17
Apr
2025
– புனித வெள்ளி
வரலாற்றில் நமது பார்வையில் தோல்வி நாயகர்களாகத் தெரிபவர்களை எல்லாம் எடுத்து மகான்களாக மனதில் நிறுத்தி இன்று நமது வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்கிறோம். வரலாற்று பக்கத்தில் அயோத்தியை ஆளப்பிறந்த இராமன், அஸ்தினாபுரத்தை ஆள வேண்டிய தர்மன் எல்லாம் நாட்டைப் பறிகொடுத்து காட்டுக்குள் அலைந்தார்கள். நாட்டையே ஆண்டு கொண்டிருந்த சித்தார்த்தன் நாடுகடத்தப்பட்டு போதி மரத்தடியில் புத்தனாகக் கண்டுபிடிக்கப்பட்டான். இஸ்லாத்தில் முகமது நபியோ மெக்காவில் இருந்து மெரினாவிற்குத் துரத்தியடிக்கப்பட்டார். விவிலியத்தில் கடவுளின் மகன் எனக் கற்பிக்கப்பட்டு மனிதனால் மரணதண்டனை கொடுத்து மரணிக்கப்பட்டார். இவர்கள் தான் இன்று வேத நாயகர்களாக நமது வாழ்வில் வீற்றிருக்கிறார்கள்.
இதில் இராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றைய சூழ்நிலையில் வாழும் எந்த ஒரு மனிதனையும் நேரில் சென்று கைகுலுக்கும் வார்த்தைகளை காலத்தால் அழிபடாமல் கற்பித்துவிட்டுச் சென்றவர் இயேசு மகான். இவர் இப்பூமிக்கு வரும்வரை ஏழைகள் சபிக்கப்பட்டவர்கள் எதற்கும் உரிமையில்லாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். முதன் முதலில் ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில் “இறைவன் விரும்பும் அரசின் மக்களுக்குரிய தகுதி உங்களிடமே உள்ளது” என்று உரக்கச் சொன்னார். அதன்படியே வாழ்ந்தும் காட்டினார் பிறர் வாழவும் வழிகாட்டினார்.
உலகம் நினைப்பது போல் காசை இவர் மதித்தவர் அல்ல. காசை ஒரு பொருட்டாக எண்ணியதே இல்லை காசைத்தேடி ஒடியதும் இல்லை. காசு இல்லையே என்று கலங்கியதும் இல்லை. காசு இல்லை என்றாலும் கடைசிவரை புகழோடு வாழ்ந்தார். அதிகாரத்தோடு போதித்தார் அடக்குமுறைகளை எதிர்த்தார். ஒடுக்கப்பட்டவர்களை, ஒரங்கட்டப்பட்டவர்களை தடுக்கப்பட்டவர்களை சமுதாயத்தால் கெடுக்கப்பட்டவர்களை தூக்கி விடுவதற்காக கடைசியில் பகைவர்களால் தாக்கிக் கொல்லப்பட்டார்.
இந்த வரலாற்று நாயகனின் வாழ்க்கை வரலாற்றை ஒருமுறை வாசித்துப் பார்த்தால் ஏழ்மையின் வடிவமாய் எளியவர்களின் உருவமாய் வீடற்றவர்களின் விலாசமாய் வாழ்ந்து, சென்றதைக் காண முடியும். அவருடைய பிறப்பே இந்தப் பெருமையைச் சொல்லும் இயேசுவின் பெற்றோர்களான சூசையும், மரியாளும் மரியாளின் பேறுகால நேரத்தில் தனது சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். சொந்த ஊரில் சொந்த வீடு இல்லை. சத்திரங்களில் தங்குவதற்குக் கையில் பணமில்லை, வகை தெரியாது வழி இல்லாது ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஏதாவது குடிசை இருக்காதா? எனத் தேடும்போது மாடுகள் அடைக்கும் குடிலில் இயேசு பிறந்ததாக இன்றும் வரலாறு சொல்கிறது, அரண்மனையில் பிறந்தவர்களை மன்னர்களாகக் கொண்டாடும் இந்த உலகம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஒருவரைக் காக்கும் தெய்வமாக முதன்முதலில் இச்சமூகம் பார்த்தது.
யூதர்கள் குழந்தை பிறப்பின் மகிழ்வை உலகிற்கு தெரிவிப்பது குழந்தையைக் கோயிலில் காணிக்கையாகக் கொடுக்கும் போது தான். அந்த எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யும்போதும் அந்த விழாவில் அவர்களது காணிக்கைப் பொருளில் வறுமையே வெளிப்பட்டது. அதில்தான் அவரது வாழ்வும்; தொடங்கப்பட்டது.
இயேசு தனது பணி வாழ்வைத் தொடங்கும்போது தனது பணி வாழ்வில் தொடங்கும்போது சுத்தமாகத் தொடங்க எண்ணி கோயிலுக்குள் நுழைந்தார். அங்கு கடவுள்களைவிட கல்லாப் பெட்டிகளே இருந்தன. வழிபாடுகளைவிட வியாபாரங்கள்தான் நடந்தன. குருக்களைவிட வியாபாரிகளே அதிகமாக இருந்தார்கள். எங்கும் வியாபாரம் எதற்கும் காசு, காசு இல்லாதவன் கோவிலுக்குள் நுழைய முடியாது. வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியாது காணிக்கைக் காசு இல்லையென்றால் கடவுளை அங்குப் பார்க்க முடியாது பணம் இல்லையென்றால் அவர்களது பாவத்தைப் போக்க முடியாது என்ற பரிதாப நிலையைக் கண்டு இயேசு கொதித்து எழுந்தார். சவுக்கை எடுத்து வியாபாரிகளை எல்லாம் வெளியே துறத்தி கடவுளின் வீட்டில் காணிக்கை எதுக்குடா? வழிபாட்டுக் கூட்டத்திற்கு வியாபாரக் கட்டணங்களா? என சீறி எழுந்தார்.
ஒருமுறை அவர் கோவிலின் உள்ளே இருக்கும்போது ஒரு விதவைப் பெண் தான் வைத்திருந்த காசுகள் அனைத்தையும் அக்கோயிலின் காணிக்கை பெட்டியில் போட்டுவிட்டார். அதனை அங்கிருந்த அனைவருக்கும் இயேசு அறிவித்து இவளே கடவுளை நம்பும் காரிகை ஆவார். காசின் மீது நம்பிக்கை இல்லாதவர் அந்த பெண். காசுதான் வேண்டுமென்று கடவுளை வேண்ட வருகிறவர்கள் எதிர்காலம் பயம் உள்ளவர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை நம்புவார்கள். இல்லையென்றால் காசுக்காக கடவுளை வேண்டுவார்கள் இங்கு தனக்குத் தனக்கு என்று சேமித்து வைக்கிறவர்கள் எல்லாம் கடவுளை விட்டு ஒதுங்கிச் செல்பவர்கள். வங்கியில் இருக்கும் பணத்தை மட்டும் நம்புகிறவர்களின் வழிபாடுகள் எல்லாம் போலித்தனமானவை.
ஒருமுறை கடற்கரைப் பகுதியில் இயேசுப் போதித்துக் கொண்டு இருக்கும்போது சுங்கத்துறையில் காசினை எண்ணிக் கொண்டிருந்த மத்தேயு தனது வாழ்வை எண்ணிப் பார்த்தார். காசு கடவுளை மறக்கிறது நேர்மையைத் துறக்கிறது, அதிகாரம் பிடிக்கிறது, ஆணவத்தில் துடிக்கிறது, கல்லறைக்குப் போகும் வரை நாம் சில்லறையை எண்ணிக்கொண்டிருந்தால் நமது வாழ்வு சில்லறையாகிவிடும் என எண்ணி காசை எறிந்துவிட்டு இயேசுவின் காலடியில் அமர்ந்தார் அதன்பின் அவரது வரலாறுதான் இயேசுவின் வரலாற்றை வாசித்தது.
இயேசு போதித்துக் கொண்டே போகும்போது கண் பார்வையற்றவர் இயேசுவிடம் கையை நீட்டி காசு கேட்டார். இயேசுவோ என்னிடம் காசோ, பணமோ எதுவும் இல்லை என்றவுடன் அந்தப் பார்வை அற்றவரின் முகம் வாடியது. அதைப்பார்த்த இயேசு முகம் வாட வேண்டாம் நீங்கள் பார்வை பெறுங்கள் என்றார். உடனே அவர் ஐயா என் கண்ணைத்திறந்து விட்டீர் இதுவரை பணம், பணம் என அலைந்து நான் பார்வையற்றவராகவே இருந்தேன். நீங்கள் பணம் தரவில்லை பார்வையைத் தந்தீர்கள் பணத்தைத் தேடுகிற பலர் பல நேரங்களில் கடவுளைத் தெரியாத, நம்பாத குருடர்களாகத்தான் இங்கு அலைகிறார்கள் என்றார்.
ஒரு வீட்டுக்கு இயேசு உணவருந்தச் செல்லும்போது அங்கு ஒரு பெண் அவரது பாதத்தில் நறுமணத் தைலத்தால் பூசிக்கொண்டிருந்தாள். இது எவ்வளவு காசு? இதை ஏன் இப்படிச் செலவு செய்ய வேண்டும்? என்றுக் கேட்கும்போது பிறருக்குக் கொடுப்பதைக் கணக்குப் பார்க்காதீர்கள் காசைப் பார்த்தால் உறவு இருக்காது, அன்பு, நட்பு, அரவணைப்பு எதுவுமே இருக்காது காசை செலவில் வையுங்கள் அன்பை வரவில் வையுங்கள்.
இயேசு போதித்துக் கொண்டிருக்கும்போது அவரும் அரசுக்கு வரிசெலுத்த வேண்டும் என்று சொன்னவுடன் அவரும் சீடரிடம் மீனைப் பிடித்து அதன் வாயைத் திறந்து வரிசெலுத்தச் சொன்னார் அதனால் வரிகேட்டவர்களின் வாயை மூடினார். எல்லாம் நமக்குத் தேவைதான் அது தேவைப்படும்போது தேடிக் கொள்வதுதான் வாழ்க்கை. தேவைப்படும் எனத்தெரிந்து, பிறருக்குத் தேவைப்படுவதை நாம் சேர்த்து வைத்திருந்தால் அது திருட்டு, பதுக்கல் ஆகும் பாவத்தின் சாயல் ஆகும்.
ஒருவர் ஒரு நாணயத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் வந்து இப்பணம் எனக்கா? அரசுக்கா? என்று மக்கள் கேட்டவுடன் நீங்கள் உங்களுக்காக வைத்துக் கொள்ளாதீர்கள் அரசுக்குக் கொடுக்க வேண்டியதை அரசுக்கும் ஆண்டவனுக்குக் கொடுக்க வேண்டியதை ஆண்டவனுக்கும் கொடுங்கள் என்றார் அதாவது நீங்கள் உழைப்பதை நீங்கள் பயன்படுத்தும் பொருளுக்கு வரியாக அரசுக்கும் மற்றதை கடவுள் பெயரால் பிறருக்கும் கொடுங்கள் என்றார். தங்கத்தில் உங்கள் தரமில்லை வங்கியில் உங்கள் வாழ்க்கை இல்லை எதிர்காலப் பயமே உங்களது இருப்பை அதிகப்படுத்தும் எச்சரிக்கை!
காசை நம்பாமல் தன்னை நம்பி தன் வாழ்க்கையை போராட்டமாகவும், போராளியாகவும் வாழ்ந்தார். ஆனால் மகான் இயேசு கிறிஸ்து தனது சொந்தச் சீடர் ஒருவரால் முப்பது வெள்ளிக் காசுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். காசே இல்லாத வாழ்க்கைதான் கடவுளிடம் உங்களைச் சேர்க்கும் என்று கற்பித்தவரை காசுக்காகக் காட்டிக்கொடுத்து கல்லறையில் அடக்கம் செய்து விட்டார்கள். அவரது உடலை அடக்கம் செய்ய கல்லறைக் கூட இல்லை சிறு சில்லறை இல்லாததால் அடுத்தவர்கள் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். காசு இல்லாமல் தொடங்கிய இயேசுவின் வாழ்க்கை காசோடு போராடி மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து மீட்புக் கொடுக்க எண்ணும்போது அந்தக் காசுக்காகவே காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். காட்டிக் கொடுத்தவர் அந்தக் காசைக் கொண்டுபோய் கயிறு வாங்கி வந்து தூக்கில் தொங்கிச் செத்தார். காசு உயிர் இல்லாதது ஆனால் உயிருள்ள மனிதனிடத்தில் ஆசையை வளர்த்து அவன் உயிரை எடுத்துவிடுகிறது. இங்கு பணங்கள் தான் பல பிணங்களைக் குவித்திருக்கிறது. ஆகவே பணம் தேவைப்படும் போதுதான் வேண்டும். தேவை இல்லாமல் பணத்தைத் தேடிவிட்டு வாழ்வைத் தொலைத்து விடாதீர்கள்!
“பணம் மெத்தையை
விலைக்கு வாங்கும்
தூக்கத்தை அல்ல…”