14
Mar
2025
என்ன சொல்றீங்கன்னு புரியல? என்ற வார்த்தை இன்று எங்கும் கேட்க ஆரம்பித்து விட்டது. இது ஏன் என்றுதான் புரியவில்லை? இரண்டாம் வகுப்பு மாணவன் தூக்குல தொங்குறான். எட்டாம் வகுப்பு மாணவன் சக மாணவனை அடித்துக் கொன்று விடுகிறான். நெல்லையில் புகழ்பெற்ற இனிப்புக் கடை அதிபர் திடிரென்று தற்கொலை செய்து கொள்கிறார் எல்லாமே புரியல… ஏன்? மாணவர்களைக் கேட்டால் வார்த்தை புரியல…! மனிதர்களைக் கேட்டால் வாழ்க்கை புரியல…! என்பார்கள்.
ஆசிரியர்களைக் கேளுங்கள் இந்தப் பசங்களுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு ஆனால் அவர்கள் திருந்தியது போல் தெரியவில்லை என்பார்கள். அதேபோல் மேல் அதிகாரி வந்து இவர்களை ஏதாவது கேள்வி கேட்டால் என்ன சொன்னார்? ஏன் சொன்னார்னே புரியல? என்பார்கள். நேற்றுவரை என்னோடு நல்லாத்தான் பேசிக் கொண்டு இருந்தான். இன்றைக்கு அவன் என்னைப் பார்த்தும் பாராதது போல் போய்க் கொண்டு இருக்கிறான். நண்பனைப் புரிய முடியவில்லை! ஏன் அவர் அந்த இடத்தில் அந்த வார்த்தையை சொன்னார்? சூழ்நிலையைப் புரிய முடியல! ஏன் இந்தப் பிரச்சனையில் என் பெயர் அடிபடுகிறது? எனக்கும் அதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லையே? என்ன நடக்குதுனுனே தெரியல! ஒண்ணுமே புரியல!
இதுதான் இன்றைய உலகின் நிலை. ஆசிரியர்களிடம் தான் இன்றையச் சமுதாயம் வளர்ந்து கொண்டு வருகிறது. அவர்கள் வகுப்புகளில் பிரச்சனைக்குரிய மாணவர்களைக் கணக்கெடுக்கச் சொன்னால் அவர்கள் பெரும்பாலும் தாயில்லாத மாணவர்கள் அல்லது தாய் சரியாக வளர்க்கத் தெரியாத மாணவர்களாகத்தான் இருப்பார்கள்! ஏனென்றால் தாயின் அன்பு கிடைக்காததால், தாயின் வழிகாட்டுதல் இல்லாததால் தாயின் புரிதல் புரியாததால் அவர்கள் வகுப்பறையில் சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் முறையான அன்பையும், நட்பையும் பெறவும் கொடுக்கவும் தெரியாமல் அல்லது பொருத்தமற்ற அணுகுமுறையால் பிறரால் ஒதுக்கப்பட்டுத் தனித்து விடப்படுகிறார்கள்.
அதே போல்தான் இச்சமுதாயம்! இச்சமுதாயத்தில் ஒவ்வொருவரையும் சரியாகப் புரிய வேண்டுமென்றால் அவர்களோடு நாம் கொள்ளும் உறவு தெளிவாகவும், சரியாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமென்றால் நம்முடைய தொடர்பு அவர்களுக்குப் புரியும் படியாக இருக்க வேண்டும் பிறரோடு தொடர்புக்கு நாம் பயன்படுத்துவது மொழி தானே! அந்த மொழிதானே தாய் மொழி. அதில் நாம் தெளிவாக இருக்கிறோமா? அதனைச் சரியாகப் புரிந்து கொண்டோமா? கேட்டுப் பாருங்கள் அந்த கேள்விக்கு நீங்களே விடை தேடுங்கள்.
தாயின் முறையான வளர்ப்பில் இல்லாத பையன் ஊதாரியாகிறான். தாய்மொழி முறையாகக் கற்காத மாணவன் ஊமையாகிறான்! உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாமல் கொடுக்கப்பட்ட பிறமொழி வார்த்தையில்தான் வெளிப்படுத்த வேண்டுமென்றால் அது உண்மையான வெளிப்பாடாகுமா? ஒப்பனையாகத்தானே இருக்கும். தாய்மொழி என்பது ஏதோ பள்ளியில் புத்தகத்தில் படிப்பதல்ல! பார்த்த இடத்தில் கேட்ட இடத்தில் கேட்கின்ற ஒலிக்கு மனிதர்கள் கூறும் பதில் மொழியை தனக்குள் பதியம் செய்து பக்குவமாய் வெளிப்படுத்துவதுதான் தாய்மொழி.
தாய்மொழியை முறையாகக் கற்காமல் பள்ளிக்கு வந்தபிறகு, பாடத்தில் கண்டபிறகு, ஆசிரியர் வந்து சொன்ன பிறகு அறியும் மொழியை அடைகாத்து நினைவில் வைத்து மனனம் செய்ததை மறுபடிச் சொல்வது அல்லது மனதில் நினைத்ததை சொல்வது என்பது எப்படி உங்கள் உடல் மொழியாகும்? உணர்வு மொழியாகும்? குழந்தை முதன்முதலில் பேசுகிற வார்த்தையும் சிரிக்கும்போது, துடிக்கும்போது, அழும்போது, அலறும்போது, அஞ்சும்போது அவன் வெளிப்படுத்தும் மொழியை அடக்கிக் கொண்டு வகுப்பறையில் கற்றுக்கொடுப்பதையே வாந்தியெடுக்க வேண்டும் என்றால் நடைமுறைக்கு ஒத்துவருமா? ஓட்டப்பந்தயத்தை ஒரு சந்துக்குள் ஓடுங்கள் என்று சொல்வதும் உனது உணர்வை பிற மொழியில் வெளிப்படுத்துங்கள் என்பதும் ஒன்றுதான்.
அங்கே ஆரம்பித்து விடுகிறது நமது புரியாத வாழ்க்கை எதுவும் விளங்காது! ஏனென்றும் புரியாது. வறட்டுக் கௌரவத்திற்கோ அல்லது எதிர்கால வேலை வாய்ப்பிற்கோ நாம் ஆங்கிலம் கற்க நினைத்தால் புரியாமல் தானே கற்கிறோம். கற்பதை எல்லாம் மனதிற்குள் பதியத்தானே படிக்கிறோம். மனசை வெளிப்படுத்தப் படிக்கவில்லையே! பரிட்சைக்குத்தானே படிக்கிறோம். பழகுவதற்குப் படிக்கவில்லையே! வேலைக்குத்தானே படிக்கிறோம். வாழ்க்கைக்குப் படிக்கவில்லையே! மார்க்குக்குத்ததானே படிக்கிறோம் மாண்புக்குப் படிக்க வில்லையே! மதிப்பெண் போதும்! வேலை போதும்! என்று வளர்கின்ற மாணவர்களுக்கு வாழ்க்கை புரியவில்லையே? அந்த வாய்ப்பும் நாம் கொடுக்கவில்லையே! மொழி என்பது பேச்சு மட்டுமல்ல, அது இலக்கியம், இசை, பாடல் என்று நமது நாடி நரம்புகளை நாட்டியமாட வைக்கும். இன்று ஆங்கிலக் கல்வி கற்கப் புறப்பட்ட நம் குழந்தைகள் அதனை முழுமையாக உணர முடியாமல் ஊமைகளாக உலவிக் கொண்டிருக்கிறது. வெளிப்படுத்த சரியான வார்த்தை தெரியாததால் அவர்கள்; மாற்றுத்திறனாளியாகி மௌனம் காக்கிறார்கள்.
அம்மா என்று அழைக்கும்போது நமக்குள் ஒரு அதிர்வு ஏற்படும்! மம்மி என்றால் அது வருமா? மன்னித்துக் கொள்ளுங்கள் என்ற மனவருத்தம் Sorry-ல் உள்ளதா? மிகவும் நன்றியில் உள்ள நெகிழ்ச்சி Thank you-ல் கிடைக்குமா? கன்னத்தில் ஒங்கி அறைந்தால் அம்மா என்றுதானே அலறுவான் அதுதானே அவன் உயிரில் உறைந்திருக்கும். அதற்காக இனிமேல் அடிக்கும்போது மம்மி என்றுதான் நீ அலற வேண்டும் என்று டியூசனுக்கு அனுப்பப் போறீங்களா? இல்லை நீங்களும் தாய் மொழியை உச்சரித்ததால் அவனுக்குத் தண்டனை கொடுக்கப் போறீங்களா?
புரியாத மொழியில் நம் குழந்தைகள் கற்க ஆரம்பித்த பிறகு குழந்தைகளை நாம் புரிய முடியவில்லை. குழந்தைகள் நம்மைப் புரியவில்லை. அகிலத்தையே ஆள ஆங்கிலத்தேவை என நினைத்த நமக்குப் பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் பழக தாய்மொழி அவசியம் என்ற தத்துவம் புரியவில்லையே! இப்போது உள்ள குழந்தைகள் ஆங்கில மொழியை கடினமாகக் கற்று மனனம் மட்டுமே செய்து எழுத்தில் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு தமது எண்ணத்தில் வெளிப்படுத்தத் தெரியவில்லையே!. வெளிப்படுத்துகிற அன்பையே புரியமுடியாத உலகில் மனதிற்குள் இருக்கிற அன்பு மயானத்திற்குள் இருக்கிற எலும்புக் கூட்டிற்குச் சமம். இது யாருக்குத் தெரியும்? எப்படிப் புரியும்?
இதனால் புரியாத கல்வியைக் கற்று உலகம் புரியாத புதிராகி விட்டது. மாணவர்களை ஆசிரியர்கள் புரியவில்லை, குழந்தைகளைப் பெற்றவர்கள் புரியவில்லை. கணவன்-மனைவி புரிதல் இல்லை இப்போது சமுதாயத்தில் புரிதலைவிடப் பிரிதலே அதிகமாக இருக்கிறது. காரணம் எல்லோரும் கல்வி கற்கிறோம்.
நாம் படிக்கிற காலத்தில் மாணவர்கள் எத்தனையோ பேர், கவிதை, கட்டுரை, நாடகம், பாட்டு, மிமிக்கிரி என்று கொடிகட்டிப் பறப்பார்கள் காரணம் அதனை வெளிப்படுத்த அவர்களுக்கு மொழி தேவை, அந்த மொழி அவர்கள் நாடி நரம்பில் நர்த்தனமிட வேண்டும். உலகத்தையே தொடர்பு கொள்ள வந்த மொழி இன்று உள்ளுரிலே நமக்குத் தொடர்பு இல்லாமல் செய்து விட்டதே!
ஆங்கில மொழி பெற்றோருக்குத் தெரியாது பெற்றோருக்குத் தெரியாத மொழி பிள்ளைகள் பேச வேண்டுமா? அந்த பிள்ளைகள் பேச்சு உங்களுக்குப் புரிய வேண்டாமா? குழந்தைகளுக்குச் சத்து வேண்டும் என்று தாய்ப்பாலுக்குத் தடைவிதிப்பீர்களா! தாயில்லாமல் கூட ஒரு பிள்ளை ஒழுக்கத்தில் வளரலாம்! ஆனால் தாய்மொழி இல்லாமல் எப்படி? எல்லோரும் யோசிக்க வேண்டும்!
கூரை ஏறி குருவி பிடிக்க முடியாத ஒருவனால் வானம் ஏறி வைகுண்டத்தை அடைய முடியுமா? கல்வி என்பது அடுத்தவர்களை எளிதில் அணுகக் கற்றுக்கொடுக்க வேண்டும். பிறரோடு இணைந்து பயணிக்க வேண்டும். தாய்மொழிக் கல்வியால் தமிழ்நாட்டில் பிறந்த யாரோடும் நீ பழகலாம்! வாழலாம்! ஆங்கிலக் கல்வி அதைக் கற்றவரோடு மட்டுமே நீ காலம் தள்ள முடியும்! மொழி உன் வேலைக்குப்; பயன்படும் என்று எந்த முட்டாள் சொன்னது? தாயும், தாய் மொழியும் ஒன்று இருவரையும் ஒதுக்கியவர்களை அந்த இறைவன் கூட மன்னிக்க மாட்டான்! இங்கு இருக்கிறவனும் உன்னைச் சேர்க்க மாட்டான்.
புரியாமல் படிக்காதீர்கள் புரியாவிட்டால் இந்த உலகம் உங்களுக்கு எமனாகி விடும் மொழி புரிந்தால்தான் வழிதெரியும் பல காலங்கள் நம் தாய்மொழியைக் கற்றவர்கள் தான் இன்று உலகையே உயர்த்திப் பிடித்து நிறுத்தியிருக்கிறார்கள். ஆகவே எந்த மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் சொந்த மொழி வழியாக! இல்லையென்றால் மனனம் செய்து படித்தே மனநலம் இழந்து விடாதீர்கள். அவன் படித்தவன் நன்கு புரிந்து கொள்வான் அவனுக்கு எல்லாம் தெரியும் என்ற காலம்போய் படிப்பதே புரியவில்லை என்றால் இந்தப் பாவத்தை எந்தக் கங்கையில் கழுவுவது?
“நமது உணர்வுகள்
புரிந்தால் அன்பு
புரியாவிட்டால் வம்பு”