03

Aug

2026

கரப்பான் பூச்சிகள்…

காக்ரோச் கட்சி. இப்போ இந்தப் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல! என்று மிரட்டும் அளவிற்கு அதிரடிக் காட்டி அடங்கி இருக்கிறார்கள் நம்ம கரப்பான் பூச்சி கட்சியினர். காலக்கோடுகளில் கவனிப்பாரற்றுக் கிடக்கின்ற இளைஞர்கள் கூட்டத்தை கேலி செய்ததால், கரப்பான் பூச்சிகள் என்று எள்ளி நகையாடியதால், எங்கிருந்து வந்தன இந்த கரப்பான் பூச்சிகள் என்று சொல்லும் அளவிற்கு டெல்லியையே உலுக்கி எடுத்துவிட்டார்கள்.

இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடு இந்தியா என்பார்கள். இந்த வார்த்தையை இப்படி சொல்லக் காரணம், இளைஞர்கள் அதிகம் இருந்தும் எந்த வளர்ச்சியும் இல்லாமல் பயனற்றுப் பாலைநிலம் போல், பயனற்றதுக் கிடக்கிறது. பலவற்றிற்குத் திணறுகின்ற பாலைவனத்தைப் போல்தான் இந்தியா இருக்கிறது என்று பரிகசிக்கிற நிலை. மேலும் வெளிநாட்டில் வாழும் இளைஞர்களின் வீரமும், எழுச்சியும், புரட்சியும், சாதித்த சாதனைகளோடு நமது இளைஞர்களையும் ஒப்பிட்டுப்பார்த்து அவர்களோடு ஒப்பிடக்கூடத் தகுதியில்லாமல் தரம் கெட்டுக் கிடக்கிறது எங்கள் இளைஞர்கள் கூட்டம் என்ற வேதனையும் இருக்கிறது.

இருபது இளைஞர்களைக் கொடுங்கள் இந்தியாவை வல்லரசாக்கிக் காட்டுகிறேன் என்று முழங்கியவன் விவேகானந்தன். இளைஞர்கள் எழுப்பும் புரட்சிதான் இந்தியாவின் சுதந்திரத்தை முழக்கமிடும் எனக் கர்ச்சித்தான் நேதாஜி. விடுதலைப் போராட்டத்திற்கு ஆங்காங்கே அக்கினிக் குழம்புகளை அள்ளித் தெரித்தவர்கள் நம் இளைஞர்கள். கொடிகாத்த குமரன், பகத்சிங் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும் இந்தப் பயணத்தில், எங்கே நமது இளைஞர்கள் தொலைந்து போனார்கள்? தன்னிலை இழந்து போனார்கள்? என்று ஆய்வு செய்வோம்!

நாகரீகம் பண்பாட்டில் நமது நாட்டுக் கலாச்சாரத்தோடு நம் இளைஞர்கள் வாழும் வரை இந்தியாவின் இறையாண்மை காக்கப்பட்டது. நமது நாட்டு உணவு, உடை, பண்பாடு இவற்றை அவர்கள் பெருமையாக எண்ணி வாழ்ந்து வந்தார்கள். அவற்றில் அனைவரும் உழைத்து வாழ வேண்டும். உழைப்பதில் தான் நமது சுய கௌரவம் உள்ளது என்பதனையும் உணர்ந்தார்கள். சிலர் படிக்கச் சென்றார்கள், அப்படி இருந்தும் வீட்டு வேலைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேர்மையாகச் செய்தார்கள். அதுவரை இந்தியாவிற்கு ஆபத்துக்கள் இல்லை, அபத்தமும் இல்லை.

வெள்ளையர்கள் இந்தியாவிற்குள் வரும்போது நம்முடைய வாழ்க்கைத் தரம் மெல்ல மெல்ல மாறுகிறது. உணவு, உடை, உறைவிடம், கலாச்சாரம், பண்பாட்டில் அவர்களுக்குள் நாம் மறைய ஆரம்பித்தோம். வேட்டி, சேலை எல்லாம் வெளியேறி பேண்ட், சுடிதார் என்ற பிறழ்வு நிகழ்ந்தது. இது ஒரு வகையான வாழ்வையும் சுகாதாரத்தையும் பாதித்தது.

உணவுகளில் நமது மண்ணில் விளையும் தானியங்களின் அருமை தெரியாததாலும், அதனை அதிகம் பயன்படுத்தாதாலும், நமக்கு நமது மண்ணின் மகத்துவமும் விவசாயத்தின் முக்கியத்துவமும் விளங்காமல் போய்விட்டது. தண்ணீரைப் பாட்டிலில் வாங்கிக் குடிப்பதால் நதியின் அவசியம் புரியவில்லை. கலங்கலான தண்ணீரை அருந்தி நம் முன்னோர்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்ததும், சுத்தரிக்கப்பட்ட தண்ணீரை குடித்து வாழ்வில் சுருக்கமாக நாம் முடிந்து போவதும்தான், நாம் கண்ட நாகரீக மாற்றங்கள்.

பெற்றோர்களும் ஒரு பெரிய தவறைச் செய்து இந்தத் தலைமுறையை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது தங்கள் குழந்தைகள் IT நிறுவனத்தில் பணி செய்யப் போகிறது. அதற்கு ஆங்கிலம் தான் தேவை என ஆங்கிலப் பள்ளிக்கு அணிவகுப்பு செய்கிறார்கள். இந்த ஆங்கில மோகம், ஆங்கிலக் கலாச்சாரத்தை, அதாவது மேற்கத்தியக் கலாச்சாரத்தை அறிய வைக்கிறது. அதில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து சற்று தள்ளி இருக்க ஆசைப்படுகிறார்கள். அதே வேளையில் அவர்களுடைய அகச்சுதந்திரத்திலும் தலையிடாமல் தள்ளி இருக்கப் பழகிக் கொள்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட வயதில் பெற்றோர்களிடமிருந்து விலகி இருக்கவும், அந்த வயதிற்கு ஏற்ப தனது தேவையைத் தானே பார்த்துக்கொள்ளவும், உழைத்துச் சம்பாதிக்கவும் பழகிக் கொள்கிறார்கள். இதனால் வாழ்க்கை என்பது என்ன என்பதனைப் புரிந்து வாழவும் செய்கிறார்கள். இது பொறுப்புடன் நடந்து கொண்டு அனுபவிக்கும் சுதந்திரம் ஆகும்.

ஆனால் நமது நாட்டில் அனைத்துச் சுதந்திரத்தையும் அனுபவிக்கத் துடிக்கும் இளைஞர்கள், தனது தேவையை நிறைவேற்றப் பெற்றோர்களை நிர்பந்தப் படுத்துகிறார்கள். இதுதான் இந்தத் தலைமுறையின் மிகப்பெரிய சாபக்கேடு?. இதனைப் பெற்றோர்கள் நன்கு உணர்ந்து பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள். இதனை பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் இனிமேல் உங்கள் குழந்தைகளைக் கடவுள் கூட காப்பாற்ற முடியாது. உரிமைகளைக் கேட்கின்ற ஒவ்வொரு குழந்தைகளும் பொறுப்புகளையும் ஏற்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

உங்கள் குழந்தை உழைத்துச் சொந்தக் காலில் நிற்கும் வரை உங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். உங்கள் பேச்சைக் கேட்க மறுக்கும் போது உங்களை விட்டு தொலைவில் வைத்து விடுங்கள். அதனைத் தூக்கிக் கொண்டு திரிந்தால் அது விரைவில் தொலைந்து விடும். வெளிநாட்டுக் கலாச்சாரத்தைப் போல் சுதந்திரத்தை அனுபவிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு அவர்களின் பொறுப்புணர்வையும் புரிய வையுங்கள். பொறுப்பில்லாச் சுதந்திரம் புதைகுழியில் தள்ளிவிடும்.

சின்ன வயதில் சொல்வார்கள். பிள்ளைகளை ஓநாயிடம் போட்டுவிடாதீர்கள் என்று. ஆனால் இன்று நம் கண்முன்பே கலாச்சாரம் நம் பிள்ளைகளைத் தின்று கொண்டிருக்கிறது. உயிரை மட்டும் விட்டுவிட்டு ஒவ்வொன்றையும் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. நிம்மதிக்காகப் போதைப்பொருளையும், நெருக்கடி நிலையில் தற்கொலையையும் நம் குழந்தை நாடுகின்றது. இதுதான் நமது கல்வி நிலையும், பெற்றோர் வளர்ப்பும் தோற்றுப் போன இடங்கள். அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்தோம், செல்லைக் கொடுத்துக் கெடுத்தோம், அள்ளிக் கொடுத்துக் கெடுத்தோம், அரவணைத்துக் கெடுத்தோம், கண்டிக்காமல் கெடுத்தோம், கண்காணிக்காமல் கெடுத்தோம், புகழ்ந்து புகழ்ந்து கெடுத்தோம், போதைப் பொருளுக்காய் கெடுத்தோம், இதையும் தாண்டி இன்னமும் இக்கட்டான சூழ்நிலையில் வளரும் இளைய தலைமுறையை வளர்த்தெடுக்க கொஞ்சம் முயற்சி எடுங்கள். நம் தலைமுறைகள் நெருக்கடிகளால் தலைமறைவாகிறது.

ஆங்காங்கே சில அதிசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டுக்காய் மெரினாக் கடற்கரையில் கடலைக் கடந்த நம் இளம்புயல்கள், இன்று டெல்லியில் ஒன்றுகூடி அதிகாரத் திமிரில் அசைக்க முடியாது என்று நினைத்தவர்களைக் கூட அசால்டாக தூக்கி எறிந்து இருக்கிறார்கள். இன்றும் நம் இளைஞர்களிடத்தில் சக்தி புதைந்து கிடைக்கிறது என்பது புலனாகிறது. அதனை அவர்களுக்கு உணர்த்தி விடுங்கள். கேட்டுப் பார் கிடைக்காவிட்டால் கிளர்ந்து பார் கிடைக்கும்.

உங்கள் தேவை உங்கள் கரங்களில். அதனை உழைத்துப் பெறுங்கள். பெற்றோர்கள் நிழலில் படுத்துறங்கும் குழந்தைகளே சற்று வெளியே வாருங்கள். பொறுப்புடன் கூடிய சுதந்திரத்தை இந்தப் பூமிக்குச் சொல்லுங்கள். கட்சி, ஜாதி அரசியலில் காணாமல் போவதை அறவே நிறுத்துங்கள். இன்று இளைஞர் சமுதாயம் வழிகாட்டி இல்லாமலும், வாழ்ந்து காட்டுபவர்களைக் காணாமலும், தன்னிலை உணராமலும், தான்தோன்றித்தனமாகத் திரிகிறது. அதனைத் தடுத்து நிறுத்துங்கள். மொத்தத்தில் மட்டம் தட்டுவதை விட்டுவிட்டு, முதுகில் தட்டிக் கொடுங்கள் முன்னேறி விடுவார்கள். முயற்சி செய்தான் பார்ப்போமே! முயற்சி திருவினையாக்கும்.

“கருவில் அழிந்த
குழந்தைகளை விட
கலாச்சாரத்தால் அழிந்த
இளைஞர்கள் அதிகம்.”

ARCHIVES