19
Sep
2025

சமீப காலமாகப் பூமிப் பந்தில் ஆங்காங்கு சில பகுதிகள் பற்றி எரிந்து கொண்டே இருக்கிறது. மக்கள் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள். போர்கள் ஒரு பக்கம் பூமியைப் புரட்டி எடுக்க, வறட்சிகள் ஒரு பக்கம் மக்களை வாட்டி வதைக்க சூரியக் கதிர்கள் நம்மை சூளையில் வைத்து எரிக்க கலவரங்கள் வேறு கட்டிவைத்து உதைக்க அடிமேல் அடிவாங்கிய மக்கள் இனிமேல் பொறுக்க முடியாது என மக்களே எழுந்து வந்து உதைக்க பூமியே போராட்டக் களமாக மாறிவருகிறது.
அங்கே இங்கே என்று பற்றியெறிந்த இந்தப் புரட்சிக் கனல் நம் அருகிலுள்ள நேபாள நாட்டில் “நெப்போ கிட்” என்ற பெயரில் புகுந்து விளையாடி போர்கோலம் பூண்டு நிற்கிறது. இந்த நெப்போ கிட் பற்றித் தெரியாத ஒரு சமூகம் இப்பூமியில் வாழ்ந்து கொண்டிருந்தால் அல்லது அருகில் நேபாளம் பற்றி எரிவது தெரியாமல் இருந்தால் உங்களைப் போன்ற ஏமாளிகளை எந்தக் கோமாளியும் ஆட்சி செய்வான்.
இன்று மக்களிடம் இருக்கும் மகத்தான ஆயுதம் ஊடகம். இது கத்தியின்றி இரத்தமன்றி யுத்தம் ஒன்று வருகிறது. தலைமையின்றி, படைகளின்றி யுத்தச் சத்தம் கேட்குது. இன்று எல்லோர் கையிலும் இருக்கின்ற ஆயுதம் அது அணுகுண்டு அல்ல அதைவிடக் கொடிய ஆயுதம் அலைபேசி! இன்று ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அதிகமாக அச்சப்படுவது பொது நிலையினரின் கையில் இருக்கும் அலைபேசிக்குத்தான். சாமான்யனின் கையிலிருக்கும் அலைபேசி ஒரு சாம்ராஜ்ஜியத்தையே சரித்துவிடும் என்பதற்கு அருகிலுள்ள நேபாள நாடு அத்தாட்சி.
இன்று எல்லா நாட்டுத்தலைவர்களும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களை விலைக்கு வாங்கி அரசியல்வாதிகளின் ஊதுகுழலாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் நான்காவது தூண் ஊடகம் என்றார்கள். அதனை ஆட்சியாளர்கள் தாங்களில் அதிகார நாற்காலிக்குக் கால்களைச் செய்து நாட்டினை நாசமாக்குகிறார்கள். வேட்டை நாய்கள் கறித்துண்டுக்கு ஆசைப்பட்டு பிறரின் காலை சுற்றி அலையும் போது வீட்டுக்குள் நுழைந்த பாம்பைத் துறந்த வீட்டு நாய்கள் பாய வேண்டிய நிலை வந்து விட்டது.
ஐயோ பிள்ளைகள் அலைபேசியால் அழிந்து போகிறார்களே என்று பிள்ளைகள் நலனுக்காக அம்மாக்கள் வருத்தப்படலாம். ஆட்சியாளர்கள் அலரினால் அது அக்கரையால் அல்ல நமது அந்தரங்கங்கள் வெளிவந்துவிடுமோ? என்ற பயத்தால்! ஆகவே குழந்தைகளைப் பெரியோர்கள் அலைபேசியைப் பயன்படுத்தக் கற்றுக் கொடுங்கள். அவற்றைப் பொறுப்பாகவும், சமுதாயத்திற்குப் பயனுள்ள விதத்திலும் பயன்படும்படி பயன்படுத்தக் கற்றுக் கொடுங்கள்.

நேபாள நாட்டில் நடப்பது என்ன? ஆட்சியாளர்களின் அராஜகங்களையும், அத்துமீறல்களையும் கையிலருக்கும் அலைபேசி மற்றும் ஊடகங்களின் வழியாக உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். இதனால் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் தன்னுடைய தவறுகளை நிறுத்துவதற்குப் பதிலாக அதனைத் தட்டிக்கேட்கத் துணிபவர்களைத் தடுத்து நிறுத்த ஊடகங்களுக்குத் தடைவிதித்தார்கள். தாங்களுக்குத் தலைவலியாக அமைந்த மக்களின் தன்மான உணர்வைச் சீண்டிப் பார்த்த அரசு, தன் தவறுகளைப் பதியவும், பரப்பவும் செய்கின்ற ஊடகமான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா கிராம், யூடியூப், எக்ஸ் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு ஆகஸ்டு 16 அன்று தடைவிதித்தது.
பிறகு ஆகஸ்டு 28 முதல் ஏழுநாட்களுக்குள் இவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுப் புதுப்பிக்க கடுமையான விதிமுறைகளையும் கொண்டு வந்தது. இல்லாத ஊருக்கு வழிகாட்டியதைப் போல, இயலாதவனை அழைத்து போருக்கு அனுப்பியதைப் போல அரசின் மூர்க்கத்தனமும் அவர்களின் முட்டாள்தனமும் செப்டம்பர் 5,6 தேதிகளில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடங்கிப்போகின. இதனால் மக்களும் கையில் இருந்த கருவி கைக்குழந்தை இழப்பைவிட கடுமையாக இருந்தது ஆட்சியாளர்களின் உரிமை என்பது மக்களின் உணர்வுகளைப் பறிப்பது என்றால் இதனால் வரலாற்றில் பல பக்கங்களில் தலைவர்களின் தலை காணாமல் போய் இருந்தது. எனவே தவறுசெய்தவர்கள் அரசியல்வாதிகள்! தண்டனை மக்களுக்கா? பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் சகிக்க முடியவில்லை என்றால் பிள்ளைப் பூச்சிகளுக்கும் கொடுக்கு முளைக்கும் பொறுமையிலிருந்தும் புரட்சி வெடிக்கும், துறவறம் கூட ஆயுதம் எடுக்கும்! அதுதான் நேபாள நாடு நேரில் சந்திக்கிறது.

இளைஞர் எழுந்தார்கள் வீதியில் கூடினார்கள். இதுவரை ஊடகங்கள் கொடுத்தத் தீனியால் ஊனமுற்றவர்களாய் முடங்கிக் கிடந்தவர்கள் ஏறிட்டுப் பார்த்தார்கள். நாம் இருட்டுக்குள் இல்லை தள்ளப்பட்டிருக்கிறோம். தள்ளியவரை விடக்கூடாது அந்தத் தலைகளை விடக் கூடாது என்று தடைகளை உடைத்து “நெப்போ கிட்” என்று பெயர் வைத்து களத்தில் குதித்தார்கள். எனவே ஆத்திரம் கொண்ட அரசு அரைவேக்காட்டுத்தனமாக காவல்துறையை ஏவிவிட 20 இளைஞர்கள் துப்பாக்கி சூட்டிற்கு இரையானார்கள். புழுவைச் சீண்டினாலே போராடத்தானே வரும். போராளிகளைச் சாகடித்தால் பொறுப்பார்களா? பொங்கி எழுந்தார்கள். அணைகளையும், கரைகளையும் உடைத்துக் கொண்டு மக்கள் வெள்ளம் ஆளுநர் மாளிகைகளை நோக்கிப் பாய்ந்தது.
பொறி என நினைத்து அதனை அணைத்து விடலாம் என நினைத்தால் அது பொறி அல்ல காட்டுத்தீ நாம் தான் மாட்டிக் கொண்டோம் என்று காலம் கடந்து உணர்ந்தார்கள். நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத்தைப் போராட்டக்காரர்கள் காட்மண்ட் சாலையில் உள்ளாடையுடன் ஒட ஒட விரட்டி அடித்து ஆற்றில் தூக்கி எரியும் காட்சி காணொலியில் காணக் கிடக்கிறது. முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் வீட்டில் நுழைந்து காட்டுத்தனமாகத் தாக்கினார்கள். முன்னாள் பிரதமர் ஜலா நாத் கனல் வீட்டில் தாக்குதலைத் தொடர்ந்த கலகக்காரர்கள் அவர்கள் வீட்டில் வைத்த தீயில் அவரது மனைவி ரஷ்ய லெஷ்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் போராட்டக்காரர்கள் சுந்தாரா, ஜீம்கா உள்ளிட்ட சில சிறைச்சாலைகளையும் சூறையாடியதால் அங்கிருந்த 13,500 கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள்.
இவ்வளவு வெறியா! மக்களிடத்தில்? என்று கேள்வி எழும்பொது அது வெறி அல்ல. அடக்கி வைத்த உணர்ச்சி! ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் கண்ணுக்குத் தெரியாத விலங்குகளால் ஏற்பட்ட காயங்கள் பிரம்பெடுக்காமல் வரிகள் என்ற பெயரில் அவர்களின் நரம்புகளை நறுக்கிய நாதாரிகள் மேல் கொண்ட வெறுப்புகள்.
அரசு செய்த முட்டாள் தனம் என்ன? அவர்கள் வலைத்தளத்திற்காகப் போராடுகிறார்கள் என நினைத்து அதன் தடையை நீக்கியது. ஆனால் மக்கள் மனதில் அடைபட்டுக்கிடந்த புரட்சி வெள்ளம் பொங்கிவிட்டது. அவர்கள் ஆதங்கம் என்ன? எங்களின் வரிப்பணம் அரசியல்வாதிகளின் வசதிக்கா? அரசியல்வாதிகளின் வாரிசுக்குத்தான் எப்போதும் வசதிகளும் வாய்ப்புகளுமா? மொத்தத்தில் நேபாளத்தில் 3 கோடி மக்கள் அதில் 60 லட்சம் பேர் வேலைக்காக அண்டை நாட்டை அண்டிப் பிழைக்கிறார்கள்! இதனால் போராட்டக்காரர்கள் இசைக்கும் புதிய கீதம் என்ன? இதுவரை இருந்த எந்த அரசியல்வாதியும் இனி நாட்டை ஆளக்கூடாது புதிய இரத்தம் பாய வேண்டும் என்று போராட்டக் குரல்கள் ஒலிக்கின்றன.

அந்த மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை ஆதரிக்கவில்லை. ஆனால் எங்களுக்கு இடைக்காலப் பிரதமராக நீதிக்காக எப்போதும் போராடிய நேபாள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்க்கி, அல்லது பாப் பாடல்கள் மூலம் இளைஞர்களின் நாடி நரம்புகளில் சமத்துவம், சகோதரத்துவம் விதைத்து அநீதி, வன்முறை, ஊழல்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்ததோடு சுயட்சையாக நின்று காட்மண்டு மேயர் தேர்தலில் வென்ற 33 வயது இளைஞர் பாலேந்திராஷா வை தலைமையேற்க நேபாள மக்கள் அழைக்கிறார்கள்.
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை வங்கதேசத்தைத் தொடர்ந்து நேபாளமும் மக்கள் புரட்சியை சந்தித்து விட்டது. இது ஆட்சியாளர்களுக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி! அதே வேளையில் இந்திய இளைஞர்களில் ஆண்மைக்கு விட்ட சவால். இந்திய தேசத்திலும் இதே நிலைதான். மக்களின் வரிப்பணம் அரசியல்வாதிகளின் வசதிக்கு வாங்கிய பணமாக மாறிவிடுகிறது. எந்த ஒரு வழியில் ஆறு, குளங்களையும் விட்டு வைக்காதவர்கள் வெள்ளை உடையில் காட்சி தருவார்கள். ஏனென்றால் இவர்கள் கரைபடியாதவர்கள்! இதனை நம்ப வேண்டும்!
தாங்கள் மட்டுமல்ல தாங்கள் குடும்பங்களுக்கும் உறவுகளுக்கும் மட்டுமே இந்தப் பூமி சொந்தம் என்று எண்ணுபவர்கள். தன் தவறுகளை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்று தாறுமாறாக அலைகிறவர்கள். தவறுகளிலிருந்து காப்பாற்ற காவல்துறையையும் தண்டனையிலிருந்து தப்பிக்க நீதித்துறையும் மக்களை எல்லாம் மடையளர்களாக்க, மதவாதிகள் என நாட்டையே அந்தப்புரங்களாக்கி நாசமாக்கும் அரசியல்வாதிகளே! அருகிலுள்ள வீடு தீப்பிடிக்கும்போதே எச்சரிக்ககையாக இருந்து கொள்ளுங்கள். இதே நிலை உங்களுக்கு வர வெகு காலமில்லை.
ஒரு பாடல் உண்டு ஏய்ப்பவர்களுக்கே காலம் என்று எண்ணிவிடாதே! இது எத்தனை நாள் கைகொடுக்கும் மறந்துவிடாதே! தேவைப்பட்டால் தேர்தல் ஒரு மாறுதலைக் கொடுக்கலாம். தேடிப்பிடித்து உதைத்து ஆடைகளை உருவி அம்மணப்படுத்தி, அவமானப்படுத்தித்தான் ஆட்சியை மாற்ற வேண்டுமா? சாதியைச் சொல்லி அவர்களைப் பிரித்து வைத்திருக்கின்ற சதியையும், மதத்தால் அவர்களை மடையர்களாக்கி மற்றவர்கள் மீது வெறுப்பை உருவாக்கி குளிர்காயும் அரசியல்வாதிகளே! உங்களுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. திருந்துங்கள் இல்லாவிட்டால் வருந்த வேண்டியிருக்கும். மக்களை பொம்மைகள் என்று எண்ணிவிடாதீர்கள். அவர்கள் வெகுண்டெழுந்தால் உங்கள் உயிரோடு விளையாடுவார்கள் உயிரும், மானமும் முக்கியம் உணர்ந்து கொள்ளுங்கள்.
“இருப்பவன் கேட்டால்
தரமாட்டான்…..
இல்லாதவன் எடுக்காமல்
விடமாட்டான்!….”