27
Jul
2024
என்னுடைய புகைப்படங்களை நான் திருப்பிப் பார்க்கும் போது அதிகமான புகைப்படங்கள் நான் மைக்கில் பேசிக்கொண்டு இருப்பது போல் இருக்கும். காரணம் நான் பள்ளியில் பணிசெய்து கொண்டிருப்பதால்… விழாக்களில் அதிகமாகப் பங்கெடுக்கிறேன். தலைமையாசிரியராய் பொறுப்பேற்ற பிறகு தினந்தோறும் மாணவர்களோடு பேச வேண்டிய கட்டாயம். இதனால் என்னுடைய புகைப்படங்களைப் பார்க்கும்போது நான் பேசுவது போல் தோன்றும். ஆனால் நான் ஒரு பேச்சாளர் அல்ல. ஆகவே மைக்கின் முன் நின்று பேசுபவர்கள் அனைவரும் பேச்சாளர்களும் அல்ல.
என்னைப் பொறுத்தமட்டில் தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசாதவனும் தனக்குத் தேவையில்லாததைப் பேசாதவனுமே சிறந்த பேச்சாளன். பேசத் தெரிந்தவன்.
ஆகவே எதுகை மோனையோடு பேசுவதோ, எடுத்துக்காட்டோடு பேசுவதோ, இலக்கிய நயத்தோடு பேசுவதோ அல்லது எதிரும் புதிருமாகப் பேசுவதோ பேச்சு என்று எண்ணி விடாதீர்கள். வார்த்தை என்பது நெருப்பு மாதிரி அது விளக்கில் எரியலாம். வீட்டின் கூரையில் எரியக் கூடாது. ஆகவே வார்த்தை வாளெடுக்கக் கூடாது வாழ்வைக் கொடுக்க வேண்டும்.
வார்த்தை என்பது மனதில் கருத்தரித்து மூளையில் பெறப்பெடுத்து நாவின் வழியாக வெளிவருவது. நாவு என்பது சுவையை அறிவது. அது சுவையை ருசிப்பது போல் சுவையான வார்த்தைகளை வெளிப்படுத்த வேண்டும்.
உங்கள் வார்த்தை உப்பாகச் சுவை கூட்ட வேண்டும். அது அதிகமாகி விட்டால் தூக்கி எறியப்படும். அது இனிப்பாய் இருந்தால் சுவையாக இருக்கும். அதிகமாகிவிட்டால் சக்கரை வியாதி வந்து விடும். கசப்பு அளவாய் இருந்தால் உடலுக்கு நல்லது. அதிகமாகிவிட்டால் வாந்தி வரும். உறைப்பு அளவோடு இருந்தால் சீரண சக்தியைக் கொடுக்கும். அதிகமானால் கண்கள் நீர் சுரக்கும்.
அதே போல்தான் உங்கள் வார்த்தை அளவோடு இருந்தால் வளமாக வாழலாம். அளவை மிஞ்சிவிட்டால் உங்கள் அழிவையும் உங்கள் சரிவையும் யாராலும் தடுக்க முடியாது.
சிலர் பணத்திற்காகப் பேசுவார்கள் அதனைப் பட்டி மன்றம் என்பார்கள். சிலர் பணத்தைப் பெற்றுக் கொண்டு பேசுவார்கள். அதனை கருத்தரங்குகள் என்பார்கள். மதத்தைக் குரங்குபோல பிடித்துக் கொண்டு வாழ வேண்டிய சூழலில் உள்ளவர்கள் சொற்பொழிவு, பிரசங்கம் என்று சொல்வார்கள். சிலர் பிறரை தரக்குறைவாகத் தாக்கிப் பேசுவார்கள் இதனை கட்சியை வளர்ப்பது என்பார்கள். அரசியலில் பல பேச்சுக்கள் அநாகரிகமாகத்தான் இருக்கும். அவர்களுக்கு வார்த்தையின் இனிமை தெரியாது. இவர்களையெல்லாம் பேச்சாளர்கள் என்று சொல்லி விடாதீர்கள். இவர்கள் எல்லாம் கூலிக்கு மாறடிக்கிறவர்கள். இவர்களுக்குப் பேச்சு என்பது பிழைப்பைக் கொடுப்பது.
ஆனால் பேச்சாளர் என்பவர்கள் பேசும்போது மனதிற்குள் மழையடிக்க வேண்டும். இதயம் நனைய வேண்டும். அதனை இலவசமாக வழங்க வேண்டும். அவரே பேச்சாளர் ஆவார்.
இயேசு மகான் சொல்வார் வார்த்தை உயிர் உள்ளது. ஆற்றல் மிக்கது உண்மை உள்ளது என்பார். அவர் போகும் இடமெல்லாம் போதித்துக் கொண்டே செல்வார். அதனால் பலர் மனம் வருந்தினர். மகான்களாய்த் திருந்தினார்கள். நோயிலிருந்து எழுந்தார்கள். பேயிலிருந்து விடுதலையானார்கள். காற்றோடு பேசினார். கடல் அலையோடு பேசினார். மலையோடு பேசினார். கடவுள் சிலையோடு பேசினார். ஆகவே அவர் பேசிய பேச்சு இன்னும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதுதான் பேச்சு அவர்தான் பேச்சாளர்.
ஆனால் இதற்கு மாறாக இன்னொரு மகான் இருந்தார். அவர் பெயர் புத்தர். பேசாமலேயே பேசியவர். மௌனத்தால் மனங்களை ஆள்பவர். மரம் போதித்ததால் அறம் வளர்த்தவர். உயிர்களைக் கொல்லக் கூடாது என்று உலகிற்குச் சொன்னவர். இவரால்தான் இந்த உலகம் பேசாமல் இருந்தாலும் பேச்சாளராகலாம் பிறரின் பேசு பொருளாகலாம் எனத் தெரிந்து கொண்டது.
பேச்சு அமிழ்தினினும் இனியது விசத்திலும் கொடியது. இதனை வள்ளுவர் ஒரு குறளில் சொல்லுவார். ஒருவன் உதவி கேட்டு ஒருவனை அணுகுவான் அவன் இல்லை என்று விசத்தைக் கக்குவான். அதனைக் கேட்ட மாத்திரத்தில் கேட்டவன் விழுந்து இறந்து விடுவான். இதனைத்தான் வள்ளுவர் விசத்தைத் தன் வாயிலிருந்து கக்கியவன் உயிரோடு இருக்க! கேட்டவன் இறந்து விட்டானே! எனக் கேள்வி எழுப்புவார். ஏனென்றால் இங்கு சிலருடைய பேச்சுக்கள் தான் பலருடைய மூச்சை நிறுத்தியிருக்கிறது.
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பேச்சாளர்கள் தான் ஆனால் பாவம் கேட்பவர்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் பேசித்தான் தீர வேண்டிய கட்டாயம் அதுதான் வகுப்பறை. அவர் நடத்துகின்ற பாடம். ஆனாலும் கேட்பவர்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் அவைதான் அம்மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன.
தண்ணீரும், பேச்சும் ஒன்று தண்ணீருக்கு என்று ஒரு நிறம் கிடையாது. அது எதனோடு சேர்கிறதோ அதனைப் பிரதிபலிக்கும். பேச்சு கோபத்தோடு இணைந்தால் வார்த்தையில் வாள் இருக்கும். பேச்சு நகைச்சுவையோடு சேர்ந்தால் இதயம் எழுந்து சிரிக்கும். பேச்சு நயவஞ்சகத்தோடு சேர்ந்தால் யாருக்கோ குழிபறிக்கும். பேச்சு சுயநலத்தோடு சேர்ந்தால் அது அடுத்தவனுக்குக் கேடு விளைவிக்கும். பேச்சு துரோகத்தில் பிறந்தால் உடனிருந்தவர்களை உயிரோடு கொல்லும். பேச்சு வன்முறையில் கலந்தால் அடுத்தவர்களுக்கு ஆபத்து ஏற்படும் பேச்சு சூழ்ச்சியோடு இருந்தால் பிறருக்கு வீழ்ச்சியின் வலை பின்னப்படும். பேச்சு பொறாமையோடு கலந்தால் யாருடைய மானமோ பறிபோகும். இதுபோல் பேச்சு எதனோடு கலக்கிறதோ அதாகவே வெளிப்படும்.
கடலில் எப்போதும் உப்புத்தண்ணிர் தான் மழை நீர் எப்போதும் நல்ல தண்ணீர் தான். ஒரே ஊற்றில் உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும் ஒன்றாய் வராது. ஆனால் ஒரே வாயில் வருகின்ற வார்த்தை மட்டும் இரக்கமும் இருக்கிறது. அரக்கனும் சிரிக்கிறான். நல்ல வார்த்தை நகைக்கிறது. கெட்ட வார்த்தை கிழிக்கிறது. ஆகவே கெட்ட வார்த்தையை விட நாம் கேட்ட வார்த்தைகள் தான் நம்மை வழிநடத்துகிறது. ஆகவே நல்லவற்றைக் கேட்போம்.
ஒரு அன்னப்பறவை தண்ணீரில் இருந்து பாலைப் பிரித்து எடுப்பது போல தீய வார்த்தையில் இருந்து நல்ல வார்த்தைகளைப் பிரித்தெடுத்து மரியாதைக்குரிய வார்த்தைகளைப் பேசுவோம். நமது வார்த்தைகள் பிறருக்கு ஒளியாக இருக்க வேண்டும். யாரையும் குருடாக்கி விடக் கூடாது. நாம் வார்த்தைகள் பிறரின் மனம் வருடிச் செல்ல வேண்டும். மனமுறிவுக்கு காரணமாகிவிடக் கூடாது. நமது வார்த்தைகள் ஆறுதலைத் தர வேண்டும். அழுகையைத் தரக் கூடாது. நமது வார்த்தைகள் நம்பிக்கையைத் தர வேண்டும். தற்கொலைக்குத் தூண்டக் கூடாது. நமது வார்த்தைகள் தூக்கி விட வேண்டும். பிறரைத் தாக்கி விடக்கூடாது. நம் வார்த்தைகள் பிறரைக் கேட்கத் தூண்டினால் நம்மை காணத் தேடினால்; நீங்கள் பேச்சாளர்களே… நான் உங்கள் ரசிகன்.
“நம் வாயிலுள்ள…
முத்துக்கள்…
நம் வார்த்தைகளே…”