15

Jun

2024

யாருக்கு? எப்படி?…

ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு புத்தகம் இதை பலரும் பல இடங்களில் சொல்லியிருப்பார்கள். அதில் பல கருத்துக்கள், கேள்விகள் எடுத்துக் காட்டுகள், மேற்கோள்கள், வெற்றிடங்கள், படங்கள் உள்ளடக்கியது போல் நமக்குள்ளும் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறோம் என்று கூறுவார்கள். நான் மற்றொரு கோணத்தில் பார்க்க ஆசைப்படுகிறேன். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களுக்கு எத்தகையப் புத்தகமாக இருக்கிறோம். எப்படி நம்மை வாசிக்கிறார்கள்? எப்படி நம்மோடு வசிக்கிறார்கள்? என்ற கோணத்தில் நம்மை நாமே ஆய்வு செய்து பார்க்க உங்களை அழைக்கிறேன்.

சிலருக்கு நாம் புனிதப்புத்தகம், பைபிள், குரான், பகவத் கீதை போல, கண்ணியமாக எண்ணுவார்கள். கரங்களால் தொழுவார்கள். புனித இடத்தில் வைப்பார்கள். வழிபடுவார்கள், வரம் தரும் என நம்புவார்கள். குறிப்பாக தலைவர், முதலாளி என்ற நிலையில் வைத்துக் கொள்வார்கள். குறிப்பாக நம்முடைய நல்ல செயல்கள், பணம், உதவும் மனப்பான்மை இவற்றால் நாம் கும்பிடும் இடத்தில் இருக்கிறோம் இவர்கள் மத்தியில் நம்முடையத் தவறான நடவடிக்கைகள் வெளிப்பட்டுவிடாமல் கண்ணியம் காத்தால் கடைசிவரை அவர்களுக்கு நாம் கடவுளாக இருப்போம். ஆனால் இன்று தன்னை மதித்து வணங்குபவர்களைக்கூட ஆல்கஹால் வாங்கி வரச் சொல்லும் அவல நிலையால் இன்று சமூகம் அசிங்கப்பட்டுக்கிடக்கிறது.

சிலருக்கு நாம் மேற்கோள் புத்தகம் பல கருத்துக்களைப் பேசும்போதும், எழுதும்போதும் சில நூல்களை மேற்கோள் காட்டிப் பேசுவது போல நம்முடைய பல செயல்கள் அவரைப்பாரு! அவரைப் போல வாழு! என்று சொல்வார்கள் பிறர் பார்க்க நாம் பல நல்ல செயல்களைச் செய்து இருக்கிறோம். அதனால் நம்மை எடுத்துக்காட்டாக சொல்கிறார்கள். நம்மை நாமே வாழ்த்திக் கொள்வோம். நல்லவர்களாகவே இருக்க நாளும் உழைப்போம், மறந்தும் தவறிவிட வேண்டாம்.

சிலருக்கு நாம் பொழுது போக்குப் புத்தகம் சிலர் பொழுதுபோகவில்லை என்றால் நம்மைத்தேடி வருவார்கள். இது காசில்லை, பணமுமில்லை. ஆனாலும் மகத்தான மருத்துவம் செய்கிறோம். தனிமை ஒருவரைக் கொல்லும் தற்கொலைக்குத் தூண்டும். அதனைத் தடுத்து அவர்களுக்குச் சந்தோசத்தை அளித்து நல்லது செய்கிறோம் முடிந்தளவு இதனைச் செய்யுங்கள். பலர் நிம்மதி அடைவார்கள்.

சிலருக்கு நாம் நகைச்சுவைப் புத்தகம் நம்மோடு இருக்கும்போது அவர்கள் கவலையின்றி இருப்பார்கள் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள். நாம் சிரித்துக் கொண்டு இருக்கும்போது சுற்றியுள்ள இடங்களிலும் நல்ல சூழ்நிலை உருவாகும் அங்காங்கு இருப்பவர்களும் நம் அருகில் வந்து இருக்க ஆசைப்படுவார்கள். இத்தகையவர்களாக இருப்பது இறைவன் நமக்குக் கொடுத்த வரம் இருப்பவர்கள் அதனைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் இல்லாதவர்கள் அதனை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

சிலருக்கு நாம் சட்டப்புத்தகம் சில நேரங்களில் அவர்களுக்கு நாம் எரிச்சலாகக் கூட இருக்கலாம். ஆனால் நம்மால் நீதியை, உண்மையைப் பேசாமல் இருக்க முடியாது. ஆளுக்குத் தகுந்தார்போல் நடிக்க முடியாது. உறவு என்பதற்காக பிறரை உயர்த்திப் பிடிக்க முடியாது. சரியானதை சொல்வோம், நேர்மையாக நடப்போம் யாருக்காகவும், எதற்காகவும் சோரம் போய்விடக்கூடாது. எனவே அவர்களுக்கு நாம் சட்டப்புத்தகம்.

சிலருக்கு நாம் வரலாற்றுப் புத்தகம் அதனால் நம்மைப் பற்றி அறிய ஆசைப்படுவார்கள். நம்மை பற்றிய தகவல்களைச் சேகரிப்பார்கள். நம்மைப் பற்றி எழுதுவார்கள். நம்மைப் பற்றி மேடையில் பேசுவார்கள். ஆகவே ஏதோ ஒரு வகையில் உயரமான இடத்தில் இருப்போம். எனவே நம்மைப் பற்றி அறிந்து ஆராய்ந்து உயரமான இடத்தில் வைத்து அதை உலகிற்கு உரைப்பவர்கள் மத்தியில் அவர்களுக்கு நல்ல செய்தியையே நாளும் கொடுத்திடும் அளவிற்கு என்றுமே நல்லவர்களாக வாழுங்கள். காலம் கடந்தாலும் அவர்கள் உள்ளத்தில் வாழ்வோம்.

சிலருக்கு நாம் அறிவியல் புத்தகம் எல்லோராலும் நம்மைப் புரிந்து கொள்ள முடியாது. மிகக் குறைவான ஆட்களே நமக்கு நண்பர்களாக இருப்பார்கள். அறிவியலுக்குள் உட்பிரிவுகள் அதிகமாக இருப்பது போல பலராலும் புரிந்து கொள்ளாதவர்களாக நாம் இருப்போம். ஒன்று பிடிக்கும் ஒன்று பிடிக்காது என்பது போல ஒருவர் நன்றாக உதவி செய்வார். ஆனாலும் குடிப்பார். சிறந்த பக்திமான் ஆனாலும் ஒரு சின்ன வீடு உண்டு. சமூக சேவகர் ஆனாலும் மனைவியைப் பிரிந்து விட்டார் இப்படி பிறருக்குக் கொஞ்சம் புரியாமலேயே இருக்கும் இவர்கள் எல்லோருக்கும் புரியும் படியாக வாழ முயற்சிக்க வேண்டும். பிடிக்கும் படியாக வாழ்வை அமைக்க வேண்டும்.

சிலருக்கு நாம் பாடப்புத்தகம் எதிர்காலத்தை வரமாக்கும் வாழ்வு இங்குதான் இருக்கிறது. ஆனால் அது பிடிக்காது போல் அமைந்து விடுகிறது. யாரோ ஒருவர் அவரை விளக்கிக் சொல்ல வேண்டும். சில புத்தகங்கள் புரிந்துவிட்டால் நம்மை உயர்த்தி விடும். சில புத்தகங்களை நாம் புரியாமலேயே நாம் தோல்வி அடைந்து விடுகிறோம். குறிப்பாக பெற்றோர்கள், பிள்ளைகள் உடன்பிறந்தவர்கள், ஆசிரியர்கள் இந்தப் புத்தகங்களாக இருப்பார்கள். நம் வாழ்வை உயர்த்துபவார்கள் நாம் அதைப் புரிந்து கொள்ளாததால் நாம் தோல்வி அடைந்துவிடுகிறோம்.

சிலருக்கு தூக்கம் வரவில்லை என்றால் ஒரு புத்தகம் படிப்பார்கள் உடனே தூக்கம் வந்துவிடும். தூங்கி விடுவார்கள். அதே போல நம்மீது பாசம் பற்று இருக்காது அவர்களது சுயநலத்திற்காக சுயதேவைக்காக நம்மைக் கையில் எடுக்கிறார்கள். எனவே இத்தகையப் புத்தகங்களாக நாம் எப்போது மாறுகிறோம். நாம் வாக்காளராக இருக்கும்போது. அதை மறந்து விடக்கூடாது.

சிலருக்கு நாம் அலமாரியில் உள்ள புத்தகம் பத்திரமாக நமது வீட்டில் இருக்கும் நாமும் படிக்க மாட்டோம் யாரிடமும் கொடுக்காமலும் பார்த்துக் கொள்வோம். அதுதானாகக் கரையான் அரித்து காலியாகும் காலம் வரை பயனற்றுக் கிடக்கும். குறிப்பாக நமது மனைவி, மக்கள், நம் அலமாரியிலே தான் இருப்;பார்கள். நாமும் அதனைப் புரியப் போவதில்லை யாரும் அதனை புரிந்து கொள்ளவும் விடப்போவதில்லை. நாய் வாயில் கிடைத்த தெங்கம் பழம் போல் காலம் முழுவதும் பாதுகாப்பாய் இருக்கும் சிறைவாசிகள்.

சிலருக்கு நாம் செக்ஸ் புத்தகங்கள் யாருக்கும் தெரியாமல் கலாச்சாரம், கண்ணியத்தை மதிக்காமல் உணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள நாம் எடுக்கும் தவறான முயற்சி ஆகும். இது தவறான உறவு, போதைப் பொருள் பயன்படுத்துதல் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். பல வீடுகளில் மனைவிகளைக் கூட, பாலியல் உறவுக்கும், பிள்ளை பெற்றெடுக்கும் இயந்திரமாகவுமே பெண்களை வைத்திருக்கிறார்கள். புரிந்து கொள்ளாத, சுதந்திரமில்லாத மனைவிகள் அத்தனைபேரும் தங்கள் கணவர்களுக்குச் செக்ஸ் புத்தகங்களே. அவர்களின் வக்கிரங்களை இருட்டில் தீர்த்து வைக்க பெரியோர்கள் செய்து வைத்த ஏற்பாடே திருமணம். ஏனென்றால் அவர்கள் உத்தமர்களாய் ஊருக்குள் நடக்க ஆசைப்படுவார்கள்.

சிலருக்கு நாம் தின, வாரப் பத்திரிக்கை அவர்கள் வாசித்து முடிந்ததும் கிழித்து விடுவார்கள், அல்லது தூக்கி எறிந்து விடுவார்கள் அல்லது அடுத்தவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்று விடுவார்கள். இது குறிப்பாக வேலைக்காரர்கள் போன்றவர்கள் இத்தகைய புத்தகங்களே!

இப்போது சொல்லுங்கள் நீங்கள் பிறருக்கு எத்தகைய புத்தகம்? எதற்காக உங்களைத் அவர்கள் தேடுகிறார்கள்? எப்படி வாசிக்கிறார்கள்? எப்படிப் புரிந்து கொள்கிறார்கள்? நீங்கள் அவர்களின் கையிலா? அறிவிலா? நினைவிலா? இதயத்திலா? எத்தகைய புத்தகம் நீங்கள்?

“நல்ல தோழன்..
கையிலுள்ள புத்தகம்
நல்ல தோழி….
இதயத்திலுள்ள புத்தகம்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES