06
Sep
2024
வாரம் ஒருமுறை வலைத்தளம் வழியாக உங்கள் வாசலுக்கு வந்து போகிறேன். எழுத்துக்களைக் கொண்டு வந்து உங்கள் இதயத்தில் நடவு செய்தால் நான் எழுத்தாளன் என்று எண்ணி விடாதீர்கள். நான் எழுத்தை ஆள்பவன் அல்ல… எழுத்துக்கு அடிமையானவன் இந்தச் சமூகம் வழிநெடுகச் சிதறி விட்டுப்போனதைப் பொறுக்கி எடுத்து வந்து அது இருக்க வேண்டிய இடத்தில் சேர்க்க விரும்புகிறேன்.
எல்லா மனிதருக்குள்ளும் இருக்கும் ஆசை போல் எனக்கும் உண்டு. எல்லோரும் நம்மை அன்பு செய்ய வேண்டும் என்பதுதான். பணத்தை, பதவியை, அதிகாரத்தை வைத்துத்தான் இந்த உலகம் பாசம் காட்டுகிறது. பணம் இருந்தால் How are you? பணம் இல்லை என்றால் Who are you?
எதுவும் இல்லாதவன் ஏக்கம் நிறைவேற நான் எடுத்துக் கொண்ட ஆயுதம் கலை. அது விலை போகாது ஆனாலும் நம்மையும் விட்டுவிடாது. துளியளவும் இந்த நிலையை அடைவேன் என்று நான் தொடங்கவில்லை. சில இடங்களில் தூக்கி எறியப்படும்போது வேறு இடங்களைப் பற்றிக் கொள்கிறேன். அப்படி நான் எறியும் போது வந்து விழுந்த இடம்தான் இந்த வலைத்தளம்.
இதில் பாராட்டுக்கள், பாராமுகங்கள், சில எழுச்சிகள், சில எரிச்சல்கள் என அனைத்தையும் சேர்ந்தே நடக்கிறேன் இருப்பினும் மகிழ்ச்சி அடைகிறேன். சிலர் விவாதிக்கிறீர்கள், சிலர் கட்டளையிடுகிறீர்கள், சிலர் மிரட்டுகிறீர்கள். சிலர் சந்தேகப்படுகிறீர்கள், சிலர் ஆச்சரியப்படுகிறீர்கள் எல்லாமே எனக்கு இரசிக்கும் படியாகவே இருக்கிறது.
சிலர் உங்கள் அறிவை வைத்து என்னை எடைபோடுகிறீர்கள்! ஏனென்றால் அந்தளவு தகுதியானவன் அல்ல ஆனால் விவாதிப்பதை விரும்புகிறேன். ஏனென்றால் என் எழுத்துக்கள் வாதங்களை வரவேற்பதற்குத்தான். வேதங்களை மொழி பெயர்ப்பதற்கல்ல.
எழுத்துக்களுக்கும் பேச்சுக்களுக்கும் இங்கு எடுத்துக் காட்டுவதற்குப் பலர் இருக்கிறார்கள். ஆனால் எனக்குப் பிடித்தவர் விவேகானந்தர் அவர் சொல்வது நான் எதையும், தயாரித்தோ எவரிடமிருந்தாவது கேட்டோ, நான் படித்தோ பேசுவதில்லை நான் அமர்ந்திருக்கும் போது இயற்கையே என்னை எடுத்துக் கொள்கிறது. எதனைச் சொல்ல வேண்டும் என்பதை இயற்கை அதை என் மனதிற்குக் கொடுக்கிறது. அதையே நான் பேசுகிறேன் என்பார்.
அதே போல் தான் என்னுடையதும். இயற்கை என்னிடம் கொடுப்பதை எழுதுகிறேன். வேதங்களில் அப்படி இல்லையே எந்தச் சட்டமும் அப்படிச் சொல்லவில்லையே உனக்குத் தெரிந்ததை எல்லாம் பேசுவதா? பெரிய அறிவாளி என்று நினைப்பா? என்ற கேள்வியையும் வைக்கிறீர்கள் நியாயமான ஒன்று தான்! விவாதிக்க வேண்டியது தான். நான் ஆண்டவன் சொல்வதை அருணாசலம் எழுதுகிறேன்.
இயற்கை பேசுகிறது இசைவு தருகிறேன். இயற்கை எழுதுகிறது. என்னைக் கொடுக்கிறேன். எழுத்தோ, பாட்டோ, பேச்சோ என்னுடையது அல்ல. அதற்கு நான் உரிமை கொண்டாடியவனும் அல்ல. என் பயணம் ஆனால் அது இயற்கை வகுத்த பாதை. என் மனசில் பயணிக்கும் சில நபர்களை சில இடங்களைப் பற்றி எழுதும்போது எழுத்துக்கள் தானாகவே வந்து விழும். சிலர் எழுத்தைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். என் நண்பர்கள் என்னை அளவிற்கு அதிகமாகவே புகழ்வார்கள். இன்னும் பலருக்கு அனுப்பி என் இருப்பைத் தெரியப்படுத்துவார்கள். சிலர் அலைபேசி Statusல் வைத்து என்னை மெய்சிலிர்க்க வைப்பார்கள் எல்லாம் ஒருவித சுகமான பயணம் தான்.
என் அலைபேசியில் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பி வைப்பேன். இதில் சாதி, மதம், இனம் எதையும் நான் எடைபோட்டுப் பார்த்ததில்லை. நடுநிலையோடு சிந்திக்கின்ற யார் மனதையும் இது புண்படுத்தாது. எதையாவது ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவர்களை (சாதி, கட்சி, மதம், இனம்) இது கொஞ்சம் ஆட்டிப்படைக்கும். அதற்கு நான் பொறுப்பல்ல. என்னை எழுதத்தூண்டும் இயற்கையே.
நான் பெண்ணியம் பற்றி அதிகம் பேசுவதாக எனக்குத் தெரிகிறது. காரணம் பெண்ணியத்தின் உண்மைத் தன்மையை இயற்கை எனக்கு உணர வைத்திருக்கிறது. எழுத்துக்களை இயற்கை கொடுப்பதால் இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்பது எனது நீதி.
உன் எழுத்தில் காரம் இருக்கிறது. குறைக்க வேண்டுமென்றால் நீங்கள் கடுப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு பாருங்கள் என்றேன். திமிர் என்றார்கள் உன் எழுத்தில் சாடல் இருக்கிறது என்றார்கள். நிச்சயம் துதிபாடல் இருக்காது என்றேன். ஆணவம் என்றார்கள். சில நேரிடையாகப் பலன் தராது. தங்கம் அப்படியே கிடைக்காது. சோறு அப்படியே விளையாது. வீடு தானாக முளைக்காது. உடைகள் அப்படியே உற்பத்தியாகாது. எனவே என்னதான் இயற்கை எழுத்துக்களைக் கொடுத்தாலும் இப்படி இருந்தால் அழகு என என்னைச் செதுக்கிச் சிற்பமாக்கியவர்களும் உண்டு. ஆரோக்கியமாய் ஆலோசித்து விருப்பமாய் விவாதித்து என்னை வளர்த்து விட்டவர்களும் உண்டு.
சொன்னால் என்ன நினைத்துக் கொள்வாரோ என்று சொல்லத் தயங்கிய என் சொந்தங்களே! துணிந்து சொல்லுங்கள் நான் உங்களில் ஒருவன். செய்தித்தாளை காலையில் உங்கள் முற்றங்களில் சேர்க்கும் ஒரு பையனைப் போல வாரம்தோறும் உங்கள் வாசலுக்கு வந்து போகிறேன். உங்களோடு உள்ள உறவை இது புதுப்பிக்கட்டும் என்ற என் புதிய முயற்சி.
அடைபட்ட வீடுகளில் வந்து விடும் செய்தித்தாளைப் போல பல அலைபேசிகளில் திறந்து பார்க்கப் படாமலேயே என் எழுத்துக்கள் இருக்கும். அதனால் நான் வருத்தமடைய மாட்டேன் அது உங்களுக்குத் தேவையற்றது எனத் தெரிந்தபின் அதை ஏன் நீங்கள் திறக்க வேண்டும்? சிலருக்குத் தேவைப்படும்போது திறந்து பார்ப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இல்லையென்றால் அதுவாகவே மக்கிக் குப்பையாகிவிடும்.
ஆனால் சிலருக்கு அனுப்பும்போது என் கைகள் நடுங்கும் நான் அதிகமாகச் சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை பற்றியே இயற்கை என்னோடு பேசுவதாக நான் உணர்கிறேன். இதற்கு துளியளவும் சம்மதமில்லாத நபர்களிடமிருந்து நான் எட்டியே இருக்க விரும்புகிறேன். நான் கண்ட, கேள்விப்பட்ட நபர் இப்படி இருக்கிறார் எனத் தோன்றும்போது குப்பைக்குள் சென்று இதைக் கொட்ட வேண்டுமா? என நினைப்பேன். குப்பையில் முத்தாய் விழட்டுமே! எனவும் நினைத்துக் கொள்வேன்.
எழுத்தாளர்களுக்கென்று ஒரு கர்வம் உண்டு நான் எழுத்தாளன் அல்ல! எதிர்காலத்தைக் கணிக்கும் தீர்க்கத் தரிசியும் உண்டு. மனதில் நினைப்பதைப் பேசும் உளவியல் ஆர்வலர்களும் உண்டு. இயற்கையைப் பேசும் சுற்றுச் சூழல் விரும்பிகளும் உண்டு. இறைவனைப் பேசும் ரிஷிகளும் உண்டு. இதில் எதுவோடும் ஒட்டாமல் பயணிக்கும் நான் ஒரு வழிப்போக்கன். இயற்கை அனுப்பும் செய்திகளைக் கொண்டுவரும் ஒரு தபால் காரன்.
நான் சொன்னதுபோல நான் ஒரு பேப்பர் பையன். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்புவதில்லை. அவர்களிடம் கட்டாயம் நம் கருத்தைத் திணிக்கக் கூடாது. கருத்துத் திணிப்பும் கற்பளிப்பும் ஒன்றுதான். ஆகவே முற்றத்தில் விழும் இந்தச் செய்தித்தாளை வேண்டுமென்றால் வீட்டுக்குள் எடுத்துச் சென்று வாசியுங்கள். வாசித்தால் விவாதியுங்கள் ஏனென்றால் வழிநெடுக நீங்கள் விட்டு வந்த சிலவற்றைச் சேகரித்து உங்களுக்குக் கொடுக்கிறேன். இது உங்களுடையது. உங்கள் விருப்பப்படியே…
“தங்கத்தைத்
தொலைத்தவரும் உண்டு
குப்பையைப்
பயன்படுத்தியவரும் உண்டு”