30
Oct
2024
ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளும், புறமும் ஒன்றொடொன்று ஒன்றுபட்டும் நிற்கும், வேறுபட்டும் நிற்கும் பிறரோடு பிணைத்தும் நிற்கும், பிறண்டும் நிற்கும் இதில் ஏற்படுகின்ற ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் தான் ஒரு மனிதனை அவன் யார் என்று உலகிற்குக் காட்டும்.
அகம் என்ன சொல்கிறது? அன்பு, நட்பு, காதல், சமத்துவம், இரக்கம், மன்னிப்பு என்று நீண்டு கொண்டே போகும் புறத்தை ஆசைகள் முடிவு செய்யும். மண், பெண், பொன், போர், கண்டுபிடிப்புகள் என்று பலவும் வந்து நிற்கும்.
உள்ளத்தைச் சமப்படுத்தவும், சமைத்து எடுக்கவும் வந்தவர்கள் ஞானிகளாக மக்கள் போற்றி வந்தார்கள். வெளியில் கிடைத்த வெற்றிகளின் அடிப்படையில் வீரர்கள், மன்னர்கள், விஞ்ஞானிகள் என்று பெயர் எடுத்துச் சென்றார்கள். உள்ளே உள்ள எண்ணங்கள் தான் வெளியே தன் வேலையைக் காட்டும் உள்ளே எழுகின்ற எண்ணங்கள் நன்றாக இருந்தால் உடனே அது வெளிப்படும் பலரால் பாராட்டப்படும் உள்ளே எழுகின்ற எண்ணங்கள் தவறாய் இருந்தால் உலகம் தூங்கும் போது அது விழித்துக் கொள்ளும் இருட்டு நேரங்களில் எழுந்து நடமாடும். இயலாமை நிலையில் உள்ளவர்கள் மேல் விழுந்து தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ளும்.
உள்ளே எழுகின்ற எண்ணங்களைச் சமபடுத்தினால் தான் அவன் மனிதன் என்ற மகத்துவம் பெறுவான். அதனால்தான் உள்ளத்தைச் சுத்தப்படுத்துங்கள் என்று மகான்கள் வந்து கூறிக்கொண்டே இருந்தார்கள்.
இயேசு சொன்னார் வெளியில் இருந்து வருவது உன்னை அசுத்தப்படுத்தாது. உள்ளிருந்து வருவதுதான் உன் வாழ்வை தீர்மானிக்கும் என்று சொல்வார். ஆகவே உட்புறத்தைத் தூய்மைப் படுத்துங்கள். வெளிப்புறத்தை விட்டு விலகுங்கள் அது உங்களை அணுகாமல் ஆக்கிரமிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் அதுதான் உங்கள் வாழ்வைக் காப்பாற்ற உகந்த வழி.
புத்தர் சொன்னார் ஆசையே துன்பத்திற்குக் காரணம் ஆசை என்பது உங்கள் மனம் வெளியில் இருப்பவற்றை அனுபவிக்கத் துடிப்பது அதனை அடைய அது நடிக்கும், பொய்சொல்லும், தீங்கு விளைவிக்கும் குறுக்கு வழியைத் தேடும். ஏன் உயிரைக் கூடப் பறிக்கும் மானம் இழக்கும், மதிக்கெட்டுத் திரியும், புறம்பேசும், பொய் வழக்குப்போடும், அடுத்தவர் சொத்துக்கள், மனைவியைக் கவரும். அநாகரீகமாக நடந்து கொள்ளும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் எனவேதான் ஒற்றை வரியில் உரைத்தான் புத்தன். ஆசையே துன்பத்திற்குக் காரணம்.
உள்ளத்தை வெளியில் அலைய விடாமல் உள்ளே சுரக்கும் அன்பு, இரக்கம், கருணை இவற்றின் அடிப்படையில் தன்னைக் காத்துக் கொள்பவனும், அவற்றைப் பிறருக்கும் போதிப்பவனும், குரு, ஞானி, ரிஷி என்று அழைக்கப்படுபவர்கள். இரக்கம், அன்பு, நட்பு, தோழமை இதற்காகவும், தனது அத்தியாவசியத் தேவைக்காகவும், கொஞ்சம் வெளியே தெரிகின்ற மண், பெண், பொன்னை எடுத்துக் கொள்பவன் சாதாரண மனிதன். அவனே தன்னுடைய ஆசைக்கு அணைபோடாமல் விரும்பியதை எல்லாம் செய்ய நினைப்பவன் அதற்காக எதையும் செய்யத் துணிந்தவனும் அதற்காக எந்த கீழ்த்தரமான கேவலமானச் செயல்களையும் செய்யத் துணிவார். இவர்கள் தான் குற்றவாளிகள். இந்தக் கேடுகெட்ட உலகில் ஏழைகள் மட்டுமே மாட்டிக் கொள்வார்கள். பணக்காரர்கள் அரசியல் நடத்துவார்கள்.
மண்ணாசை மனிதன் மண்டையில் ஏற புறம்போக்குகளை எல்லாம் அந்தப் புறம்போக்குகள் வளைத்துப் போடுவார்கள். மலையின் மடுவை அறுப்பார்கள், நதியின் வயிற்றைக் கிழிப்பார்கள். மணலை அள்ளி விற்பார்கள். பிறரின் சொத்துக்களைப் புடுங்குவார்கள். ஆக இவர்களது மண்ணாசைக்கு காரணம் அவர்களது மனம், மண்ணாய் போனதுதான் காரணம்.
பொன்னாசை மனிதனில் புரையோடிப் போனதால் கோயில்களில் உள்ள நகைகளைக் கூட விட்டுவைக்கமாட்டார்கள். கடவுளையேத் திருடுவார்கள், பொருட்களைப் பதுக்குவார்கள். புதையல்களை எல்லாம் தன்னுடைய வீட்டுக்குள் தனக்கென வைத்துக் கொள்வார்கள். பணம் அதிகமாகும்போது நகைகளை அதிகம் வாங்குவார்கள். நகைகளை வைத்து பெண்களுக்கு வலை வீசுவார்கள் வலையில் சிக்கும் பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்வார்கள்.
பெண்ணாசை இது மனிதனை மிருகமாக்கும் இதனால்தான் காமம் கச்சை கட்டி ஆடும். அடுத்த வீட்டுப் பெண்கள் அழகாகத் தெரிவார்கள். தனியாக இருக்கும் பெண்களைப் பாதுகாப்பற்ற பெண்களை வேட்டையாடத் துணிவார்கள். ஏழ்மையில் இருப்பவர்களையும், தேவைக்கு வருபவர்களையும், உதவி கேட்பவர்களையும் படுக்கைக்கு அழைக்கும் படுபாதகச் செயலைச் செய்வார்கள். இவ்வாறு அடக்க முடியாத பசிக்குச் சில பிஞ்சுகளைக் கூட கசக்கி எறிவார்கள். குடும்பத்திற்குள் புகுந்து குண்டு வைப்பார்கள். நம்பிக்கைத் துரோகத்தை நடத்திக் காட்டுவார்கள். ஏமாறுகின்ற பெண்களை எல்லாம் தன் இச்சைக்குப் பயன்படுத்துவார்கள்.
ஆகவேதான் உள்ளும் புறமும் உத்தம தனத்தில் வளர வேண்டும். பாத்திரத்தின் உட்புறத்தைச் சுத்தப்படுத்துங்கள் என்பார் இயேசு கிறிஸ்து. ஏனென்றால் சுத்தமான பாத்திரத்தை நிரப்பும் எதுவும் அசுத்தமாகாது. எனவே வறுமை ஆசையைத் தூண்டும் இயலாமை மோகத்தைத் தூண்டும். எனவே பக்குவப்பட்ட மனதை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆசையும், காமமும், குரோதமும் தான் நம்மைச் சிதைத்து விடுகின்றது.
அனைத்தையும் மீட்டெடுப்பது அகமும், உறவும்தான். ஒரு பெண்ணை அன்போடு நோக்குங்கள் முகம்பார்த்துப் பேசுவீர்கள். ஆழமாக நேசியுங்கள் வெளியில் தெரியாத இதயத்தைத் தேடுவீர்கள். எதிரில் தெரிகின்ற எதையும் இச்சையோடு பார்க்கமாட்டீர்கள். மண், பெண், பொன் தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள். நீங்கள் தெய்வமாக மாறுவீர்கள். அடுத்தவர்கள் தேவைக்கு வைத்திருப்பதை திருட நினைப்பவர்கள். சமூக நல விரோதி ஆகிவிடுவீர்கள். ஆகவே உள்ளே சுரக்கின்ற தூய்மையும், வெளியே தெரிகின்ற வடிகாலும் ஒருங்கே செல்ல வேண்டும். மண்ணாசையால் மகாபாரதமும், பெண்ணாசையும் இராமாயணமும் அதன் அழிவையும் முன்பே சொல்கின்றது. புத்தன் ஆசையை அறவே ஒழிக்கச் சொல்கிறார். இயேசு மனத்தூய்மையையும், தாழ்ச்சியும் உள்ளவர்களே நல்லரசு உங்களதே என்பார்கள். ஆகவே உங்கள் உள்ளங்களைத் திறங்கள் அதில் உத்தம தனம் தெரியட்டும் உறவுகளை அரவணையுங்கள் எல்லாம் நலமாகும்.
“உள்ளும் புறமும்
ஒருங்கே இருந்தால்
கள்ளம் கபடம்
கலவாது இருக்கும்”