22
Aug
2026

புகையிலை இல்லாத பாரதம், போதை இல்லாத் தமிழ்நாடு என்ற இலட்சியத்தை மனதில் நினைத்து புதிய போர் முரசோடு புறப்படும்போது சமுதாயம் எங்களைப் பார்க்கின்ற பார்வை சின்னப் பிள்ளைங்க எல்லாம் வீட்டுக்குள்ளே போய் விளையாடு என அலட்சியமாய்ப் பார்த்து அசிங்கப்படுத்துகிறார்கள்.
சமுதாயம் பார்க்கும் பார்வையே வேறு. சந்திக்கின்ற மனிதர்கள் எல்லாம் சாரமற்றுப் போன இந்த விழிப்புணர்வால் என்ன சாதித்து விடப்போகிறீர்கள்? ஊருக்கு வெளியே குப்பை கூடங்கள் திறந்து கிடக்கிறது. காற்றடிக்கும் போதெல்லாம் நமது ஊர் குப்பையால் அசிங்கப்படுகிறது. உடனே ஊருக்குள் குப்பைப்பற்றி விழிப்புணர்வும், தடுப்பதற்குப் போராட்டமும் நடத்தி என்ன பயன்? குப்பைக் கூடத்தை அல்லவா அப்புறப்படுத்த வேண்டும்? அதை விட்டு விட்டு குப்பையை விற்றால்தான் அரசுக்கு இலாபம் என்றால் அதை வாங்குவதையோ பயன்படுத்துவதையோ எப்படித் தடுத்து நிறுத்த முடியும்?

தற்போதைய சூழ்நிலையில் ஊரே பற்றி எரிந்து கொண்டு இருக்கும்போது உடனே அதனைத் தடுத்து நிறுத்த முயற்சி எடுக்காமல் தீயை அணைக்க தீவிரமாகப் பாடம் நடத்திப் பயன் என்ன? என்ற கேள்விகளை முன் வைக்கிறார்கள். ஆகவே இப்போதெல்லாம் போதையால் ஏற்படுகின்ற இழப்புகளை விட அதனை ஒழிப்பதற்காக நாம் நடத்துகிற நாடகம்தான் மக்களுக்கு எரிச்சலைத் தருகிறது.
சமீப காலமாக மாணவர்களிடையே போதைப் பொருள், போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அதற்கென்று அரசால் நிர்ணயிக்கப்பட்ட குழுக்கள் வந்து மாணவர்களிடையே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஆசிரியர்களும், காவல்துறையும் இவ்வாறு பேசிக்கொண்டு இருந்தார்கள். அதாவது ஒரு சமூகம் செழிப்புற்று வாழ வேண்டுமென்றால்… அறிவில் சிறந்தவர்கள் தோன்றி பிறரை சிறப்பாக வழிகாட்டவும், பாதுகாக்கவும், தவறுகளைத் திருத்தவும், புதுவாழ்வும் அமைத்துத்தர வேண்டும்.

இக்காலத்தில் ஒழுக்கம் என்பது கல்விக் கூடங்களில் கற்றுக்கொடுப்பது. அதனைக் கடைபிடிக்க, உற்சாகப்படுத்த தவறுகிறவர்களுக்குத் தண்டனை கொடுப்பது வழக்கம் அதனை இப்போது நிறுத்திவிட்டீர்கள். தவறைக் கண்டவுடன் கண்டிக்கும் ஆசிரியரையும், காவல்துறையையும் கண்டிக்கவும் விடாமல், தண்டிக்கவும் விடாமல் கைகளை கட்டிப் போட்டு விட்டீர்கள். துப்பாக்கியே ஆனாலும் தூக்கிச் சுட்டால்தானே பாதுகாப்பு! துருப்பிடித்த துப்பாக்கியால் தூய பூமியைப் படைக்க முடியுமா? என்று பேசிக் கொண்டார்கள்.
போதையை ஒழிப்போம் என்று போராட்டம் நடத்துபவர்களுக்குள் நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறு இவ்வாறு பேசிக் கொண்டார்கள். ஊற்றுத் தண்ணீரை உடனே தடுத்து நிறுத்தாமல் அது காட்டு வெள்ளம்போல் கரைபுரண்டு ஓடும்போது யாராவது கையால் தடுத்துவிட முடியுமா? போதையை ஒழிப்போம் என்று வாய் கிழியக்கத்துகிறவர்கள் போதையை ஒழிக்க வேண்டுமென்றால், போதை தயாரிக்கும் ஆலையை ஒழிக்க வேண்டும் என்பது புரியவில்லையா? குடியைச் சாடுகிறவர்கள் ஆலையை மூடுங்கள் மனம் திறந்து கூறினால் இதுதான் உண்மை! மற்றதெல்லாம் நாடகமே!

ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்றால் கல்விக்கூடம் சரியாகக் கற்றுக் கொடுக்க வேண்டும், கல்விக்கூடத்தில் சரியாக கற்றுக் கொண்டால் சிறைக் கூடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. கற்றுக் கொடுக்கும் ஆசிரியர், தவறு செய்யும்போது கண்டிக்கிற காவல்துறை மட்டும் நினைத்தால் போதாது நீதித்துறையும் நமது நெஞ்சைத் தொட்டு நீதி வழங்க வேண்டும். செத்துப்போன நீதியால் ஒரு பித்துப் பிடித்த சமுதாயத்தைதான் படைக்க முடியும். ஊரையெல்லாம் அழித்துக் கொண்டிருக்கிற காட்டுமாடுகளைத் தேடிப்பிடித்து, துன்பப்பட்டு, துயரப்பட்டு இழுந்து வந்து வீட்டுத்தறியில் கட்டி வைக்கும்போது தகுந்த ஆதாரம் இல்லை என்று தறியை அவிழ்த்து விட்டால் நம் தலையெழுத்தை யாரால் மாற்றி அமைக்க முடியும். சட்டம், ஒழுங்கு சரிசெய்யப்பட வேண்டுமென்றால் நீதித்துறையின் நீதி நீதியாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.

பொதுவெளியில் போதை ஒழிப்புப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு குடிகாரன் போதை ஒழிப்பா யாரு? எதற்கு ஒழிக்கப்போகிறாய்? இந்தப் போதை இன்னும் இரண்டு மணி நேரத்தில் தெளிந்துவிடும். நான் உழைத்துச் சம்பாதித்த சொந்தக் காசில் குடித்தேன். கொஞ்சம் போதை இது சீக்கிரம் தெளியும். இங்கே பலர் தள்ளாத போதையால் தலைக்கு ஏறி தடுமாறிக் கொண்டிருக்கிறார்களே! பிறரையும் தடுமாற வைத்துக் கொண்டிருக்கிறார்களே? அதனைத் தடுத்து நிறுத்தப் போவது யார்? தறிகெட்டுத்திரியும் அந்தத் தற்குறிகளின் போதையை யாரிடம் சொல்லித் தடுத்து நிறுத்துவது?
மது போதையைவிட கொடியது மதப்போதை! தன் மதம்தான் பெரிதென நினைத்து மற்ற மதங்களுக்கு மரண தண்டனை கொடுக்கக் கோவில்களை இடிப்பதும், வழிபாடுகளைத் தடுப்பதும், அடுத்த மதத்துக்காரர்களை அவதூறாப் பேசுவதும், இல்லாததைக் கூறி இழிவாக நடத்துவதும் எழுதாத சட்டங்களாகக் கொண்டு வாழ்கின்ற மதவெறியர்களின் மதப்போதையை விடக் கொடியதா? இந்தப் போதை!

பணப்போதை இதற்காக மனிதன் எத்தனை வேசங்கள் எத்தனை நடிப்புகள், நாடகங்கள், குறுக்கு வழியில் பணம் தேடுதல், மனித மாண்புகளை விடுத்து, பணப்பித்துப் பிடித்துப் பைத்தியமாய் அலைகின்ற அந்தப் போதையை விடவும் இந்தப் போதை ஆபத்தானதா!
பதவிக்காய் பிறர்கால் பிடிப்பதும்… கூட இருப்பவனுக்கே குழிபறிப்பதும், இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி பிறரை இழிவு படுத்துவதும் பொய்குற்றம் சொல்லி அவர்கள் பேரைக் கெடுப்பதும் குறுக்கு வழியில் பிறரை வீழ்த்தி பதவியைப் பிடிக்கத் துடிக்கும் போதையை விடவா இந்தப் போதை கொடியது?

சாதி எனும் மாயப்பேய் ஒன்று போதையில் எல்லை மீறி ஆணவப் படுகொலை என்ற அக்கிரமத்தை அரங்கேற்றுகிறது. தாழ்ந்த சாதி என்று மட்டம் தட்டி குடிக்கிற தண்ணீரில் மனிதக் கழிவுகளைக் கலக்கின்ற இழிநிலையில் இருக்கின்ற கேவலமான போதையை விடவா இப்போதை அழிவைத் தருகிறது? என்று பேசிக்கொண்டார்கள்.
போதையை ஒழிப்போம் என்று எல்லோரும் இங்கு வேண்டி விரும்பி இந்த விடுதலை வேள்வியில் இறங்கி இருக்கிறோம். ஆனால் வருத்தம் என்னவென்றால் எங்கே போதை இருக்கிறதோ? எங்கே அதனை ஒழிக்க வேண்டுமோ? அதனை விட்டுவிட்டு அரசாங்க உத்தரவை நிறைவேற்ற ஒரு அதிரடி நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

போதையில் இருப்பவரிடமும் கேட்டுப் பார்த்தால்… அவர் உண்மையைச் சொன்னாரா? இல்லை உளரினாரா? என்று தெரியவில்லை ஆனால் அவர் சொன்ன வார்த்தை… போதை எல்லாம் ஒழிக்க முடியாது ஆனால் போதையில் இருப்பவனைத்தான் ஒழிக்க வேண்டும் என்றவுடன் எனக்கு சிரிப்புத்தான் வந்தது! சிந்திக்கவும் வைத்தது.
ஆண்களின் ஆண்மையை முறிப்பதற்காக… மனிதனை மிருகமாய் மாற்றுவதற்காக… அக்கிரமம், அட்டூழியம் சுயநினைவு இல்லாமல் செய்து, கிறுக்கன்களாய் தெருவில் அலைய… ஆடை அகற்றி பூமியில் நிர்வாணமாய் புரண்டு கிடந்து அவமானத்தோடு அலைவதற்காக… இந்தப் பூமியைக் கெடுக்க வந்த சாமியின் சாபம் இந்தப் போதைப்பழக்கம். இதனை ஒழிப்பதே இனிமேல் நமக்கு வழக்கம் போதையை ஒழிப்போம் புதிய பாதையை அமைப்போம்.
“குடி என்பது
மனிதனையே
மிருகமாக்கும்
மடத்தனமான சக்தி”