13
Sep
2025

நீ வளரணும் உயரணும் என்ற வார்த்தைகள் நாம் வாழ்நாளில் பல நேரங்களில் பல மனிதர்கள் வழியாக நம் காதுகளில் ஊற்றப்பட்டிருக்கிறது. நமக்கு ஆறுதலாக, புதிய முன்னெடுப்புகளைச் செய்ய சோர்;ந்து, விடாமல் பயணிக்க உதவியாக இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் எண்ணப்படி நாம் வளர்ந்து விட்டோமா? அவர்கள் வளர்த்;துவிட்டார்களா? இல்லையென்றால் இந்த வாழ்த்துக்கள் எல்லாம் வாய் ஜாலங்கள்தானா? வளராமல் இருந்தால் அதற்கு யார் காரணம்? ஒருமுறை யோசித்துப் பார்ப்போமே!
இந்தச் சமுதாயம் நமக்கு எதைக் கற்றுக் கொடுத்தது? ஏற்றத் தாழ்வுகளைத்தானே! ஏழை-பணக்காரன், அதிகாரம் – அடிமை, மேல் சாதி – கீழ் சாதி, ஆண் – பெண், கருப்பு -சிவப்பு இதைத்தானே கற்றுக் கொடுக்கிறது. இதனை வலுக்கட்டாயமாகக் கடைபிடிக்க வற்புறுத்தவும் செய்கிறது. இதனால் நமக்கு சுயம் தலைதூக்குகிறது. அது நமக்குள் தலை கால் தெரியாமல் தலைவிரித்து ஆடுகிறது.
இங்கே வலுத்தவர்கள் வைத்ததுதானே சட்டம்! அதனை நோக்கிதானே ஒடுகிறோம். பணக்காரன் செய்தால் குற்றமில்லை. எனவே பணம் சம்பாதிக்க அலைகிறோம். நான் யார் என்று நினைத்தாய்? என் வயதென்ன? என் அனுபவம் என்ன? என் செல்வாக்கு என்ன? என்னைத் தொட்டால் என்ன நடக்கும் தெரியுமா? பார் நான் யார் என்று காட்டுகிறேன்? இப்படிப் பலபேர் பைத்தியமாய் பிதற்றிக் கொண்டு இருக்கிறார்கள் பார்த்திருக்கிறீர்களா? இவையெல்லாம் விலங்கிடாமல் வீதியில் நடமாட விட்ட பைத்தியங்கள் இதைத் தெரியாதவனிடம் நீ இதைப் பற்றிப் பேசுகிறாய்? காரணம் ஒன்றுதான் இவையெல்லாம்தான் நீ! என்று எண்ணுகிறாயோ! அதையெல்லாம் அவன் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை?
நான் வயது முதிர்ந்தவன்! அதிகாரம் உள்ளவன்! வசதி உள்ளவன்! அதற்காக என்னை மதிக்க வேண்டும் என்று நீ சொன்னால் ஏற்புடையதாகுமா? அதுதான் உன் அடையாளம் என்று அங்கேயே முடங்கி விட்டாயா? அவையெல்லாம் இந்தச் சமுதாயத்தில் நல்ல பெயர் எடுக்க இயற்கையால் நமக்குக் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதங்கள். கையில் பொருள் இருந்தாலும் நீ காணிக்கை கொடுத்தால் தானே கடவுளுக்கு ஏற்புடையதாக முடியும்.
நம்முடைய விரக்தி நிலைக்குக் காரணம் என்ன? நாமே ஒரு கற்பனையால் நம்மை உருவாக்குகிறோம். வசதியான வீடு, அழகிய உடை, உயர்ந்த கல்வி, ஏகப்பட்ட செல்வம் இவற்றால் நாம் மதிக்கப்படுவோம் என்று! உங்களோடு உண்மையான நட்புக் கொண்டிருப்பவர்கள் இதற்காகத்தான் உங்களிடம் பழகுகிறார்களா? அப்படிப் பழகினால் அவர்கள் உண்மையானவர்களாக இருக்க முடியுமா? அப்படியென்றால் யாருக்காக இந்த ஒப்பனைகள்? எதற்காக இவ்வளவு நகைகள்? போலியான மரியாதைக்காகவா? இவ்வளவு வேடம் போடுகிறீர்கள்.
இதையெல்லாம் மாற்றியமைக்கத்தான் மதங்களையும் அவற்றின் மூலம் நல்ல ஒழுக்கங்களையும் கொண்டு வந்தோம், ஆனால் நாம் நம் வசதிக்காக மதங்களையும், கொண்டாட்டங்களையும் மாற்றிக் கொண்டு இருக்கிறோமே தவிர நம் மனங்களை மாற்றியதே இல்லை. அங்குதான் இப்போது அதிகாரம் தாண்டவமாடுகிறது. அங்குதான் இப்போது சாதிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. கடவுள்களை எல்லாம் கோவணத்திலும், ஆடையின்றி சிலுவையிலும் ஆளே தெரியாத இருட்டிலும் வைத்துவிட்டு கோவில்கைளையும், கோபுரங்களையும் கோடிக்கணக்கில் செலவிட்டுப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம். கோவில்களுக்கும், இராணுவத்திற்கும் செலவு செய்கிற பணத்தை மட்டும் மக்களுக்குச் செலவு செய்தால் இந்தியாவில் ஏழு தலைமுறைக்கும் பஞ்சம், பசி, பட்டினி இருக்காது. இங்கு பல மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழக் காரணம் கோவில்களுக்கு வரிகட்டுவதால் தான்! பூசைக்கு என்று நாம் செலவழிக்கின்ற பணமும், பொருளும் நாம் நாசப்படுத்துகின்ற நல்ல பொருட்கள்.
மேல்சாதி, கீழ்சாதி யார் படைத்தது? யார் விரும்பி ஏற்றது? ஆனால் அந்த வக்கிரப் புத்தியோடுதானே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். பெற்று வளர்த்து பேணிக் காத்த பெண் பிள்ளை தன் விருப்பத்திற்கு மாறாக மற்றொரு சாதிப் பையனை மணந்து கொண்டால் எதையுமே சிந்திக்காமல் ஆவணக் கொலையை அரங்கேற்றுகிறோமே! இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இவர்களையெல்லாம் எப்படி மானிடப்பிறவி என்று சொல்வது, மனிதனை மனிதனே (சுரண்டல்) சாப்பிடுகிறான். மனிதனை மனிதனே அடிமைப்படுத்துகிறான். மனிதனை மனிதனே கொல்லுகிறான். இதற்கு இங்குள்ள மதங்கள் என்ன செய்தது? கல்வி என்ன கற்றுக்கொடுத்தது? சமுதாயம் என்ன பாதை அமைத்தது? எல்லாமே பயனற்றதுதானே!
வேறுவேறு தொழில் செய்யும்போதும் ஒற்றுமையாகத்தானே வாழ்ந்தோம். இன்று ஒரே அறையில் படிக்கும்போது வெட்டிக் கொண்டும், குத்திக் கொண்டும் திரிகிறோமே. ஆலமரத்தடித் தீர்ப்புகளில் உண்மை இருந்தது இன்று நீதிபதிகளின் தீர்ப்பில் உண்மை மட்டும்தான் இல்லை. வாதாடுபவர்களின் திறமையால் வாங்குகின்ற பணத்தால் இன்று நீதிமன்றத்தில் எங்களின் உண்மைகள் பாஞ்சாலியின் உடைகள் உரிக்கப்படுவது போல ஏழைகளை எப்போதும் நிர்வாணப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்.
ஊரோடு ஒத்து வாழ்! உண்மைதான் ஆனால் ஊரோடு செத்து வாழக்கூடாது. நாகரீகம் என்ற பெயரில் எல்லோரும் நிர்வாணமாக அலைந்தால் நாமும் அலைய வேண்டிய அவசியமில்லை ஊரைவிட்டு ஒதுக்கிவிடுவார்கள் என்று பயந்து மதத்திற்கும், சாதிக்கும் எதிராகக் குரல் கொடுக்கத் தயங்கினால் நாம் பூமிக்கு வரவேண்டிய அவசியமே இல்லை.
இயேசு என்ற மகான் யாரை எதிர்த்துக் குரல் கொடுத்தார் கடவுள் நம்பிக்கையுள்ள கடவுளின் சட்ட திட்டங்களை அப்படியே கடைபிடித்த யூத சமூகத்தைத்தானே! கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களை இல்லையே! பிறகு ஏன் தயங்குகிறீர்கள்? கோவில்களோ! அதன் உள்ளிருப்பவைகளோ புனிதமானது அல்ல! அது எவ்வாறு மானிடத்திற்குச் சேவை செய்கிறது என்பது தான். இங்கு எத்தனை பேர் மந்திரத்தால் மாங்காய் பழுக்க வைத்ததாய் சொன்னார்கள் இன்று யாராவது மனதில் நிற்கிறார்களா? ஆனால் அன்னைத் தெரசா அனைவரின் மனதில் மட்டுமல்ல நாவிலும் நடமாடுகிறாள். அவளல்லவா கடவுளின் தூதர்; எத்தனையோ பேர்கள் மக்களின் அறியாமையைக் கொண்டு பேய் விரட்டுகிறார்கள் என்று பிதற்றிக் கொண்டிருந்தார்களே! அவர்களையெல்லாம் கூப்பிடுங்கள் இப்போது இங்கு பேய்கள் இல்லை மக்களுக்குத் தீங்கு செய்யும் இந்த நாய்களை விரட்டச் சொல்லுங்கள் நாமும் நம்புவோம்.
அவரவர் ஏதாவது ஒன்றைப் பிடித்து வைத்துக் கொண்டு இதுதான் சத்தியம் என எண்ணிக்கொண்டு அடுத்தவர்களையும் நம்ப வைக்க அல்லும் பகலும் போராடுகிறார்கள்;. இதுதான் உங்கள் அகம்பாவம், திமிர், கொழுப்பு எல்லாமே! ஒருமுறை ஒரு திருமண விழாவிற்குச் சென்றிருந்தேன். வாசலில் பன்னீர் தெளித்து குங்குமம், சந்தனம் வைத்து அனுப்பினார்கள். இதனைப் பார்த்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறு குழந்தைகள் அந்தப் பொட்டை எடுத்து அருகில் உள்ள ஒரு பெண்மணிக்கு வைக்கச் சென்றது. அவளோ அந்த பொட்டை சட்டெனத் தட்டிவிட்டாள். குழந்தை பெருத்த அவமானத்தோடு கண்ணீரோடு அழத் தொடங்கியது. நான் ஒடிச்சென்று அக்குழந்தையின் கையைப் பிடித்து எனக்கு வைக்கச் சொன்னேன் அது சிரித்துக் கொண்டே வைத்து ஆறுதல் அடைந்தது. அந்தப் பெண்ணுக்கு அவர்கள் மதமோ, சமுதாயமோ பொட்டு வைக்கக் கூடாது என்று போதித்திருக்கிறது. ஆனால் குழந்தைகள் மனதைக் காயப்படுத்தக் கூடாது என்று அவர்கள் மதம் கற்றுக் கொடுக்கவில்லை. இது எவ்வளவு பெரிய அசிங்கம் அவமானம்.
நான் அவர்கள் அருகில் சென்று நீ பிறவாமல் இருந்தால் நலமாக இருக்கும் என்ற கோவமாக கூறிவிட்டுத் தானே வந்தேன் இன்னும் எத்தனை குழந்தைகளின் மனதை இவர்கள் கொல்லப்போகிறார்களோ? அவளது ஆடை வேதம் போதிப்பது போன்று இருந்தது. அவள் வாய் மட்டும் விசம் கக்கிக் கொண்டு இருந்தது. ஏழை மக்களுக்காகச் சட்டங்களை உடைக்க வந்தவர், சட்டங்களை உடைத்து மனிதர்களை இணைக்க வந்த தெய்வங்களைப் பின்பற்றிக் கொண்டு சட்டத்தை மட்டுமே வைத்துக் கொண்டு மனிதர்களைக் கொல்ல கையில் வேதப்புத்தகம், வாயில் மந்திரம்;, கடமைக்காக வழிபாடு செய்து கொண்டிருக்கின்ற இந்தப் போலித் தீர்க்கத்தரிசிகளின் கையிலிருந்து இறைவா எங்கள் பூமியைக் காப்பாற்று.
“சொர்க்கம் எது?
குழந்தையாக இருப்பது
குழந்தையோடு இருப்பது”