14
Oct
2024
நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கைப் புத்தகங்களை புரட்டிப் பாருங்கள். ஆங்காங்கே சில மகிழ்ச்சி, சில இழப்பு, சில வருத்தம், சில தோல்விகள் இருக்கும். அதனைக் கடந்துதான் வந்திருப்போம். ஆனால் பெரும்பாலான பக்கங்கள் ஏமாற்றங்கள், துரோகங்கள் தான். ஏமாற்றங்களும் துரோகங்களும் எதற்கு நமக்கு வந்தது? நாம் பிறர்மீது வைத்த கண்மூடித்தனமான நம்பிக்கையால் தானே!
நம்பிக்கை தான் வாழ்க்கைன்னு சொன்னாங்க! இந்த வாழ்க்கை இந்தளவுக்குப் பரிதாபமானதுக்குக் காரணம் என்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது வைத்த நம்பிக்கை தாங்க! அடுத்தவர்களை நம்பணும்னு சொல்லிக் கொடுத்த சமுதாயமே! நம்மீது நாம் வைக்க வேண்டிய நம்பிக்கையைச் சொல்லிக் கொடுக்கவில்லை. தட்டுனா திறக்கும்னு சொன்னாங்க! இங்க தட்டின கையல்லவா களவுப் போய்க் கொண்டிருக்கிறது.
நமது நம்பிக்கையை அதிகமாக்கியவர்கள் இந்த நாலுபேரு, 1)நண்பன், 2)சொந்தக்காரன், 3) மனைவி, 4) காதலி, இவர்கள் எல்லாம் நாம் தேடிக் கொண்டவர்கள். நமக்கு ஒன்னுன்னா உடனே துடிக்கிற நண்பன் நெஞ்சில் குத்தும் போதுதான் இதெல்லாம் நடிப்பாடா? அப்படினு தெரியும். நமக்கு எதுவும்னா சொந்தக்காரங்க இருக்காங்கல்ல என்று நினைத்தபோது அவர்கள் முதுகில் குத்தினால் முனங்கத்தான் செய்ய முடியும்!
நீங்கதான் என் உலகம்னு சொன்ன மனைவி அவளுக்குனு ஒரு உலகத்தை வைத்துக் கொண்டு அதுக்குள்ளே நம்மை விடமாட்டா! அதற்குள் நுழைந்தால் கொடுமைப்படுத்துகிறான் என்று நம்மை கொத்திக் கொண்டிருப்பாள். நீ இல்லைனா நான் உசிர விட்ருவேன்னு சொன்ன காதலி பலரிடமும் அவள் இதையே சொன்னதைக் கேட்கும்போது நம்ம உசிரு நம்மை விட்டுப்போயிருக்கும்! இதுக்கு யாருங்க காரணம்? யாரைச் சொல்லுவது? நம்ம நம்பிக்கை தானே!
நண்பன் நம்மை நடுத்தெருவில் விட்டுவிட்டுப் போகும்போது காதலி தனது கல்யாணப் பத்திரிக்கை கொடுத்துவிட்டு தப்பா நினைத்துக் கொள்ளாதே எனக்கு வேறு வழி தெரியலனு சொல்லும்போது அவங்களுக்கு வழி தெரிந்தது ஆனால் நம்ம வலி அவங்களுக்குத் தெரியாமப் போய்டுச்சு.
இந்தியா பரந்து விரிந்த நாடு இங்கு 97% கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். அதுனால தான் இங்கு ஏமாளிகளும் ஏமாற்றுக்காரர்களும் அதிகம். ஏமாற்றுபவர்கள் ஏமாளிகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கடவுளைக் காண்பிப்பார்கள். தான் நினைத்ததைச் சாதிக்க பக்தியை வளர்ப்பார்கள். ஒரு மனிதனின் முட்டாள் தனத்தையும், அறியாமையையும் பயன்படுத்தி அவனைக் கடவுள் பக்தி என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை வளர்த்து விட்டால் ஏழுதலைமுறைக்கு அவன் எழுந்து நிற்கப் போவதில்லை. இச் சமுதாயம் எழவும் விடுவதில்லை.
இந்த முட்டாள்களையும் கடவுள் பெயரை வைத்துக் கொண்டு முடநம்பிக்கையில் முடமாகிப் போனவர்களையும் வைத்துக் கொண்டு உழைக்காமல் உண்டு கொழுத்துத் திரிபவர்கள் யார்? அந்த நாணம் கெட்ட நாலுபேர்கள் தான்! 1)சாமியார்கள், 2)சோதிடர்கள், 3)வியாபாரிகள், 4) எத்தர்கள் இந்த நான்கு பேரும் நமது முட்டாள்தனத்தைப் பயன்படுத்தி மூடநம்பிக்கைகளை வளர்த்துவிட்டு நம் உழைப்பை அவர்கள் உறிஞ்சி எடுத்துவிடுவார்கள்.
இவர்கள் நான்கு பேரும் எதிர்காலத்தைச் சொல்லி, சொல்லி நம்மை மிரட்டுவார்கள். திருவோடு வைத்துக் கொண்டு தெருவில் நின்ற சாமியார்கள் கோவில் கட்டுகிறேன் என்ற சொல்லி அவர்களுக்கு மாளிகைகள் கட்டிக்கொண்டு நம்மை நிர்வாணம் ஆக்கிவிட்டு அவர்கள் மாளிகையில் இருந்து மந்திரம் சொல்கிறார்கள். நாம் இங்கு சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சந்நியாசிபோல் திரிகிறோம்.
இன்று சாப்பாடுகளை அதிகமாக விரயமாக்குபவர்கள் சாமியார்கள்தான். எந்தப் போதகர்களாவது குடிசையில் வாழ்கிறார்களா? சாமியாராய் வாழ்ந்து கடவுளைப் பின்பற்ற விரும்பினால் மண், பெண், பொன் இந்த மூன்று ஆசைகளையும் துறக்க வேண்டும். ஆனால் இப்போது இந்த மூன்றும் திருட்டுத்தனமாக அவர்கள் அனுபவிக்காவிட்டால் அவர்கள் சாமியார்கள் என்று யாரும் நம்பமாட்டார்கள்.
மரத்தடியில் சோதிடம் சொன்னவன் மக்களிடம் அறியாமையை முழுவதுமாக மூலதனமாக்கி, இன்று வாஸ்து சாஸ்திரம், வைரக்கல் பரிகாரம் செய்தல் என நம்மை நம்ப வைத்து கழுத்தை அறுப்பான் நாம் பரிகாரம் செய்து வெளிவரும்போது நம் சரீரத்தில் ஒரு துளி ரத்தம் கூட மிச்சமிருக்காது அதன்பிறகு நாம் சவம்தானே?
வியாபாரிகள் நாகரீகக் கொள்ளையர்கள், கவர்ச்சி என்னும் மயக்கப்பொடியைத் தூவி மனித ரத்தம் உறிஞ்சும் ரத்தக் காட்டெறிகள் தன்னுடைய நயவஞ்சகத்தால் நாட்டையே பிடித்து வைத்திருக்கிற நவீனச் சாத்தான்கள். இயற்கை வளங்களையும், ஏழைகளின் உழைப்பையும் எவ்வளவு உறிஞ்ச வேண்டுமோ அவ்வளவையும் உறிஞ்சி எடுத்து விட்ட இதயம் கொண்ட இயந்திரங்கள்! இவர்கள் செய்துவிட்ட ரொபோ மனிதர்கள் தான் இன்றைய அரசியல்வாதிகள். எஜமான் சொல்வது பொல் இயங்கக்கூடிய பிரதான மந்திரிகள் நாட்டையே சுடுகாடாக்கும் நயவஞ்சகர்கள்.
எத்தர்கள் இவர்கள் கைதேர்ந்த நடிகர்கள். ஈ.மு கோழி என்பார்கள், மண்ணுளிப்பாம்பு, வட்டி அதிகம், சீட்டுப் பிடிப்பார்கள், விதவிதமான பொய்களை விதைத்துக் கொண்டே இருப்பார்கள். திடிர் திடிரென்று முளைக்கும் காளான் போல் காட்சி தருவார்கள். வெளிநாட்டில் வேலை என்பார்கள். உனக்குத்தான் இந்தப்பதவி என்பார்கள். ஆசைவார்த்தைகளை அள்ளிக் கொட்டுவார்கள். நம்பிக் கொடுப்போர் அனைவரையும் காலை வாரிவிட்டு காணாமல் போவார்கள். அப்போது நாம் கதறி அழுவோம் வேறென்ன நம்மால் செய்ய முடியும்?
எத்தன் நம்மை ஏமாற்றுவான் இதனால் நாம் அவமானத்தைச் சந்திப்போம் இதற்கு பரிகாரம் தேட சோதிடனைப் பார்ப்போம். அவன் வேண்டிய பொருளை வாங்கச் சொல்லி வியாபாரியிடம் அனுப்புவான். அதனைக் கோவிலில் வந்து காணிக்கை கொடுக்க சாமியார் அதனை வாங்கிக் கொண்டு நம்மை ஆசீர்வதிப்பார். இந்நால்வரும் நம் வாழ்வில் விளையாடுகிற வித்தகர்கள். இவர்கள் நம்மீது நம்பிக்கை வைக்கவிடமாட்டார்கள் சாமியார் எல்லாவற்றிற்கும் கடவுள் என்பான். சோதிடன் எல்லாம் விதி என்பான் வியாபாரி கவர்ச்சியைக் காட்டுவான். எத்தன் ஆசையைக் தூண்டுவான். இந்தச் சூதாட்டத்தில் தோற்காதவர்கள் இப்பூமியில் யாருமே இல்லை.
இவ்வளவு தோல்விக்கும் காரணம் நமது நம்பிக்கை தானே, சாமியார் செய்கிற யாகத்திலும் சோதிடன் செய்கிற செய்வினையிலும் நினைத்தது நடந்தால் ஆங்கிலேயரை அதை வைத்து விரட்டி இருக்கலாமே! எதற்கு இத்தனை சுதந்திரப் போராட்டங்கள்! இத்தனை உயிரிழப்புகள்! இராபர்ட் கிளைவை செய்வினையால் கால் கைகளை முடக்கியிருக்கலாம். யாகம் செய்து அத்தனை ஆங்கிலேயர்களைத் துரத்தியிருக்கலாம். அந்தச் சமயத்தில் இந்த ஆசாமிகள் எல்லாம் எங்கு போனார்கள்? ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். கடவுளாய் இருந்தாலும் கணவனாய் இருந்தாலும் உங்கள் நம்பிக்கைக்கு இன்றுவரை குறைவில்லை ஆனால் அவர்கள் நம்பிக்கைக் கொடுத்திருக்கிறார்களா? எல்லாம் நம்ம விதி? என்று சொல்லுமளவிற்கு நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள். உங்களை நம்புங்கள்! உங்களை மட்டும்!
“நம்பிக்கை
வையுங்கள்
எதன் மீதும் அல்ல
உங்கள் மீது”