு அறுப்போம்.
“நாடக வேசம்
கூட வராது…
நாளைய உலகம்
இவனை விடாது பூமியிலே…”
-திரைப்பட பாடல்