25
Oct
2024
சூதாட்டம் என்றவுடன் இன்று ஆடுகின்ற பல்வேறு ஆட்டங்களைவிட அனைவரது கவனத்திற்கும் உடனே வருவது மகாபாரதம். தர்மன் ஆடிய சூதாட்டம் தான் இங்கு உலகை உலுக்கிய சூதாட்டம். தனிமனித ஆசைக்காக விளையாட்டாகத் தன்னோடு இருந்த தம்பிகள், மனைவி, அரசு என அத்தனையும் இழந்து நடுத்தெருவிற்கு வந்தான். இந்த ஆட்டம் நேர்மையாளன், மானிடத்தில் மதிப்பு மிக்கவன் ஆடிய சூதாட்டம். இதனால் அவன் இழந்தது அதிகம்.
இதே போல்தான் இன்று இந்த உலகில் நவீன சூதாட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பல நேர்மையாளர்கள், பணம் படைத்தவர்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைப் பெரியவன் ஆக்குகின்ற பித்தலாட்டத்தில் இந்தப் பிழையைச் செய்து கொண்டிருக்கிற ஆட்டம் தான் இந்தச் சூதாட்டம்.
இப்போது ஒரே ஒரு நாள் கல்விக் கூடங்களுக்கு நீங்கள் சென்று வாருங்கள். ஒரு மாணவனைச் சந்தியுங்கள். அவனைப் பற்றிப் பெற்றோர்களிடம் கேளுங்கள் அவர்கள் கூறுவார்கள். என் மகன் பேச்சைக் கேட்கவே மாட்டேன் என்கிறான் என்பார்கள். ஆசிரியரிடம் கேட்டுப் பாருங்கள் இவன் என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டான் என்பார்கள். அவன் வரும் வழியில் பேருந்து நடத்துனர், காவல்துறை, சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள் எவர்களிடம் வேண்டுமென்றாலும் கேட்டுப் பாருங்கள் இந்தப் பசங்க கேட்கவே மாட்டாங்க என்பார்கள்.
அப்படியென்றால் இந்தத் தலைமுறைக் குழந்தைகள் யார்? சொன்னபடி கேட்கமாட்டார்களா? மரியாதை தெரியாதவர்களா? அப்படியென்றால் இனிமேல் ஒட்டுமொத்த உலகமே இப்படித்தான் உருவாகுமா? என்று பல கேள்விகள் எழும். அதற்குக் காரணம் இன்றைய மாணவர்கள் தனக்கு விருப்பமில்லாததைச் செய்வதால் விரக்தியில் இந்த வெறுப்பைக் காட்டுகிறார்கள். மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிர்களுக்கும் தனக்கென்று சில ஆசைகள், தேவைகள், விருப்பங்கள் இருக்கும். இது என்ன? மனிதனுக்கு மட்டும் அது இல்லாமல் போய் விடுமா என்ன? இன்று எந்தக் குழந்தைகள் தனது தேவையைச் சொல்லி அதனை அடைய ஓடிக் கொண்டிருக்கிறது? இல்லையே!
குழந்தைகள் என்பது கோயிலுக்கு நேர்ந்து விட்ட ஆடோ, மாடோ, கோழியோ அல்ல! அதனை உங்கள் தேவைக்கு பலிகொடுக்க, இங்கு ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஆசையும், தேவையும் உண்டு. ஆனால் இன்று எந்தக் குழந்தையும் தன்னுடைய தேவையை உணரக் கூட இல்லையே!
இன்று எந்தக் குழந்தை என்னை ஆங்கில பள்ளியில் சேருங்கள் என்று சொன்னது? எந்தக் குழந்தை எனக்கு தனிப்படிப்பு வையுங்கள் என்று சொன்னது? எந்தக் குழந்தை என்னை டாக்டராகவோ, பொறியியல் வல்லுனராகவோ, மாற்றுங்கள் என்று சொன்னது? எல்லாம் பெற்றோர்கள் ஆசைதானே! உங்களுடைய பேராசையைத் தீர்;த்துக் கொள்வதற்காக நீங்கள் ஆடும் சூதாட்டத்திற்காக உங்கள் குழந்தைகளை வைத்து ஆடுகிறீர்கள்! சூதாட்டம் என்னும் பேயாட்டத்தில் உங்களுக்கு அதிஷ்டம் அடிப்பது போல் எண்ணிக் கொண்டு நட்டத்தில் விழுந்து நாசமாய் போவீர்கள் அனைத்தையும் இழந்து தெருவிற்கு வருவீர்கள். இதுதானே இன்று நடக்கிறது? உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கப் போகிறேன் என நினைத்துக் கொண்டு, இருளுக்குள் தள்ளுகின்ற இன்றையக் கல்வி விளையாட்டு.!
பலபேர் ஆங்கிலக் கல்வியில் தன் குழந்தைகளைச் சேர்த்துவிட்டு இடையில் பணம் கட்ட முடியாமலும் மாற்றுச் சான்றிதழ் வாங்க முடியாமலும் பலர் இங்கு பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்றைய பிள்ளைகளின் நிலை அன்றைய தர்மனின் தம்பிகளின் நிலையைப்போல கைகளைக் கட்டி கனவினைப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு மனைவியின் நகைகள், இருக்கும் பொருட்கள், ஏன் தாலியைக் கூடப் புடுங்கி பள்ளிக்கு கொடுக்கும்போது அன்று பாஞ்சாலியை துகிலுறிந்ததுதான் நினைவுக்கு வருகிறது. அன்று துச்சாதனன் உறிஞ்சினான். இன்று சேலையை கொடுத்தவனே உறிஞ்சுகிறான் கடைசியில் நிர்வாணமாவது நமது குடும்பம் மட்டுமே.!
அன்றைக்காவது பாஞ்சாலி கத்தியவுடன் கண்ணன் சேலை கொடுத்தான் இன்று இந்தக் குழந்தைகளின் சத்தம் கேட்காமலேயே குரல்வளை நெறிக்கப்படுகிறது. பிறமொழியைக் கற்கச் சொல்லி பெற்றோர்களே கட்டாயப்படுத்தும் போது அவர்களது சூதாட்டத்தில் அவர்களது ஆசைக்காக தன்குழந்தைகளையே வைத்து ஆடும்போது இதனை எந்த ஆண்டவனால்; தடுக்க முடியும்?
வாரிசு அரசியலுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வருகிறீர்களே டாக்டர் குழந்தை டாக்டராகவும் வக்கில் குழந்தை வக்கிலாகவும் தான் வேண்டுமா? ஏனென்றால் அது குடும்ப வேலையல்ல, நீங்கள் கட்டிய மருத்துமனையில் இன்னொருவர் டாக்டராக இருக்கக்கூடாது இதுதானே உங்கள் சுயநலம்? இதற்காகத்தானே உங்கள் சூதாட்டம்?
இதற்காக அந்தக் குழந்தை தனிப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும்? பயிற்சி வகுப்பிற்குச் செல்ல வேண்டும். ஒரு வருடத்தில் வெற்றியடையாவிட்டால் பல வருடம் காத்திருந்து நீட் தேர்வில் வெற்றியடைய வேண்டும். இது எல்லாம் அந்தக் குழந்தைக்கு எட்டிக் காயாய் இருந்தாலும் வெட்டித்தனமாய் தெரிந்தாலும் உங்களுடைய சூதாட்டத்தில் அவன் போட்டித் தேர்வில் தான் பொழுதை எல்லாம் கழிக்க வேண்டியுள்ளது.
நீங்கள் நினைத்தபடியும் ஆகாமல் அவன் என்ன நினைக்கிறான் என்றும் கேளாமல் அவனை வைத்து ஆடிய சூதில் அவனை நடுத்தெருவில் விட்டுவிட்டு இறந்து போவீர்கள்! ஏதாவது வேலை கிடைக்குமா? என்று படியேறிப் படியேறி பாதி வயது போய்விடும். நீங்கள் நினைத்ததை அவனால் படிக்க முடியாமல் அவன் நினைத்ததையும் நீங்கள் படிக்க விடாமல் கடைசியில் போட்டித்தேர்வுக்குப் படித்துக் கொண்டே இருப்பான் கிழவன் ஆகும்வரை.
பிடித்தமில்லாத படிப்பு, பிடித்தமில்லா, வேலை பிடித்தமில்லா வாழ்க்கை வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் வாழ்வதனால் வாழும்போதே அவன் நடைபிணமாய் நடைபோட்டுக் கொண்டு இருப்பான். பாவம் நீங்கள் ஆடிய சூதாட்டத்தில் அவனை வைத்து ஆடியதால் அவன் தோற்றுப்போய் விட்டான். உங்களுக்குப் பிள்ளையாய் பிறந்ததைத் தவிர அவன் வேறு எந்தத் குற்றமும்; செய்யவில்லை.
அன்பானவர்களே நம் குழந்தை வசதியாக வாழ வேண்டும் என்று எண்ணாதீர்கள். மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என எண்ணுங்கள் பணக்காரனாக வாழ வேண்டாம் நல்ல குணக்காரனாக வாழட்டும். அவனுக்கு எது மகிழ்ச்சியோ அதனை நேர்மையாகப் பெறச் செய்யுங்கள். ஆடம்பர வாழ்க்கை வேண்டாம் அருமையாக பிறர் பெருமைப்படும் படி வாழ்க்கை வாழச்சொல்லுங்கள். சேர்த்து வைக்க வேண்டாம் எனச் சொல்லுங்கள். கொடுத்து உதவக் கற்றுக் கொடுங்கள் குறுக்கு வழியில் முன்னேறுவதைவிட சறுக்கி விழாமல் வாழச் சொல்லுங்கள் வளர்த்துவிட்டோம் என்று சொல்வதைவிட எத்தனை பேரை வளர்த்திருக்கிறோம் என்று எண்ணச் சொல்லுங்கள் நீங்கள் வானமாய் இருங்கள் அவன் பறக்கட்டும் சிறகை முறிக்க வேண்டாம். சிறு பிள்ளை… விட்டுவிடுங்கள்.
“நேர்மையற்ற முறையில்
நினைத்ததை அடைய
நினைப்பது சூதாட்டம்”