18
Oct
2024
முகத்தை மூடி விடுவது என்பது இனிமேல் யாரும் பார்க்க வேண்டாம். எடுத்து அடக்கம் செய்து விடுங்கள் என்பதன் இறுதி நிலை. எனவே என்னைப் பொறுத்தமட்டில் முகமூடி அணிந்து பிறருக்கு முன் நடித்து வாழ்வதைவிட மண்ணிற்குள் நாமே சென்று மூடிக்கொள்வது மகத்தானது.
ஒருமுறை விண்ணுலகில் இருந்த தேவர்கள் கடவுளிடம் வந்து நாங்கள் மண்ணுலகிற்குப் போக விரும்புகிறோம். இங்கு இருப்பதைவிட அங்கு இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த சொர்க்கம் எங்களுக்கு தேவை இல்லை என்றார்கள். கடவுளுக்கோ அதிர்ச்சியும் ஆச்சர்யமாக இருந்தது. இதை விட மண்ணுலகம் சிறப்பாக இருக்கிறதா? அங்குபோய் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? என்று அதிசயமாகப் பார்த்தார். நீங்கள் போய் மண்ணுலகில் என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டார் அவர்கள் நாங்கள் நடிக்கப் போகிறோம் என்றார்கள்.
மண்ணுலகில் நடிகனாகப் பிறப்பது விண்ணுலகில் வாழ்வதைவிட மேலானதாகக் கருதுகிறார்களே! என்று கடவுள் நினைத்தார். மண்ணுலகில் நடிகனாய் இருப்பது சாதாரண விசயமல்ல. அது கடவுளை விட மேலானது என்று கடவுளிடம் தூதர்கள் வாதிட்டார்கள்.
உங்கள் சிலையை விட நடிகர்களின் கட் அவுட் உயரமே அதிகமாக இருக்கும். கடவுளைக் கூட அந்தந்த மதத்துக்காரர்கள் மட்டுமே வணங்குவார்கள். நடிகர்களை அனைத்து மதத்துக்காரர்களும் கொண்டாடுவார்கள். உங்களின் படத்திற்கு என்னென்ன செய்வார்களோ அத்தனையும் நடிகர்களின் படத்திற்கும் செய்வார்கள். உங்களுக்குப் பக்தர்கள் அவர்களுக்கு இரசிகர்கள் உங்கள் வழிபாட்டிற்;குக் கூட வரமாட்டார்கள். வந்தாலும் வெளியில் நிற்பார்கள். ஆனால் அவர்களுக்கு முதல் நாள் முதல் காட்சி பார்க்கவில்லை என்றால் தற்கொலை கூட செய்து கொள்வார்கள். உங்கள் பூசைக்கு இலவசமாகக் கூப்பிட்டால் கூட ஏனோ தானோவென்று தான் வருவார்கள். அவர்களுக்கு எவ்வளவு காசு கொடுத்தாலும் முண்டியடித்துக் கொண்டு வந்து பார்ப்பார்கள்.
உங்கள் படத்தைக் கூட அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். நடிகர்களின் படத்தை பனியனில் அணிந்திருப்பார்கள். சாமிகளுக்கு படைத்த சேலைகளைவிட நடிகையின் பெயரில் வருகின்ற சேலைகளுக்கே இங்கு மவுசு அதிகம்.
கோயிலுக்கு வராத இளைஞர்கள் கூட்டம் இரசிகர் மன்றத்தில் பொங்கி வழியும். கடவுள் நம்பிக்கையால் சில நல்லவைகள் நடந்தாலும் தன்னுடைய தலைவனால் எதுவும் நடக்காத போதிலும். உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு என்று தான் உரக்கச் சொல்வானே தவிர ஒரு நாளும் அவன் கடவுளுக்கு நன்றி என்று சொல்லவே மாட்டான்.
அதுவும் நாமே நடிகனாகி விட்டால் அவர்கள் படத்தில் நடிக்க முதலில் பணம் கொடுப்பார்கள். தங்குவதற்கு கேரவன் ஹோட்டல், லாட்ஜ் ஏற்பாடு செய்வார்கள். இங்கு சொர்க்கம் என்று சொல்லி ஒரே இடத்தில் தங்க வைப்பீர்கள். அங்கு எல்லா நாட்டிற்கும் இலவசமாகப் பயணிக்கலாம். எல்லோரிடமும் ஓடி ஓடி பாட்டுப் படிக்கலாம். கலர்கலராக உடை தைத்து உடுக்கச் சொல்வார்கள். விதவிதமான உணவு கொடுத்து விருந்தினர் போல் கவனித்துக் கொள்வார்கள்.
விண்ணுலகில் கூட ரம்பை, ஊர்வசி, மேனகா என்பார்கள். அங்கு ஒரு படத்திற்கு ஒரு நடிகை கூட நடிக்கலாம், ஆடலாம், பாடலாம், ஊர் சுற்றலாம் விண்ணுலகில் நாட்டியத்திற்கு மட்டுமே வருவார்கள். அங்கு அப்படியல்ல, கரும்பு தின்னக் கூலியா? 70 வயது ஆனால் கூட 20 வயது நடிகை கூட காதல் செய்யலாம். எல்லாம் தயாரிப்பாளர் செலவில் இன்பமாய் இருக்கலாம். இப்போது சொல்லுங்கள் பூலோக சொர்க்கம் இங்கு விட நன்றாய் இருக்கிறது தானே! என்றார்கள்; கடவுளிடம்.
முட்டாள்கள் அதிகமாக நமது சங்கத்தில் இணைந்தால் நாம் அடுத்த நகர்வாக அரசியலில் குதிக்கலாம். ஏற்கெனவே கருப்புப் பணத்தோடு காலம் தள்ளியவர்கள் பிறரை மிரட்டி உருட்டி பணம் சம்பாதிக்கலாம். நடிகனாய் நடித்து ரசிகர்களை ஏமாற்றியவர்கள் கொஞ்சம் அதிகமாக நடித்து மக்களை ஏமாற்ற வேண்டியது இருக்கும் அவ்வளவுதான்.
உடனே கடவுள் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் கூட காலப்போக்கில் அவரது நடிப்பே மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது. காரணம் மக்கள் அதைவிட பயங்கரமாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். திரையில் நடிப்பவர்களைவிட தரையில் நடிப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். வாருங்கள் என் பின்னே என்று கடவுள் தூதர்களை அழைத்துக் கொண்டு பூமிக்கு வந்தார்.
முதலில் அவர்கள் பார்த்தது ஒரு தேர்தல் பிரச்சாரம். வேட்பாளர் மக்களைக் கும்பிடுவதும் டீக்கடைகளில் வடை சுடுவது டீ ஆத்துவது கிழவிகளைக் கட்டிப் பிடிப்பது மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பதையும் கண்டு தூதர்களே மிரண்டார்கள். அவ்வளவு நல்லவனா இவன்? சாராயம் விற்றவன் இப்போது சாமியாய் தெரிகிறானே! அடுத்து அவன் வாக்குறுதி கொடுத்தானே பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதில் புலவன் கூட தோற்றுப் போய் விடுவது போல் அடுக்கு மொழிகளை அள்ளித் தெளித்தான். காண்கின்ற நேரமெல்லாம் காரித் துப்பிய தலைவனை இன்று கட்சி மாறி வந்து காண்கின்ற கடவுளே அவன்தான் என்று கதைவிட்டுக் கொண்டிருந்தான்.
அடுத்து ஒரு கோவிலுக்குக் கூட்டிப் போனார் கடவுள். அங்கு ஒருவன் சாமியாராய் இருந்து பெண்ணின் வயிற்றைத் தடவிக் கொண்டு இருந்தான். இன்னொரு இடத்தில் கட்டிப்பிடித்து ஆசீர்வதித்தான். காரித்துப்பி ஆசீர்வதித்தான். மற்றொரு இடத்தில் தண்ணீரைத் தெளித்து பாவத்தை கழுவிக் கொண்டிருந்தான். பக்தர்கள் நோன்பு இருந்தார்கள். நூல் ஆடை அணிந்தார்கள். இங்கு சாமியார்கள் நடிப்பு சிறப்பா? அல்லது பக்தர்கள் நடிப்பு சிறப்பா? உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
ஒரு பள்ளியைப் பாருங்கள் பல தயாரிப்புகளோடு வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தால் மேலதிகாரி வருகையை முன்னிட்டு அத்தனை நடிப்புகளும் அங்கு அரங்கேறிக் கொண்டு இருக்கும். வங்கி தன் வாடிக்கையாளரைப் பெருக்க நடிக்கிறது. வட்டிக் கடைக்காரன் தன் வட்டியைப் பெருக்கிக் கொள்ள கலர் கலராய் கதை சொல்ல ஆரம்பித்தான்.
மாணவர்கள் மௌனமானால் ஆசிரியர் வருகிறார் என்று அர்த்தம். காவல் துறையினர் சாலையில் நிற்கும்போது தலையில் தொப்பியை வைத்தால் அதிகாரி வண்டி வருகிறது என்று பொருள். உலகில் உள்ள மொத்தப் பொய்களையும் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் காதலர்கள். ஒருவர் வரும்போது இன்னொருவர் அலைபேசியை நிறுத்தி விடுவது இன்று வாடிக்கையாகிப் போனது குடும்பத்திலும் அது குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
இங்கு பாசத்தோடு வடிப்பது போல காட்சி தருகின்ற கண்ணீர் எல்லாம் பாசாங்கு கண்ணீராகத்தான் தெரிகிறது. திரையில் நடிப்பதற்கெல்லாம் இனிமேல் பரிசு கொடுக்காதீர்கள். தரையில் நடிப்பவர்களின் கால் தூசிக்கு நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள். உயர் அதிகாரிகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை கொஞ்சம் உற்றுப் பாருங்களேன். அவர் பார்க்கும்படியாக அவரவர் அரங்கேற்றும் அற்புத நடிப்பு அட்டகாசமாக இருக்கும் என்றார் கடவுள்.
உடனே தூதர்கள் கடவுளிடம் நாங்கள் பூமிக்குப் போகவில்லை. நடிகனாக ஆசைப்பட்டேன். ஆனால் இங்கு எல்லோருமே நடிப்பதால் இவர்கள் முன் எங்கள் நடிப்பு எடுபடாது. பச்சோந்தி எல்லாம் பிச்சையெடுக்கும் அளவிற்கு நடிப்பை நாடித் துடிப்பாக வைத்திருக்கிறார்கள். இவ்வளவு கேவலமாக நடித்து வாழ வேண்டுமென்றால் அது மானிடனால் மட்டுமே முடியும். எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் இங்கேயே இருந்து விடுகிறோம் என்றார்கள்.
நடிப்பு தேவைதான் சில நேரங்களில் அது நமக்கு ஆறுதலாக இருக்கும். நடிப்பே நமக்கு நஞ்சாக மாறி விடக் கூடாது. அதை விட யதார்த்தமாய் வாழ்வோம் வருவதை எதிர்கொள்வோம்.
“புன்னகையைவிட
மௌனம் மேலானது
உண்மையாக இருந்தால்”