21
May
2025
இதோ, அதோ என்று எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் 12,10,11 என்று வரிசைகட்டி வந்து கொண்டிருந்தன. எதிர்பார்ப்பு, பயம், என்ன நடக்குமோ? எப்படி முடியுமோ? என்ற ஏக்கமும் இருந்து கொண்டுதான் இருந்தது. புயல் வருகிறது என்றவுடன் நாம் அடையும் பதட்டமும் அது கரையைக் கடந்தவுடன் அதனால் ஏற்பட்ட விளைவுகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் நமக்கு உள்ளது போல்தான் ஒவ்வொரு தேர்வு முடிவுகளையும் நாம் எதிர் கொள்கிறோம்.
இந்தத் தேர்வு முடிவுகள் எத்தனை குழந்தைகளை வீட்டை விட்டுத் துரத்தியது. எத்தனை குழந்தைகளை விழுங்கி விட்டது. எத்தனை குழந்தைகளை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளியது. எத்தனை குழந்தைகளின் கனவுகளைச் சிதைத்தது. யாருக்குத் தெரியும்? தேர்வுத் தோல்விகளைத் தேசத்துரோகமாகப் பார்க்கின்ற பெற்றோர்களும், கல்வியாளர்களும் இருக்கும்வரை எங்கள் குழந்தைகளின் இறகுகள் பறிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். மனசுகள் மயானமாகிக் கொண்டுதான் இருக்கும்.
எல்லோரும் ஒரே கருவறையில் தான் இருக்கிறோம் இதில் உயரம், குட்டை என்றால் யார் பொறுப்பு? கருப்பு, சிவப்பு இதை யார் நிர்ணயிப்பது? அதுபோல்தானே கல்வியில் கூடக் குறைய இருக்கத்தான் செய்யும். இதில் பெற்றோர்களே அவனைப் பாரு! அவளைப் போல் நீ வரவேண்டாமா? என்று கேட்பது அர்த்தமற்ற கேள்வியல்லவா? இதில் என் மாவட்டம் முதல் உன் மாவட்டம் கடைசி என்று குறுகிய வட்டம் வரைந்து குமுறிக் கொண்டு கிடப்பது.
எல்லாக் குழந்தைகளும் ஒரே தோற்றத்தில் இருக்கிறதா? இல்லையே! அதேபோல் எல்லோரும் ஒன்றுபோல் படிக்க வேண்டுமா?, எல்லோரும் ஒன்றுபோல் இருந்தால் எப்படி? ஒருவர் ஒருவரை எப்படி அடையாளம் காண்பது! உங்கள் கைகளில் உள்ள விரல்களை முதலில் சமமாக்கிப் பாருங்கள். உங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. வகுப்பறையில் முதலில், இரண்டாவது என்று இருக்கத்தான் செய்வார்கள். ஒட்டுமொத்த வகுப்புமே ஒன்றுபோல் இருக்க ஆசைப்படுபவர்களே! உடலில் இரண்டு கண்கள் இருக்கலாம். உடலெல்லாம் கண்ணாக இருந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? பார்ப்பதற்கு இரண்டு!, மற்றப் பணிகளுக்கு தேவையானவற்றைச் செய்ய உடலில் பல உறுப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பூமியல் பல பணிகளைச் செய்ய மனிதர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.
நமது குழந்தைகள் பந்தயக் குதிரைகளல்ல! ஓடு, ஓடு என்று துரத்திக் கொண்டே ஓடி… முதல் பரிசைத் தட்டிச் செல்ல முட்டி மோதிக் கொண்டு திரிவது. குழந்தைகள் இந்தப் பிரபஞ்சத்தை அழகுபடுத்த வந்தவர்கள் ஒரு இடத்தை அழகாகப் பார்க்க வேண்டுமென்றால் அங்கு பல வண்ணங்களும், பல எண்ணங்களும் சேர்ந்து இருக்க வேண்டும். அனைத்தும் ஒரே இடத்தில் கிடந்தால் அது குப்பைக் கூளங்களாகும். அதேபோல் பல திறமையானவர்களை ஒரே வகுப்பறையில் போட்டு ஒரு ஆசிரியரைப் பாடம் எடுக்கச் சொன்னால் அங்கு இருக்கிற எந்த மாணவனுக்குப் பொருத்தமாய் அவர் இருப்பாரோ?. அவன் முதல்மாணவனாய் இருப்பான். இது தெரியாமலும், ஆசிரியர்கள் நிலை புரியாமலும் மாணவர்களைக் கசக்கிப் பிழிவது மடத்தனம்.
இந்தப் பிரபஞ்சத்தின் தேவையை நிறைவு செய்யவும், மறைந்திருக்கின்ற சக்திகளையும், திறன்களையும் கண்டறியவும், இந்தப் பூமியை இன்னும் புதியதாக்கவும் புனிதம் காக்கவும் தேவையானவர்கள் யார் யார் என்று கணக்கிடுங்கள். அவர்களை வகுப்பறையில் இருந்து மட்டும் வார்த்தெடுக்க முடியுமா? பொருத்தமற்ற ஆசிரியரிடம் விருப்பமற்ற ஒரு மாணவன் இணைந்துவிட்டான் என்றால் இங்கு சமூக விரோதி ஒருவன் வகுப்பறையில் அடைகாக்கப்படுகிறான்.
ஒரு மாணவனின் கடந்த காலம் என்ன என்று ஒரு ஆசிரியருக்கு நன்கு தெரிந்திருந்தால் மட்டுமே அவன் எதிர்காலத்தை அவரால் இன்பமயமாக்க முடியும். ஒரு மாணவன் அன்பு, நட்பு, காதல், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அனைத்தையும் புத்தகத்தைப் படித்துப் புரிந்துவிட முடியுமா? முடியாதே! அது வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே புரிய முடியும்.
ஒரு சிற்பி, ஒரு போட்டோ கலைஞன், ஒரு சமூக ஆர்வலன், ஒரு தூய துறவி, ஒரு இளம் விஞ்ஞானி, ஒரு கவிஞன், ஒரு நடிகன் இவர்களை இந்தக் கல்விமுறை உருவாக்கித் தருகிறதா? தந்திருக்கிறதா? இல்லையே. இதனை பெற்றோர்கள் விரும்புகிறார்களா? இல்லையே தன் பையன் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும்! கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்பதுதானே நாம் எல்லோரும் விரும்புவது. இதற்காக ஒரு பையனை படிப்பு என்ற பெயரில் பாடாய்ப்படுத்தி ஓடு ஓடு என்று ஒய்வெடுக்காமல் ஓடவிட்டு காலம் கடந்தபிறகு பிள்ளைகள் வளர்ந்த பின் சொந்த ஊரில் அவனைத் தங்கச் சொன்னால் எந்தப் பிள்ளை அதை ஏற்றுக் கொள்ளும்?
குழந்தைகள் தேர்வில் வெற்றியடைய வேண்டும். அது எட்டுத்திக்கும் எதிரொலிக்க வேண்டும். உலகம் முழுவதும் நம்மைக் கொண்டாட வேண்டும் என்றுதான் இங்குள்ள பல பெற்றோர்கள் நினைத்து பரிதாபத்திற்குரியவர்களாய் மாறிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் ஒரு கனவு இருக்கும் சிலரைப் பார்த்தவுடன் அந்தக் கனவு இறக்கை கட்டிப் பறக்கும் அதே போல் நாமும் ஆக வேண்டம் என்று துடிக்கும் ஆனால் பெற்றோரின் கனவு பிள்ளைகளின் கனவுகளைச் சிதைக்கும் பிள்ளைகளைப் பெரிதாக எண்ணாமல் மற்றவர்கள் முன் நாம் மதிப்பு பெற வேண்டும் என்றே துடிக்கும்.
அதற்கு குழந்தைகள் மதிப்பெண் மட்டுமே பெற வேண்டும் என்ற மடத்தனத்தை நம்புகிறார்கள். இதற்காகப் பெற்றோர்கள் பேய்களாக மாறுகிறார்கள். பிள்ளைகள் படிப்பு விசயத்தில் அரக்கர்களாக மாறி அரட்டிப் புரட்டி எடுக்கிறார்கள். பெண் குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்றால்! அது சிசுக்கொலை என்று சீறுகின்ற இந்தச் சமூகம்! அனைத்துக் குழந்தைகளையும் படி… படி… என்று படிப்படியாகக் கொன்று கொண்டிருப்பதனைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறது.
ஒரு குழந்தையை மதிப்பெண்ணை வைத்து மதிப்பிடுவதை நிறுத்துங்கள். இங்கு நீங்கள் வணங்குகின்ற எந்தத் தெய்வங்களும் பள்ளிக்கூடம் சென்று படித்ததில்லை. உயர்த்தபட்ச ஒழுக்கமே அவர்களைப் போல் வாழவேண்டும் என்பதுதானே! அதனை நாம் வளர்த்தெடுக்க வேண்டுமே தவிர கல்விதான் கடவுள் என்ற கலவரத்தை உருவாக்காதீர்கள்.
குழந்தைகளைக் கவனியுங்கள், கண்டறியுங்கள். அவனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் கவிஞனைத் தட்டி எழுப்புங்கள். அவன் எவ்வாறு வளர வேண்டும் என்று வகுப்பு எடுங்கள் வாய்ப்புகளை உருவாக்கிப் பயன்படுத்தச் சொல்லுங்கள். அவனுக்குப் பிடித்தமானதைச் செய்யச் சொல்லுங்கள். அவனுக்கு வேண்டிய மதிப்பையும், மரியாதையையும் பிறருக்குக் கொடுத்து பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். பயங்களிலிருந்து குழந்தைகளைப் பிரித்து எடுங்கள். மனசாட்சிக்குப் பயப்படச் சொல்லிக் கொடுங்கள். சொந்தக் காலில் நிற்கும் சூத்திரங்களைச் கற்றுக் கொடுங்கள்.
பெற்றோர்களே பிள்ளைகளை வாழ விடுங்கள் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்வதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் வாழ்க்கையை நீங்கள் தீர்மானிக்காதீர்கள் அவர்கள் பந்தயக் குதிரைகள் அல்ல… ஓடு, ஓடு என்று விரட்டுவதற்கு! அவர்கள் பட்டாம் பூச்சிகள் சுதந்திரமாய்ப்; பறக்கட்டும். ஒவ்வொரு குழந்தையும் ஒரு குயவன் கையில் கிடைத்த களிமண்ணாய் இருக்க வேண்டுமே தவிர குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் ஆகிவிடக் கூடாது. குழந்தைகளை விட்டு பிடியுங்கள். தட்டிக் கொடுங்கள் அவர்கள் எதையும் எட்டிப்பிடிப்பார்கள் இமயத்தைக் கூட…
“புத்தகங்களால்
உருவாக்கப்பட்டவன்
அல்ல புத்தன்”