03
Jul
2026

யான் அறிந்த தொழில்களிலேயே ஆசிரியர்போல் சமுதாயத்தை வளர்த்தெடுக்கும் சரியான தொழிலைப்போல வேறு ஒரு தொழிலை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. காரணம் உயிரோவியங்களுக்கு நாங்கள் பட்டை தீட்டி ஒளிர வைத்துக் கொண்டிருக்கிறோம். ஊரார் குழந்தைகளை ஊட்டி வளர்த்து உலகில் உலவ விட்டுக் கொண்டிருக்கிறோம். துடிப்போடு இருக்கும்போது வகுப்பறை என்னும் நாற்றங்காலில் வார்த்தைகளை விதைத்து, ஒழுக்கத்தை வளர்த்து, அறிவைப் பூத்துக் குலுங்க வைத்து, எதிர்காலத் தேவைக்கு எத்தகைய மாணவர்கள்(மன்னர்கள்) வேண்டும் என்பதனை அறிந்து காலத்தின் தேவையை கண்டுபிடித்து பூமியைச் சுத்தப்படுத்த ஒவ்வொரு ஆசிரியர்களும் வகுப்பறையில்; அடைகாத்து அக்கினிக் குஞ்சுகளை அகிலத்திற்கு அனுப்புவதே ஆசிரியர் பணியாகும்.
ஒவ்வொரு ஆசிரியர்களும் தன் பணிவாழ்வை நிறைவு செய்து சோர்ந்து போகும்போது. சார் என்னை ஞாபகம் இருக்கிறதா? சார் எப்படி இருக்கீங்க? உங்களையெல்லாம் பார்க்க முடியும் என்று என் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. நீங்கள் மட்டும் இல்லையினா… நான் இந்த நிலைமையில் இருக்க முடியாது என்று ஆசிரியரின் காதுகளில் கடந்த காலக் கனவுகளை அவரின் காது வழிப் பேசும் போது ஆசிரியர் அடையும் இன்பத்திற்கு அகிலமே ஈடாகாது.
ஆகவே எனக்கும் இந்த இன்ப அதிர்ச்சியின் அதிர்வுகள் பலமுறை நடந்திருக்கிறது. அவற்றில் ஒன்றை உங்களோடு பகிர உதடு துடிக்கிறது.

கடந்த ஒராண்டுக்கு முன் எனது மாணவியாய் இருந்து இன்று கல்லூரியில் பயின்று கொண்டிருக்கிறாள். அவள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது அவளடைந்த மாற்றங்கள், அவள் செய்த புரட்சிகளை எண்ணிப் பார்க்கும்போது உடம்பே ஒரு நிமிடம் புல்லரித்துப் போகிறது.
எப்போதும் என் மாணவர்களுக்குக் கேள்விகள் கேட்கப் பயிற்சி கொடுப்பேன். கேள்விகள் கேட்கும்போது பதில்களும் தேடப்பட வேண்டும். அதற்குக் கடுமையாக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்ற பழக்கத்தைத் தானாகவே ஒவ்வொரு மாணவனிடத்திலும் உருவாக்கி விடுவேன்.
கேள்விகள் கேட்டு, அறிவுக்கு ஆய்வு நடத்தி, விடாப்பிடியாக விடை கிடைக்க, வெறித்தனமாய் உழைக்கும் பெண்களில் ஒருத்தி எனது மாணவி குருலெட்சுமி. கேள்விகள் கேட்பதால் மட்டுமல்ல, ஆசிரியர்கள் கொடுக்கின்ற அத்தனை வாய்ப்புகளிலும், தன்னைக் கரைத்துக் கொண்டு ஏதோ ஒரு புரட்சியை தன் செயலில் உருவாக்க வேண்டும் என்று உறுதியாய் நின்று போராடும் போராளி இவள்.

கல்வியில் மட்டுமே கைதேர்ந்தவள் அல்ல… அத்தனை துறைகளையும் அலசிப் பார்ப்பவள். பெண்களை விளையாட்டுப் பொம்மைகளாய் பார்க்கும் இந்த ஆண் வர்க்கச் சமுதாயம் பெண்களை விளையாட்டுப் பக்கம் சென்று விடாதபடி பார்த்துக் கொள்ளும். ஆனாலும் இவள் விளையாட்டுத் துறையையும் விட்டுவிடவில்லை. அதிலும் முத்திரை பதிக்கும்போது என் சிந்தையில் வந்து விழுந்தாள். இவளுக்குச் சிறகு கொடுத்தால் எதிர்காலத்தில் பெண்களுக்கு வானம் வசமாகும் என்று நினைத்துக் கொண்டேன். அதற்குரிய பாதையைத் தேடினேன் அவள் பயணிக்க வாய்ப்பினை வழங்கினேன்.
ஆங்கில வழிக்கல்வியில் தனது கல்விப் பயணத்தைத் தொடரும் இவள், எனது தமிழ் வார்த்தையில் தாகம் கொண்டாள். ஏதோ ஒரு மூலையில் இவர்போல் பேச வேண்டும் என்று மனதிற்குள் நினைத்ததால் விடாப்பிடியாக நின்று வெற்றியும் கண்டாள். அன்றையிலிருந்து இன்று வரை அனைத்து மேடைகளிலும் அனல்பறக்க ஆரம்பித்தது. கருத்துக்கள் எல்லாம் கால் முளைத்து அனைவரது காதுகளிலும் களிநடனம் புரிய, இவளது புகழ் மட்டும் இமயம் நோக்கி நகர்ந்தது.

ஒரு முறை இவளும் இவளது வகுப்புத் தோழி ஜூடித் அன்டோவும் அறிவியல் துறையில் ஆய்வு செய்து கோப்புகளுக்கு சீல் வைக்கிற முறையில் எளிய வடிவில் கையாளும் இனிய இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். இதற்காக இவர்கள் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வரங்கில் மாணவிகள் குருலெட்சுமி, ஜூடித் அன்டோ இருவரும் ஆற்றிய உரை எம் பள்ளியின் பெயரை பல இடங்களுக்குப் பரவச் செய்தது. இவர்களது வழிகாட்டியாக உள்ள அருட்சகோதரி. கவிதாபால் அரிய முயற்சியால் மாணவி ஜூடித் அன்டோ எம்பள்ளியின் முதல் இளம் விஞ்ஞானி என அரசுத் துறையால் அறிவிக்கப்பட்டாள். அருட்சகோதரியின் வழிகாட்டலில் குருலெட்சுமியின் உழைப்பு அவர்களை உயர்த்த வழிவகுத்தது. அன்று முதல் இன்று வரை எம்பள்ளியில் மாணவர்கள் அன்டன், கிஷோர் குமார், ஜோனஸ் ஆன்டோ என வருடம்தோறும் வரிசையாக இளம் விஞ்ஞானிகள் உருவாகி பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் நடைபெறும்போது அன்றைய மாவட்ட ஆட்சியாளர் திரு. கார்த்திகேயன் இ.அ.ப அந்த கூட்டத்தை வழிநடத்தினார். அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவரையே வியப்பில் ஆழ்த்தியவள் இந்த மாணவி. அவரோ இவளை வியந்து பாராட்டி ரூ. 1000 பரிசளித்தார். அப்போது அவர் இவ்வளவு துணிவாக கேள்விகள் கேட்பதால் உன்னை பாராட்டுகிறேன் என்றார் குருலெட்சுமி எங்கள் தலைமையாசிரியரிடம் நாங்கள் கற்றது எவரிடமும் கேள்வி கேட்கும் துணிவு எங்களுக்கு வந்தது என்று என் பெயரை அவள் பதிவு செய்யும்போது ஒரு தந்தைக்கு இதைவிட பெண் குழந்தை எப்படிப் பெருமை சேர்க்க முடியும்?
எல்லாவற்றிலும் மேலாக சிகரம் தொட்ட நிகழ்வு ஒன்றையும் இங்கு பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற சவேரியார் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தலில் நின்று தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றியும் அடைந்தாள். அந்தக் கல்லூரியின் நூறாண்டு காலத்து வரலாற்றில் பேரவைக்கு முதன்முதலில் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எங்கள் சிங்கப்பெண் குருலெட்சுமி என்பதில் சிறகடித்துப் பறக்கிறோம்.

ஒரு தேர்தல் என்றால் எத்தனை போட்டிகள் பொறாமைகள், மிரட்டல்கள், அரட்டல்கள் இருக்கும். அத்தனையும் கடந்து இவளின் வெற்றி எத்தனையோ வீரப் பெண்கள் சாதிக்கத் துடிக்க சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
எப்போதுமே எனக்குப் பெண்ணியம் பேசுவதும் பெண்களையே அதனைப் பேச வைப்பதும் அதற்காகப் போராடுவதும் அவர்கள் எதிர்பார்த்த இடத்தை அத்தனை தடைகளையும் உடைத்து பெறுவதற்கும் உடனிருக்க ஆசைப்படுபவன் நான். காரணம் இளம் வயதில் இருந்து இத்தனை திறன்களோடு வளர என்னை உறுதிபடுத்தி, உற்சாகப்படுத்தி, உயர்த்தி விட்டவள் என் உடன்பிறந்த அக்கா! அந்தத் தாக்கத்தில் என்றுடைய எழுத்துக்களும், பேச்சுக்களும் ஏதாவது பெண்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தாதா? என ஏங்குவதும் உண்டு. ஆனால் என் வகுப்பறையில் அமர்ந்து கருத்துக்களை உள்வாங்கிய ஒவ்வொரு மாணவிகளும் அடுக்கடுக்கான சாதனைகளை அள்ளி வரும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.
இன்றைய உலகில் தான் கற்றுக்கொடுக்கும் பள்ளியில் தன் குழந்தைகள் படிப்பதை அற்பத்தனமாக நினைக்கும் ஆசிரியர்களும் ஆடம்பர ஆங்கிலக் கல்வியை பெரிதென நினைக்கின்ற ஆசிரியர்களுக்கு மத்தியில் எங்களை நம்பி இந்தக் குழந்தைகளை ஒப்படைத்து இது உயர்வதில் எங்களையும் உள்ளம் குளிர வைக்கின்ற ஒவ்வொரு பெற்றோர்களையும் உள்ளத்தின் நிறைவாக எங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்றைய நிலையில் என் பேனா எனது மாணவி குருலெட்சுமியைப் பற்றிப் பேசுகிறது. இதே போல் எத்தனையோ மாணவிகள், சமூக நல உழைப்பாளர்கள், அரசுப் பணியாளர்கள், அரசியலில் சிறந்தவர்கள், துறவிகள், குடும்பத்தலைவிகள், சாதனைகளைச் செய்யும் போது அவர்களது வெற்றியையும் நிச்சயம் என் பேனா வெளிக் கொணரும் உங்கள் பார்வைக்குப் அது பரிமாறப்படும்.
சாதிக்கத் துடிக்கின்ற பெண்கள் முடிந்தால் ஒருமுறை குருலெட்சுமியை சந்தித்துப் பாருங்கள். இன்னும் சாதிக்கத் துடிக்கின்ற பல லெட்சுமிகள் வெளிவர வேண்டும். அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறியுங்கள். மூடநம்பிக்கைகளை மூழ்கடியுங்கள். பழமைக்குக் குழிவெட்டி பாடையில் கிடத்துங்கள். வீரப்பெண்களே! வெளியே வாருங்கள். நீங்கள் விரும்பியதை, வேண்டியதை செய்து முடியுங்கள். குறுக்கே நிற்பவர்களை ஒரு கை பார்த்து விடுங்கள். மகத்தான மாற்றம் வேண்டுமா? மகளீர் வரட்டும் சீக்கிரமா!
“பாதகம் செய்பவரைக் கண்டால்
பயம் கொள்ளளாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழந்துவிடு பாப்பா…”
-பாரதி