07

Nov

2024

சாத்தாங்கி…

சமீபத்தில் வாரப்பத்திரிக்கையில் ஒரு செய்தியைப் படித்தேன். ஆச்சரியமுற்றேன் அதாவது குஜராத் மாநிலத்தில் ஒரு சிற்றூர் அதன் பெயர் சாத்தாங்கி. அந்தக் கிராமத்தில் ஒரு பழக்கம் இருந்தது. அங்கு யாரும் தன் வீட்டில் சமைப்பதில்லை. இதைக் கேட்டவுடன் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும் ஆனால் உண்மை.

இந்தக் கிராமத்தில் பலர் வெளிநாட்டில், வெளியூர்களில் வேலை செய்து பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பிழைப்பதற்காகக் குடும்பத்தோடு புலம்பெயர்ந்து வாழ்வதால் வயதானவர்களைச் சொந்த ஊரில் சொந்த மண்ணில் இருக்கின்ற இடத்தைக் காத்துக் கொள்ள உள்ளுரிலேயே விட்டு விட்டு செல்கிறார்கள். வயது முதுமையின் காரணமாக பல்வேறு பிரச்சனைகள், நோய்கள் ஏற்படும் அதனால் அவர்களால் சரியாகச் சமைத்து உண்ண முடியாது. ஏதோ சமையல் செய்து எப்படியோ சாப்பிட்டு, சில நேரங்களில் உடல் நலக் குறைவினால் சமையல் செய்ய முடியாமல் பட்டினி இருக்க வேண்டிய நிலை கூட வந்து விடும்.

இதனால் இந்தத் துயரத்தை கண்முன் கொண்ட ஒருவர் அனைவரும் கவலையின்றி பசியாறச் சாப்பிடும் வகையில் ஊர் பொதுச் சமையல் ஒன்றைக் கொண்டு வந்தார். இது முதலில் அதிசயமாக இருந்தது. பலருக்கு ஆர்வம் இல்லாமலும் இருந்தது. நாட்பட நாட்பட மக்கள் கூட்டம் அதிகரித்தது. வெளியில் இருப்பவர்கள் எல்லாம் தாங்கள் பெற்றோர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு கட்ட வேண்டுமோ! அவ்வளவு பணத்தை கட்டி விடுகிறோம் என்று பணத்தை அனுப்ப ஆரம்பித்தார்கள்.

இதனால் அந்த ஊரில் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணைந்தார்கள். அனைவரும் சாப்பிடும் வகையில் பொது இடங்களில் உள்ள மண்டபங்களில் சமையல் செய்யவும் அனைவரும் அமர்ந்து சாப்பிடவும் ஏற்பாடு செய்தார்கள் வீட்டிற்கும் வாங்கிச் சென்று சாப்பிடலாம் என்ற வசதியும் செய்து கொடுத்தார்கள்.

ஆனால் யாரும் வீட்டிற்கு வாங்கிச் சென்று சாப்பிடுவதில்லை. ஏனெனில் அனைவரும் இணைந்து சந்தோசமாகச் சாப்பிட்டு, மனதார உரையாடி, உரிமையோடு சண்டைபோட்டு, திடிரென்று கோபித்து, திடிரென்று சமரசமாகி இன்புற்று வாழ்கின்றனர். பிறர் கொடுக்கும் மாத உதவித் தொகையோடு உதவும் மனப்பான்மை உள்ளவர்களிடமும் உதவிபெற்று அதில் நிரந்தரச் சமையல் காரர்களை அமைத்து ஊதியம் கொடுத்து உணவுப்பொருட்கள் காய்கறிகள் பெற்று சிறப்பாக இத்திட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

நாமும் இதனை யோசிக்க வேண்டும். நாம் பிழைப்பதற்காகவும், படித்த படிப்பிற்காகவும் நமது சொந்த மண்ணைப் பிரிந்து வெளியூரில் வேலை செய்து கொண்டு இருக்கிறோம். வயது மூப்பின் காரணமாகவும் அவர்கள் சொந்த மண்ணை விட்டுப்பிரிய முடியாமலும் நமது பெற்றோர்கள் நமது ஊரிலேயே தங்கி விடுகிறார்கள். அதனால் நம்மில் பலருக்கு நமது பெற்றோர்களைச் சரியாகப் கவனிக்க முடியவில்லை. இந்தக் கவலை எல்லோருக்கும் இருக்கிறது. ஏதோ ஊருக்கு வரும்போது பெற்றோர்களைப் பார்த்து நமக்கு முடிந்ததைக் கொடுத்துவிட்டு வருகிறோம். ஆனாலும் நமக்கு நிம்மதியில்லை. திடிரென்று அவர்கள் இறப்பின் போது நமக்குத் தகவல் வர நாம் போய் அந்த இறப்பு நிகழ்ச்சிகளில் கூனிக் குறுகி நிற்கிறோம். ஏதோ குற்றப் பழி உணர்வு நம்மைக் குடைந்து கொண்டே இருக்கும்.

எப்படியும் நமது ஊரில் நாலு பேருக்கு நல்லது செய்ய நினைக்கும் ஒருவர் இருப்பார். அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் வெளியூரில் தங்கி வேலை செய்யும் அத்தனை நபர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அவர்களிடம் இத்திட்டத்தை எடுத்துச் சொல்லி ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரு தொகையை வழங்கச் சொல்ல வேண்டும். உள்ளுரிலும் சில தாராள உள்ளம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களும் மனம் உவந்து உதவி செய்வார்கள். சிலர் உள்ளுரில் விளைகின்ற உணவுப்பொருட்களை கொடுத்து உதவுவார்கள். எனவே எல்லோரும் இத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் சிந்திக்கத் தொடங்கினால் அவ்வூரில் உள்ள முதியோர்கள் பயமின்றி பாதுகாப்பாய் வாழ்வார்கள் நாமும் ஒரு பெரிய புண்ணியத்தை செய்த நிறைவு இருக்கும்.

பொதுவாக அக்காலத்துப் பெண்கள் தன் குடும்பத்திற்கு அதிகமாகவே சமைப்பார்கள். அதில் நான்கில் ஒரு பங்கு குடும்பத்திற்கும் ஒரு பங்கு விருந்தினருக்கும், ஒரு பங்கு உறவினர்களுக்கும், நமக்கு வேலைக்கு உதவுபவர்களுக்கும், ஒரு பங்கு தம்மிடம் யாசகம் கேட்பவர்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். எது செய்தாலும் பிறருக்கென்று சேர்த்துதான் செய்வார்கள். ஆனால் இப்போது பெண்களில் பலர் வேலைக்குச் செல்வதால் அவர்களுக்குச் சமைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. அதனால்தான் அவர்களுக்கு உதவும் மனம் இருந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் உழைப்பதனால் அவர்கள் கையில் பணம் இருக்கிறது. உணவு தயாரிப்பதும் அதனை முதியோர்களுக்கு வழங்கவும் முயற்சி எடுத்தால் அவர்கள் நிச்சயம் பண உதவி செய்வார்கள்.

ஆகவே நல்ல உள்ளம் படைத்தவர்களே! ஊருக்கு ஒருவரோ, ஒரு சிலரோ ஒன்றிணைந்து இந்த இயக்கத்தை ஆரம்பியுங்கள். ஆதரவற்ற முதியவர்கள், வெளி இடங்களில் வேலைசெய்யும் பிள்ளைகளின் பெற்றோர்கள் குழந்தை இல்லாத முதியவர்கள், பிறர் உதவியை எதிர்பார்க்கும் முதியவர்களைக் கணக்கெடுங்கள். இதில் யார் யாரிடமிருந்து உதவி கிடைக்குமோ அவர்களிடமும், அவர்கள் குழந்தைகளிடமும் அவர்கள் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவ்வூரில் உதவிசெய்யும் நல்ல உள்ளம் படைத்தவர்களின் உதவியைக் கேட்டுப் பெறுங்கள். நல்ல நாள், நினைவு நாள், பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில் உணவு வழங்குபவர்களின் உதவியையும் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்த அரசியல்வாதிகள், அறக்கட்டளைகளின் உதவியைப் பெற்று உதவிசெய்யுங்கள். அதோடு உள்ளுரில் கிடைக்கின்ற உணவுப் பொருட்களையும் கொடுப்பவர்களிடம் பெற்றுக் கொள்ளுங்கள் முதியோர்களுக்கு உதவுவதற்கு முயற்சி எடுங்கள்.

நல்ல உள்ளம் படைத்தவர்கள், ஆசிரியர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள், உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் ஒன்று சேருங்கள். ஒவ்வொரு ஊரிலும் முதியோர்களுக்குச் சமைத்து உணவு கொடுக்கும் ஒரு இல்லத்தை அமையுங்கள். பிள்ளைகள் இல்லாதவர்கள் பிள்ளைகளைத் தத்தெடுப்பது போல இங்கு ஒவ்வொருவரும் பெற்றோர்களைத் தத்தெடுங்கள். முழுநேரப் பணி, காலை-மாலைப்பணி நேரம்-வாய்ப்புக் கிடைக்கும் போது கண்முன்னே மனித உருவில் கடவுள் உதவி கேட்டு நிற்கும்போது கண்டுகொள்ளாமல் நிற்காதீர்கள். புண்ணியம் தேடி புனித இடம் போக வேண்டாம். இருக்கும் இடம் புனிதமாக நல்லதையே செய்ய முயற்சி செய்யுங்கள். முடிந்தவரை செய்யுங்கள். நாலு பேருக்கு நல்லது செய்தால் அவர்கள் உங்களை “நல்லாயிரு” என்று வாழ்த்துவார்கள். அதனை வானத்தில் இருந்து வரும் வாழ்த்தாக எண்ணிக் கொள்ளுங்கள். அப்போது பூமியில் இருக்கும் வரை உங்களுக்கு புகழ் இருக்கும். புறப்படுங்கள் போய் புனிதத்தைத் தேடிக்கொள்ளுங்கள்.

“போய்ச் சேருமுன்
புண்ணித்தைத்
தேடிக்கொள்வோம்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES