11

Apr

2025

பார்வை பெற வேண்டும்!…

பார்வை என்பது நமது உடலில் உள்ள இரண்டு கண்கள் கண்டு நம் உடலுக்கு உணர்த்துவது பார்வை என்கிறோம். இது உடனடிப் பதிலாக இருக்கும். கொஞ்சம் உணர்ந்து நாம் பேச ஆரம்பித்தால் பதில்கள் நமக்குப் பலவாக இருக்கும்.

மகான் இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு ஒரு பார்வையற்ற மனிதன் இயேசுவை அணுகி குருவே நான் பார்வை பெற வேண்டும் என்கிறான். அதனை ஒரு குருவால் எப்படிச் செய்ய முடியும்? என்று கேள்வி எழும்பும், ஆனால் குருவால், கவிஞனால், தலைவனால், புரட்சியாளர்களால், சமூக சேவகர்களால் இந்தச் சமூதாயத்தின் பல்வேறு பார்வைகள் மாற்றப்பட்டு இருக்கிறது. பல்வேறு கண்கள் திறக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆகவே அந்த மனிதன் பல ஆண்டுகளாகக் கண்தெரியாமல் இருக்கிறான். ஆனாலும் காதுகளில் பலரது பேச்சுகள் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இயேசு என்ற மகான் வந்தபிறகு சமுதாயத்தின் பார்வைகள் மாற்றப்படுகிறது. நோயாளிகள் பாவத்தின் விளைவு என்று சமுதாயம் பார்த்ததைச் சவுக்கடி கொடுத்து இறைவனை நெருங்க இறைவன் விடுக்கும் அழைப்பே நோய் என்ற பார்வை மாறுகிறது. எனவே தான் அவரைப் பார்க்க அந்தப் பார்வையற்றவர் ஆசைப்படுகிறார்.

ஒருமுறை ஒரு கண்ணாடி அறையில் மருத்துவர்களின் கருத்தரங்கு நடைபெற்றது. அப்போது கருத்தரங்கு நடத்திய உயர் மருத்துவர் அனைவரிடமும் சாலையில் ஒரு காலைச் சாய்த்து, சாய்த்து நடக்கும் ஒருவனைக் காட்டி இவன் ஏன் இப்படி நடக்கிறான் என்று கேட்டார். உடனே ஒரு மருத்துவர் எழுந்து அவனுக்கு மூட்டுப்பகுதியில் சிறிது நகர்வு ஏற்பட்டு இருக்கலாம். அதனால் அந்த மூட்டுப்பகுதி அவருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுக்கிற காரணத்தால் அவர் அவ்வாறு நடக்கிறார் என்றார். மற்றொருவர் எழுந்து மூட்டுப்பகுதியை விட நரம்பு ஏதோ பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதனால்தான் அவரால் எட்டு எடுத்து வைக்க முடியாத காரணத்தால் காலை இழுத்து நடக்க வேண்டியுள்ளது என்றார். மற்றொரு மருத்துவர் இது தசை பிறழ்வு காரணமாக இருக்கிறது. அவருக்குள் ஒரு வலி தெரிகிறது. அது அவரது முகத்திலும் வெளிப்படுத்துகிறது இதனை சரியாகக் ஸ்கேன் செய்து பார்த்தால் துல்லியமாக எந்த இடத்தில் தசைப் பிடிப்போ, பிறழ்வோ ஏற்பட்டிருக்கிறது எனப் பார்த்து குணமாக்கி விடலாம் என்றார். இவ்வாறு அவர்கள் அந்தக் காட்சியை பார்த்துக்கொண்டே இருக்கும்போதே அந்தச் சாலையில் நடந்து சென்றவர் அருகிலுள்ள செருப்புத் தைக்கிறவரிடம் சென்று தன் காலில் அறுந்துபோன செருப்பை எடுத்துக் கொடுத்து தைக்கச் சொன்னார். காரணம் செருப்பு அறுந்ததால் நடை மாறியிருக்கிறது என்ற சிந்தனை மருத்துவரின் பார்வையில் இல்லை என்பதுதான்.

இயேசு மகான் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு. திடிரென்று ஒரு பெண்ணைப் பிடித்து ஒரு கூட்டம் இழுத்து வந்தது அவர் முன்னால் அவளை நிறுத்தி இவள் ஒரு வேசி, விபச்சாரம் செய்யும்போது கையும் களவுமாகப் பிடிபட்டாள். இவளைக் கல்லால் எரிந்து கொல்ல வேண்டும் என யூதச்சட்டம் சொல்கிறது என்றார்கள். நீர் என்ன சொல்கிறீர்? என்று அவரைக் கேட்டார்கள். நீங்கள் அவளை வேசி என்று சொல்வது குற்றம் என்றார். உடனே கூட்டம் கொதித்தது பல ஆண்களோடு பழகுகிறவளைத் தே… என்று சொல்லாமல் தேவதை என்றா சொல்ல முடியும்? என்றார்கள்.

இயேசு அமைதியாகத் தரையில் சில கோடுகளை வரைந்து கொண்டு இருந்தார். பின் கேட்டார் இவள் செய்த குற்றம் என்ன? விபச்சாரம்! எங்கே வைத்து? அவளது வீட்டில்… தனியாகவா? இல்லை பல ஆண்கள் அவர் வீட்டிற்குப் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள் என்றார்கள். எனவேதான் சொல்கிறேன் அவள் வேசி அல்ல. அவள் பெண்ணாகத்தான் அன்றும் இருந்தார் இன்றும் இருக்கிறாள் தன் இச்சையைத் தீர்க்க பல ஆண்கள் அவள் இல்லம் தேடிச்சென்று அவள் உடலை உண்டு வருவதால் அவள் வேசி ஆக்கப்படுகிறாள். ஆகவே ஒரு பெண்ணை தன் இச்சைக்கு இரையாக்கிவிட்டு பலியான பெண்ணை வேசியாக்கிவிட்டு பாவம் செய்தவன் எல்லாம் பரிசுத்தவனா? எனச் சாடுகிறார். இதுதான் இயேசுவின் பார்வை.

ஒருமுறை ஒரு காலணியில் பெண்கள் கூட்டம் கூட்டமாக நின்று ஒரு பெண்ணை வசைபாடிக் கொண்டு இருந்தார்கள். காரணம் என்னவென்றால் அந்தப்பகுதியில் ஒரு பெண் பல ஆண்களோடு தொடர்பில் இருப்பதாகவும் அவளால் தாங்கள் இந்தப் பகுதியில் எப்படி வாழ்வது? பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பயமில்லாமல் வாழ்வது? என்று பலவாறு பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது ஒருவர் கேட்டார் அந்த ஆண்கள் எல்லாம் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தானே! அவள் மட்டும் இங்கு இல்லையென்றால் அவர்களின் அடுத்த பார்வை எங்கு இருக்கும்! பசிக்கு என்று வருபவர்களுக்கு ஒரு சத்திரம் சாப்பாடு போடுகிறது. அது மூடப்பட்டு விட்டால் பசியின் கொடுமையால் என்ன செய்வார்கள் என்று கேட்டார்? வீடு புகுந்து திருடுவார்கள் என்றார்கள் அதுதான் இது? அவள் மட்டும் இங்கு இல்லையென்றால் நீங்களும் உங்கள் இளம் பெண்களும் எப்படி நிம்மதியாக இங்கு இருப்பீர்கள்? இதுவும் ஒரு பார்வை தானே! பல வேசிகள் தான் இங்கு பல மிருகங்களை வரம்பு மீறாமல் வைத்திருக்கிறார்கள் என்பதனை மறந்து விடாதீர்கள்.

பலர் இங்கு காதல் திருமணம் செய்வார்கள் அவர்களுக்காக உயிரைக் கொடுப்பேன் என்று சொல்வார்கள். அதில் பலபேர் போயும் போயும் இந்தப் பையனுக்கா? இந்தப் பொண்ணுக்கா? என்போம் அது நமது பார்வை. அவர்கள் பார்வையில் அவன் தேவதூதன்! அவள் தேவதைதான். ஆகவே உங்கள் பார்வையில் ஒருவரை எடைபோடாதீர்கள்.

வயது வந்தவுடன் பருவ வயதில் பெண்களை இரசிக்கத் துடிக்கிற எவனும் தன் தாயையோ! தங்கையையோ இரசிப்பதில்லையே மற்றவர்கள் நிர்வாணத்தைத்தானே அவன் மனதில் நினைக்கிறான் கண்கள் அனைத்தையும் பார்க்கும் ஆனால் மனம் சிலவற்றைத் தடுக்கிறதே! அப்படி என்றால் பார்வைகள் புதுப்பிக்கப்பட வேண்டும்! புதுமை பெற வேண்டும். மனதால் பார்க்கின்ற மாற்றம் வேண்டும்.

ஒரு குழந்தை நெருப்பைப் பிடிக்கப் போவது அறியாமையின் பார்வை, நியுட்டன் ஆப்பிளைப் பார்த்தது அறிவியல் பார்வை, இயேசு ஒடுக்கப்பட்டவர்கள் மேல் பார்த்த பார்வை இதயத்தின் பார்வை, இராமன் குகனைப் பார்த்தது சமத்துவப் பார்வை, கண்ணகி மன்னனைப் பார்த்தது நீதியின் பார்வை, அன்னைத்தெரசாள் மக்களைப் பார்த்தது சகோதரத்துவப் பார்வை, காந்தி மக்களைப் பார்த்தது சுதந்திரப் பார்வை, புத்தன் குடும்பத்தைப் பார்த்தது தேடலின் பார்வை, அசோகன் போரில் பார்த்தது மன்னிப்பின் பார்வை இவ்வாறு பார்வைகள் பல வகைப்படும். கண்ணால் பார்க்கின்ற பார்வைகள் மட்டும் பார்வை என்றால் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஆகிவிடும். ஆகவே எனக்குத் தெரிய கண்ணால், அறிவால், மனத்தால், இதயத்தால் பலவகைப் பார்வைகள் உண்டு. அனைத்துப் பார்வையிலும் ஒருவரைப் பார்க்க நமக்கு அறிவும் வேண்டும் ஆன்மீகமும் வேண்டும்.

நமக்குக் கிடைக்கின்ற பட்டம், பதவி, பணம், புகழ் இவற்றின் அடிப்படையில் எவர்களையும் பார்த்துவிடக் கூடாது. கோபத்தின் பார்வை தவறுகளைப் பார்க்கும்! பணக்காரர்கள் பார்வை ஏழைகளை ஏளமாய் பார்ப்பது! படித்தவர்கள் பார்வை எளியவர்களை அலட்சியமாய்ப் பார்ப்பது! ஆசிரியர்களின் பார்வை மாணவர்களை முட்டாளாய்ப் பார்ப்பது! காவல்துறையின் பார்வை யாரையும் சந்தேகமாய் பார்ப்பது! ஆணாதிக்கத்தின் பார்வை பெண்ணடித்தனத்தைப் புகுத்துவது! அதிகாரத்தின் பார்வை அடிமைகளை உருவாக்குவது ஆசைகளின் பார்வை எதையும் அடையத்துடிப்பது.

ஆகவே பார்வை என்பது கண்ணால் பார்ப்பது, அறிவால் சிந்திப்பது, மனத்தால் ஏற்றுக் கொள்வது, இதயத்தால் அன்பு செய்வது தேவைப்பட்டால் பொறுத்துக் கொள்வது, மன்னிப்பது உதவி செய்வது இப்படி முடிவு எடுப்பது, இதுதான் பார்வையின் உச்சம் ஆகும். ஆகவே கண் இருப்பவர்கள் எல்லாம் பார்ப்பவர்களும் அல்ல கண் இல்லாதவர்கள் எல்லாம் பார்வையற்றவர்களும் அல்ல. எதையும் சரியாகப் பார்க்கத் தெரிந்தவர்களே பார்வை பெற்றவர்கள் சட்டத்தால், மதத்தால், அதிகாரத்தால், மோகத்தால், பேதத்தால் பார்க்கின்ற அத்தனை பார்வைகளையும் அப்புறப் படுத்திவிட்டு மனிதநேயத்தால் பார்க்கின்ற பார்வையை பெற வேண்டும். அதனைத்தான் அந்தப் பார்வையற்றவர் காத்திருந்து மகானைக் கண்டு இயேசுவே நான் பார்வை பெற வேண்டும் என்கிறார். ஒன்றை இந்தச் சமுதாயத்தின் கேள்வியாக விடுகிறேன் இங்கு பார்வையில்லாதவர்கள் எண்ணிக்கையைப் பாருங்கள் ஒரு நாள் இறப்பவர்கள் மட்டும் இங்கு கண்தானம் செய்தாலே போதும் இங்கு எல்லோரும் பார்வை பெற்று விடுவார்கள். அதற்கு கண்தானம் செய்ய வேண்டும் கையில் காசு இருப்பவர்கள் உதவ வேண்டும் செய்தால் ஒரே நாளில் அனைவரும் பார்வை பெற்று விடுவார்கள் என்ற பார்வையை நாம் பெற வேண்டும் இதற்கு இயேசு வர வேண்டாம் நீங்கள் போதுமே! வாருங்கள் புது பார்வை பெறுவோம்!

“பிறர் துயரம்
பார்க்காதவர்கள்
முகத்தில் இருப்பது
கண்கள் அல்ல
இரண்டு புண்களே!”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES