24

Jan

2025

மூன்றாம் உலகப் போர்…

மூன்றாம் உலகப்போர் இதோ, அதோ, இங்கே, அங்கே என்று ஆங்காங்கு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஈரான்-ஈராக் போர் இஸ்ரேல்-லெபனான் போர். சீன ஆக்கிரமிப்பு, இலங்கை உள்நாட்டு போர் இப்படி பல போர்கள் ஆங்காங்கு தோன்றும் போதும் சரி ஆரம்பமாகி விட்டது இதற்கு அந்த நாடு போரில் இறங்கும், இதற்கு இந்த நாடு உதவி செய்யும் என்று ஊடகங்கள் கொழுத்திப் போடும். அது ஆங்காங்கு மக்களிடத்தில் கொழுந்து விட்டு எரியும். முடிவு புஷ்வானமாகிவிடும்.

அதாவது உலகப் போர் என்றால் வல்லரசு நாடுகள் தாங்கள் வலிமையை காட்டும், மற்ற நாடுகள் மார்தட்டி நிற்கும், சின்ன நாடுகள் சிதைந்து போகும் இதுதான் வரலாறு. இதைத்தான் உலகம் எதிர்பார்க்கிறது. இதனால் தான் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின் போதும், பின்லேடனை கொல்லும் போதும், ஈராக் அதிபர் சதாம் உசேனை பிடித்துத் தூக்கிலிடும் போதும், ரஷ்யா உக்ரைன் மீது படை எடுத்தபோதும் போர் நிகழும் என்று பூமி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தது.

உலகப் போர் என்றால் வானத்தில் ஏவுகணைகள் வலம் வரும். நீர் மூழ்கிக் கப்பல்கள் நிலத்தை மூழ்கடிக்கும், கண்ணிவெடிகள் காலுக்கு அடியில் சிதறும், விமானங்கள் குண்டு மழை பொழியும், உணவுப் பொருள்கள் தட்டுப்பாடாகும், ஊடகங்கள் கட்டுப்பாடாகும் என மக்கள் எதிர்பார்த்து இதுதான் உலகப் போர் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் ஏற்கனவே உலகப் போர் ஆரம்பித்துவிட்டது இது யாருக்கும் தெரியாததால் ஒவ்வொருவரும் தன்னைத் தாக்கும்போது தற்காத்துக் கொள்வதில் மட்டுமே கவனமாய் இருக்கிறார்கள். இவர்கள் வலிமையை மனிதர்களிடம் மட்டுமே காட்ட முடியும். ஆனால் இப்போது எழுந்திருக்கிற மூன்றாம் உலகப்போர் நாட்டுக்கும் நாட்டுக்கும் அல்ல மனிதர்களுக்கும் இயற்கைக்கும்.

இதனை மனிதன் புரியவில்லை. இதனால் அதிலிருந்து எப்படித் தன்னைக் காத்துக் கொள்வது என்றும் புரியவில்லை. பிறநாடுகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள, பாதுகாப்புக் கருவிகளை அதிகரித்துக் கொள்ள நிதியை ஒதுக்குகிறானே தவிர இயற்கையின் சீற்றத்தால் தன்னைக் காத்துக் கொள்ள இன்னும் போதுமான விழிப்புணர்வை அவன் பெறவில்லை என்று நான் எண்ணுகிறேன்.

பொதுவாக நாட்டோடு நாம் போரிடும்போது தரைப்படை, கப்பல்படை, விமானப்படை ஆகிய மூன்று படைகளையும் எதிர்கொள்ள நாம் தயாராவோம். ஆனால் இயற்கை ஏவி விடுகின்ற நீர், நிலம், காற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமலேயே காலம் தள்ளுகின்றோம்.

பொதுவாக போர் எவ்வாறு ஆரம்பமாகும்? ஒரு நாட்டை அபகரிக்கும் போது, ஆக்கிரமிக்கும் போது அல்லது சுரண்டும் போது அந்நாடு அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர் நாட்டின் மீது போர் தொடுக்கும். அதைத்தான் நாம் இயற்கைக்கும் சொல்கிறோம். இயற்கையை அழிக்கிறோம், சுரண்டுகிறோம் இதனை பொறுக்க முடியாமல் இயற்கை எழுந்து வந்ததுதான் இந்தப் போர்முனை தாக்குதல்!

பூமி பொறுக்க முடியாமல் புறப்பட்டு வருவதுதான் பூகம்பம். இது தரைப்படை என்று வைத்துக் கொள்ளலாம். போரில் பதுங்கு குழி அமைத்துத் தாக்குவார்கள். ஆனால் பூகம்பம் படுத்து இருந்தவர்களை எல்லாம் பூமி பிளந்து சவக்குழியாக்கி சமாதி கட்டிவிடும், இதனை எந்தத் தரைப்படை எப்படி தாக்க முடியும்? நாம் வைத்திருக்கிற தரைப் படையால் தாக்க முடியாது குழிக்குள் கிடைக்கின்ற பிணத்தைத் தூக்கத்தான் முடியும்.

நீர் சுழன்றடித்து சுனாமியாய் வரும்போது, சுனாமியாய் வந்து நம்மைச் சுருட்டி எடுத்துப் போகும்போது உங்கள் கப்பல் படையும் காலாவதியாகிவிடும். காற்று சுவாசிக்கும் போது சுகமாய் இருக்கும், உள்ளுக்குள் சென்ற காற்று ஒழுங்காய் வெளிவரவில்லை என்றால் உங்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும். உயிரை கூட பதம் பார்த்துவிடும். அதுபோல்தான் அது காத்திருக்கும் வரை தான் காற்று, புறப்பட்டு விட்டால் புயல் அதனை அடக்க ஆகாயவழியும் முடியாது எந்த ஆயுதங்களும் தடுக்காது.

வயநாட்டை பார்த்தீர்களா! இந்திய வரைபடத்தில் இருந்தே மறைந்து விட்டது! சுனாமி நம் சொந்தங்களை எல்லாம் சுருட்டிவிட்டது. ஜப்பானை பூகம்பமும் எரிமலையும் பங்கு போட்டு பதம் பார்க்கிறது. சமீபத்தில் லாஸ் ஏஞ்சல் என்னும் அழகிய நகரம் கருகி நிற்கிறதே! புயல்கள் அமெரிக்கா, கனடா, வியட்நாம் போன்ற நாடுகளை அடக்கி வைத்திருக்கிறதே இனியும் கண்விழிக்க வில்லை என்றால் நாம் கண்மூடி கல்லறைக்குப் போக வேண்டியதுதான்.

வைரம் எடுக்கிறோம் என்று பூமித்தாயின் வயிற்றைக் கிழிக்காதீர்கள். கிரானைட்டுக்கு ஆசைப்பட்டு மலையின் மார்பகங்களை அறுக்காதீர்கள். காடுகளை அழிப்பது கண்களைப் பறிப்பதற்குச் சமம். நீர்நிலைகளை அழிப்பது தாய்ப்பாலில் விஷம் கலப்பதற்குச் சமம். நாடுகள் கொண்டு வருகின்ற இயற்கையை அழிக்கும் திட்டங்கள் எல்லாம் நாசமாய் போக வேண்டும். பயிர்களை காத்தால்தான் இனிமேல் நம் உயிர்களை காக்க முடியும்!

இனிவரும் காலம் இயற்கையைக் காப்போம் இயற்கை அழித்துவிட்டால் அந்த இறைவன் கூட நம்மைக் காப்பாற்ற மாட்டான் என்பதனை உணருங்கள் வியாதிகள் பெருகக் காரணம் மூலிகை அழிந்ததால்தான் நம்மைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும் என்றால் முதலில் நம்மை சுற்றி சிந்தியுங்கள். இனிவரும் நம் தலைமுறைக்கு எதையும் சேர்த்து வைக்க வேண்டாம். இருப்பதை அழிக்காமல் அவர்களுக்கு விட்டுச் செல்வோம் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.

“இறைவனே இயற்கை
காடே நம் கடவுள்
இதனை உணராவிட்டால்
இதுவே நம் சு(இ)டுகாடு!”

4 Comments on "மூன்றாம் உலகப் போர்…"

  1. Rajan N.R says:

    Super awareness message

      1. root says:

        நன்றி

    1. root says:

      நன்றி

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES