25
Sep
2026

பிரிவு என்பது இதயத்தை அறுக்கும் துன்பவியல் நிகழ்வு. வாழும்போதே சாவைச் சந்திக்கும் வாழ்க்கை வன்முறை. அமுதாய் நினைத்து அருந்திய ஒன்று விசமாய் நம்மை வீழ்த்தும் நிகழ்வு. தவிர்க்க முடியாமல் தவிக்க வைத்து தற்கொலை செய்யாமல் தன்னைக் கொல்வது! பிரிவு இதயம் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து நிற்பது!
இந்தப் பிரிவு இலக்கியத்தில் பலவகையாகக் கூறப்படுகிறது. தூது செல்ல, பொருள் ஈட்ட, ஒதல் பிரிவு, பரத்தையர் பிரிவு, பணிக்காகப் பிரிவு, உறவினர்களைக் காணச் செல்லும் பிரிவு எனப் பல்வேறு பிரிவுகளை இலக்கியம் பேசும்.

தற்போது படிப்பிற்காகப் பணிக்காக, திருமணம் காரணமாக, கருத்துவேறுபாட்டின் காரணமாக, சண்டை சச்சரவுகள் காரணமாக, இயற்கையால் ஏற்படும் பேரிடர் காரணமாக, போர் காரணமாக, இறப்பு காரணமாக எனப் பல்வேறு காரணங்களால் நாம் பிரிவைச் சந்திக்கிறோம்.
தன்னை விட்டே தான் பிரிவதை என்றாவது நீங்கள் எண்ணிப்பார்த்தது உண்டா? மற்றவரைப் பிரிந்து நாம் தனிமரமாக நிற்கும்போது யாவருக்கும் அது தெரியும். ஆனால் நம்மையே பிரிந்து நாமே அவற்றிலிருந்து விலகி நிற்பது யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அந்தப் பிரிவுதான் உடனிருந்து கொல்லும், உயிரைத் தவணை முறையில் உறிஞ்சும் தற்காலிகத் தற்கொலையாகும்.

தன்னை விட்டுத் தானே பிரிவது எது? அதனை எப்படி உணர்வது? என்ற கேள்வி எழும் சுருக்கமாகச் சொல்லப் போனால் நினைத்த வாழ்வும் கிடைக்கவில்லை, கிடைத்த வாழ்வு நிலைக்கவில்லை. அதனால் நடைபிணமாய் நடமாடும் போது நாம் நம்மை விட்டுப் பிரிந்து போன அனுபவம் நமக்குக் கிடைக்கும். பிறருக்காக வாழவும் பிறர் நினைப்பதற்கு ஏற்றபடி வாழவும் நம்மைத் தப்பாக நினைத்துவிடுவார்களோ! என்பதற்காக எப்போதெல்லாம் நாம் வாழ முயற்சிக்கிறோமோ அப்போதெல்லாம் நமக்கான வாழ்வை நாம் இழக்கிறோம். நம்மை விட்டு நாம் பிரிந்து போகின்றோம்!
நான் என்பது நம்முடைய ஆசைகள் கனவுகள் அதனை அடையும் முயற்சிகள் அதில் அடையும் வெற்றிகள் அதில் கிடைக்கும் மகிழ்ச்சிகள் இதில் எதை இழந்தாலும் நான் என்னை இழந்துவிட்டேன் என்பதுதான் உண்மை.

நான் நினைத்த ஒருவர் நம்மைவிட்டுப் பிரிந்துபோனால் அது பிரிவுதானே! நான் விரும்பிய நானும் இல்லாமல் போனால் அதுவும் பிரிவுதானே! அதனை ஆழமாகப் பார்த்தால் அந்த வலியின் அழுத்தம் புரியும். நீங்கள் விரும்பிய நண்பன் நீங்கள் நினைத்ததுபோல் நடக்கவில்லை என்றால் உங்களுக்குள் பிரிவு ஏற்பட்டு விடுகிறது. அதேபோல்தான் நீங்கள் நினைத்தபடி நீங்களே இல்லாதபோது உங்களைவிட்டு நீங்களே விலகி விடுகிறீர்கள்! இதனால் உங்களுக்குள் பெரிய பிரிவும் ஏற்படுகிறது பிளவும் ஏற்படுகிறது.
ஒருவருடைய சின்ன வயதுக் கனவு ஒரு நல்ல மருந்துவராய் இருப்பது. அதற்குரிய கனவுகள் அத்தனையும் அவர் காண்கிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் வடிவமைக்கிறார். அவருடைய மருத்துவமனை, அவருக்குக் கிடைக்கும் வருமானம் அதனைக் கொண்டு அவர் என்ன என்ன செய்ய நினைக்கிறார் என அத்தனை கற்பனை வாழ்வையும் மனதிற்குள் வரைந்து மகிழ்ச்சியடைகிறார். ஆனால் அவருடைய தேர்வு முடிவுகள் கிடைத்த மதிப்பெண்கள், பொருளாதாரத் தடுமாற்றம், நீட் தேர்வு தோல்வி இதில் ஏதோ ஒரு காரணத்தால் நினைத்த வாழ்வு அவருக்கு அமையவில்லை. இப்போது அவருடைய தகுதிக்கு ஏற்ப ஒரு ஆசிரியராகப் பணியை ஏற்கிறார். இவர் வாழ்வில் கலந்திருந்த மருத்துவர் இவரைப் பிரிந்து எங்கோ போய்விட்டார். இனிமேல் இவர் வாழ்வில் வரவேமாட்டார். நீங்கள் இதுவரை மருத்துவராய் இருந்தீர்கள். இப்போது அவரை விட்டு விலகி நிற்கிறீர்கள்.

ஒருவர் வாழ்நாளில் தன்னோடு பயின்ற தோழி மீது தீராத காதல் கொண்டிருந்தார். இருவரும் அவர்களது காதலை எப்படிப் பகிர்வார்கள்? குடும்ப வாழ்வு எப்படி இருக்கும்? எங்கு வாழ்வார்கள்? என ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்களது வாழ்வில் ஏற்படுகின்ற தோல்விகள், சாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு இதனால் காதல் தோல்வி என ஏதோ ஒரு காரணத்தில் அவர் வேறோருவரை மணந்து போனபிறகு இவர் ஒருவேளை திருமணம் முடியாமலேயே இருந்தால் எப்போது அவர் திருமண வாழ்வில் இருந்து பிரிந்து திருமணமில்லாமலேயே தனிமரமாய் நிற்கும் அவலம் அவருக்கு ஏன் வந்தது? எப்படிப் பிரிந்தார்? ஏன் பிரிந்தார்? இதனால் அவருக்கு உண்டான வலி என்ன? உணரமுடியுமா?
ஒருவர் கிறிஸ்தவ சமயத்தில் பற்றுள்ளவர். ஆகவே அவர் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு ஒரு துறவியாக மாறி துறவற வாழ்வில் அவருடைய கனவுகளைச் சுமந்து பல்வேறு மக்களுக்குத் தொண்டாற்றி மக்களின் இதயம் கவர்ந்தவராக வாழ்ந்தார். ஆனால் அவர் ஒரு சூழ்நிலையில் தனது துறவறத்தை இழந்து பொதுநிலையை அடையும்போது துறவு அவர் வாழ்வை விட்டு ஏன் தூரமாகப் போனது?

ஒரு நேர்மையான அதிகாரி குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டு சிறைக்குச் செல்கிறார். அவரோடு இருந்த அந்த நேர்மையான அதிகாரி எப்போது எங்கே பிரிந்து போனார்?
எச்சூழலிலும் மது அருந்தாமல் கண்ணியமாக வாழ்ந்த ஒருவர் காலப்போக்கில் குடிக்கு அடிமையாகி எப்போதும் குடித்துக் கொண்டிருக்கிற ஒருவர் தொடக்கத்தில் இருந்த அந்த நல்ல மனிதரை எப்போது இந்தக் குடிகாரர் பிரிந்து வந்தார்?

எவ்வளவோ நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற ஒருவர் சட்டத்திற்கு பயந்து, அதிகாரத்திற்குப் பயந்து ஆமாம் சாமி போடும் ஆளாக எதுவும் செய்யாமல் தலைவருக்கு செம்பு தூக்கும் ஆளாக வாழ்கிறாறே! இதில் யார் அவர்? தொண்டு செய்பவரா அல்லது செம்பு தூக்குபவரா?
குடும்பத்தின் மீது, மிகுந்த பற்றுக் கொண்டு குடும்பத்தின் நலனுக்காய் ஒடி ஒடி உழைத்து உடன்பிறப்பு என்றால் உயிரைக்கூட கொடுக்கத் தயங்காத ஒரு மனிதனாய் வாழ்ந்த ஒருவன் திருமணம் முடிந்தவுடன் மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பிறந்த வீட்டுக்கே போகாமல் இருப்பதால் அந்தப் பாசக்கார மனிதன் எப்போது எப்படி அவனைவிட்டுப் பிரிந்து போனான்?

எல்லோரிடமும், அன்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற பெண். தன்னோடு பணிபுரியும் அத்தனை பேரிடமும் அன்பாகப் பழக வேண்டும் என்று நினைக்கின்றாள். ஆனால் குடும்பத்தின் நிர்பந்தத்தால் யாரிடமும் பேசாமல் எல்லோரையும் விட்டு தன்னை தனிமையாக்கிக் கொண்டவளின் உண்மையான உருவம் என்ன? அவள் யாருக்குள் ஒளிந்திருக்கிறாள்?
நாம் என்ன கற்பனை பண்ணி வைத்திருந்தோம். பள்ளியில் படித்து மதிப்பெண் எடுக்கும்போது, கல்விக்காகக் கல்லூரியில் சேரும்போது, வேலை கிடைக்கும்போது, திருமணம் முடியும்போது, நாம் நினைத்திருந்த கனவானது கலைந்து போகும்போது நமக்குள் இருந்த அந்த நான் நம்மை விட்டுப் பிரிந்து போய் விடுகிறது. இங்கு எத்தனைபேருக்கு நினைத்த வாழ்வு அமைந்திருக்கிறது? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.

ஒவ்வொருவரின் ஆசையும், கனவும் நம்மைவிட்டுக் கலைந்துபோகும் போதெல்லாம் யாரோ நம்மைவிட்டு வெகு தொலைவில் போய் விடுகிறார். இனி அவர் திரும்ப வரமாட்டார். எத்தனை முறைதான் இதயம் செத்துச் செத்து பிழைப்பது! மென்மையான இதயம் பிரிவு என்னும் வன்முறையை வரைமுறையின்றி ஏவி விடும் போது எப்படித்தான் தாங்கிக் கொள்கிறது?
இந்த உலகில் ஒவ்வொருவரும் நினைத்த வாழ்வையும் வாழ முடியாமல்! கிடைத்த வாழ்விலும் சந்தோசம் இல்லாமல்! பிறருக்காகச் சிரித்த முகத்தோடு இந்த நாடக மேடையில் நாம் நடத்தும் நாடகத்தை நாமே சிரிக்க முடியாமலும், நடிக்க முடியாமலும் கண்ணீரோடு கடந்து செல்கிறோம்!
தினந்தோறும் நடக்கும் நாடகங்கள் வெற்றியடைகிறது. நாம் மட்டும்தான் தோற்றுப்போகிறோம். தன் பிரிவை தானே தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீரில் எனது கதைகள் நனைந்து கொண்டிருக்கிறது. நானும் நகர்ந்து கொண்டிருக்கிறேன்.
– நனைந்த நினைவுகளோடு
நான் …
“பிரிவு என்பது…
இதயத்தில் விழுந்த இடி
கருவினைக் கலைத்த மடி…”