27
May
2025
பனைமரத்தைப் பற்றிச் சொல்லும்போது இந்தப் பழமொழியைப் பற்றிச் சொல்வார்கள் ஆனால் இப்போது இந்தப் பழமொழி நடைமுறையில் இல்லை. காரணம் நுங்கு என்பது கனவில்கூட இல்லாததால் இங்கு சங்குச் சத்தங்கள் அதிகமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறது சாவும் விழுந்து கொண்டே இருக்கிறது.
பனைமரம் ஒருவகையில் இது பரிதாபத்துக்குரிய மரம் உடலெல்லாம் அறுத்துக் கொடுத்துப் பிறரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும், மண்ணுக்குள் நிற்கும் நவீன மனு நீதிச் சோழன். அவன் தன் சதையை அறுத்துக் கொடுத்ததால் சரித்திரத்தில் இன்றும் வாழ்கிறான். ஆனால் அனைத்தையும் அறுத்துக் கொடுத்து நின்றாலும் இன்று அழிந்து கொண்டு இருக்கிற ஒரு மானிட மாற்றுத்தாய் மடிந்துகொண்டிருக்கிறாள். இந்த மண் உலகச் சொர்க்கம் வெட்டி வீழ்த்தப்படுவதால் இந்த மண்ணுலகம் மயானக் காடாய் மாறிக் கொண்டிருக்கிறது.
பனைமரத்தின் ஓலை கூரையாகவும், பாய், பெட்டி, விசிறி, தட்டி, வேலி என்று பல வழிகளில் பயன்படும். அந்த ஓலை காய்ந்து விட்டால் விறகாகிவிடும். அதன் காய் நுங்காகும், காய் வருமுன் பாளை சீவினால் அது பதநீர் ஆகும். பதநீரைக் காய்ச்சினால் கருப்பட்டி ஆகும். காய் பழமாகிவிட்டால் அதனை மண்ணுக்குள் புதைத்து வைத்து கிழங்காக மாற்றி உண்பார்கள். அந்தக் கிழங்கின் அடியில் இருக்கிறக் கொட்டையை உடைத்து தவுணை எடுத்து உண்பார்கள். பனைமரம் வெட்டும்போது அதன் குருத்தை உண்பார்கள். பனை ஒலையைப் பிடித்துக் கொண்டு மழையில் நனையாமல் வருவார்கள்.
பனைமரத்தை வெட்டி உத்திரமாக்கி வீடுகள் கட்டுவார்கள், கட்டிடம் கட்ட அதற்குச் சாரம் கட்டுவார்கள், மரவேலைப்பாடுகளை வைத்து மனிதனின் உறைவிடங்களாக்குவார்கள். ஏற்றம் இறைக்க, ஆறுகளைக் கடக்க, காடுகளில் பரண் அமைக்க, என மனித வாழ்க்கையில் பிரிக்க முடியாத வகையில் பனைமரத்தைப் பயன்படுத்துவார்கள். ஏன் பாடையில் போவதற்கும் அதுதான், சுடுகாட்டில் வைத்து எரிப்பதற்கும் அதுதான் எனக் கடைசிவரை நம் கையைப் பிடித்துக் கொண்டு வருவது பனைமரம்தான். சொந்தக் காலில் நிற்கும் ஒரே மரம் எவர் தயவையும் எதிர்பாராமல் இறைவன் கொடுக்கும் மழையை மட்டும் நம்பி வாழக்கூடியது. ஆனால் விழா என்று வந்து விட்டால் தான்தான் அனைத்தையும் வழங்குகிறேன் என்று தியாகி வேடம் போட்டு வாசலில் வந்து நிற்கும் மரம் வாழை மரம் அது விறகு எறிக்கப்பயன்படுமா? எனக் கேட்டுப் பாருங்கள் வித்தியாசம் தெரியும்.
ஒற்றைப் பனைமரங்கள் இடிவிழுந்து மொட்டை மரங்கள் ஆனால் கூட பறவைகள், கிளி, மைனா, பனங்காடை போன்ற பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனம் வளர்க்கும் நுங்குக் கூந்தல் சிறுவர்களுக்கு விளையாட்டு வண்டியாகும். ஓலை காற்றாடியாகும் இதனைத் தவிர்க்கும்போதுதான் இப்போதுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விளையாட்டுப் பொருட்களாகி விளைநிலங்களை விசமாய் மாற்றியது. செத்த பனைமரத்தின் துண்டுகளை வரிசையாக அடுக்கி மாடுகளின் உதவியோடு நிலங்களைச் சமப்படுத்தினார்கள்.
பனைகளில் ஆண்பனை, பெண்பனை என்று உண்டு பெண்பனை, நுங்கு, பதநீர் என்று கொடுப்பதுபோல ஆண்பனையில் கதிர்கள் உண்டு, ஆண் பனையின் கதிர் பகுதியும், பெண் பனையின் நுங்குப் பகுதியும், ஆடுமாடுகளுக்கு இரையாக அமையும். இன்னும் இதன் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். சில இடங்களில் ஒத்தப்பனை, கூட்டப் பனை, கலந்தபனை என ஊரில் எல்லைகள் குறிக்கப்படும்.
இந்தப் பனைமரத்தின் கருப்பட்டி பயன்படுத்தும் வரை நமக்கு சர்க்கரை வியாதி இல்லை. பனங்கிழங்கு சாப்பிடும்வரை மலச்சிக்கல் இல்லை. பதநீர் குடிக்கும் வரை மூலம் பௌத்திரம் இல்லை, நுங்கு சாப்பிடும்வரை வைசூரிகள் இல்லை. ஒலை வீட்டில் இருக்கும் வரை தலைவலியோ, வெப்பம் சம்பந்தமான வியாதிகளோ இல்லை. பனைமரம் அழிய, அழிய புதிய புதிய நோய்கள் பூமியில் நடமாட ஆரம்பித்தது. ஒரு நாட்டை நாசமாக்க வேண்டுமென்றால் அங்கு பலன் கொடுக்கும் பனைமரத்தை வீழ்த்தினாலே போதுமானதாகிவிடும். பனைமரம் நிலத்தடி நீரை உறிஞ்சுவதில்லை மண் அரிப்பைத் தடுத்து நிற்கும். இடியைத் தவிர எந்த இயற்கைச் சீற்றத்தைத்தையும் நேர் கொண்டு நிற்கும்.
இப்பேர் பட்ட இந்த பனைமரம் ஏன் அழிந்தது? எதற்கு அழிக்கப்பட்டது? இதனைத் தொழிலாகக் கொண்ட சமூகம் எப்படி இதனை விட்டுவிலகியது? உறவுகளைத் தழுவியதைவிட பனைகளைத் தழுவியதுதான் இவர்களில் பாதி வாழ்க்கை. தாய்ப்பால் குடித்ததைவிட பனம்பாலில்தான் இவர்கள் வாழ்வு வலிமையானது. ஆயினும் ஏன் பனைமரம் அழிக்கப்பட்டது? விடை காண முடியாத கேள்வியாக இன்று விமர்சனத்திற்கு வைக்கப்படுகிறது.
பனைமரத்தில் கள் இறக்கக் கூடாது என்று ஒரு சட்டம் வந்தது. யார் கொண்டு வந்தது இச்சட்டம்? கடவுள் சொன்னதா? இல்லையே!. கள்ளச்சாராய வியாபாரிகள் தன்னுடைய கலாச்சாரத்தை வளர்க்கக் கல்லாப்பெட்டியில் பணத்தைக் குவிக்க சுயநலத்திற்காக பனைமரத்தின் பால் கொடுக்கும் மார்பு அறுக்கப்பட்டது. இதனையே நம்பி இருந்த குழந்தைகள் ஊனமுற்றோர் ஆக்கப்பட்டார்கள் பனை ஏறுகிறவர்கள் பாதை மறந்தார்கள். பனைமரத்தின் தேவைகளைக் குறைக்க வைத்து ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களைப் போல தானே மடியும் தந்திரத்தைக் கைக்கொண்டார்கள். இதனால் தொழிலை மறந்து சோற்றுக்கு வழி இல்லை என்றவுடன் சும்மா நிற்கிற மரம் என்று வெட்டப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக பனைமரத்தை அழித்து நமக்கு நாமே குழிதோண்ட வைத்து விட்டார்கள்.
தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் கள் இறக்கத் தடை இல்லை. ஒருவேளை கள் என்பது போதை அதற்காகத் தடை செய்தால்? டாஸ்மார்க் ஏன் இங்கு தடம்பதித்தது? அப்படி என்றால் இது திட்டமிட்ட சதியா? தீர்க்க முடியாத வியாதியா? பனைமரத்துப் பொருட்கள் குறையக் குறைய ஆஸ்பத்திரியின் அகலங்கள் அதிகம் ஆகிக் கொண்டே இருக்கிறது.
ஒரு குடிசைத் தொழிலோ, அல்லது குலத்தொழிலோ அதை அழித்துத்தான் ஒரு நாட்டுக் கொடி பறக்க வேண்டுமென்றால் அவற்றின் கயிறு அந்த நாட்டிற்குத் தூக்குக் கயிறாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இங்கு அனைவரும் ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள் கள் இறக்க ஏன் தடை? பனைமரம் அழிய எது காரணம்? பனைமரத்தின் அழிவினால் ஏற்படும் விளைவுகள் என்ன? இப்படியே போனால் நம்முடைய எதிர்காலம் என்ன? இப்படியே கேள்விளைக் கேட்டுவிட்டு மேடையில் பேசிவிட்டு அப்படியே இருந்து விடுவதுதான் நமது அழிவிற்குக் காரணம்.
ஆகவே அனைவரும் பனைமரம் வளர்ப்போம். கிராமத்து வரப்புகளில் பனைமரக் கொட்டைகளை நடுவோம். ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள சுற்றுச் சூழல் குழுக்கள் இந்த ஆண்டு ஒவ்வொரு பள்ளியும் இதனை ஆண்டுத் திட்டமாக வைத்து குறைந்தது 1000 பனங்கன்றுகளை நடுவோம். பனைமரத்தில் பலன் காலம் கடந்து கிடைக்கும் என்று நினைத்தாலும் அதன் பலன் நமது சந்ததிக்குக் கிடைக்கும் பனைமரம் கடவுள் தந்த வரம் இதன் பயனை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். அவர்களையும், விதைகளை நடச் சொல்லுங்கள் கருப்பட்டிக்கு மாற்றாக அந்தக் கடவுள் கூட எதையும் கண்டுபிடிக்கவில்லை. இனியாவது உருப்படியாக ஏதாவது செய்யுங்கள். எதிர்காலத் தலைமுறையை இறைவன் காப்பாற்ற வேண்டுமென்றால் வாருங்கள் பனை நடுவோம் வளம் பெறுவோம்.
“பனை மரம் இல்லாத
பூமிப் பிரபஞ்சம்
பள்ளத்தாக்காக
மாறிவிடும்….”