11
Jul
2026

வாழ்வு-சாவு என்பது … வாழ்வு என்ற வரலாற்றுப் புத்தகத்தில் இறுதி அத்தியாயம். அதில் சாவு என்பது ஒரு அமங்கலச்சொல். அதனை உச்சரிக்கக்கூட உதடு மறுக்கிறது. ஆனால் சாவு என்பது நாம் சந்திக்க இருக்கின்ற ஒன்று. அதை ஏன் சிந்திக்க மறுக்கிறோம்?
பூமியில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் சாதாரண ஒரு உயிராக வந்து பிறக்கிறோம். நமது ஒவ்வொரு முயற்சியாலும் நம்மை அடையாளப்படுத்துகிறோம். நமது நற்குணத்தால் நமது பெயரைப் பலரது நினைவுக்குக் கொண்டு வருகிறோம். சில நேரங்களில் திறமைக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது முறையாகப் பயன்படுத்தி தனக்குப் புகழ் சேர்க்கிறோம். சில நேரங்கள் வாய்ப்பு இல்லாமல், வாய்ப்பிருந்தும் வழி இல்லாமல், வழி இருந்தும் பலனில்லாமல், பலனிருந்தும் பயனில்லாமல் வாழும் வாழ்க்கைக்குப் பயன் ஏது?

மனிதன் எப்போதுமே குழுவாக வாழ ஆசைப்படுகிறான். அந்த ஆசையில் குழுவுக்குத் தலைவனாக வர விரும்புகிறான். தொடக்கத்தில் உடல் பலத்தில் தலைவன் உருவாகினான். கல்வி வந்த பிறகு அறிவில் சிறந்தவன் தலைவனானான். அறிவுக்கும், பலத்திற்கும் போட்டி உருவாகும் போது ஆட்சேர்ப்பின் மூலம், வாக்கெடுப்பின் மூலம் அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.
தலைவன் என்பவன் உருவாகிறான்! சில நேரம் உருவாக்கப்படுகிறான்! காலத்தின் தேவையை உணர்ந்து காலமே தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. இன்று பணபலம், ஆட்பலம், சாதிப்பலம் கலந்து தலைவன் தேர்ந்தெடுக்கும்போது சில நேரங்களில் தகுதியற்றவர்கள் தலைவர்கள் ஆகிவிடுகிறார்கள். இதனால் வரலாற்றின் பல பக்கங்கள் சோம்பேறிகளால் சோரம் போய்விடுகிறது.
தலைவன் ஆவது இன்றைய உலகில் எளிது. ஆனால் தலைமைப் பண்பு உள்ள தலைவன் கிடைப்பது அரிது. இன்று வாரிசு அரசியல் வரலாறுகளில் பதிவாகிவிடுவதால் பல்வேறு குழுக்களுக்கு அரசியலுக்குப் பாடை கட்டி விட்டார்கள். ஒரு தலைவனை எவ்வாறு ஒரு குழு கட்டி எழுப்பியதோ அதுபோல பல்வேறு தலைவர்களின் தகுதியற்ற தன்மையும், தவறான முடிவுகளும் பல குழுக்களை படுகுழியில் தள்ளி விட்டது!

ஒரு நல்ல தலைமைத்துவம் உருவாக வேண்டும் என்றால் தலைவன் சாக வேண்டும். இந்த வார்த்தை ஆழமாக அழுத்தமாக உளவியல் கருத்தை உள்ளடக்கியது. தலைவன் தான் வாழ வேண்டும் என நினைத்தால் தலைவனுக்குள் சுயநலம் உருவாகும். தான், தனது என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பித்துவிடும். தான் வாழ வேண்டும் என்பதற்காகத் தனது தலைமைப் பண்பை இழக்க நேரிடும். தலைவன் என்பவன் தொண்டர்களுக்காகவும், மக்களுக்காகவும் உயிரைக் கொடுப்பவனாக இருந்தால் மட்டுமே அவன் தலைவனாக இருக்க முடியும்.
இயேசு என்ற மகான் மானிடச் சமூகம் நீதி, நேர்மையோடு வாழ்வதற்காக நீதியைக் கொன்று நேர்மையற்ற முறையில் சிலுவைச் சாவை ஏற்று மக்களுக்காக அந்த தலைவன் செத்தார். அவரது தலைமைப் பண்பு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இராமாயணத்தில் இராமச்சக்கரவர்த்தி தன் தம்பிக்காக நாட்டைத் தியாகம் செய்து காட்டுக்குச் சென்றுவிட்டார். 14 ஆண்டுகள் ஒரு மனிதன் நாட்டுரிமையை இழந்துவிட்டால், அவர் அனைத்து உரிமைகளும் இழக்கிறார். மீண்டும் வந்து ஆட்சி செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் தலைவனை மட்டுமே அவர்கள் காட்டுக்கு அனுப்பினார்கள். அவரது தலைமைத்துவம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாட்டிலும் புரட்சிக்கும், ஆட்சி மாற்றத்திற்கும் யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள்தான் அடுத்து அந்த நாட்டின் தலைவர்களாவார்கள். ஆனால் இந்திய தேசத்தில் மட்டும் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட காந்தி தான் ஒதுங்கிக் கொண்டு நேருவைப் பிரதமராக்கினார். இதன் மூலம் தலைமைத்துவம் என்பது என்னவென்று தரணிக்கு அறிவித்த தனிநிகர் தலைவன் காந்தி ஆவார்.
கொடுத்த வாக்கிற்கும், எடுத்த இலட்சியத்திற்கும், கொண்ட கொள்கைக்கும், விடுத்த சவால்களுக்கும், விதைத்த புரட்சிக்கும் எவன் ஒருவன் சாகிறானோ அவனே சிறந்த தலைவன். இதனால்தான் தலைவன் சாகும்போது அவரது தலைமைப் பண்பு வரலாற்றில் வாழ ஆரம்பித்துவிடுகிறது. நான் அதற்காக செத்துக்கொண்டிருக்கிறேன் என்பதன் பொருள் புரியும்.

பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா, மண்டேலா, காமராஐர், அண்ணா என்று வரலாற்றில் இன்றும் வாடாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற பெரியோர்கள் தாங்கள் வாழும் காலத்தில் பணிக்காகத் தன்னைச் சாகக் கொடுத்தவர்கள்.
இன்றையத் தலைவர்கள் யார்? அனைவரும், தான், தனது, தனது குடும்பம் தளைத்தோங்க வேண்டும் என்று ஊரை அடித்து உலையில் போடும் உருப்படாத கூட்டங்களே இன்று தன்னைத் தலைவன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.
ஆங்கில அரசை எதிர்த்துச் சுதந்திரத்திற்காகப் போராடி, சிறைக்குச் சென்றவர்கள். பின்பு நாடு சுதந்திரமாய் நல்வாழ்வு வாழ்வதற்காகத் தலைவர்கள் ஆனார்கள். ஆனால் இன்று சுதந்திர இந்தியாவில் நாட்டை ஆள்வதற்காக தலைவர்கள் ஆனவர்கள் ஆட்சிக் காலத்தில் செய்த ஊழல்களுக்கும் பண்ணிய பாவத்திற்கும் பதவி போன பின்பு சிறைக்குச் செல்கிறார்கள். தலைவன் வாழ்ந்தான், வாழ்கிறான். ஆனால் அவனது தலைமைப் பண்பை எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துக் காட்டாக எடுத்துச் சொல்ல இப்போதைக்கு எவரும் இல்லை.

தலைவனைத் தரையில் தேடிய காலம்போய் இப்போது திரையில் தேடித் திருப்தியடைகிறார்கள். தலைமைப் பண்பை எல்லாம் அவர்கள் நடித்துக் காட்டி முட்டாள்களை நம்ப வைத்து தலைவன் ஆகி விட்டார்கள். ஆனால் தலைமைத்துவம்தான் இங்கு தற்கொலை செய்துவிட்டது.
விருப்பு, வெறுப்பு இன்றி குணநலன்களைக் கொண்டு பெரியோர்களாக மதித்து வந்த காலம் போய், பணத்தைக் கொடுத்து, சாதியைப் பற்றிச் சொல்லி, மதத்தைக் கலந்து கொடுத்து, மனதை மழுங்கச் செய்த தலைவர்கள் இன்று பெருகிவிட்டார்கள். தலைவன் என்ற பெயரில் சோளக் காட்டுப் பொம்மைகள் இங்கு பல சுற்றிக் கொண்டிருக்கிறது.
தலைமைத்துவம் என்பது வழிநடத்துவது, தன் மக்களின் விடுதலைக்காகத் தன்னையே கொடுப்பது, உணர்ச்சிகளுக்கும், உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் காலத்தின் தேவையைச் சரியாய் கணித்து பணி செய்வதுதான் தலைமை. வாழும் சமூகத்திற்குத் தன்னால் புகழ் சேர்ப்பதே தலைமைத்துவம் ஆகும்.

தலைமைத்துவம், பொன், பொருள், கல்வி, பணம், புகழ், பட்டாபிசேகம் என அலையாது. இவையெல்லாம் எவனொருவன் தனக்கு வேண்டும் என்று தறிகெட்டு அலைகிறானோ அந்தத் தற்குறிகளை இன்றைய உலகம் தாங்கிக் கொண்டு தலைவன் என்று இனம் காட்டுகிறது. இன்று தலைவர்கள் பெருகிவிட்டார்கள். தலைமைத்துவம் செத்துவிட்டதால் வரலாறுகள் எல்லாம் வறண்டுபோய் கிடக்கிறது.
தலைமைத்துவம் குருகுலக் கல்வியின் தொட்டிலில் பிறந்து உலகிற்கு அரியணை ஏறியது. ஆனால் அவற்றின் வழித்தோன்றல்களான துறவிகள் குடிலில் இன்று சாதித் தலைவர்கள்தான் ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். வெளி உலகில் கூட சாதித் தலைவர்கள் வெகுஜன மக்களிடம் தோற்றுக் கொண்டு இருக்கும்போது துறவற மடங்களில் மட்டுமே சாதித் தலைவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். நாடு நலம் பெற வேண்டுமென்றால், தேசம் தெய்வீகத்தில் வாழ வேண்டுமென்றால் தலைவன் சாக வேண்டும். தலைமைத்துவம் வாழ வேண்டும்.
“பல மறுமலர்ச்சிகள்
சிலரின் மரணத்தில்
மலர்ந்திருக்கிறது”