22

Jun

2024

திறக்கப்படாத பூட்டுக்கள்…

இங்கு பல பழமை வாய்ந்த கோயில்களில் சில அறைகள் இன்னும் திறக்கப்படாமலேயே இருக்கிறது. அந்த அறையில் பல புதையல்கள், நகைகள் குவிந்து கிடக்கிறது என்பார்கள். சில அறைகள் திறக்கப்பட்டால் நாட்டுக்கு, அரசுக்கு நல்லதல்ல என்றும் கூறுவார்கள். இப்படிப் பல செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு இருக்கிறது.

நான் பார்த்த பழைய படம் ஒன்றில் ஒரு நகைச்சுவைக் காட்சி வரும் அதில் ஒருவர், தான் வைத்திருந்த ஒரு பெட்டியை யாரோ களவு செய்துவிடுவார்கள். ஆனாலும் அவர் அருகில் இருப்பவர்களிடம் பெட்டி போனால் என்ன? சாவி என்னிடம் தானே இருக்கிறது! என்பார். அவரது அறியாமையை நினைத்து மற்றவர்கள் சிரிப்பார்கள். காரணம் பெட்டியைத் திருடியவனுக்கு அதன் பூட்டை உடைக்கத் தெரியாதா?

அப்போது தான் எனக்கொரு கேள்வி வந்தது பெட்டியும் இருந்தும், சாவியும் இருந்தும் திறக்கப்படாமலேயே இருந்து விட்டால்? அதனால் என்ன பயன்? ஒரு பூட்டானது பல காலங்கள் திறக்கப்படாமலேயே இருந்தால் பூட்டின் மீது துரு ஏறிவிடும். அதன் பிறகு அதற்கு உரிய சாவிகொண்டு கூட திறக்கமுடியாது. இதேபோல் தான் இங்கு மானிடர்கள் பலர் வாழ்கிறார்கள்.

ஒரு காலத்தில் ஒரு புத்தகம் படித்தேன் அதன் பெயர் “மனம் ஒரு மந்திரச் சாவி” ஆனால் நான் எண்ணுகிறேன். மனம் என்பது சாவியல்ல ஒரு பெட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் சந்தேகம் வேண்டாம் கண்டிப்பாக அது பல அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்ததுதான். நம் மனத்தில் ஒரு அறைகள் மட்டுமல்ல பல அறைகள் உள்ளன. இதற்கு நம்மிடம் அன்பு, அறிவு, இரக்கம், கருணை, காதல், கல்வி, உறவு, உண்மை என்று பல சாவிகள் உண்டு. நாம் அதை திறக்கும்போது தான் பலர் அதை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் பலர் அதனைத் திறந்து பார்த்ததே இல்லை. பார்க்கவும் விருப்பப்படவில்லை.

நாம் ஒவ்வொருவரும் இப்பூமிக்கு வந்தது சுதந்திரமாக வாழத்தான். யாரையும் அடிமைப்படுத்தவோ யாரிடமாவது அடங்கி வாழவோ இங்கு நாம் வரவில்லை. சில தேவைகளை நிறைவேற்றுவதற்காக நாம் யாருக்காவது அடிமையாக இருந்தால் நம்மால் எப்போதும் பல அறைகளைத் திறக்கவே முடியாது.

இங்கு ஒரு ஏழை, எளிய சாதி, ஒரு பெண் இவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது? என்று இங்கு யாருக்குத் தெரியும்? இவர்கள் எல்லாம் தன்னைத் திறந்து மனதில் உள்ளதை வெளிப்படுத்த உலகம் அல்ல! உடனிருப்பவர்கள் கூட வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்களா? யாரைப் பார்த்தாலும் மனதைத் திறந்து பேசு என்று சொல்வோம். ஆனால் அவர்கள் மனசைத் திறக்க நாம் அனுமதித்திருக்கிறோமா? அதில் பல உண்மைகள் பொதிந்து கிடக்கும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மிடம் இருக்கிறதா?

இன்று நாம் நமக்கு மனதிற்குப் பிடித்தவர்களிடம் நேரில் சென்று உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியுமா? இல்லை அது என்ன கெட்ட வார்த்தையா? ஆனால் கெட்ட எண்ணத்தோடு தானே பலர் அதைப் பார்க்கிறார்கள்! அப்படி என்றால் மனதிற்குப் பிடித்ததைக் கூடச் சொல்ல முடியாத இக்காலக்கட்டத்தில் அதனை மனதிற்குள் பூட்டி வைக்கத்தானே வேண்டியிருக்கிறது. அதுவும் ஒருமுறை பெரிய அவமானப் பட்டுவிட்டால் அதற்குப் பிறகு அவர்கள் கனவிலும் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள்.

இங்கு வாழுகின்ற ஒரு ஏழைத்தாயின் மகன் ஜனாதிபதியின் மகளை விரும்புகிறார் என்றால் அதனை வெளிப்படுத்த முடியுமா? இந்தக் கீழ்த்தரமான சமுதாயம், கீழ் சாதி என்று வைத்திருப்பவர்கள், மேல் சாதிப் பெண்ணையோ பையனையோ விரும்புகிறேன் என்று வெளியில் சொல்ல முடியுமா?

கல்லூரியில் படிக்கிற பெண்ணோ, வேலை செய்கிற பெண்ணோ தன் தந்தையிடம் வந்து நான் ஒரு பையனை விரும்புகிறேன் என்று துணிந்து சொல்லும் அளவிற்கு நம் திறந்த உள்ளத்தோடு இருக்கிறோமா? இரக்கம் உங்களுக்கு இருக்கிறது என்பதற்காக நீங்கள் யாரையும் உங்கள் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று அவர்கள் விரும்பிய இடத்தில் கொண்டு விட்டு வர முடியுமா? ஒரு துறவி தனது துறவற ஆடையுடன் தன் உடன் பிறந்த தங்கையை வைத்துக் கொண்டு வாகனத்தில் செல்ல முடியுமா? தன்னுடன் பணி செய்பவரைத் திருமணம் முடித்த ஆணோ, பெண்ணோ அவர்கள் ஒரு சாதனையைச் செய்யும்போது ஓடிச்சென்று கைகுலுக்கி அனைவர் மத்தியிலும் உற்சாகப்படுத்த வாய்ப்பிருக்கிறதா? யோசித்துப்பாருங்கள். எங்கே நாம் அடைபட்டுக் கிடக்கிறோம்? எது நம்மை அடைத்து வைத்திருக்கிறது? மீட்பே இல்லாத மீளாத்துயரத்தில் தானே நாம் மூழ்கிக் கிடக்கிறோம்.

இங்கு ஏதோ ஒன்று நம்மை அடக்கிக் கொண்டு இருக்கிறது. உள்ளதைச் சொல்ல முடியவில்லை. உண்மையையும் சொல்ல முடியவில்லை இதற்கு யார் காரணம்? எல்லோரும் தான் காரணம்! எல்லா உணர்வுகளையும் எல்லோரிடமும் திறந்து காட்ட முடியவில்லை காரணம் நம் கண்ணுக்கு நம்பிக்கைக்குரியவர்களும் குறைவு! நாமும் பிறருக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும் இல்லை. அப்படியென்றால் எப்படி நம்மை வெளிப்படுத்துவது? இப்படித்தானே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

ஒரு பையன் தான் விரும்பும் பெண்ணிடம் அன்பைச் சொல்லி விட முடியுமா? அந்த அன்பைக் கூட அப்பெண் விரும்பினாலும் வெளிப்படையாக உடனே ஏற்றுக்கொள்ள முடியுமா? அதையும் மனதிற்குள் அடைத்து வைக்கதானே வேண்டும். இல்லை நாம் தாம் அதனை அனுமதிப்போமா? ஒரு ஜவுளிக்கடைக்குச் சென்றால் கூட நாம் விரும்பும் உடையை வாங்க முடியவில்லையே! நமக்கு எதை வாங்க முடியுமா? அதைத்தானே வாங்குகிறோம். நாம் விரும்புகிற வேலையை அடைய முடியவில்லையே! எது கிடைக்கிறதோ? அதைத்தானே நாம் செய்கிறோம்! நாம் விரும்பிய பெண்ணோடு பேச, வாழ, பகிர முடியவில்லையே! எது நமக்கு வாய்க்கிறதோ அதைத்தானே நாம் வாழ்வு முழுவதும் எடுத்துக் கொண்டு போகிறோம்!

இதனால்தான் இந்தியர்களுக்கு அதிகமாக மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றால் அதிகம் பாதிப்படைகிறோம். வெளிப்படுத்தாமல் அடைத்து வைக்கப்பட்டவை மாரடைப்பாகவும், வெளிப்படுத்த முடியாத ஆறாத காயங்கள் புற்றுநோயாகவும் இன்று மனிதனை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு நோய்களைக் கண்டுதான் மருத்துவ உலகம் மரணபயத்தோடு உலவிக்கொண்டு இருக்கிறது, போலியோ, பிளேக், காலரா, எய்ட்ஸ், கொரோனா என்ற கொடிய நோய்கள் நம்மை வந்து தாக்கினாலும் அதனை எளிதில் கடந்து விட்டோம். மாரடைப்பு, புற்றுநோய் ஆகிய நோய்கள் வந்த பின்பு துடிப்பதைவிட வருமுன் அதனை வரவிடாமல் தடுக்க நாம் ஒருவர் ஒருவரோடு அன்போடு இருப்போம் மனம் திறந்து உறவாடுவோம்.

வழியில் ஒருவன் சைக்கிள் சாவியைத் தொலைத்துவிட்டு தவிக்கும்போது வீட்டுச் சாவியைத் தவறவிட்டு துடிக்கும்போதும் நாம் அவர்கள் மீது இரக்கம் கொண்டுதானே வழியச் சென்று உதவி செய்வோமே! அதே போல தன் மனதினைத் திறக்கு சாவி இல்லாமல் இருந்தும் திறப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருப்பவர்களுக்கு நாமே எதை கண்டும் பயமில்லாமல் துணிந்து உதவி செய்வோம். அவர்கள் அதிலிருந்து வெளிவர வேண்டுமென்றால் அவர்களோடு அன்பாய் இருப்போம். ஆறுதலாய்ப் பேசுவோம் துன்பம் வரும்போது தோள் கொடுப்போம் அதற்கு விமர்சனம் வந்தால் நாமே போராளியாக மாறுவோம். அவர்களுக்கும் நமக்கும் நோய் வராமல் காப்பாற்றுவோம். உங்களுக்கு உயிரானவர்கள் இன்னும் பல நாட்கள் உயிரோடு இருக்க அவர்களிடம் மனம் திறந்து பேசுவோம். சிலரோடு நாம் பழகினால் விமர்சிக்கப்பட்டு நம் மானம் போகும் மரியாதை போகும் நிலை வரலாம். அது போகட்டும் அவர்கள் மட்டும் உங்களை விட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நாம் எதையும் கொண்டுவரவில்லை கொண்டுபோகப் போவதும் இல்லை. அவர்களிடம் நாம் விட்டுப் போவது நமது நினைவுகளை மட்டுமே நாம் இறந்து நம்மைச் சவக்குழியில் வைக்கும் முன் இருக்கும்போதே நம் நினைவுகளை பலரின் நெஞ்சாங்கூட்டில் வைத்துவிட்டு நிம்மதியாகப் போவோம்.

“அன்பானவர்களுக்கு
விருந்தாவோம்…
அழுகிறவர்களுக்கு
மருந்தாவோம்…”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES