25

Sep

2024

அர்த்தமுள்ள மதங்கள்…

மதம் என்பது என்ன? மனிதனின் மனங்களைச் செம்மைப்படுத்த மனிதனால் உருவாக்கப்பட்ட மகத்தான நெறிமுறையாகும். மனிதர்களின் அர்த்தமற்ற உணர்ச்சிகளையும், அவசியமற்ற தேவைகளையும் அடுத்தவர்களைப் பாதிக்கும் பாவச்செயல்களையும், தடுப்பதற்காக மனிதனின் கற்பனையால் உருவாகி இறைவன் கொடுத்த கட்டளைகளாகப் பின்பற்றப்படுவதை கடவுள் வழிபாடாகக் கொண்டார்கள்.

மனிதனின் எல்லைகள் குறுகியது. ஆகவே எட்டாத தூரத்தில் இறைவன் இருப்பதாக எழுதி வைக்கப்பட்டது. இதனால் இமயமலையில் கடவுள் இருக்கிறான் என்றார்கள். இறந்தபிறகும் உயிர்த்தெழுந்தார் என்றார்கள். இறப்பே இல்லாமல் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். அத்தனையும் நம்பிய மக்கள் அறிவியல் வளர்ச்சியால் இறைவனைக் குறித்து சில கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் ஆரம்பத்தில் கடவுள் மேல் இருந்த அச்சம் மனிதனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

இடைப்பட்ட காலத்தில் மதங்கள் மறுமலர்ச்சி பெற்றது. கடவுளைக் குறித்துப் பாடப்படுகின்ற இலக்கியங்கள்தான் மொழி வளர்ச்சிக்குப் படிக்கட்டாக அமைந்தது. கடவுள்களுக்குக் கோவில் கட்டி வழிபட்டார்கள். அந்தக் கோவில்கள்தான் அந்த ஊரின் அடையாளமாக இன்றளவும் இருந்து கொண்டு இருக்கிறது. பல ஊர்கள் கோவில் என்ற பெயர் கொண்டதாகவே இருக்கும். கோவில் திருவிழாக்கள் அப்போது வாழ்ந்த மக்களின் நாகரீகத்தின் வெளிப்பாடாகவும், மகிழ்ச்சிக்குக் காரணமாகவும், ஊர் ஒன்றுபடவும், கவலையை மறந்து புதிய உத்வேகத்துடன் பணிதொடரவும் வாய்ப்பாக இருந்தது.

மனிதனுக்கு எங்கெல்லாம் பயம் ஏற்படுகிறதோ! அங்கெல்லாம் அவன் பயம் இல்லாமல் பயணிக்க அவன் விரும்பியவாறு கடவுளை உருவாக்கினான். தேவைக்கு ஏற்ப அவை குட்டித் தெய்வங்களாக ஊரின் எல்லையில் வைத்து வணங்கிவந்தான்.

பல்வேறு தெய்வங்கள் இருந்தாலும் அவர்களுக்குள் பாகுபாடில்லை. பிறகு சாதிக்கொரு தெய்வங்களை உருவாக்கினார்கள். அப்போதும் அவர்களுக்குள் சண்டையில்லை. அவரவர் அவரவர் விரும்பியபடி அடுத்தவர்கள் மனதைப் புண்படுத்தாமல் தாங்கள் வழிபாட்டைச் செய்துவந்தார்கள் மற்றவர்களும் உதவி செய்தார்கள்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து சிறுசிறு அரசர்களை வென்று ஆட்சியைப் பிடித்தது போல ஆரியர்கள் உள்ளே நுழைந்து அனைத்து மதங்களையும் ஒன்றிணைக்கிறேன் என்ற பெயரில் ஒவ்வொரு தெய்வத்தையும் இழுத்து வந்து கணவர், மனைவி, மைத்துனர், குழந்தைகள் என அனைத்தையும் இணைத்து வைத்து தான் வணங்கும் கடவுள்தான் குடும்பத்தலைவன் அவனுக்குத்தான் அனைத்து அதிகாரமும் உண்டு என்றார்கள். மற்றவர்கள் எல்லாம் அடிமை தெய்வத்தை வணங்குகிறவர்கள். ஆகவே நீங்கள் வெளியில் நின்று வணங்கிவிட்டுப் போங்கள் சிலர் கோயிலுக்குள் வராதீர்கள். நீங்கள் வந்தால் தீட்டு என்று சொல்லும் போதுதான் கடவுளைப் பற்றி நினைக்கும்போது நெஞ்சம் பதற ஆரம்பித்தது. கடவுளுக்கு முன் ஆண்டான் அடிமையா? அப்படியென்றால் அந்தக் கடவுள் நமக்கு வேண்டாமே!

ஆகவே இவர்கள்தான் இப்படிச் செய்கிறார்கள் என்றால்? எல்லாம் சமம்! நமக்கு சமத்துவம், சகோதரத்துவம் அதை வளர்க்கவே வந்தோம் என்று சொல்பவர்களை தொழுது பின்பற்றி வாழ அவர்களைப் பின்பற்றினால் அங்கு தலைமைப் பதவிக்கு எந்தச் சாதியைத் தேர்ந்தெடுப்பது என்று சண்டையிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும்போது மனம் சஞ்சலப்படுகிறது. சாதி பார்ப்பவனிடத்தில் நீதி இருக்காது. நீதி இல்லாத இடத்தில் கடவுள் நிச்சயம் இருக்கமாட்டார்.

சிலர் மதத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள். ஆனால் தாங்கள் வாழும் இடத்தின் மீது பற்றுக் கொள்ளாமல் பிற மதத்தவரின் மீது உள்ள வெறுப்பினால் அப்பாவி மக்களைக் குண்டு வைத்துத் தகர்க்கும் போது மதம் இவர்களை மடையர்களாகத்தானே மாற்றுகிறது. எனும்போது மனம் மதத்தை மறுக்கிறது. கடவுளே இல்லை எனக் கதறுகிறது!.

இங்கு மதப்பிரியர்கள் இல்லை மத வெறியர்கள் தான் இருக்கிறார்கள், மதப்பிரியர்கள் தன் மதத்தின் நற்செயல்களால் பிறரைக் கவர்வார்கள். மதவெறியர்கள் பிற மதங்களை அழிக்க நினைப்பார்கள். அவர்களிடத்தில் போட்டிப் பொறாமையைத் தவிர நல்லது எதுவும் நடக்காது.

ஒரு முறை பல மதங்களைச் சார்ந்த பகுத்தறிவாளர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் மதங்களில் ஏற்பட வேண்டிய மறுமலர்ச்சி பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் சொன்னார் எங்கள் மதம் என்ன சொல்கிறது என்றே எங்களுக்குத் தெரியாது!.

நாங்கள் யாரைப் பின்பற்றுகிறோம்? அவர் எப்படி இறந்தார்? அவருடைய கொள்கை என்ன? என்பதே தெரியாமல் நாங்கள் வாழ்கிறோம். தனக்குரிய பெருமையைக் கூட தாரைவார்த்த எங்கள் தலைவனுக்கு அடுத்தவனின் இடத்தைப் புடுங்கி கோவில் கட்டுகிறோம். எங்கள் மத அடையாளங்களை பிற மதத்தவர்கள் தடுக்கிறார்கள் என்று பிதற்றுகிறோம். ஆனால் எங்கள் குழந்தைகளுக்கு எந்த அடையாளத்தையும் எங்களால் உருவாக்க முடியவில்லை என்றும் இன்னும் பலவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்னொருவர் கூறும்போது எங்கள் தெய்வம் கோவிலை இடிக்கச் சொன்னார். ஆனால் நாங்கள் கோவில்களை கட்டுவதும் புதுப்பிப்பதும் அலங்காரம் செய்வதும் இதைத்தான் எங்கள் மதப் பணியாகச் செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் திருவிழாக்களில் ஏழைகளின் நினைப்பே இல்லாமல் போய்விட்டது. ஆடம்பரமே இறைவனின் கூடாரம் என்று எண்ணுவோம்.

ஆணும், பெண்ணும் சமமாகப் படைத்தார் இறைவன் என்றார்கள். ஆனால் நாங்கள் பெண்களை பாவம் செய்யத் துண்டுபவர்களாகவும் உற்பத்திக்கு மட்டும் தேவைப் படுபவர்களாகவும் கருதுகிறோம் என்றார். இப்படி பலரும் பலவாறு பேசிக் கொண்டிருந்தார்கள். மதத்தின் பெயரால் செய்கின்ற மடத்தனங்களை…

இங்கு மதத்தலைவர்கள் மாண்புடன் நடந்து கொள்வதைவிட தன்னை மந்திர வாதியாகத்தான் காட்டிக் கொள்கிறார்கள். எல்லோருமே போதிக்க ஆசைப்படுகிறார்களே தவிர கடைபிடிக்க தானே முன் வருவதில்லை. நோய்களைக் குணமாக்குகிற தெய்வம் மண்ணில் இருந்தால் இங்கு ஆஸ்பத்திரிக்கே அவசியம் இருக்காதே! மந்திரத்திலும் பூசையிலும் மனதில் நினைத்ததைச் சாதித்து விட்டால் அறிவியலின் தேவை அவசியம் இருக்காதே! கட்டுக்கதைகளை கையில் வைத்துக் கொண்டு மனித மாண்பையும் மானிட வளர்ச்சியையும் தடுக்காதீர்கள். இங்கு சமயங்களில் பிறப்பால் குருக்களாகிறார்கள் சிலர் படிப்பால் சிலர் செல்வாக்கால் குருக்களாகிறார்கள். இப்போது ஜாதியின் அடிப்படையில் மதத்தலைவர்கள் உருவாகுவதால் இவர்களால் சீடர்களை உருவாக்க முடியவில்லை மூடர்களைத்தான் உருவாக்குகிறார்கள் இதனால் சமுதாயம் முடமாகிக் கிடக்கிறது.

மதங்கள் என்ன கற்றுக் கொடுத்தது? எனக்குத் தெரிய நீங்கள் சொல்வதுபோல் பார்த்தால்! ஒரு மதம் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறது. ஒரு மதம் தாழ்வு மனப்பான்மையை வளர்த்து அவன் தலையைத் தட்டுகிறது. ஒரு மதம் பெண்ணடிமைத் தனத்தை மதச்சடங்காகக் கடைப்பிடிக்கிறது.

அப்போது ஒரு சத்தம் கேட்டது கடவுள் இல்லை என்று கூறுங்கள் அங்கு மனிதன் இருப்பான் மனிதம் பிறக்கும் கடவுள் மறுப்பு அதிகம் வாழும் மக்களைக் கொண்டே நார்வே நாடு மனிதன் வாழத் தகுதியான நாட்டில் முதல் இடத்தில் இருக்கிறது!. ஏன்? பக்தி நிறைந்த நம் பாரதநாடு ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்கிறதே அது ஒரே சாதி என்றும் உரக்கச் சொல்லட்டும். இந்த உலகிற்கு சொல்லட்டும். இதனால் இடஒதுக்கீடும் வேண்டாம் இறைவனைப்பற்றி சண்டையும் வேண்டாம் சத்ரியன் என்றும் சூத்திரன் என்றும் மனிதர்களைப் பிடித்து இறைவன் சாபத்திற்கு ஆளாகவும் வேண்டாம் என்று கூறி விட்டு எங்கோ பார்த்தபடி வழிப்போக்கன் ஒருவன் போய்க் கொண்டிருந்தான்.

“மனிதனை அழிக்கிற
மதங்களும் வேண்டாம்
இதயங்களைப் பிரிக்கிற
இறைவனும் வேண்டாம்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES