09

Aug

2024

குப்பை வண்டி…

நானும் எனது தோழரும் எங்கள் பணிக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தோம். அப்போது அவரது முகம் இறுக்கமாக இருந்தது. எனக்கு அது வருத்தமாக இருந்தது. அவரிடத்தில் ஏன் இன்று முகம் வாட்டமாக இருக்கிறது? என்று கேட்டேன். அவர் விரக்தியாகச் சிரித்தார். ஒரு பெருமூச்சு விட்டு விட்டுப் பேச ஆரம்பித்தார்.

தூரத்தில் இருந்து பார்க்கும்போது நாம் தோப்பாகத் தெரிகிறோம். பக்கத்தில் வந்து பார்த்தால் நாம் தனிமரம் தான். எல்லோருமே ஒன்றாத்தான் வேலை செல்கிறோம். சந்தோசமாக உடன்பிறப்புப் போல் பழகுகிறோம் இல்லை (நடிக்கிறோம்) இன்ப துன்பங்களில் கலந்து (கடமைக்காக) கொள்கிறோம். விழாக்களை (வயிற்றெரிச்சலோடு)க் கொண்டாடுகிறோம் என்று அவர் சொல்லச் சொல்ல உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள்! என்பது எனக்குக் கேட்கிறது என்றவுடன் அவர் நமட்டுச் சிரிப்புச் சிரித்தார்.

என்னைப் பார்த்துக் கேட்டார் நீங்கள் எப்படி அத்தனை பேரையும் அலட்டிக் கொள்ளாமல் கடந்து போகிறீர்கள்? எத்தனை போட்டிகள்! எத்தனை பொறாமைகள்! எத்தனை புறம் பேசுதல்! எத்தனை காலை வாருதல்! எத்தனை வஞ்சகம்! எத்தனை சுயநலம்! எத்தனை துரோகம்! எத்தனை குரோதம்! அப்பப்பா ஒவ்வொரு நாளும் நமது பணியை விட இத்தனை பேய்களோடு நாம் போராடுவது மிகவும் கடினமாக இருக்கிறது! முடியல… களைப்பாய் இருக்கிறது என்றார்.

உங்களை மாதிரி என்னால் இருக்க முடியவில்லை நீங்கள் எப்படி? என்றார். நாம் இப்போது நமது வேலைக்காகப் போகிறோம். இல்லையா? இந்தப் பயணத்தை நன்றாகக் கவனியுங்கள் பேருந்து வந்தது. நாம் ஏறிக் காசு கொடுத்ததால் நாம் சொன்ன ஊருக்கு அது கொண்டு போய் விடப் போகிறது. இப்படி சிலர் நம்மிடம் வருவார்கள் அவர்கள் வருகிற நேரம் நாம் அவர்களுக்கு ஏதாவது செய்தால் அவர்கள் நமக்கு ஏதாவது செய்து விட்டுப் போவார்கள் பேருந்தைவிட்டு இறங்கி விட்டால் நமக்கும் பேருந்துக்கும் தொடர்பு இல்லாதது போல் இந்த நிறுவனத்திலிருந்து மாறிவிட்டால் அவர்களுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

நாங்கள் வந்த பேருந்து அம்பையில் நுழைந்தபோது திடிரென்று காருக்குள் ஒருவர் வந்தார். சில பொருட்களைக் கொண்டு வந்து விலை சொன்னார் விபரம் சொன்னார் வாங்கியவர்களிடம் காசை வாங்கிக் கொண்டு போய் விட்டார். இதே போல் சிலர் நம்மிடம் பேசுவார்கள் அவர்களுக்கு நம்மிடம் ஏதாவது ஆதாயம் கிடைக்குமென்றால் இனிக்கும்படி பேசுவார்கள் காரியம் முடிந்தவுடன் நம்மை கழற்றிவிட்டுப் போய்விடுவார். இது அவர்களது வாடிக்கை… வாழ்க்கை…

நாங்கள் பயணிக்கும்போது எங்கள் பேருந்துக்கு முன்னால் இருசக்கர வாகனம் நடுரோட்டில் அனைவரையும் முந்திக்கொண்டு சென்றது. பேருந்து வருவதைப் பார்த்து அது ஒரு ஓரமாக ஓதுங்கி வழிவிட்டது. இதுபோல்தான் சிலர் தலைமை இல்லாவிட்டால் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று ஆடுவார்கள் தலைமையைக் கண்டவுடன் இருக்கும் இடம் தெரியாமல் ஒதுங்கிக் கொள்வார்கள் இவர்கள் பயந்தாங்கொள்ளிகள்.

ஒரு இடத்திற்கு வரும்போது காவல்துறை ஒரு தடுப்பு வைத்திருந்தது. ஆகவே ஒருவர் தான் செல்ல முடியும் என்று நினைக்கும்போது எதிரே ஒருவன் குறுக்கே வந்து நின்று கொண்டான். இப்படித்தான் நாம் எது செய்தாலும் நம்மை எதிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் சிலர் முட்டுக் கட்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் நம் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுபவர்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதனைக் கடந்து வரும்போது நம் பயணத்தின் குறுக்கே ஒரு வாகனம் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தது. வழியையும் விடாமல் வேகமாகவும் செல்லாமல் பயங்கர எரிச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இதே போல் சிலர் எந்தச் சட்;டதிட்டத்தையும் கடைபிடிக்கமாட்டார்கள். தானும் முன்னேற மாட்டார்கள். பிறரையும் முன்னேறவிட மாட்டார்கள் குறுக்கே கட்டையைப் போட்டுக் கொண்டு நந்தியைப் போல் நம்மையும் நகர விடாமல் தடுத்துக் கொண்டிருப்பார்கள். வயிற்றெறிச்சல் பிடித்தவர்கள்.

வழியே இருக்காது. இருப்பினும் சமாளித்துக் கொண்டு போய்க் கொண்டிருப்போம். இருப்பினும் பின்னர் நின்று கொண்டு அலாரம் அடித்துக் கொண்டே இருப்பார்கள். இதே போல் எதற்கெடுத்தாலும் முனங்கிக் கொண்டும் புலம்பிக்கொண்டும் நம்மை எரிச்சலடைய வைத்துவிடுவார்கள். இவர்கள் நம் முதுகிற்குப் பின்னால் புறம் பேசுபவர்கள்.

நாம் வேகமாகச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போது இரயில்வே கேட் போடப்பட்டு இருக்கும். நாம் காத்து இருந்துதான் அதனைக் கடக்க வேண்டும். இதேபோல்தான் அதிகாரம், சில கூட்டங்கள், சில தலைவர்கள் நம்மைக் கட்டுப்படுத்துவார்கள் ஏன்? கட்டியே போட்டு விடுவார்கள் கலங்கக் கூடாது. பொறுமையாகக் கடந்து செல்ல வேண்டும்.

புதிய வண்டியாக இருக்கும். விலை உயர்ந்த வண்டியாக இருக்கும் ஆனால் L போர்டு போட்டு முன்னால் நின்று கொண்டு நமக்கு வழியை விடமாட்டார்கள் அவர்களும் போகமாட்டார்கள். இதே போல தகுதியில்லாத தலைவன் வந்து விட்டால் புரிந்து கொள்ளாமல் நம்மைப் பாடாய்ப்படுத்துவான். எதிர்க்க முடியாது தடுக்கவும் முடியாது சகித்துக் கொள்ள வேண்டும்.

பேருந்தை விட்டு இறங்கினோம் ஒரு வேனில் வந்த ஒருவர் அங்கிருந்த அனாதைகளுக்கு ஒரு சாப்பாடுப் பொட்டணமும் ஒரு பாட்டில் தண்ணீரும் கொடுத்துவிட்டுப் போனார். இதேபோல் சிலர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்கு எப்போதும் உதவி செய்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் நமது உயிர் நண்பன்.

பக்கத்தில் ஒரு ஆட்டோ வந்தது இவரை நாம் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் வந்து உதவுவர். காத்து இருப்பார் மரியாதை கொடுப்பார் கொடுப்பதை வாங்கிக் கொள்வார். இதேபோல் சில உறவுகள் அமையும்.

பள்ளிக்கு நெருக்கமாக வரும்போது ஒரு மாநகராட்சி குப்பை வண்டி வந்தது. நாங்கள் ஒதுங்கி நின்று கொண்டோம். காரணம் அந்த வண்டியிலுள்ள குப்பைகள் நம் மீது விழுந்து நம்மை அசிங்கப்படுத்தி விடக்கூடாது. இதே போல் தான் சிலர் பேச ஆரம்பித்தால் அவர்கள் வாயிலிருந்து குப்பைகள் வந்து கொட்டும். குறை சொல்வார்கள் இல்லாதது பொல்லாதது பேசுவார்கள். இழிவாகத் திட்டுவார்கள். புறம் பேசுவார்கள் போலியாக நடிப்பார்கள் உத்தம வேசம் போடுவார்கள் ஊருக்கு உபதேசம் சொல்வார்கள் நல்லவர்கள் போல் நடிப்பார்கள் நயவஞ்சகத்தால் பிறரை நசுக்குவார்கள். இத்தனை குப்பைகளோடு வருகிறவர்கள் தான் நமக்கு எதிரே வருகின்ற குப்பை வண்டிகள். இவர்களை கண்டால் நாம் கொஞ்சம் ஒதுங்கிப் போய் விட்டால் நமக்கு நல்லது.

இத்தனையும் தினசரி பார்த்தபிறகும் நாம் என்றைக்காவது நமது பயணத்தை நிறுத்தினோமா? இல்லையே! உங்கள் நிறுவனத்தில் யார் யார் என்ன வண்டிகள்? என்று புரிந்து கொண்டு பயணியுங்கள். குப்பை வண்டிகள் வந்தால் மட்டும் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவர்கள் குப்பை உங்கள் மேல் விழுந்து உங்களையும் அசிங்கமாக்கி விடும்! சரி நீங்கள் பிறருக்கு எந்த வண்டி?

“வார்த்தை
தென்றலானால்
வாழ்க்கை
வாசமாகும்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES