04

Apr

2025

கடல் நீர்…

– எனது பார்வையில்

ஒரு நாள் கடற்கரையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன் மக்கள் அனைவரும் கடலையும், அலையையும் அதில் வரும் படகையும் தூரத்தில் நிற்கும் கப்பலையும் விழிமூடாமல் இரசித்துக் கொண்டே இருந்தார்கள். வெயில் உச்சத்தில் இருந்ததால் உடல் வியர்வையை உற்பத்தி செய்தது. நாக்கு வறண்டு போக தாகம் எடுத்ததும் தேகம் தண்ணீரைத் தேடியது….

கடல் முழுவதும் தண்ணீர் இருந்தும் அதைக் குடிக்க முடியவில்லை. குளித்தாலும் அழுக்கும் போகவில்லை. அப்படியென்றால் இந்தத் தண்ணீர் எதற்கு நமக்கு? அந்தத் தண்ணீர் நம்முடையது அல்ல! அது கடலினுடையது. இப்படித்தான் பணக்காரர் கையில் இருக்கின்ற அத்தனையையும் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் அது நமக்குச் சொந்தமல்ல நம்மைக் கடந்து சென்று அது கடலில்(அவரில்) கலந்துவிட்டது.

இவ்வளவு தண்ணீரைப் பார்க்கிறோமே இவையனைத்தும் கடலின் ஊற்றா? அல்லது கடலிலே விழுந்த மழையா? இல்லையே! எங்கோ துளியாக விழுந்து ஆறுகள் வழியாகக் கடலுக்கு வந்தவை. மழையாக விழுந்த அனைத்துத் துளிகளும் கடலுக்கு வரவில்லை. சில குடிநீராக, சில தீர்த்தமாக, சில சுத்தம் செய்ய, சில விவசாயத்திற்கு என்று பயன்பட்டவைகள் அனைத்தும் அங்கேயே தன் வாழ்வை முடித்துக் கொண்டன. யாருக்கும் பயன்படாத சில துளிகளும் காட்டாற்று வெள்ளத்தோடு கலந்த மழையுமே சிலரின் கண்ணீரோடு கடலில் கலந்து காணாமல் போயிருக்கிறது.

இது தாங்க நம்ம வாழ்க்கை! ஒவ்வொரு துளியும் ஏதோ மழையில் அல்லது மலையில் தோன்றி கடந்து வருவதுபோல ஏதோ ஒரு குடும்பத்தில் தோன்றி நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறோம். இடையில் ஆறுகள் குளங்கள் எனக் கலப்பதுபோல நண்பர்கள், குடும்பம் எனக் கலந்து வெளிவருகிறோம். இந்தச் சமயத்தில் நமது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நதி என்னென்ன, யார் யாருக்கு வழி நெடுகச் செய்து வந்ததைப் போல உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்தது என்ன? ஒரு நிமிடம் உட்கார்ந்து உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்களேன்.

நீங்கள் வாழவைத்த, வளரவைத்த, தாகம் தீர்த்த, சுத்தம் செய்த, உயிர்கொடுத்த, பயிர் வளர்த்ததைப் பட்டியிலிடுங்கள். சிலர் இங்கு குளங்கள், ஏரிகளில் கலந்து அவற்றையும் உடைத்து அவர்கள் வைத்திருந்ததையும் அள்ளிக் கொண்டு ஒடிய, ஆக்கிரமித்த, ஏமாற்றிய, தன்னை நம்பியவர்களை அழித்த வரலாற்றுப் பக்கங்கள் உங்கள் வாழ்க்கையிலும் ஏதேனும் உண்டா? உங்களது வழித்தடத்தில் உங்கள் வேகத்திற்காகப் பலரை அழித்துப் பாழ்படுத்தி விட்டு வந்த பாதைகள் உண்டா? எண்ணிப்பாருங்கள்.

சாதாரணமாக நதிகள் ஓடிக்கொண்டே இருக்கும். சில துளிகள் நிலத்தில் மடிந்தாலும் நிலத்தடி நீராய் நின்று நம்மை வளப்படுத்துவது போல் பலரது வாழ்வில் உங்களை வெளிப்படுத்தாமல் பலரின் உயர்வுக்குக் காரணமாய் நீங்கள் உயிர் வாழ்ந்தது உண்டா? சில புனிதமான நீர் சாக்கடையோடு கலந்து தானும் கெட்டு நகரத்தையும் நாரடித்ததுபோல எப்போதாவது வாழ்க்கையில் வழுக்கி விழுந்தது உண்டா? யோசித்துப் பார்ப்போமே!

ஆனால் நதிகள் பெரும்பாலும் ஓடிக்கொண்டே இருக்கும். அந்தத் தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் கடலில் கலக்கும். இதேபோலதான் பலருடைய வாழ்க்கை! இங்கு பலர் வாழ்கிறார்கள். ஆனால் வாழவில்லை. அதனைப் பலர் உணரவும் இல்லை. பூமிக்கு வந்துட்டோம் ஏதோ ஒன்று நம்மைத் தள்ளிக் கொண்டே போகிறது. யாருக்கும் பயன்படாமல் குடும்பம் என்ற பெயரில் சேமித்து வைத்து கடலைப்போல் அனைத்தையும் உப்பாக்கி குப்பையாக்கி விடுகிறோம்.

குடும்பம்தான் நமது அன்பின் அடையாளம் ஆனால் குடும்பம் பற்றாகி அதுவே புற்றாகி நம்மை அழித்துவிடக் கூடாது. உலகத்தில் நாம் உயர்ந்து நிற்பதும் குடும்பத்தால்தான்! உலகத்தில் உருப்படாமல் போவதும் நம் குடும்பத்தால் தான். உலக நாடுகளின் பார்வையில் நாம் குடும்பத்திற்குச் சேமித்து வைப்பதால் குழந்தைகளை ஊனமாக்குகிறோம். சேமித்து வைக்காத அப்பாக்களை உதாசினப் படுத்துகிறோம். பெண்களை எப்போதும் அடிமைகளாக வைத்துக் கொள்கிறோம். இதில் யார் வாழ்வை யார் வாழ்வது என்று தெரியாமலேயே வாழ்வதால்தான் இங்கு ஏதோ வாழ்கிறோம்! என்பதே நமது தேசிய கீதமாகிறது.

குழந்தைகளுக்குச் சொத்து சேர்த்து வைக்கிறோம். சுயமாய் வாழக் கற்றுக் கொடுக்கவில்லை. பாதுகாப்புக் கொடுக்கிறோம். அதனால் பயமில்லாமல் வாழக் கற்றுக்கொடுக்கவில்லை. மன்னிக்கிறோம், அதன் தவறுகளை உணரக் கற்றுக் கொடுக்கவில்லை அன்பு செய்கிறோம் அதனைப் புரிந்து கொள்ளக் கற்றுக் கொடுக்கவில்லை. இதனால் நமது குடும்ப வாழ்வு சீர்குலைந்து நிற்கிறது. பெண்களைப் பொறுத்தமட்டில் அவர்களை மனைவியாக மட்டும்தான் பார்க்கிறோம். அதனால் தமக்கும் நமது குடும்பத்திற்கும் அடிமை வேலை செய்யும் வேலையாளாக நினைக்கிறோம்.

ஒரு முறை நான் எழுதும்போது எங்களது பெண்கள் வீட்டுச் சிறையில் இருக்கிறார்கள். சிலர் மட்டுமே இங்கு பரோலில் சென்று வேலை செய்துவிட்டு வருகிறார்கள் என்று எழுதி இருந்தேன். இதனால் பலர் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நீங்களே பல பெண்களைக் சென்று சந்தித்துக் கேட்டுப்பாருங்கள். அவர்கள் நலமுடன் வாழ்கிறார்களா? இருக்கிறார்களா? நினைத்த வாழ்வு கிடைத்ததா? அல்லது கிடைத்த வாழ்வு நிலைத்ததா? சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் முடிவை அவர்களால்! இல்லை அவர்களால் மட்டுமே எடுக்க முடிகிறதா? கேட்டுப்பாருங்கள் என்றேன்.

யோசித்துவிட்டு அது சரி! சிறை என்பது கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது என்றார்கள். சிறை என்றால் என்ன? என்று நான் கேள்வி கேட்டதற்கு அவர்கள் மற்ற சிறைகளைப் பற்றி மட்டுமே சொன்னார்கள். நான் சொன்னேன் உள்பக்கமாக நாம் தாழ்பாள் போட்டு தூங்கச் சென்றால் அது வீடு! வெளியே யாரோ தாழ்பாள் போட்டுவிட்டு உள்ளே போய் தூங்குங்கள் என்று சொன்னால் அது சிறை என்றேன். அவர்கள் சொன்னார்கள் வீடு என்றால் உள்ளேயும் வெளியேயும் தாழ்பாள் இருக்கத்தானே செய்யும் என்றார்கள். சரிதான் உள்ளே இருக்கும்போதும் உள்ளேயும் வெளியே செல்லும்போது வெளியேயும் தாழ்பாள் போடுகிற உரிமை உங்கள் கையில் இருக்க வேண்டும்.

வெளிப்படையாகப் பேசும்போது நாம்தானே தாழ்பாள் போடுகிறோம் என்போம் ஆனால் ஒரு பெண் ஒருநாள் தான்நினைத்ததை, நினைத்தபடி, நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் நிறைவேற்ற முடிகிறதா? அல்லது கணவரிடம் கேட்கணும்! அவர்கள் அனுமதி அளித்தால்தான் என்றால்? உங்கள் தாழ்பாள் யார் கையில் இருக்கிறது அவர்கள் திறந்து (அனுமதி) விட்டால்தான் என்றால் நீங்கள் வீட்டில் இருக்கிறீர்களா? சிறையில் இருக்கிறீர்களா?

வெளிநாட்டில் ஒரு தகப்பன் தன் குழந்தைக்குக் காதல் வருமுன்னே காசு சம்பாதிக்கக் கற்றுக் கொடுத்துவிடுவான். உணர்ச்சிகள் ஊடுருவு முன்னே உலகத்தைப் புரிந்து கொள்ளக் கற்றுக் கொடுத்துவிடுவான். அவனது முடிவை அவனே எடுக்கவும் ஆற்றுப்படுத்துவான். நாம் மட்டுமே பாசம் என்ற பெயரில் அவர்களைப் பாழாக்குவோம். நாம் உழைத்து அவனை வாழ வைப்போம். நமது நிழலில் அவனை இளப்பாற வைப்போம். இதனால் திடீர் மரணம் அவனைத் திண்டாட வைத்துவிடும். நமது கௌரவம் அவன் சுதந்திரத்தைத் தின்று விடும். நமது விருப்பம் அவனது சுயத்தைக் கிழிக்க வைத்துவிடும். இதுவா பாசம்? இதுவா குடும்பம்? இதுவா வாழ்க்கை? எண்ணிப்பாருங்கள்!

இங்கு நிறையப்பேருக்கு வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியவில்லை. யாரும் எதுவும் நினைத்துவிடக் கூடாது என்று நினைத்து யாருக்கும் எதுவும் செய்யாமல் பயனற்றுக் கடலில் கலக்கும் ஆற்று நீரைப் போல் இங்கு அர்த்தமற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ ஆசைப்படுகிறோம் ஆனால் சமுதாயம், சம்பிரதாயம், மதங்களும், கட்டுப்பாடுகளும் நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. அதனால்தான் நான் சொன்னேன் எங்கள் பெண்களில் பலர் வீட்டுச் சிறையில் தான் இருக்கிறார்கள். சிறகுகள் இருப்பதே அவர்களுக்குத் தெரியாததால் எங்கள் பெரிசுகள் அதனைப் புடுங்கி காது குடைந்து கொண்டு இருக்கிறார்கள்.

வாழ்க்கை என்பதனை நா. முத்துக்குமார் சொல்வதுபோல் சொல்ல வேண்டுமென்றால் எனது தோட்டத்தில் பூவும் இருக்கிறது பனியும் இருக்கிறது. பனித்துளி செய்யத் தெரியவில்லை. எனது வானத்தில் மழையும் இருக்கிறது வெயிலும் இருக்கிறது வானவில் செய்யத் தெரியவில்லை எனது கடலில் அலையும் இருக்கிறது நுரையும் இருக்கிறது கடந்து போகத்தான் தெரியவில்லை எனது வாழ்க்கையில் இன்பமும் இருக்கிறது துன்பமும் இருக்கிறது வாழத்தான் தெரியவில்லை என்பதுதான்! குயிலே பெண்ணாய் பிறந்தால் கூவ மறந்திருக்கும் மயிலுக்கு ஆடத் தடையிருக்கும் மானுக்கு ஒட மானம் தடுக்கும். மீனுக்கு நீந்தக் கட்டுப்பாடு இருக்கும். நிலவானால் கறைகள் கண்டுபிடிக்கப்படும் புறா என்றால் பறக்கத் தடையாயிருக்கும் இவையெல்லாம் பெண்களுக்கு உவமையாகச் சொல்வோம். ஆனால் அவர்களை ஊமையாக மாற்றுவோம். ஆகவே நீங்கள் நீங்களாக இருங்கள். நீங்கள் பெண்ணாய் பிறந்தால் நாங்கள் வாழ்வோம்! உங்களையும் வாழவைப்போம்! எங்களுக்காக….

“வீட்டில் விளக்கு
இருந்தாலும்…
கண்களை மூடியவனுக்கு
என்ன பயன்?”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES