13

May

2025

என் முதல் வார்த்தை மூச்சிழந்தது!….

அம்மா….

நாம் இருக்கும் வரை மரணம் வரப்போவதில்லை மரணம் வந்த பிறகு நாம் இருக்கப் போவதில்லை. மரணம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று ஆனால் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. நம்மைப் பாதிக்காத மரணம் நமது மரணம் மட்டுமே. மரணம்வராமல் மரணித்துப் போவது பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தாயின் மரணம் தான்.

எனக்கும் அந்த மரணச் செய்தி மார்பில் பாய்ந்தது. அலைபேசி அழைப்பு மதினியின் குரல்… வார்த்தை வரவில்லை விசும்பல் சத்தம்… புரிந்தது எனக்கு நாடி நரம்புகள் கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழந்தது. நினைவுப் பறவை சிறகொடிந்து நின்றது ஒரே ஒரு துளி மட்டும் கண்ணுக்குள் நின்று வெளியே விழாமல் உலகை இருட்டாக்கியது. அலைபேசிகள் இருபுறமும் ஊமையாய் உயிரை விடாமல் உணர்வற்று நின்றது.

எரிகின்ற உடலில் எட்டுத்திக்கும் ஏவுகனைகள் வந்து துளைக்க, கால்களில் கருநாகம் தீண்ட, பாதிக்கப்பட்ட கடந்தைகள் பாய்ந்து வந்து தாக்க, குரல் வராமல் குரல்வளையைக் கடித்துக் கொண்டு புலி உறும, உடலெல்லாம் பழுக்கக் காய்ச்சிய இரும்புகள் வைத்து கிழிக்க, நெற்றியில் குண்டுகள் துளைக்க, கன்னத்துச் சதைகளை கழுகுகள் கொத்த, ஏற்படும் ரணங்களைவிடக் கொடியதுதான் ஒரு தாயின் மரணத்தைத் தாங்கி வரும் செய்தி.

இறைவன் இருந்தால் எல்லோரும் கேட்கும் வரம் எது? தாயின் மரணத்தைத் கொஞ்சம் தள்ளி வை என்பதுதானே! ஏனென்றால் தொப்புள் கொடியைத் துண்டித்து தூளியில் போட்டவள். பத்து மாதம் பாதுகாப்பாய்ச் சுமந்தவள். தனது இரத்தத்தை அமுதாகக் கொடுத்தவள். அதைவிட அதிகமாக அன்பையும் கொடுத்தவள். இன்று என்னைத் தனியே விட்டு விட்டுப்போய் விட்டாள் என்றால்? இதயம் உள்ளவர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

செய்தி கேட்டதும் சொந்த ஊருக்கு ஓடி வந்தேன். நான் வரும் முன் அறிந்து வாசலுக்கு வரும் என் தாய், அன்று நான் வாசலுக்கு வந்த பின்பும் கண்களை மூடிக்கொண்டு கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருந்தாள். கண்ணீர் விட்டேன். கதறினேன் அவள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நான் கண்ணீர் விட்டு அழுததை அவள் காணச் சகிக்காததால் கண்களை மூடியே இருந்தாள். எப்போதும் எனைத்தொட்டுத் தழுவி முத்தமிடும் என் தாய் அன்று நான் அவ்வளவு சத்தமிட்டும் நிரந்தரத் தூக்கமாய் நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்தாள்.

என்னைக் குளிப்பாட்டியவளை இன்று யாரோ குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து மணப்பெண்போல் இந்தப் பிணப்பெண்ணை படுக்க வைத்திருந்தார்கள். நான் பதறிப்போனேன். சுற்றியிருந்தவர்கள் அழுகையோடு என் அம்மாவின் பெருமைகளைச் சொல்லிக் கதற, பிணமாய் என் தாய் படுத்திருக்க, நடைபிணமாய் நான் அவளின் முன்னே நின்றிருக்க, இருவர் காதுக்கும் எதுவுமே கேட்காமல் அபஸ்வரமாய் அங்கு அழுகைக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

வெட்ட வெளியில் இடிவிழுந்த ஒற்றைப் பனைமரமாய் உருக்குலைந்து நான் நிற்க உடைந்துபோன மனதுடன் என் உடன்பிறப்பு ஒடிவந்து நானிருக்கிறேன் கலங்காதே! என்று சொன்னவள் கலங்கி கண்ணிரில் மூழ்கி இருந்தாள்! நீ இருக்கிறாய் அக்கா? ஆனால் அம்மா இல்லையே! அண்ணனைப் பறிகொடுத்தோம்! அப்பாவைப் பறிகொடுத்தோம்! இப்போது அம்மாவையுமா? கொடுப்பதையெல்லாம் பறித்துக் கொண்டால் இறைவா முதலில் உனக்குத்தான் கொள்ளி வைக்க வேண்டும்! ஆளுக்கு ஒரு தேதி வைச்சு நீ அழைக்கும்போது யார் அழுதால் உனக்கு என்ன? கண்ணை மூடிக்கொண்டு காரியம் முடிப்பாய்! உனக்குப் பேருதான் கடவுளா?

என் சாமியையே நான் சாகக் கொடுத்துவிட்டு சமாதியாக நிற்கிறேன். என் தவமே இன்று சவம் ஆகிவிட்டது. அம்மாவை இழந்தவர்கள் எல்லாம் இங்கு சும்மாதான் அலைகிறார்களா? அவர்கள் வாழ்வு முடிந்த பாத சாரிகளா? யாரோ ஒடிவந்தார்கள் இவர்களை எப்போது தூக்குவார்கள்? என்று என்னிடமே கேட்டார்கள். என்னைத் தூக்கித் தூக்கி வளர்த்தவள் அவளைத் தூக்குமுன் தூக்கில் தொங்கிவிடலாமா? என்று கூடத் தோன்றியது. காரணம் தாயின் மரணம் இழப்பல்ல! அது இறப்பு.

யார் கொடுத்த அன்பையும் ஒரு தாய் கொடுக்க முடியும்! ஆனால் ஒரு தாய் கொடுத்த அன்பை இனி யார் கொடுக்க முடியும்? ஏனென்றால் நான் வணங்கும் ஒரு கன்னித்தாய் ஒரு கடவுளையே பூமிக்குக் கொடுத்தாள் அந்தக் கடவுள் கூட தாயின் மரணத்தைத் தாங்க முடியாது என்று தாய் இருக்கும்போதே தான்போய் சேர்ந்து விட்டார். அவரிடம் போய் அன்னையின் மரணத்தைச் சொன்னால் அவருக்கு எப்படிப் புரியும்? அவரிடம் அழவில்லை.

பேரக் குழந்தைகளை அழைக்கிறார்கள் வந்து தொட்டு வணங்கினார்கள். கடைசிவரை அவர்களிடம் அவள் பேசவும் இல்லை. தூக்கிக் கொஞ்சிய கரங்கள் துவண்டு கிடக்கிறது. பிள்ளைகள் நாங்கள் கதறி அழுதபோது பேசாமல் படுத்து இருப்பது இன்று மட்டும்தான் கண்ணாடிப் பெட்டியில் இருந்து எடுத்து மரப்பெட்டியில் வைத்தார்கள் என் மனசு நொறுங்கி விழுந்தது.

இறுதிப் பயணத்திற்கு அவளை எடுத்துச் செல்லும்போது அவள் அப்போதுதான் அடுத்தவர்களுக்கு சுமையாய் இருந்தாள். என் சொந்த ஊரே அன்று தான் என் அழுகையைக் கேட்டது. தாயிருக்கும் வரை நான் அழுததில்லை. நான் அழும்போது அங்கு தாயில்லை. கல்லறையில் அவள் உடல் கிடத்தப்படுகிறது. அரிசி போடச் சொன்னார்கள். சோறு ஊட்டும்போது எனை தாங்கியவள் நான் அரிசிபோடும் போது அதை அவள் வாங்கவில்லை அழுது புலம்பினேன். கடைசியாக ஒரே மகன் என்னை அழைத்து அவள் முகத்தைப் பார்க்கச் சொன்னார்கள் பார்த்தேன்! ஆனால் அவள் கடைசிவரை என்னைப் பார்க்கவில்லை. அவள் கண்களை மூடி என்னைப் பற்றித்தான் கவலைப்பட்டு கொண்டிருந்திருப்பாள் போல. ஒற்றை ஒரு மகனை நட்டாற்றில் விட்டுவிட்டோமோ? என்று கண்களை மூடி யோசிக்கும்பொது அவள் கல்லறையை மூடச்செய்து விட்டாள்!

மண்ணைத் தோண்டி தங்கத்தை எடுப்பார்கள். ஆனால் மண்ணைத் தோண்டி எங்கள் தங்கப் புதையலையே நாங்கள் மூடிவிட்டுத் திரும்பினோம். இருப்பினும் ஒரு தாயின் தவம்! ஒரு குடும்பத்தின் வரம் மூத்தவள் பெண் குழந்தையானால்! அடுத்த குழந்தைக்கு இரண்டு தாய் என்பது போல! எனது அக்காள் எனக்கு இரண்டாம் தாய்.! அவள் இருக்கும்வரை நானிருந்தால் அவள் பார்த்துக் கொள்வாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. காலம் நகர நகர இந்தக் கலக்கத்தில் இருந்து அவள் என்னைக் கரை சேர்த்து விடுவாள். சொந்தக்காரர்கள் எல்லாம் என்னைச் சுற்றி இருப்பார்கள் சொர்க்கமாகவும் இருப்பார்கள்.

இன்னொன்று எனது மனசாட்சி இதன் மறுபெயர் தோழனா? நண்பனா? சகோதரனா? எனக்குத் தெரியாது என்னைத் தீவிரமாய் அன்பு செய்கிறவன். தவறு செய்யும்போது தீயாய் கொதிப்பான். எனது வலிகளைக் கேட்காமலேயே வாங்கிக் கொள்பவன் எனது சோகத்தைச் சொல்லவில்லையென்றால் என்னைச் சுட்டெரிப்பான். ஆனால் அவனுக்குத் தெரியாது வார்த்தை இல்லாமலேயே என் வலிகளைப் புரிந்து கொள்பவன். சொல்லித் தொலைய மாட்டாயா? என்பது அவனது வாதம். கேட்குமுன் வரம் கொடுப்பவனிடம் கதவை ஏன் தட்ட வேண்டும் என்பது எனது பிடிவாதம். உனக்கு என் வலி சொல்லிப் புரிவதல்ல! கனவில் நான் காயப்பட்டால் கூட கண்டுபிடித்து விடுபவன் நீ! எனக்கு அதுபோதும். நீ இருக்கும்வரை என் நெஞ்சம் கலங்காது.

அழுகின்ற போதெல்லாம் துடைக்கின்ற விரல்களையும் அணைக்கின்ற கரங்களையும் கொண்டவர்கள் என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும். என் அடுத்து வருகின்ற ஒவ்வொரு நாட்களும் நீங்கள் கொடுக்கின்ற நம்பிக்கையில் நகரும் என்பது எனது நம்பிக்கை. பிறந்த இடத்தில் நான் இழந்தது என் தாயை என்றால்? இப்போது நான் வாழந்து கொண்டிருக்கிற இடத்தில் பலரிடத்தில் என் தாயின் அன்பு தெரிகிறது. என் தந்தையின் ஆறுதல் புரிகிறது. என் சகோதரனின் உடனிருப்பை உணர்கிறேன். இது தொடர்வதால் என் தோல்விகளையும் இழப்புகளையும் கழற்றி வைத்துவிட்டு கவலை இல்லாமல் நான் பயணிப்பேன்.

“என்னை வரைந்தவள்
மறைந்து விட்டாள்
கண்ணீருடன்…
கடந்து போகிறேன்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES