22

Mar

2025

இந்தீ…

யார் பற்றவைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாடு முழுவதும் இன்று பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. எதற்கு இந்தி என எரிந்து கொண்டு இருக்கிறது? உனக்குத் தேவை என்று நீ எதற்கு எனக்குச் சொல்ல வேண்டும்? எனக்குத் தேவை எது? என்று எனக்குத் தெரியாதா? அப்படியென்றால் எனக்கு இந்தி வேண்டும் என்று எதற்கு நீ என்னை படிக்கச் சொல்ல வேண்டும்? இப்படி பல கேள்விகள் தமிழகம் முழுவதும் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தி வேண்டுமா? வேண்டாமா? யார் முடிவு செய்ய வேண்டும்? இந்தி திணிக்கிறவன் ஒருவன் அதனைத் தடுக்கிறவன் தமிழன் இதுதானே சண்டை! இதற்கு ஏன் இரண்டு கட்சிகள் சண்டையிட வேண்டும்? இது திராவிடக் கட்சிகளின் கொள்கை அல்ல. இது தமிழர்களின் தன்மான உணர்வு, அதனைச் சீண்டிவிட்டு கட்சிகள் கட்டுப்பாடுகளை மீறி மோதிக் கொள்கின்றன. தமிழனும் அதற்கு எதிராய் பேசுவதுதான் மனசு வலிக்கிறது.

இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்கிறீர்கள் சரி ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்? மும்மொழிக் கொள்கைகள் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் மும்மொழிக் கொள்கை உடைய மாநிலங்கள் எல்லாம் முன்னேறி விட்டனவா? மும்மொழிக் கொள்கைகள் இல்லாத மாநிலங்கள் எல்லாம் பின்தங்கி விட்டனவா? அப்படியென்றால் தொழில், கல்வி, மருத்துவம் போன்ற அனைத்திலும் இந்தியாவிலேயே மகராஷ்டிராவிற்கு அடுத்து தமிழ்நாடுதானே! இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. எவர் கண்ணுக்கும் இது தெரியாமல் மனக் குருடர்களாக மக்கள் வாழ்கிறார்களா?

இங்கு தமிழ், ஆங்கிலத்தோடு இந்தியையும் கற்றுக்கொண்டால் வடஇந்தியாவில் எளிதாக நாம் பயணிக்கலாம் என்கிறீர்கள்! ஆனால் இங்குதான் வடஇந்தியர்கள் எல்லாம் அதிகமாக வாழ்கிறார்கள் அப்படியென்றால் அவர்கள் மாநிலத்தில் இந்தி, ஆங்கிலத்தோடு மூன்றாவதாக தமிழை கற்றுக்கொடுப்பார்களா? அப்படியென்றால் உங்கள் மும்மொழிக் கொள்கையில் அர்த்தம் உள்ளதாக அனைவரும் எண்ணுவார்ாகள்.

தமிழ் படிக்க வேண்டும்! ஏனென்றால் இந்தியாவைக் கடந்து ஐந்து நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. 20 நாடுகளில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்தத் தமிழில்தான் வள்ளுவனின் அறமும், கம்பனின் கவித்துவமும், பாரதியின் புரட்சியும், இளங்கோவின் பெண் விடுதலையும் புதைந்து கிடக்கிறது. இதனைப் போல் இந்தியில் என்ன இலக்கியம் இருக்கிறது என்று எடுத்துச் சொல்லுங்கள்!

இந்தத் தமிழில் பக்தி இலக்கியமும் உண்டு, சங்க இலக்கியமும் உண்டு, சிற்றிலக்கியம், பேரிலக்கியம் என சிறகடித்துப் பறக்கிறது. வீரமாமுனிவர், சீகன் பார்க் ஐயர் போன்ற வெளிநாட்டுப் பாதிரிமார்கள் விருப்பமுடன் தமிழ் கற்று தமிழ் இலக்கியம் படைத்த இன்னிசை மொழி. இதனைப் படித்தாலே எங்கள் குழந்தைகளுக்குப் போதுமே!

என்ன வளம் இல்லை எங்கள் தமிழில் ஏன் நாங்கள் படிக்க வேண்டும் உங்கள் மொழியை? இதுதான் எங்கள் கேள்வி! இங்கு பல்வேறு மொழி பேசுகிறார்கள் ஆனால் வடஇந்தியாவைப் பொறுத்தமட்டில் தாய்மொழியைப் பறிகொடுத்து விட்டு இந்தி மொழியில் பேசுவது இழிவு என்று கூட எண்ணாமல் இந்தியைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மொழிப்பற்று உள்ளவர்களால் மட்டுமே சொந்த மண்ணில் சொர்க்கம் அமைக்க முடியும்.

இந்தியைத் திணித்தால் தமிழ் மெல்ல அழியும் என்று வடக்கே இருந்து ஏவிவிடுகிறார்கள். இன்று தமிழ்பேசும் அரசியல்வாதியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வடக்கத்தியர்கள் திணறுவதும், சத்தமிடுவதும் மேசையைத் தட்டுவதும், தங்களுடைய இயலாமையை இந்த உலகமே கண்டு கைகொட்டி சிரிக்கிறதே! அவரவர் மொழியில் உரையாடுகின்ற பாராளுமன்ற உறுப்பினார்களைப் பாருங்கள் அவர்களது உரையில் உணர்வும் இருக்கும் உயிரும் இருக்கும் ஆனால் பிழைப்பதற்காகப் படித்த மொழியை வைத்து பிழைப்பு நடத்த முடியுமே தவிர தன் பிழையைக் கூட திருத்த முடியாது.

இவர்கள் தமிழ் நாட்டுக்கு இந்தியைக் கொண்டு வருவது தமிழர்களை உயர்த்துவதற்காக என்று கூறுவது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது. எங்கள் இந்தியைக் கற்று எதிர்காலத்தைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள நினைப்பவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வதற்கு எந்த நிதியும் கொடுக்கவில்லையே! அப்படி என்றால் இந்தித் திணிப்பின் மூலம் இந்திக்கு ஆசிரியரை நியமிப்பார்கள் அப்படிப் பார்த்தால் தொடக்கப்பள்ளிக்கு 24,310, நடுநிலைப் பள்ளிக்கு 14,048, உயர்நிலைப் பள்ளிக்கு 3135, மேல்நிலைப்பள்ளிக்கு 6,220 என மொத்தம் 47,713 ஆசிரியர்களை நியமிப்பார்கள். பிறகு 2 ஆண்டுகள் அவர்களே ஊதியம் கொடுப்பார்கள். அடுத்து தமிழக அரசுப் பணத்தில் இந்தி கற்றுக் கொடுக்கிறவர்களுக்கு ஊதியம் வழங்கும் நிலைக்கு உள்ளாக்கப்படுவோம்.

காலப்போக்கில் இவர்களே நமக்கு தலைமையாசிரியர்களாக கல்வி அலுவலர்களாக வருவார்கள் நமது கல்வி நிலையம் அப்போது என்னவாகும்! எண்ணிப்பாருங்கள். மிகவும் மோசமாகி அவரவர் குலத்தொழிலுக்குப் போகச் சொல்வார்கள் அப்போது நம்மிடம் குலம் இருக்கும் தொழில் இருக்காது பிச்சை எடுக்கத்தான் வேண்டும்.

எதற்கு நாங்கள் இந்தி கற்க வேண்டுமென்றால் சில அறிவாளிகள் சொன்ன பதில் நீங்கள் பானிபூரி வாங்கி சாப்பிடுவதற்கு! அவர்களிடம் பேச வேண்டாமா? என்கிறார்கள் வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமென்றால் நாங்க எதுக்குடா நடுச்சாமத்தில் சுடுகாட்டுக்குப்போக வேண்டும்? என்பது போல் நாங்க உழைக்கிறோம் சம்பாதிக்கிறோம். நாங்களே பானிபூரி செய்து சாப்பிடமாட்டோமா? என்று கேள்வி கேட்கிறோம். இன்னொருவர் சொல்கிறார் அடுத்தவர்கள் திட்டினால் புரிந்து கொள்ள வேண்டாமா? என்கிறான். அடுத்தவன் திட்டியது புரிந்தால் அவனோடு சண்டையிட்டு நாம் சாகவேண்டுமா? ஆனால் ஒன்று சொல்கிறேன் அறிவோடு பேச வேண்டுமென்றால் கொஞ்சம் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்.

நன்கு யோசியுங்கள் இன்று மும்பையில் தராவியில் தமிழன் கலக்குகிறான் என்றால் அவன் எங்குபோய் இந்தியைக் கற்றுக்கொண்டான்? தேவைப்படும்போது தேவையின் நிமித்தம் தேடிக்கொள்கிறான். இங்கு தமிழன் அதிகமாக தென் இந்தியாவில் பரவி நிற்கிறான். அவன் தேவைப்படும் போது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்தையும் பணிக்குச் செல்லும்போது கற்றுக் கொண்டானே தவிர பள்ளிக்குச் சென்று கற்றது அல்ல.

நாங்கள் தமிழோடு அத்தியாவசியத் தேவைக்காக ஆங்கிலம் கொஞ்சம் கஷ்டப்பட்டு கற்றுக்கொள்கிறோம். இதோடு இன்னும் கடினமாக இந்தியையும் கற்க ஆரம்பித்தால் நாங்கள் எப்போது கணிதம், அறிவியல். சமூகவியல் கற்பது? எங்கள் பிழைப்பில் மண்ணள்ளிப் போட எங்கிருந்துடா வர்றீங்க? பிற மொழி என்பது மேலாடை போன்றது வெளியில் போகும் போது அணிந்து கொள்வது தேவைப்படும்போது அணிந்து கொள்வோம். தாய்மொழி என்பது உள்ளாடை போன்றது அது கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் நிர்வாணமாகி விடுவோம் ஆகவே உங்கள் உள்ளாடைகளை எங்களையும் அணியச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள்!

தமிழைப் பழித்தால் தாய் தடுத்தாலும் விடேன் என்றான் பாரதிதாசன். நாங்கள் படித்தவர்கள், பண்புள்ளவர்கள். ஆகவே வீண்பிரச்சனைகள் வேண்டாம் என்று ஒதுங்குகிறோமே தவிர போராட்டத்திற்குப் பயந்தவர்கள் அல்ல தெற்கே இருப்பவர்கள் போராளிகளே தவிர நாற்காலிக்கு ஆசைப்படுபவர்கள் அல்ல. அதனை பிறருக்குக் கொடுத்து அழகு பார்ப்போமே தவிர ஆசைப்பட மாட்டோம். தாயைப் பேணுவது போல தாய் மொழியையும் காப்போம் கலக்காதீர்கள் கலங்கிப்போவீர்கள்.

“எங்கள் தாய்ப்பாலும்
எங்களின் தமிழ்ப்பாலும்
தரணியை ஆண்டவை”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES