18
Sep
2026

பரந்த இந்தியாவில் சிறந்த குடிமகனாக.. சிந்திப்பவர்களாக… செயல்வீரர்களாக… முற்போக்குச் சிந்தனையாளராக… முயன்றவரைப் போராடுபவர்களாக… முடிந்தவரை களத்தில் நிற்பவராக… போராளியாக… புதிய போர் முரசு கொட்டும் படைவீரர்களாகத் தென்னிந்தியாவும் திராவிட நாடும் திகழக் காரணம் பெரியார் எனும் பகலவன் பூமியில் உதித்ததனால்…! பெரியாரைப் பற்றிப் பேசுகிறேன் என்றவுடன் அவர் பெருமையைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று எண்ணிவிட வேண்டாம். அவரைப் பேசுமளவிற்கு அறிவைச் சேகரித்தவன் அல்ல. ஆனால் அவரின் உள்ளுணர்வு எனக்கு சிலநேரம் உறக்கத்தைக் கெடுக்கும் கனவாக அல்ல! உறங்கவிடாமல் தடுக்கும் கனலாகத் தகிக்கிறது.
பெரியார் மனித நேயத்தைத் தடுக்கும் எந்த சக்தியையும் மனதில் ஏற்றுக்கொள்ளமாட்டார். பெரியார் மனிதர்களோடு போராடியதைவிட மதங்களோடு மல்லுக்கு நின்றதுதான் அதிகம். காரணம் மதம் சாதியைப் பேசியது. சாதி அடிமைத்தனத்தைக் கொண்டு வந்தது. அடிமைத்தனம் மனிதநேயத்தை அழித்தது. எனவேதான் பெரியார் கடவுள் பெயரால் நடக்கும் அயோக்கியத்தனங்களைப் பொறுக்க முடியாமல் கடவுளே இல்லையென்று கர்ஜிக்க ஆரம்பித்துவிட்டார்.
பெண்களை அடிமையாக்கும் பேரழிவுகளை செய்து கொண்டு பூமி முன்னேறாமல் புதைகுழியில் கிடந்தது. பெண்கள் இனத்திற்கே நாம் செய்த பெரிய துரோகத்தைத் துடைத்தெறிய புதிய புரட்சியை ஏற்படுத்தினார். முதலில் அவர் கொண்டு வந்தது குடும்பக் கட்டுப்பாடு. குடும்பக்கட்டுப்பாடு கொண்டு வந்ததன் நோக்கம் இப்போது உள்ள தலைமுறைக்குப் புரியும்.
இப்போது பெண்கள் அரசுப் பணி ஆற்ற வந்து விட்டார்கள் அப்பணியின் இடையே விடுப்பு எடுத்து ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்து விட்டு தொய்வில்லாமல் தங்கள் பணியைத் தொடர்கிறார்கள். தொடக்கக் காலத்தில் 8, 9 என்று 40, 45 வயது வரை கயிறு கட்டியவனின் காம இச்சையைத் தீர்ப்பதற்காக வயிறு வளர்த்து பிள்ளைகளைப் பெற்று எடுக்கும் இயந்திரமாக பெண்களின் வாழ்நாளில் பெரும்பகுதி கழிந்தது. இதனை ஒழிக்கவே பெரியார் குடும்பக் கட்டுபாடு என்னும் கொள்கை வரைவினைக் கொண்டு வந்தார். இது மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிற்கு அல்ல? மகளீரை மட்டம் தட்டுவதைத் தடுப்பதற்காக…!
பெரியார் வாழ்ந்த காலத்தில் பெயருக்குப்பின்னால் சாதிய அடையாளத்தோடுதான் பல பெரிய மனிதர்கள் இருந்தனர். பெரியாரின் தளராத போராட்டத்தால் ஒவ்வொருவரின் பெயருக்குப் பிறகு இருந்த சாதிப் பெயர் பெயர்த்து எடுக்கப்பட்டது. இந்தியாவில் இந்தப் புனித முயற்சி தமிழ்நாட்டில் மட்டுமே தடம் பதித்து இருக்கிறது. மற்ற மாநிலங்களில் சாதி எனும் மானம் கெட்ட செயலை மார்போடு அணைத்துக் கொண்டுதான் மக்கள் இன்றும் திரிகிறார்கள்.
சாதியையும், மதத்தையும் விட்டு வெளியே வாருங்கள். இங்கு சண்டை, சச்சரவுகள், குழப்பங்கள் குறையும். சாதியைப் புகுத்திய சமயத்தை பெரியார் கடுமையாகச் சாடினார். இருப்பினும் இன்றையக் கால மக்கள் மதங்களைத் தழுவி நின்றாலும் பெரியாருக்கு இழுக்கு என்றால் எதையும் எடுத்து எரிய அனைவரும் துணிந்து நிற்கிறார்கள். சிவனை வணங்கும் சரவணனும், யேசுவை வணங்கும் ஆரோக்கிய சாமியும், அல்லாவைத் தொழுகின்ற காதர் பாஷாவும் பெரியாருக்கு இழுக்கு என்றால் கரம் சேர்த்து சிரம் அறுக்கவும் தயங்கமாட்டார்கள். காரணம் அடக்கு முறையின் ஆதிக்க வெறியை எங்களுக்காகத் தகர்த்தெறிந்தவர் பெரியார். அவரால் மட்டுமே நாங்கள் இந்தச் சுதந்திரக் காற்றைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் என்பதனை அனைவரும் அறிவார்கள்.
பெரியாரின் தலைமுடி மட்டுமல்ல அவரது தாடி முடியில் உதிர்ந்த முடிகள் விழுந்த இடம் கூட புரட்சியாய்ப் பூத்துக் குலுங்கியது. அத்தனை புரட்சிகளும் அவரது பாசறையிலேயே முளைவிட்டுக் கிளைவிட்டது. அவருடைய மாநாட்டில் பெண்களையும் விதவைகளையும் கட்டாயம் அழைத்து வரப் பணித்தார். மாநாட்டு உணவு சமைக்க ஆதிதிராவிடர்களை நியமித்தார். அவரது மாநாட்டில்தான் தலைவர்கள் தாங்கள் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதியைத் துறந்தார்கள். சாதாரண மனிதர்களாய் நின்றார்கள்.
காங்கிரசை வெறுத்தார். ஆனால் காமராசரை ஆதரித்தார். காரணம் குருகுலக் கல்வியை காமராசர் அறவே ஒழித்தார். உயர் சாதிக்கே ஒதுக்கப்பட்ட நீதித்துறையை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று போராடியதால் கலைஞர் முதலமைச்சராய் இருந்த காலத்தில் ஆதிதிராவிட இனத்தைச் சார்ந்த வரதராஜர் என்பவரை நீதிபதியாக நியமித்தார்கள். கேரளாவில் வைக்கம் என்ற இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு தெருவிற்குள் நடக்க இயலாதபோது அதற்காகப் போராடியவர்கள், தங்கள் தலைவர் ஜார்ஜ் சோசப் என்பவரைக் கைது செய்தவுடன் போராட்டம் நிலையிழந்து போனது. இருப்பினும் தமிழ்நாட்டில் இருந்த ஈ.வே.ராவிற்கு ரகசியத் தகவல் கொடுத்து அவர் மூலமாக அப்போராட்டம் புத்தெழுச்சி பெற்றது. பெரியாரைக் கைது செய்தாலும் அவர் வகுத்துக் கொடுத்தப் பாதையில் போராட்டம் தொடர்ந்து வெற்றியும் பெற்றார்கள். இதனால் இன்றளவும் அவர் வைக்கம் வீரர் என்று அழைக்கப்படுகிறார்.
காந்தி கொண்டு வந்த கதர் ஆடைப் புரட்சியை கையில் எடுத்தார். ஊர் ஊராகச் சென்று தானே விற்பனை செய்தார். எப்போதுமே பட்டுப்புடவையையே கட்டிக் கொண்டு இருக்கும் தன் தாயைக் கூட கதர் புடவை அணிய வைத்தார். கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டங்கள் வரும்போது வட மாநிலங்களில் ஈச்ச மரத்தை வெட்டி வீழ்த்தினார்கள் என அறிந்து தமிழ்நாட்டில் கள்ளு இறக்கப் பயன்படும் தென்னை, பனை என தனது நிலங்களில் இருந்த 500 மரங்களை வெட்டி வீழ்த்தினார். போராடுவதை விட அதன் மூலத்தை அழிக்க முனைப்புக் காட்டினார். இன்றைய நாளில் எண்ணிப்பாருங்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வை விட மது ஆலைகளை இழுத்துப் பூட்டிவிட்டால் எங்கிருந்து வரும் அந்தப் பானங்கள் அதனை இழுத்து மூடாதவரை போதை ஒழிப்புப் பிரச்சாரங்கள் அனைத்தும் அரசியல் நாடகம் கோமாளிகளின் கூத்து ஆகும்!.
மதுக்கடை மூடல் போராட்டத்திற்குப் பெண்களைத் தலைமையேற்க வைத்துப் பெரும்புரட்சி செய்தார். இராஜாஜி முதலமைச்சர் ஆனவுடன் இந்தித் திணிப்பைக் கொண்டு வந்து அதற்காக பெரும் கிளர்ச்சியை மாணவர்களிடையே ஏற்படுத்தி, போராட்டத்தில் மரணமடைந்த, நடராஜன், தாளமுத்து ஆகியோருக்கு நினைவிடங்கள் நிறுவி வெற்றியும் கண்டார். நம் நினைவிலும் இன்றுவரை அவர்களை நிறுத்தினார். கோயில்களில் அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என்பதனை ஆணித்தரமாகப் பதிவு செய்து வெற்றியும் கண்டார். சேரன்மகாதேவி குருகுலத்தில் பிராமணர் அல்லாதவர்களுக்குப் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற செய்தியைக் கேள்விபட்டு வெகுண்டு எழுந்து அதனை ஒரு வரைமுறைக்குள் கொண்டுவந்தார். பெரியாரின் பெருமையை எதைச் சொல்வது? எதனை விடுவது? நகைக்கடைக்குள் நுழைந்தால் அத்தனையும் தங்கமே! தங்கத்தில் போலி உண்டு. இந்தத் தன்மானச் சிங்கத்தின் கர்ஜனைக்கும், வேட்டைக்கும் வேலியே இல்லை.
இது பெரியார் மண் அதில் வாழ்வது எவ்வளவு பெருமையாக இருக்கிறது! ஆனால் பெரியாரையே சில நேரங்களில் மண் என்றவர்கள் இன்று எல்லோராலும் மிதிபடுகிறார்கள். தமிழ்நாட்டைத் தமிழன்தான் ஆள வேண்டும் என்ற தார்மீகத்தைச் சொன்னார். அதே நேரத்தில் கூத்தாடிகளின் கையில் நாட்டைக் கொடுத்துவிடாதீர்கள். அவனுக்கு நடிக்கத் தெரியும். நாட்டு நடப்புத் தெரியாது. அவன் வசனம் இனிக்கும். வாழ்க்கை அசிங்கமாக இருக்கும் என்றார். காலத்தின் தேவைக்கான தலைவர்களை உருவாக்கினார். உடனிருந்தார். கண்மூடித்தனமாய், காட்டுமிராண்டித்தனமாய் கட்சித்தலைவர்களை அவர் ஏற்றுக்கொண்டதில்லை. கொள்கைக்காக காமராஜர், அண்ணா, கலைஞரை ஆதரித்தார், வழிகாட்டினார்.
பெரியார் காலத்தில் இருந்த, மூடநம்பிக்கைகள் அடக்குமுறை, ஆன்மீக, அராஜக மூகமூடிகளை அகற்றி, சாதி எனும் நெருப்பை அணைத்து, ஏற்றத்தாழ்வினைக் களைந்து, அவர் ஏற்றி வைத்த மனித நேயம் எனும் மகத்தான தீபத்தை அணையவிடாமல் காப்போம். அதனை மதம் என்ற போர்வையால் அணைக்க நினைப்பவனை அதனாலேயே எரியூட்டுவோம். எட்டுத்திக்கும் அவர் ஏற்றி வைத்த தீபத்தை ஏந்திக் கொண்டே செல்வோம். எதிர்ப்புகளைத் தாண்டியும் வெல்வோம். இது பெரியார் மண். இதனை புரியாதவன் மண்.
“ஒரு தடியும் தாடியும்
தமிழகத்தின் தலையெழுத்தை
சரியாய் எழுதி
சரித்திரம் படைத்திருக்கிறது!”