04

Sep

2025

கண்மணி அன்போடு…

மனைவியை இழந்த அத்தனை ஆண்மகனுக்கும் தெரியும் மனைவி இல்லாத வாழ்க்கைதான் நரகம் என்பது. கடவுளின் அருளைப் பெற்றவர்கள் மனைவியின் கழுத்தில் மாங்கல்யம் இருக்கும்போதே மறைந்து விடுவார்கள். கடவுளின் சாபத்தைப் பெற்றவர்கள் மனைவியை பாதியில் இழந்து விடுவார்கள். மனைவிதான் நம்மை தாய்க்குச் சுமையாக இல்லாமல் நம்மை வாங்கிக் கொண்டு நமக்காகச் சுமைகளைச் சுமந்து கொண்டு வாரிசை ஈன்று தந்து நம் வாழ்வின் அடையாளத்தைத் தருபவர் நம் துணைவிதான்.

ஆனால் திருமணம் கடவுள் இணைத்தது என்று ஒரு கதை சொல்வார்கள். ஆனால் அது நாமே தேடிக் கொண்டது அல்லது தேடித்தந்தது. இதுதான் உண்மை. ஆயினும் இன்று வரை திருமணமானவர்கள் வாழ்க்கையைப் பாருங்கள். நகமும் சதையும் போல என்பார்கள். நகைப்பாய் இருக்கும். நடைமுறை வாழ்க்கை அப்படி இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் இணைபிரியாத தம்பதிகள் போல் வாழ்வது கூட ஒருவித ஏமாற்று வாழ்வுதான்! ஆனால் மனைவியின் மகத்துவம் அவள் மரணிக்கும் வரை அவள் இருக்கும்வரை தெரியாத என்னைப் போல் ஏமாளி ஆண்களைப் பற்றி எழுதுகிறேன்.

கணவன் மனைவி வாழ்வு என்பது சிலருக்கு நாய் வாயில் கிடைத்த தேங்காய் போல! தானும் உண்ணாமல் யாருக்கும் பயனும் இல்லாமல் அதை தூக்கிக் கொண்டே திரிவது போல் இருக்கும். அழகான மனைவி அமைந்துவிட்டால், தாழ்வு மனப்பான்மையுள்ள ஆண்கள் இந்த நாயைப் போலத்தான் யாரும் எடுத்துவிடக் கூடாது என்று தேங்காயை கடித்துக் கொண்டே அலைவார்கள். சிலரது வாழ்வு குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல சந்தேகம் உள்ளவர்கள் போதைக்கு அடிமையானவர்களின் மனைவியிடம் கேட்டுப்பாருங்கள் அவர்கள் எத்தகைய குரங்குகளிடம் சிக்கியிருக்கிறார்கள் எனச் சொல்வார்கள். சிலரது வாழ்வு குழந்தைகளின் கையில் உள்ள விளையாட்டுப் பொருளைப் போல அவர்கள் தேவைக்கு நம்மைத் தூக்கிக் கொள்வார்கள். தேவையில்லை என்றால் வீட்டில் மூலையில் தூக்கி எறிந்து விடுவார்கள். யார் மீது கோபம் என்றாலும் விளையாட்டுப் பொருட்களைத்தான் தூக்கி எறிந்து உடைப்பார்கள். சிலருக்கு விபச்சார விடுதியில் அடைபட்டிருக்கிற பெண் போல்! பார்ப்பதற்கு வசதியாகவும், அழகாகவும் தெரிவார்கள் ஆனால் கணவர்கள் தனக்கு எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்துவார்கள், கொடுமைப்படுத்துவார்கள். ஆனால் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள் இப்படிப் பலரகம்.

என் மனைவியை நான் எப்படி வைத்திருந்தேனோ? அவள் இருக்கும் வரை நான் இந்தக் கேள்வியை கேட்டதே இல்லை. இப்போது அவள் இல்லாதபோது என்னை எதுவும் கேட்பதற்கே ஆட்களும் இல்லை. இப்போது நான் அனாதையாகிவிட்டேன். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்றார்கள் நிழலும் போய்விட்டது என் நினைவும் போய்விட்டது வெயிலானால் என்ன? மழையானால் என்ன மனநலம் பாதிக்கப்பட்டவனுக்கு?

மணவாழ்க்கை என்பது ஒரு பெண்ணின் மற்றொரு உலகம் ஆகவே எத்தனையோ கனவுகளுடன்தான் நீயும் என்னுடன் பயணித்திருப்பாய் ஆனால் எல்லாமே உனக்கு பகல் கனவாய்த் தான் போயிருக்கும்! உன்னிடம் ஒரு வீட்டைக் கொடுத்தேன் அதனை நீ ஒரு உலகமாக மாற்றித்தந்தாய் உனக்கென்று ஒரு உலகம் இருக்குமல்லவா? அதனை நான்தானே அமைத்துத் தர வேண்டும். நான் இப்போது எண்ணிப் பார்;க்கிறேன். நீ கூண்டில் அடைபட்ட தங்கக் கிளி. நீ இருந்தது அறை அல்ல சிறை ஜெயில் வார்டனைப் போல் ஒவ்வொரு செயலுக்கும் ஆயிரம் கேள்விகளை அம்புபோல் உன்னை துளைத்திருக்கிறேன்.

திருமண வாழ்வில் இருவரும் பயணத்தைத் தொடங்கினோம். நீ வந்த பிறகு எனக்குப் புதிய நம்பிக்கை வந்தது. முயற்சிகள் செய்தேன் வெற்றி தோல்வியைகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். வெற்றி வரும்போது நீ முத்தமிட்டாய்! தோல்விக்கு மார்போடு அணைத்துக் கொண்டாய். உறவுச்சங்கிலிகள் அறுந்துவிடாமல் ஒவ்வொன்றுக்கும் இணைப்புப் பாலமானாய். ஆனால் உன்னை நான் சமையல் அறையிலேயே சமாதியாக்கிவிட்டேன். நான் என்னுடைய பெற்றோருடன் இருந்தேன் உன்னுடைய பெற்றோரைத் தேவைப்படும்போது பார்த்து வந்தோம். உன்னுடைய உறவாய், உலகமாய் என்னைப் பார்த்துக் கொண்டாய். நான் உன்னை மட்டும் வேலைக்காரியாய் எப்போதும் வைத்துக் கொண்டேன். சிலநேரம் அடிமையாய், சிலநேரம் ஆதரவாய், நோய் வந்தால் மருத்துவராய், பசிவந்தால் தாயாய், இரவு வந்தால் உறவாய், குழம்பும் போது ஆலோசகராய், குதுகலிக்கும் போது மகிழ்ச்சியாய் தவறும்போதும், பதறும் போதும் அரவணைப்பாய், எத்தனை அவதாரம் எனக்காக நீ எடுத்திருக்கிறாய்? உனது நலனுக்காய் இறைவன் என்னிடமிருந்து உன்னை எடுத்துவிட்டானோ? நான் இப்போது சுருட்டாத பாயாய் சுயநினைவு இழந்து கிடக்கிறேன்!

பெற்றவளைத் தெய்வமாகவும், பெண் பிள்ளையைச் செல்லமாகவும் சொல்லிக் கொடுத்த இச்சமூகம் மனைவியை மட்டும் ஏன் அடிமையாய் ஆக்கியது? எனது வீட்டில் எனக்கு அம்மா என்பது தெய்வம். என் அப்பாவுக்கு ஒரு அடிமையாய் இருந்தாள். இந்தப் புத்திதான் என்னையும் இப்படிக் கெடுத்துவிட்டது! ஆனாலும் உன்னிடம் நான் நடந்து கொண்ட முறை எனக்கு ஆறாவது அறிவின் அடையாளமே இல்லை. என்னை நீ பொறுத்துக் கொண்டு வாழ்ந்தது நீ ஏழாவது அறிவையும் எட்டிவிட்டாய் என்பதன் அடையாளமாய் இருந்தது.

உனக்குத் தெரியுமா? நான் வேலைக்குப் போகிறவன் நீ வீட்டில் சும்மா இருக்கிறவள் அதனால் நான் 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். நீ அதிகாலை 4 மணிக்கு எழுந்து உணவு தயாரிக்க வேண்டும். நான் எழுந்தவுடன் காப்பி கொடுக்க வேண்டும். மதிய உணவு கொடுத்து அனுப்ப வேண்டும் வரும்போது வரவேற்று, கைகால் கழுவ தண்ணீர் வேண்டும், களைப்பை ஆற்ற தேநீர் வேண்டும் அதன்பிறகு இரவு உணவு நீ தயாரிக்க வேண்டும். நான் படுக்கைக்குப் போன பிறகும் நீ பாத்திரம் கழுவ வேண்டும் காரணம் நான் வேலைக்குப் போகிறவன் நீ வீட்டில் சும்மா இருக்கிறவள்!

எனக்கு நீ தேவையென்றால் பாத்திரத்தை காலையில் கழுவிக் கொள்ளலாம் தேவையில்லையென்றால் பாத்திரத்தைக் கூட கழுவாமல் படுக்கை ஒரு கேடு! பாவி மகளே பாத்திரத்தை கழுவிக் கழுவி சுத்தப்படுத்தினாயே தவிர என் மனசில் உள்ள அழுக்கை மட்டும் நீ மறையும் வரை எனக்குள் அது மறையவே இல்லை! நீ என் அழுக்குகளை கழுவவும் இல்லை.

நான் வெட்டி முறித்து வேலைக்குப்போய் வந்த களைப்பில்(வேலை செய்தால் தானே) தூக்கம் வராமல் புரண்டு கிடக்கும்போது கணவன் தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்று பாத்திரம் கழுவும் போது திடிரென்று கைதவறும் பாத்திரத்தால் ஏற்படும் சத்தத்திற்குக் கூட காட்டுத்தனமாகக் கத்தியிருக்கிறேன். அதற்கும் நீ கண்ணீர் வடித்தே கரைந்து போனாய்! இந்தக் காட்சியை அந்த கடவுள் பார்த்தால் கூட எனக்குக் கருமாதிதான் செய்திருப்பான். தெய்வமே மனைவி கொடு என்று கோவிலில் கேட்டிருப்பேன். ஆனால் எனக்குத் தெய்வமே மனைவியாக வந்தது இப்போது நீ இல்லாமல் திண்டாடும் போதுதான் தெரிகிறது. உனக்கு செய்த பாவம் இப்போது சாபமாய் எனக்கு சாவு மணி அடிக்கிறது.

நம் பிள்ளைகள் எல்லாம் வெளியிடங்களுக்குச் சென்ற பிறகு அந்தப் பாத்திரச் சத்தம் கேட்காத இரவுகள் எனக்குப் பயமாக இருக்கும். உனக்கு ஏதும் ஆகிவிட்டதோ? மயங்கி விழுந்து விட்டாயோ? என மனம் பதபதைக்கும் எந்தப் பாத்திரச் சத்தம் தூக்கத்தைக் கெடுத்தது என்று நினைத்தேனோ அதே பாத்திரச் சத்தம் கேட்காமல் என் தூக்கம் தொலைந்தது துக்கம் எழுந்தது. எழுந்து பார்க்க வருவேன் ஏன் என்று கேட்பாய்? தண்ணீர் தாகம் என்றவுடன் கேட்டால் கொடுக்கப் போகிறேன் என்பாய். அந்தப் பாத்திரச் சத்தம் கேட்காததால் எனக்குள் எழுந்த பயத்தை எப்படிச் சொல்வது?

இப்போதெல்லாம் அந்த பாத்திரச் சத்தத்திற்காய் நான் பைத்தியமாய் அலைந்து கொண்டிருக்கிறேன். நடு இரவில் திடிரென்று கனவில் மட்டுமே கேட்கும் அந்தச் சத்தம் என் சுய நினைவை இழக்கச் செய்கிறது. எப்போதெல்லாம் எங்காவது பாத்திர சத்தம் கேட்கும் போதெல்லாம் உன் நினைவுகள் வந்து உருட்டி எடுக்கிறது. ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது. நீ என் கண்ணாய் இருந்து இருக்கிறாய். அதனால் நான் இப்போது குருடாய் மாறிவிட்டேன். நீ நினைவில் இருந்திருக்கிறாய். இப்போது நினைவிழந்து பைத்தியமாய் இருக்கிறேன். உயிராய் இருந்திருக்கிறாய். அதனால் இப்போது பிணமாய் கிடக்கிறேன் புதைக்க ஆளில்லாமல் புலம்பிக் கொண்டு திரிகிறேன்.

ஒவ்வொரு ஆணின் கனவு பெண்கள். என்னைப் போன்ற முட்டாள்கள் அதனை இரவில் மட்டுமே பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதுதான் நமது இலட்சியம் என்று லட்சத்தில் ஒருவனுக்குத்தான் தாம்பத்யம் புரிகிறது. நீ இருக்கும்வரை புரியவில்லை. அது புரியும்போது நீ இல்லை. நான் தவறுகள் செய்யும் போதெல்லாம் என்னைப் பெற்றவள் கூட தண்டித்திருக்கிறாள். நீ என்னைத் திருத்தக் கூட முற்படவில்லை. நீ திட்டி இருக்கலாமே! இப்போது அதற்கெல்லாம் சேர்த்து வருத்தமும் மனசஞ்சலமும் என்ற வட்டியை இறைவனுக்கு தவணை முறையில் கட்டிக் கொண்டிருக்கிறேன். வருடம் முழுவதும் மனதளவில் வாடிக்கிடக்கிறேன்.

என் செல்லமே என்னைத் தவிக்கவிட்டு எங்கும் தனியாகப் போக மாட்டாயே? எங்கே சுற்றிக் கொண்டு இருக்கிறாய்? இல்லை இல்லை என்னைச் சுற்றித்தான் நின்று கொண்டு இருக்கிறாய்;! இந்தப் பாவியின் கண்ணுக்குத்தான் தெரியவில்லை. இன்னுமொரு பிறவி இருந்தால் என்னைப் போன்று ஆணாதிக்கம் உள்ளவனை மணந்து விடாதே! எங்கேயாவது மகாராணியாய் வாழ இறைவனை வேண்டுகிறேன். விண்ணுலகம் செல்லும்போது அங்கு வேறு பெண்களிடம் சொல் இறைவனிடம் ஒரு வரம் கேளுங்கள். பாவம் ஆண்கள் அவனைப் பரிதவிக்க விட்டு விட்டு பெண்களே பூமியை விட்டுப்போய் விடாதீர்கள்! அவர்களை அனுப்பி விட்டு வாருங்கள். பெண்கள் இல்லாமல் எந்த ஆண்களாலும் பூமியில் நிம்மதியாக வாழ முடியாது. அது உங்களுக்கு, ஏழு பிறவியிலும் புண்ணியத்தைச் சேர்க்கும் நீங்கள் போன பின்பு நாங்கள் நடைபிணமாய் யாரும் புதைக்காததால் நடமாடிக் கொண்டிருக்கிறோம். என்னவளே என்னைப் பார்! என் நிலையைப் பார்! மறுபடியும் வந்துவிடு! இல்லையென்றால் மரணத்தைத் தந்துவிடு!

கல்லறையில் கண்ணீருடன்
உன் காலடியில்

“மாலைக்கு நான்
மயங்கினவனல்ல… ஒரு
மலருக்காய்…
தவமிருக்கிறேன்…”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES