27

Sep

2024

நட்புக் காலம்…

இயற்கை அழிவுகளைக் கண்டு நாம் மிரண்டு கொண்டிருக்கிற நேரத்தில் இயல்புகள் சில அழிந்து கொண்டிருப்பது நமக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஆண்களுக்கு ஆண்மை குறைந்து கொண்டு வருகிறது. இது உடல் சார்ந்த குறைவு. மானிடத்தில் நட்பு மரணித்துக் கொண்டு இருக்கிறது. இது மனம் சார்ந்த குறைவு. இயற்கை அழிவைவிட இந்த அழிவு மானிடத்தை அழித்து விடும் என்று இன்னும் மனிதன் உணரவில்லை. இது ஒரு புற்றுநோயாய் பரவுகிறது. சற்று அயர்ந்தாலும் நாம் சமாதி ஆகி விடுவோம்.

ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருந்து மடிக்கு வருகிறது. பின்பு அது நம் கைகளில் தவழ்கிறது. வீட்டிற்குள் விளையாடிய குழந்தை வீதிக்கு வரும்போது நட்பைத் தொட்டுத் தழுவுகிறது. இப்போதும் மூத்தவர்கள் பழகிய நாட்களைச் சொல்லி யார் பேசினாலும் அவர்களது நட்பு நாவில் நர்த்தனமிடும். ஆனால் இந்த நட்பின் புரிதலில் மானிடம் இப்போது தவறு செய்து கொண்டிருப்பதால் இன்று அதன் புனிதம் கெட்டு புதைகுழியில் விழுகிறது.

இந்த நட்பு புனிதமானதுதான் ஆனால் இந்த நட்பின் போர்வையில் காதல் வந்தது. இதனால் சமூகம் அதற்குக் கட்டுப்பாடு விதித்தது. பின்பு காதலுக்குள் காமம் புகுந்து உடல் வேட்கையை நடத்த ஆரம்பித்தது. அதனால் நட்புக்கள் எல்லாம் சந்தேக வளையத்தில் சரணடைந்தது. நட்பினை சமூகம் அங்கிகரிக்க மறுத்தது அது மெல்லச் சவகுழியில் போய் படுத்தது.

நட்பைப் பற்றி பெற்றோர் சொல்லிக் கொடுக்கவில்லை. சமுதாயமும் வளர்த்தெடுக்கவில்லை. பார்க்கும் இடங்களிலெல்லாம் கதையே கச்சை கட்டி ஆடுகிறது. காதலர்கள் ஆவதே இளைஞர்களின் இலட்சியமானது. திரைப்படங்களைப் பார்த்துக் கதாநாயகனைப் போல் முன்னேறத் துடிக்கவில்லை. அவனைப்போல் காதலிக்கவும், டூயட் பாடவுமே இன்றைய சமுதாயம் துடிக்கிறது.

சமூக அக்கறை உள்ளவர்களே உங்களிடம் உதவி கேட்கின்றேன். இந்தச் சமுதாயத்திற்கு நட்பைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள். கண்ணன்-துரியோதனன், அவ்வை-அதியமான், பாரி-கபிலர், என்று இதிகாசத்தில் தொடங்கி இன்றுவரை உள்ள நட்பை இடைவிடாது சொல்லுங்கள் நட்பு புனிதமானது என்பதை இந்தத் தலைமுறைக்குப் புரிய வையுங்கள்.

நட்பு காதலைவிட விலையேறப் பெற்றது. நட்பு, காதலை விடச் சிறந்தது நட்பு என்பதைச் சரியாகப் புரியாமல் இப்போது தடுமாறுகிறவர்கள், காதல் வலையில் விழுந்து கண்ணீர் வடிக்கிறார்கள். நட்பில் தெளிவாக இருந்தால் காதல் அதில் ஒரு பக்கமாக இருக்கும்.காதல் நமக்கு பக்கமாகவும் இருக்கும், பக்குவமாகவும் இருக்கும். நட்பு இல்லாத காதல் சரீரத்தின் தாளமாக மாறி சதை தேடும் கழுகாகத் திரிவதால் பெற்றோர்கள் பிள்ளைகளை நட்பில் வளர்வதைவிட தனிமையாய் இருப்பதே மேல் என்கிறார்கள்.

நட்பு கண்ணியமானது காதல் கண்காணிக்க வேண்டியது. பேருந்து நிலையத்தில் நின்ற பேசிக் கொண்டிருந்தால் அது நட்பு! பேருந்து நிலையம் மறைவில் நின்று பேசினால் அது காதல்! வருபவனைப் பார்த்து தன் தாவணியை சரி செய்தால் அது காதல். அடுத்தவர் பார்ப்பார்கள் என்று உடனிருப்பவனே தாவணியை சரி செய்தால் அது நட்பு. மறந்தும் தொடக்கூடாது என்று வரையறை வைக்க வேண்டியது காதல். எந்த மறைவும் இல்லாத இடத்திலும் தொட்டுப் பேசலாம் என்பது நட்பு! கண்ணைத் தவிர அனைத்தையும் அளப்பது காதல்;, கண்களைக் கூட கண்ணியமாய் பார்ப்பது நட்பு! கூட இருப்பவரை குடும்பத்தில் இணைப்பது நட்பு, கூடப்பழகியவர்களை குடும்பத்தில் மறைப்பது காதல். நான் காதலை குறை சொல்லவில்லை காதலை இங்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. அதன் கண்ணியத்தைப் போதிக்கவில்லை என்று தான் கூறுகிறேன். இதனால் இப்போது இருப்பது காதல் அல்ல நம் கண்ணை மறைக்கும் காமம்.

நட்பு என்பது யாருடன் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் காதல் என்பது எதிர் பாலரோடு வருவது, ஒருவரோடு இருப்பது, ஒருவரில் இணைவது காதலின் புனிதம். பலரோடு பயணிப்பது நட்பின் புனிதம். காதல் இளமையில் மட்டும் கொண்டாடுவது. நட்பு என்பது இறந்த பின்னும் நெஞ்சில் நின்றாடுவது.

நட்பு எப்போதும் புனிதமானது. ஆனால் இங்கு கற்பு களங்கப்பட்டு விட்டது. ஆண்களால் அது அத்து மீறப்படுகிறது. அனைவரும் பெண்களுக்கு மட்டுமே உரியதாகப் பிதற்றுகிறார்கள். பெண்கள் தவறினால் தண்டனை கொடுக்கிறார்கள். ஆண்களுக்கு அது அளவு கோல் இல்லை.

இதிகாசங்களில் கூட இருவரும் பிரிந்து இருந்தாலும் சீதையை மட்டும் தானே இச்சமூகம் தீக்குளித்து கற்பை நிருபிக்கச் சொன்னது. இத்தனைக்கும் சீதை சிறைபட்டிருந்தாள். சீதையை சிறை வைத்த இராவணனுக்கு அடுத்த பெண்ணை விருப்பமின்றித் தொட்டால் தலை வெடித்து விடும். அப்படியென்றால் இராவணின் இருப்பே சீதையின் கற்பை நிலைநாட்டி விட்டதே. இதே போல்தான் வீட்டில் வாழ்கின்ற பெண்களின் கற்பு கண்காணிக்கப்படுகிறது. நாட்டில் நடமாடும் ஆண்களின் கற்பு அது விருப்பம்போல் அலைகிறது.

இங்கு பெரும்பாலான ஆண் பெண் உறவில் விரிசலுக்கே இந்த கற்புதான் காரணமாகிறது. பெரும்பாலும் இலக்கியம் தொடங்கி இப்போது வரை பொருள் தேடுவதற்குத் தலைவன் பிரிந்து செல்கிறான் அப்போது தலைவி தலைவனைக் குறித்தே கலங்கிக் கொண்டு இருப்பாள். ஆனால் தலைவனே தன் மனைவியின் கற்பை நினைத்தே வருந்திக் கொண்டு இருப்பான்.

தான் இல்லாததால் தன் மனைவி வேறு யாருடனாவது தொடர்பு வைத்து விடுவாளோ எனப் பயப்படுகிறவன் தான் வந்ததும் உடல் வேட்கையைத் தணிக்கவே துடிப்பான். தன் தலைவியை நேசிக்கிற தலைவன். தான் இல்லாதபோது தலைவி என்னென்ன துன்பம் அடைந்திருப்பாள், தன் குடும்பத்தால், பிறரால் சூழ்நிலையால், அத்தனை துன்பங்களையும் அருகிலிருந்துக் கேட்பான். அதுதான் நட்பு! அது இல்லாமல் மனச்சுமையைத் தணிக்காமல் உடல்சேர்க்கையை எண்ணுபவன் அவள் உடனிருக்கும்போது அவன் உடம்பே அவளுக்குச் சுமையாக இருக்குமே தவிர அது ஒருநாளும் சுகமாக இருக்காது. இது நாம் கண்ட காதலும், நட்பும் ஆகும்.

இங்கு பணிபுரிகின்ற பெண்கள்கூட அலுவலகம் முடிந்த பின்பு காலதாமதமானால் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமையில் தவறுகிறேனே எனத் துடிப்பாள். கணவனோ இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே என்ன செய்து கொண்டிருப்பாள்? என்ற சந்தேகச் சந்தனத்தை சாயங்காலம் பூசிக்கொண்டிருப்பார். தாமதமாக வரும் மனைவியை பார்க்கும் கணவன் எள்ளும், கொள்ளுமாய்ப் பொறிந்து எரிமலையாய்; வெடிப்பான். இது தான் காதலா?

நல்லதொரு நட்பில் காதல் சில காலம் வாழட்டும். நட்பைக் காதல் என்று நினைத்து களங்கப்படுத்தி விடாதீர்கள். நட்பு என்ற போர்வையில் காமத்தை விதைத்து களங்கம் தேடிக் கொள்ளாதீர்கள். காமத்தைத் தீர்க்க நட்பு என்ற தூண்டிலைப் பயன்படுத்தாதீர்கள். துயர் துடைக்கும் நட்பிற்கு துரோகம் செய்து விடாதீர்கள். துணைக்கு இருக்கும் நட்பை அணைக்க மறந்துவிடாதீர்கள். பிறரோடு கொள்ளும் நட்பை சட்டத்தால், சம்பிரதாயத்தால் சமாதி கட்டி விடாதீர்கள். நட்பைக் கற்றுக் கொடுங்கள் காதல் குறையும். காமம் அழியும். கல்லறைவரை தொடர்வது நட்பு! ஒருவருக்கு என்பதல்ல நட்பு!, தருவதற்கே உள்ளது நட்பு! உள்ளம் தேடுவது நட்பு! கள்ளம் இல்லாதது நட்பு! கண்ணியமாய் காப்போம் கற்பை அதுவாக பார்ப்போம். காதலும், நட்பும் நம்மை ஆகாயத்தில் பறக்க வைக்கும். அதே வேளையில் காதலில் தோல்வியும், நட்பில் துரோகத்தையும் தாங்கிக் கொள்ளவும் வேண்டும். ஏனென்றால் இங்கு பலரது உறக்கமில்லா இரவுகளுக்கு சிலரது இரக்கமில்லா துரோகங்கள்தான் காரணம். யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் உறவாக இருங்கள் எனக்கு நீங்கள் உலகமாக இருங்கள் அதுதான் என் நட்பு என் கற்பு என் உலகம் நீங்கள்.

“கற்பே நட்பு
கலக்கம் வேண்டாம்
நட்பே கற்பு
தடுக்கவும் வேண்டாம்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES