14
Aug
2026

நல்லதோர் வீணை செய்து அது நலன்கெடப் புழுதியில் எறிவதுண்டோ! என்ற பாரதியின் பாடல் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியதுண்டு. விவிலியம் இவ்வாறு பேசும் “ஒரு தகப்பன் தன் பிள்ளைகள் ரொட்டியைக் கேட்டால் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பானா? அமுதம் கேட்டால் நஞ்சைக் கொடுப்பானா?” என நெஞ்சை உலுக்கி அது கேள்விகள் கேட்கும்!.
இதேபோல் ஒரு கேள்வி நம்மை நாமே கேட்டுப் பார்ப்போம். வீட்டுக்குள் குப்பைகளைப் பொறுக்கி வெளியில் எரிவார்கள்! தேவையில்லையென்றால் எரித்தும் விடுவார்கள். ஆனால் இன்றையத் தலைமுறை வெளியில் உள்ள குப்பைகளை எல்லாம் பொறுக்கி எடுத்து வந்து வீட்டை நிரப்புகிறார்கள் யோசித்துப்பாருங்கள்!

குப்பைகள் என்பது உரமாகப் பயன்படுவது. ஆனால் நாம் வீட்டிற்குள் அடைத்து வைத்திருக்கிற மின்சாதனப் பொருட்களை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். குப்பைகள் நாம் பயன்படுத்திய பொருட்கள் பயனற்றுப் போகும்போது உரமாகிறது. ஆனால் மின்சாதனப் பொருட்கள் பயனற்றுப் போகும்போது உரமாகாது அது விசமாகும்! மின்சாதனங்கள் எதற்காக? 1. இயற்கையைப் போல் ஒரு செயற்கையை உருவாக்க 2. மனிதர்களின் சோம்பேறித்தனத்திற்குப் பதில் உழைப்பதற்காக 3. நம்முடைய ஆடம்பரத்தை வெளி உலகிற்குக் காட்டி நாம் வசதியானவர்கள் எனக்காட்டிக் கொள்ள.
உலக நாடுகள் தாங்கள் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள பல்வேறு சந்தைப் பொருட்களை உருவாக்குகிறார்கள். அதை வைத்து அந்த நாடுகள் பொருள் ஈட்ட வேண்டுமென்றால் அதிகமான பொருட்கள் பிறநாடுகளில் விற்கப்பட வேண்டும். அதிகமான பொருட்கள் விற்க வேண்டுமென்றால் அங்கு அதிகமான மக்கள் வாங்க வேண்டும். அதற்கு ஆசைப்பட வேண்டும் அதற்கு இரண்டு நாடுகள் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ஒன்று சீனா, மற்றொன்று இந்தியா, இதில் சீனா சொந்தக் காலில் நிற்கிற நாடு தனக்குத் தேவையானதை தானே தயாரித்துக் கொள்வார்கள். அதற்காக அல்லும் பகலும் ஆணும் பெண்ணும் இடைவிடாது உழைப்பார்கள். தனது நாட்டின் இயற்கைக்கு பாதிப்பு என்றால் எதையும் செய்யமாட்டார்கள்.

இதனால் உலக வர்த்தக தனத்திற்கு சீன நாடு உதவாது என்று உலக நாடுகளே அறியும். வரம்பு மீறி ஆசைப்படுகிற, வருவாயை விட அதிகம் செலவு செய்கிற, ஆடம்பரத்திற்கு தம் வாழ்வை அடகு வைக்கிற, கடன் வாங்குவதிலும் கைதேர்ந்த ஒரு நாடு பூமியில் உண்டு என்றால் அது இந்தியா மட்டுமே! எனவேதான் உலக நாடுகள் தாங்கள் குப்பைகளைக்கூட இந்தியாவில் விற்பனை செய்கிறார்கள். காலம் கடந்து கெட்டுப்போன பொருள் கூட இங்கு எளிதில் விற்றுவிடலாம். ஏனென்றால் இந்தியாவில் ஏகப்பட்ட ஏமாளிகளும் கோமாளிகளும் உண்டு.
அரசியல்வாதிகளுக்குக் கொஞ்சம் அள்ளிக் கொடுத்துவிட்டால் அவர்கள் தாங்கள் சொந்த நாட்டிற்கே கொள்ளி வைக்கவும் தயங்க மாட்டார்கள். உலகில் தடைசெய்யப்பட்ட மருந்துப் பொருட்களோ! மளிகைப் பொருட்களோ இந்தியாவில் மட்டும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் எப்போதும் விற்கலாம் என்பது எழுதப்படாத சட்டம்.

இந்தியா இப்போதுபோல் இருபதாம் நூற்றாண்டில் இருந்தது இல்லை அப்போது கூட்டுக் குடும்பம் இருந்தது. உறவு இருந்ததால் ஆடம்பரம் தேவையில்லை. தியாகம் இருந்ததால் ஆசைகள் அறவே இல்லை. விட்டுக் கொடுப்பதால் போட்டி பொறாமைகள் இல்லை. உழைப்பு இருந்ததால் பொருட்கள் தேவையில்லை போதும் என்ற மனம் இருந்ததால் நுகர்வுகள் குடும்பத்தில் நுழைந்தது இல்லை.
இதனால் உலக நாடுகள் ஒன்று கூடியது இந்தியாவை அழிக்கத்துடிக்கவில்லை. கூட்டுக் குடும்பத்தை குலைக்க நினைத்தது. குடும்பங்களைப் பிரிக்கத் துடித்தது. இதற்காக இளைஞர்களை வேலைவாய்பப்பு என்ற விசத்தைக் கொடுத்து குடும்பத்தைப் பிரித்து அவர்களை நகரத்தை நோக்கி நகர்த்தியது. பெண்களுக்கும் வேலையென்று குடும்பத்திலிருந்து கொத்துக் கொத்தாகத் தூக்கியது. கூட்டுக் குடும்பங்கள் குடும்பங்கள் ஆனது. குடும்பங்கள் தனித்தனி நபர்கள் ஆனார்கள். எனவே தன் தேவையை தானே நிவர்த்தி செய்ய முடியாமல் இயந்திரங்களை நம்பி இருக்கும் நிலை இந்தியாவிற்கு உருவானது.

வீடுகள், அறைகள் ஆனது இதனால் ஆளுக்கொரு T.V, Fridge, Stove, Cooker என அத்தனையும் கொண்டு இறக்கப்பட்டது. வீடுகளில் சமையல் குறைந்தது. உணவகங்கள் உணவினை கொடுக்க ஆரம்பித்தது. இந்தியர்களோ, கவர்ச்சிக்கும், ஆடம்பரத்திற்கும் விலைபோனார்கள் இதனால் சந்தைப் பொருட்களை எளிதில் விற்க இவர்களை எவராலும் ஏமாற்ற முடிந்தது. விலைகொடுத்துப் பொருள் வாங்க தாங்களே விலைபோனார்கள். அடம்பிடிக்க, இலஞ்சம் வாங்க, களவு செய்ய, அபகரிக்க, பிறரை ஏமாற்ற பெற்றோர்களை மிரட்ட என அத்தனை அயோக்கியத்தனங்களையும் இந்த ஆடம்பர விரும்பிகளால் அரங்கேற்றப்பட்டு நாடு நாசமாகிப்போனது.
இந்திய நாடு இவ்வளவு இழிநிலைக்குப் போக யார் காரணம்? இந்தியர்களின் சுயரூபங்களே! இப்போது அது சுயநலன்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. எதிர்காலத்தைப் பற்றியும் பொறுப்பு இல்லை. நாம் வாழ்வதற்கு அதுவும் ஆடம்பரமாக வாழ்வதற்கு எதையும் இழக்கவும் தயாராகிவிட்டார்கள். எதையும் அழிக்கவும் துணிந்து விட்டார்கள்.

ஒவ்வொரு நாடும் விஞ்ஞான உலகில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தாலும் நமக்கு உள்ள இயற்கை செல்வங்களை எச்சுழலிலும் இழக்க விரும்பமாட்டார்கள். இறைவனை நம்புகிறார்களோ! இல்லையோ! இயற்கையை நம்புகிறார்கள். இயற்கை அவர்களைக் காப்பதால் இயற்கையை அவர்கள் காப்பாற்றுகிறார்கள்.
நம் நாட்டில் அப்படி அல்ல. நமது சுயநலத்தால் தற்போதைய மகிழ்ச்சிக்காக எதிர்காலத் தலைமுறைக்கு எதுவும் விட்டுவைக்காமல் இயற்கையை எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவு அழித்துக் கொண்டிருக்கிறோம். பால் மடி அறுக்கும் பாதகச் செயல்களை இந்தியர்களைத் தவிர எவராலும் இவ்வளவு துணிந்து செய்ய முடியாது. அதுவும் இந்தியாவிற்குள் கேரள மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லைக்குள் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஊடகங்களின் வரவுகளால் மனசு குப்பபையாகிப் போனது. பேராசையால் எண்ணங்கள் குப்பையாகிப் போனது. குடியால் சமுதாயம் குப்பையாகிப் போனது. சுயநலத்தால் அரசியல் குப்பையாகிப் போனது. ஆடம்பரத்தால் திரைப்படம் குப்பையாகிப் போனது. ஆசையால் ஆன்மீகம் குப்பையாகிப் போனது, மற்றவர்கள் மீது கொண்ட பொறாமையால் மதங்கள் குப்பையாகிப் போனது. வெளியில் தெறிந்த குப்பைகளையெல்லாம் பொறுக்கத் தெரிந்த நமக்கு உள்ளுக்குள் குப்பைகள் பெருகுவதை ஏன் உணர மறந்து விட்டோம்?
மனதிற்குள் குடி ஒருபுறம் குப்பையைக் கொண்டு வந்து கொட்டுகிறது. ஊடகங்கள் ஒட்டுமொத்தக் குப்பைகள் வீட்டுக்குள் கொண்டு வந்து கொட்டுகிறது. நம்மால் குப்பையை குப்பை என்று உணர முடியாமல் குப்பையாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். உடல்களின் சோம்பேறித்தனத்தினாலும் சுகபோக விரும்பிகளாலும் மின்சாதனங்களை வீடுகள் நிறைய குவித்து ஆடம்பரக் குப்பைகளை வீட்டிற்குள் அள்ளித்தெளித்து விட்டோம். உள்ளம் முழுவதும், ஆசை, வன்மம், வஞ்சகம், விரோதம், போட்டி, பொறாமை எனும் குப்பைகளைக் குவித்து வைத்திருக்கிறோம். இவற்றை எல்லாம் எப்படிச் சுத்தம் செய்யப் போகிறோம்? யார் வந்து சுத்தம் செய்வார்கள்? முயற்சி செய்யப் போகிறோமா? இல்லை முடியாது என்று அழியப்போகிறோமா?
பிள்ளைகள் மகிழ்ச்சிக்காகக் குப்பைகளைக் கொடுக்காதீர்கள். வளர்ச்சிக்காக நல்லது செய்யுங்கள். வேலை செய்ய வருத்தப்பட்டு ஆடம்பரத்திற்காக மின்சாதனக் குப்பைகளை சேர்க்காதீர்கள் இனியும சேர்த்தீர்கள் என்றால் பெற்ற பிள்ளைக்குச் சவக்குழி வெட்டும் பெரிய பிழையைச் செய்கிறீர்கள். இந்தக் குப்பைகள் எப்போதும் உரமாகாது அது நமக்குச் சாபமாகும்! சவக்குழியில் தள்ளும்.
விழித்தெழுவோம்!. வீழ்ச்சியைத் தடுப்போம். வருகின்ற தலைமுறையை வளர்த்தெடுக்க நமைக் கொடுப்போம்!
“சுக வாழ்வு வேண்டி
சவப் பெட்டி செய்வோமா?
காட்சிகள் ரசிப்பதற்காக
கண்களைப் பறி கொடுப்போமா?”