20

Sep

2024

கண்மணி அன்போடு…

நினைப்பே கொடூரமானது என்றால் அது நீ இல்லாததாக நினைத்துப் பார்ப்பதுதான். நிழலின் அருமை வெயிலுக்கு வரும் வரைத் தெரியாது. உனது அருமை நீ வீட்டில் இருக்கும் வரை எனக்குப் புரியாது. மூச்சுவிடத் திணறும்போதுதான் இதயம் இருப்பதே எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் நீ இல்லாத போதெல்லாம்! உன் சொல் கேளாத போதெல்லாம்!. உன்னைக் கண்டு கொள்ளாத போதெல்லாம் யாரோ என்னிடம் பாதி உயிரைப் பறித்தது போல பரிதவிக்கிறேன். ஆனால் நானும் எல்லா ஆண்களையும்போல தனது ஆணவத்தால் மனைவிக்குச் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என நினைக்கிறேன் ஆனால் அறிவு தடுக்கிறது. மனது துடிக்கிறது.

நீ இல்லாவிட்டால் நான் என்ன ஆகியிருப்பேன்? என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுது. ஆணுக்கு அதிக வயசும், பெண்ணுக்குக் குறைந்த வயசும் வைத்து எதற்குத் திருமணம் முடிக்கிறார்கள் தெரியுமா? எல்லோருக்கும் முதுமை வரும் அதில் முதுமையில் முந்திக் கொண்டு ஆண் முதலில் இறந்தால் அவனுக்கு நல்லது என்றுதானே! பெண் எப்படியும் பிழைத்துக் கொள்வாள். ஏனென்றால் அவள் அதிகம் யாரையும் எதிர்பார்த்து வாழ மாட்டாள். பெண் மட்டும் இல்லையென்றால் ஆணின் அவஸ்தையில் முடியும் அவமதிக்கப்படுவான் என்று அகிலத்திற்கு மட்டுமல்ல அந்த ஆண்டவனக்கும் தெரியும்.

சிறுவயதில் அம்மா இல்லையென்றாலும் நாம் அனாதை இல்லத்தில் வளரலாம். முதுமையான பின்பு யாரும் இல்லையென்றால் முதியோர் இல்லம் சென்று விடலாம். இடையில் நாம் இளமையில் அனாதையானால் என்ன செய்யமுடியும்? என்னதான் தன்குஞ்சு என்றாலும் இறகு முளைத்தவுடன் பறவை கூட்டிலிருந்து அதனை விரட்டத்தானே செய்கிறது. என்னதான் தன் குட்டி என்றாலும் பருவம் வந்தவுடன் குகைகளிலிருத்து அதனை விரட்டித்தானே விடுகிறது. அதேபோல் தான் இளமை பருவத்தில் நம்மையும் நம் குடும்பம் நம்மைத் தனிமரமாக்கும்போது விரட்டும். நமக்கு ஒரு குடும்பத்தைக் கொண்டுவர, நம்மை அனாதை ஆக்காமல் காக்க, வீடு தேடி வந்தவர்தான் நமது மனைவி. அவள் நமது தவம் நமக்குக் கிடைத்த வரம்.

பெண்களுக்கு கனவு என்பதே இருக்காது! காரணம் கணவன்தான் அவளுக்கு ஒரு கனவு, அந்தக் கனவே தன்கனவு. இதுதானே என் இல்லாளிடம் நான் கண்டது. எல்லோரும் நமக்கு காதல் வருவதாகவும் அதனால் ஒரு பெண்ணைத் தேடுவதாகவும் நாம் எண்ணுகிறோம். இல்லவே இல்லை. என்னை பொறுத்தவரை எல்லாம் நமக்குத் தாய்தான் அவளுக்கு வயதாகும்போது அவள் நம்மை வளர்க்க, உதவிசெய்ய, உடனிருக்க முடியாமல் முதுமையில் தடுமாறும்போது அவள் சாயலில், உதவிசெய்யவும், உடனிருக்கவும், அன்புசெய்யவும் துன்பப் படும்போது துயர் துடைக்கவும், அம்மாவின் சாயலில் ஒரு பெண்ணை நாம் தேடுவதுதான் காதல், திருமணம்.

நான் தேடும்போது எனக்குக் கிடைத்த ஒரு தேவதை நீ. ஆனாலும் நான் என் அகங்காரத்தால் ஆண் என்ற திமிரினால் கடைசி வரை உன்னை அடிமையாக வைத்திருந்தேன். பிறந்த வீட்டில் நீ இளவரசி எனக்குத் தெரியும். எனது வீட்டில் நீ சிறைவாசி அதுவும் எனக்குப் புரியும். என்னைக் கேட்காமல் நீ எதையும் செய்யக் கூடாது. இதுதானே என் இலக்கணம். வெளி உலகிற்கு நான் நல்ல மனிதன் ஆனால் உன்னிடத்தில் நான் அரக்கன். அதுவும் இரக்கமற்றவன் உனது பொறுமையால் எனது வேசம் இன்னும் வெளி உலகிற்குத் தெரியவில்லை. நீயும் என்னைக் காட்டிக் கொடுக்கவில்லை.

எனக்கு எது பிடிக்கும் என்று எனக்கே தெரியாதபோது உணவு, உடை, உலக வாழ்க்கை இதுதான் பிடிக்கும் என்று எனக்காக எப்போதும் வாழ்ந்தவளே! இப்போது உன்னைத் தவிர வேறெதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. இந்த உண்மையைக் கூட உன்னிடம் சொல்ல எனக்குத் துணிவில்லை. என் பிறந்த வீட்டில் பல நேரங்களில் என்னிடம் சந்தேகமான பல கேள்விகள் கேட்டிருக்கிறார்கள் ஆனால் ஒருபோதும் என்மீது உனக்குச் சந்தேகம் வந்ததேதில்லை. கேள்வியும் கேட்டதில்லை. கேட்டால் அதை நீ அன்பு என்கிறாய்!

அம்மாவை அதிகமாக இந்த உலகம் அர்ச்சனை செய்கிறது. ஆனால் மூன்றில் ஒரு காலம் மட்டும் தான் அம்மாவிடம் நான் வளர்ந்தேன். அதிலும் கல்விக்கு, வேலைக்கு என்று பலநேரங்களில் அம்மாவையும் பிரிந்துதான் நான் வாழ்ந்தேன். வாழ்வில் பெரும் பகுதி எனது வாழ்க்கைக்காக வாழும் மனைவியை நான் எப்போதும் மறந்து விடுகிறேன். தாய் வயிற்றில் சுமந்தவள், தாரம் நெஞ்சில் சுமப்பவள், ஆனால் தாயை தெய்வம் என்றும் தாரத்தை அடிமையென்றும் நினைக்கும் அளவிற்கு இந்தத் தரங்கெட்ட சமுதாயம் எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டது.

ஒரு நாள் கூட நீ இல்லாவிட்டால் எனக்கு உணவு கிடைக்காது. இதைக் கூட உணராமல் வாழ்ந்தவன் நான். சில நேரங்களில் வருத்தத்தோடு இருக்கும்போது உங்கள் மகிழ்ச்சிக்காக எங்கேயாவது போய் வாருங்கள் என்றாய். சந்தோசத்தை வீட்டில் வைத்து விட்டு நான் சன்னதி தேடி அலைந்து என்ன பயன்? சாமியை வீட்டில் வைத்துவிட்டுக் கோயில்களைத் தேடி அலைந்து என்ன பயன்? கோவில் மரத்தில் கூடு கட்டி வாழும் ஒரு பறவைப்போல் உன்னால் நான் இதுவரை பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பத்திரமாக என்னைப் பார்த்துக் கொண்டாய்.

எல்லா ஆண்களாலும் தன் இச்சையைத் தீர்க்க ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்க முடியும். ஆனால் பிள்ளையைப் பெற்றுக் கொள்ள எவனாலும் முடியாது. சண்டைபோட்டு, சாக்குப்போக்குச் சொல்லி குடும்பத்தைப் பிரிக்க முடியும். ஆனால் நல நட்டங்களில் கலந்து அறுந்த உறவுகளைச் சேர்க்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். திருமணம் என்பது இருமனம் இணைவது மட்டுமல்ல இரண்டு குடும்பங்கள் இரண்டறக் கலப்பது தான் என்பது உன் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம்.

அம்மா அமுதம் தந்தவள். ஆனால் நீ அறுசுவை உணவைத்தந்தவள். அவள் ஊட்டி வளர்த்தவள். நீ உடனிருந்து ஊட்டியவள்! அவள் என்னைப் பெற்றவள் நீ எனக்காகப் பெற்றவள் நீயும் எனக்கு ஒரு அம்மா தானே! அவளின் இரத்தமும் சதையுமாக நான் வந்தேன். ஆனால் நீ என் இரத்தத்தோடு சதையாகக் கலந்தவள் அன்னைக்கு நிகரான அன்னையம்மா நீ!.

இதை இந்தச் சமூகம் யாருக்கும் சொல்லித்தர வில்லை. அன்னையைத் தொழச் சொன்ன சமூகம் ஏன் மனைவியை மட்டம் தட்டுகிறது? இளைய சமுதாயத்திற்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் ஆண் பிள்ளைகள் அனைவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும்.

பாலியல் சீண்டல்கள் பல இடங்களில் பேயாட்டம் ஆடும்போது பெண்மையின் உண்மை அனைவருக்கும் தெரிய வேண்டும். திரையில் மட்டுமே ஒருவன் படத்திற்கு ஒரு நாயகியோடு நடிக்கலாம் நிஜ வாழ்வில் பார்க்கிறவர்களிடத்திலெல்லாம் மனசைப் பறி கொடுக்க முடியாது. இந்த உலகில் ஆண்கள் அதிர்ஷ்டசாலிக்காரனாய் இருக்க வேண்டும் என்றால் அவனின் மனைவி அவனுக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும். ஒருவனுக்கு அவன் மனைவி கடைசிக் காலம் வரை இருக்க வேண்டும். அல்லது மனைவியோடு இருக்கிற காலம் கடைசியாக இருக்க வேண்டும். அதுதான் ஆண்களுக்கு இறைவன் தர வேண்டிய வரம். இல்லையென்றால் நரகத்தை நோக்கி அவன் நகர வேண்டியிருக்கும். மனைவி இல்லாதவனுக்கு வீடு சுடுகாடு.

என் மதிப்பிற்குரியவளே. என் மனதைக் கவர்ந்தவளே. வாழும் வரை எனக்காக வாழ்கின்றவளே உன்னைப் பயன்படுத்திக் கொண்ட அளவு நான் பாசத்தைப் பகிரவில்லை என்று எண்ணுகிறேன். உன்மீது உள்ள உரிமையால் உனது அருமையை கடைசிவரை புரியாமலேயே இருந்துவிட்டேன். என்னை நீ எவ்வளவு வளர்த்து விட்டாயோ! அந்த அளவு உன் வளர்ச்சியைத் தடுத்து விட்டேன். என்னை மிஞ்சி விடுவாயோ எனப்பயந்து உன் கொஞ்சலைக் கூட கோபத்தால் முறித்து விட்டேன். என்னைப் பிரிந்து விடுவாயோ என்ற பயத்தில் உன்னை யாரிடமும் பேச விடாமல் தடுத்து விட்டேன். அனைத்தையும் சகித்துக் கொண்ட என் சகியே! என்னைப் போல்தான் எத்தனையோ ஆண்கள் குற்றப் பழியுணர்வோடு குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் கடைசிக் காலத்திலாவது பழி சுமத்த பதியாக வாழாமல் ஆன்ம திருப்த்திக்காக நான் கேட்கிறேன். கண்டு கேட்க முடியவில்லை. கடிதத்தில் கேட்கிறேன். மன்னித்துவிடு ஒரு வீணை விறகுக்காரனிடம் இருந்தது போல் என்னிடம் இருந்துவிட்டாய்! உன்னை வாசிக்கவும் தெரியவில்லை நேசிக்கவும் தெரியவில்லை மறுபடியும் மன்னித்துவிடு! வருகின்ற தலைமுறை பெண்களைப் போற்றி வாழ இது வாசலாகட்டும்.

இப்படிக்கு
ஆணாதிக்கத்தில்
அகப்பட்ட சகதி…

“மனைவி
மனதில் விழுந்து
இதயம் நிறைந்து
உயிரில் கலந்த
உறவு…”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES