04

May

2025

கோவில் கொடை…

கோடைக் காலத்தில் அதிகமான கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு திருவிழாக்கள் கொண்டாடப்படும். காரணம் இந்தக் காலக்கட்டத்தில் நமக்குப் பொது விடுமுறை கிடைக்கும். அதனால் வெளியூரில் வேலைக்காகச் சென்ற மக்கள் இந்தச் சமயத்தில் தாங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள். அதனால் தனது சொந்த பந்தங்களோடு கொண்டாடுவதற்கு இந்தக் கோடை விடுமுறை வசதியாக இருக்கும்.

கடவுள்கள் கோயில்களைப் பற்றி இரு வேறுபட்ட கருத்துகள் தொடக்கக் காலத்தில் இருந்தே இருந்து கொண்டு இருக்கிறது. இருப்பினும் கடவுள் பக்தி வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கடவுள் இல்லை என்று கூறுபவர்களும் கடவுளை வெறுப்பவர்கள் அல்ல கடவுள் பெயரால் நடக்கின்ற அக்கிரமங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் ஆணியே புடுங்க வேண்டாம் அந்த ஆண்டவனையும் கும்பிட வேண்டாம் என்று வெறுத்துப்போய் அவர்கள் பேசுகின்ற பேச்சுத்தான் அது.

கோவில்கள் தேவையா? என்றால் கண்டிப்பாகக் கோவில்கள் தேவை. ஏனென்றால் இன்றைய மனிதர்களுக்குக் கோவில்தான் நம்பிக்கை, கோவில்தான் ஆறுதல், கோவில்தான் அடைக்கலம், கோவில்தான் மருத்துவம், கோவில் மட்டும் இங்கு இல்லையென்றால் பாதி மனிதர்கள் இங்கு பைத்தியமாகத்தான் அலைவார்கள் அதற்காகவே இங்கு கோவில்கள் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற ஏதோ ஒரு நம்பிக்கைத்தான் அவனது வாழ்க்கையை இழுத்துக் கொண்டு போகிறது. அந்த நம்பிக்கையை கோவில்தான் கொடுக்கிறது. ஒருமுறை உங்களையே நீங்கள் திரும்பிப் பாருங்கள். நமக்கு ஏற்பட்ட எத்தனையோ தோல்விகள் அவமானங்கள் இயலாமையின்போது எத்தனையோ முறை எதற்கு இந்த வாழ்க்கை? என்று முடித்துக் கொள்ள நினைத்திருக்கிறறோம். அப்போது ஏதோ ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது இந்தக் கோவில்களும் சாமிகளும்தான்.

அந்தக் கோவிலுக்குப் போனால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கைத்தான் அந்தத் துயரக் காலத்தை கடக்க உதவி செய்தது. பின்பு ஏதாவது ஒன்று தானாக நடந்தாலும் அந்தக் கோவில்தான் அதன் அருளால்தான் இத்தகைய அதிசயம் நடந்தது என்று எண்ண வைத்து இன்னும் அதிகமாக அந்தக் கோவில்மீது நம்பிக்கை வளர வழி வகுத்தது. இன்னும் அதிகமாகத் துன்பம் வந்தாலும் இதேபோல் கடந்து விடலாம் என்று தனக்குள்ளே ஒரு நம்பிக்கை வளர அந்தக் கோயில் காரணமாக இருந்திருக்கிறது.

கடவுள் மனிதரை உருவாக்கினார் என்று சொல்கிறோம் அதற்கு நம்பிக்கையைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் ஒவ்வொரு கோயிலையும் அங்குள்ள சாமிகளையும் மனிதர்கள்தான் உருவாக்கினார்கள். அவர்களே மக்கள் நம்பும் படியாக ஒரு வரலாற்றையும் கூறுவார்கள். அதில் சில அதிசயம், ஆச்சர்யம், நம்பமுடியாத, கேள்வி கேட்க முடியாத, சில வீரதீரச் செயல்கள், சில திருப்புமுனைகள், சில மிரட்டல்கள் என பல்வேறு பயங்களைக்காட்டி அந்த வரலாற்றை எழுதிவைப்பார்கள். இதனால் மனிதர்களுக்கு மதத்தின் மீதும் சாமியின் மீதும் பயம் ஏற்படத் தொடங்கியது.

மனிதர்களுக்கு ஏற்பட்ட பயம் அவனைப் பாவத்திலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்தது. மனித நேயங்களை வலியுறுத்தியது. இதற்கு மனித நேயமுள்ள இரக்கச் சிந்தனையுள்ள மனிதர்கள் சாமிக்குச் செய்வதாக ஏழைகள் வாழ்வை உயர்த்த எண்ணிய சிந்தனையும் கோவில்கள்தான் உருவாக்கித் தந்தன. யாருமற்ற அனாதைகள் கூட ஏதோ ஒரு கோவிலுக்குச் சென்று வாசற்படியில் இருந்து பிச்சை எடுத்தால் கூட வாழ்க்கையில் ஒருபடி உயர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை வந்து விடுகிறது.

வீட்டில் குடும்பமாய் வாழ்ந்தவர்கள் திடிரென்று தன்னுடைய மரியாதை குறையும்போது கோவிலுக்குச் சென்று ஒரு தூணின் அருகே சாய்ந்து கொண்டு இறைவனிடம் பேசுவதாக, புலம்பிக் கொண்டு இருப்பார்கள். காரணம் இந்த உலகம் போலியாகத் தெரிகிறது. நமது மன அழுத்தங்களை நமக்கு நெருக்கமானவர் என்று யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் அவர் காலம் பார்த்து நமது கௌரவத்தைச் சிதைப்பார். இதனால் நம்மை நிலைகுலைய வைப்பார். எனவேதான் யாரிடமும் நம்பிப் பகிர்ந்து கொள்ள முடியாமல் இதயத்தை அழுத்தும் துயரங்களையும் யாரிடமும், எப்போதும் அதனைச் சொல்லிக்காட்டாத இறைவனிடம் புலம்புவார்கள். சில நேரங்களில் அழுதால் கொஞ்சம் நிம்மதி அதுதான் இறைவன் சன்னிதி. அந்த ஆறுதலுக்காகத் தனியே புலம்பி அழுவார்கள் அதுமட்டும் இல்லையென்றால் இன்று மனித உயிர்கள் பாதி கல்லறையில் காணாமல் போயிருக்கும்.

நன்றாகப் போய்க் கொண்டிருந்த இந்தக் கடவுள் பக்தி சமீபகாலமாக மதம்பிடித்த யானைபோல பிளிரிக் கொண்டு பிறரைத் துன்புறுத்தியும் அழித்துக் கொண்டும் அலைகிறது. கடவுள் பேசினார் (அசீரீரி) மனிதன் கேட்டான். மனிதன் பேசினான் (பிராத்தனை) கடவுள் கேட்டார். இந்தக் கொள்கை இருக்கும் வரை மானிடச் சமூகம் மன நிம்மதியாக வாழ்ந்தது.

சாமி சொன்னதாக மனிதன் சொல்வது (அவதாரம்) சாமி நினைத்ததாக மனிதன் செயல்படுத்த (அரசியல் ஆதாயத்திற்காக) நினைத்தபோதுதான். மனிதனின் பித்தலாட்டங்கள் பேயாய்த் தலைவிரித்தாட ஆரம்பித்தன. சாமியார் என்ற பெயரில் வேதம் சொன்னதாக விசத்தை விதைத்து மூடநம்பிக்கைகளை வளர்த்து மனிதர்களை முட்டாளாக்கினார்கள். பக்தி என்ற பெயரில் பயங்கரவாதத்தை உருவாக்கி மனிதர்களை பிரித்து அரசியல் ஆட்டம் ஆடும் அயோக்கியர்களின் ஆட்சி ஆரம்பித்து விட்டது. எந்தத் தெய்வம் நிம்மதியையும், அமைதியையும் கொடுத்ததோ அதே பெயரில் இன்று மரணமும் மயானமும் பெருகிக் கொண்டிருக்கிறது.

இப்போது கோவில்கள் எதிரிகளை உருவாக்கி அழிக்க நினைக்கிறது. இன்று நடக்கும் பெரும்பான்மைக் கலவரங்கள் ஏவப்படுகின்றவை. ஒரு கருத்து கேள்வி கேட்கப்படாமல் ஏற்கப் பட வேண்டும் என்றால் அது மதத்தின் பெயரால் மாறுவேடம் போட்டு வர வேண்டும். ஏனெனில் எங்களுடைய முட்டாள்கள் கோவில்களில்தான் காணக்கிடைக்கிறார்கள். இந்தக் கோவில்களும், வழிபாடுகளும் என்று அரசியலோடு இணைந்ததோ அன்றே இது அயோக்கியத்தனத்தை ஆடையாக அணிந்து கொண்டது.

மதத்திற்குப் போதை அதிகம் இதனை யாரும் கட்டுப்படுத்தச் சொல்லவில்லை. இதனை மதவாதிகளும், குருக்களும் மனம்போன போக்கில் கடை திறந்து வைத்திருக்கிறார்கள். இதனால் இந்தச் சமூகம் சுயநினைவை இழந்து வெகுநாளாகி விட்டது. மதப்போதையில் இவர்கள் சமயத்தின் பெயரால் செய்வதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. இப்போதைய உங்கள் வழிபாடுகளைவிட அதனை வழிபடாமல் இருப்பதே கடவுளுக்கும், மனிதர்களுக்கும் நீங்கள் செய்கின்ற மிக நல்ல காரியம்.

கோவில்களை கொண்டாடுங்கள். அது எம்மதத்தின் சம்மதமாக இருக்கட்டும். உங்கள் மதம்மட்டும் கொண்டாடுகிற கோவிலாக இருந்தால் அதனை உடனே இடிந்துவிடுங்கள். அது சுயநலம். அங்கு சுத்த சந்நியாசிக்கு என்ன வேலை? மதத்தின் அடையாளங்களை எரிக்கச் சொல்லுங்கள் மன நிம்மதி தானாக வந்து விடும் என்மதம் என்சாமி என்று சொல்வதை விட்டுவிடுங்கள். நாம் எல்லோரும் ஒன்றாகி விடுவோம். சாமிகளை பொதுவாக்குங்கள் சமபந்தி கொண்டாடுவோம் அது கிராமத்தில் இருந்து ஆரம்பியுங்கள். இங்கு நகரங்கள் நரகங்களாகிவிட்டது. மதக்குருமார்களின் அனைத்து மதங்களை வழிபடுகிறவர்களை ஒன்றிணைப்பதுதான் உங்களது வேலை என்பதை உணருங்கள் ஒரு மதத்தை மட்டுமே தூக்கிப் பிடிக்கிற மதத்தலைவர்களுக்கு மக்களே மரணதண்டனைக் கொடுங்கள் நாம் அனைவரும் எங்கே ஒன்றாய் இருக்கிறோமோ அங்கே கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள் நீங்கள் கடவுளின் பிள்ளைகள். வாருங்கள் ஒன்றிணைவோம் ஒன்றிணைந்தால் நாம் கடவுளைத் தேட வேண்டாம் கடவுள் நம்மைத் தேடி வருவார் கோவிலுக்கு அல்ல நம் வீட்டுக்கு…

“இன்று நமக்குத்
தேவை
மதுவிலக்கல்ல
மதவிலக்கு”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES