10
Oct
2026

காண்கின்ற இடமெல்லாம் நிஜக் கதாநாயகனை எங்கள் ஊடகங்கள் காட்டிக் கொண்டு இருக்கிறது. நிழல் கதாநாயகர்களைக் காட்டிக் காட்டி கற்பிழந்துபோன இந்த ஊடகங்கள் இப்போது பாவப் பரிகாரமாக முதன் முதலில் உண்மைக் கதாநாயகனை உலகிற்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. சாவின் விளிம்பின் நின்று சவமேடைக்குப் போன 180 பயணிகளை தனது வாழ்வைக் கூட இழக்கத் துணிந்து பலரது வாழ்வைக் காப்பாற்றி நின்ற உலக இரட்சகன் மனிதநேய மீட்பன் இந்தத் தேவதூதன் விமானி ஸ்மித் மச்சார்.
செப்டம்பர் 30 (2026) உறவைத் தேடி, வேலை தேடி, குடும்பத்தைத் தேடி, உல்லாசப் பயணத்திற்காக, குடும்பத்தைத் தேடி, குடும்பத்தைப் பிரிந்து பிற பணிக்காக, குடும்பத்தைக் காப்பாற்ற, உறவுகளின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்க என்று பயணிகள் ஆளுக்கொரு நோக்கிற்காக சிறகுகளை கட்டிக்; கொண்டு விமானத்தின் மூலம் விண்ணில் பறந்தார்கள். காற்று இல்லாத பகுதிக்கு மேலே கதவு திறக்காத சன்னலின் அருகே கண்களைமூடி கனவுகளில் மிதந்துகொண்டு இருக்கும்போது இவர்களின் கண்ணை மூட வைக்கும் கர்மத்தைச் செய்யத் துணை விஞ்ஞானி ஒருவன் துடித்துக் கொண்டிருந்தான்.

துபாய் அரசுக்குச் சொந்தமான ஃபிளைங் விமானம் FZ1073ற்கு அன்றைய நாளில் துணைப் பைலட்டாக இருந்தவன் ஹமாம்-அல்-ஹமாமி என்பவன். இவன் 29 வயது இளைஞன். இவனது தந்தை ஒமன் நாட்டைச் சேர்ந்தவர். தாய் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். சிரியா நாட்டில் பிறந்த ஹமாம் குடும்பத்தார் ஏமன் நாட்டில் குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வந்தார்கள். இதனால் இவனது இளமைக் காலம் சிரியாவிலும் பின்பு ஒமனிலும் கடந்தது.
ஹமாம் கல்வியை முடித்த பிறகு பிரிட்டனில் உள்ள பக்கிங்காம் ஷ்யர் நீயு பல்கலைக் கழகத்தில் தொலைதூரக் கல்வியில் விமானியாகப், போக்குவரத்து மேலாண்மைக் கல்வி பயின்றவன். அரபு அமிரகத்தில் விமானியாகப் பயிற்சி எடுத்து, பின்பு ஒமனில் பணியாற்றினான். அச்சமயத்தில் அவனுக்கு தீவிரவாத கும்பல்களோடு தொடர்பு இருந்துள்ளது. இதனை உளவுத்துறை மூலம் கண்டறிந்த ஒமன் அரசு 2024ஆம் ஆண்டு இவனைப் பணியிலிருந்து விடுவித்தது. பின்பு இவன் கடும் முயற்சி செய்து 2025 சூன் மாதம் மொராக்கோ அரசுப் பைலட்டாகப் பணியில் சேர்ந்தான். கடந்த ஜனவரி மாதம் முதல் ருயுநு ஃபிளைங் துபாய் விமானத்தில் விமானியாகப் பணிபுரியத் தொடங்கினான். இருப்பினும் தற்போது அமெரிக்கா இஸ்ரேயல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்துதலின் விளைவோ என்னவோ இவன் அந்த விமானத்தைக் கடத்த முற்பட்ட கதை பல்வேறு கேள்விகளை நமக்குள் விதைக்கிறது.

உலகமே இன்று தன் உயிரை பணயம் வைத்து பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய உன்னத கதாநாயகன் ஸ்மித் மச்சார் அவர்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மித் மச்சார் நமது இந்தியாவைச் சேர்ந்தவர். மும்பையில் வளர்ந்தவர் முதலில் விமானியாக மாற அவ்வளவு ஆர்வம் காட்டாதவர் ஒரு பயிற்சிக்குச் சென்று அதன் மீது ஆர்வம் ஏற்பட பின்பு விமானியாக பயிற்சி பெற்றார். தற்போது துபாயில் உள்ள ஃபிளைங் விமானத்தில் கேப்டனாக உள்ளார். இவர் சுமார் 11 ஆண்டுகள் ஸ்பைஸ் ஜெட்டின் விமானியாகப் பணியாற்றியவர். கடந்த 2022 ஆண்டு முதல் ப்ளைங் துபாய் விமானத்தில் பணிபுரிந்து வருகிறார்.
செப்டம்பர் 30 அன்று அரபு அமிரகத்தில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அலிவ்க்கு 180 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டது. விமானம் சீரான நிலையில் போய்க்கொண்டிருக்கும்போது சவுதி அரேபியா வான்வெளியில் பறந்து கொண்டிருக்கும்போது ஏற்கனவே திட்டமிட்ட, சதித் தொழிலை அரங்கேற்ற நினைத்த துணை விமானி அவசர உதவிக்காக முதல் உதவிப் பெட்டியைத் திறக்க வைத்திருந்த கோடாரியால் விமானி ஸ்மித் மச்சார் தலையில் தாக்குதல் நடத்தினார். அச்சமயத்தில் விமானத்தில் ஏதோ ஆபத்து என்று உணர்ந்த ஸ்மித் மச்சார் 7500 என்று கோடு எண்ணை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப விமானம் கடத்தப்படுகிறது என்று அறிவுறுத்தப்பட்டது.

பிறகு கேப்டனின் அருகில் வந்து துணைக் கேப்டன் அவரைக் கத்தியால் குத்தத் தலையிலும் இடது கையிலும் பெரிய இரத்தக் கசிவு ஏற்பட்டது. விமானி உடனே விமானத்தைக் கைப்பற்றி தனது கட்டுக்குள் கொண்டு வரப் போராடினார். மீண்டும் 7700 என்ற எண் அனுப்பப்படுகிறது. இதனால் ஆபத்து என்று உணர்ந்த இஸ்ரேல் போர் விமானங்கள் அதனைக் காப்பாற்ற உடனே புறப்படுகிறது.
இச்சமயத்தில் விமானம் நேராக 14,000 அடி செங்குத்தாக தரையை நோக்கி வந்தது. பயணிகள் அனைவரும் தனக்கு ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்தார்கள். அச்சமயத்தில் கேப்டன் கண்கள் மயங்கி சுயநினைவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தார். இருப்பினும் தன்னை நம்பிப் பயணித்துக் கொண்டிருக்கிற மக்களை எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்போடு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அந்தக் காக்பிட் கதவை விமானி திறந்துவிட்டார்.

கதவினைத் திறந்தபோது விமானியின் அலரல் கேட்க காக்பிட் கதவுக்கு அருகில் இருந்த கழிப்பறையில் இருந்து அப்போது வெளிவந்த 6 வயது சிறுமி நினா அதனைப் பார்த்து பயந்து ஒடி தனது தந்தையிடம் கூற உடனே பயணிகள் விமானியின் அறையை நோக்கி ஒடினார்கள்.
விமானியின் அறைக்கதவானது கெவ்லர் என்ற சிறப்பு வாய்ந்த பைபரால் செய்யப்பட்டிருக்கும். உள்ளே இருந்து திறக்கலாம் வெளியில் இருந்து Code மூலமாக மட்டுமே திறக்க முடியும். இதனை துப்பாக்கியால் சுட்டோ வெடி குண்டாலோ அதனைத் தகர்க்க முடியாது காரணம் பயணியாக யாரும் வந்து விமானத்தை கடத்த முடியாத பாதுகாப்பிற்காக இவ்வாறு அமைக்கப்படுகிறது.

ஸ்மித் மச்சார் அந்த அறைக் கதவைத் திறக்க முற்படும்போது துணை விமானி அவரைத் தடுக்க பலமுறை முயற்சி செய்தான். ஆனால் விமானத்தைக் கைப்பற்ற நினைத்ததால் அந்த முயற்சி தோல்வியுறுகிறது. மச்சார் மிகவும் துன்பப்பட்டு காக்பிட் கதவினைத் திறக்க வெளியில் நின்ற மக்கள் உடனே உள்ளே நுழைய ஜெய்யோன் என்பவர் உடனே விமானத்தைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறார். மற்றும் சிலர் துணை விமானியைப் பிடித்து செல் சார்ஜ் பண்ணும் வயர்களால் அவனை கைகளைக் கட்டிப்போட அங்கு உடன் பயணித்த ஒரு விமானி விமானத்தை சவுதி அரேபியா வான் வெளியின் வழியாக ஜோர்டனைக் கடந்து சவுதி அரேபியாவில் உள்ள தபுக் என்ற விமான நிலையத்தில் பத்திரமாகத் தரை இறக்கினார். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தங்கள் உயிரைக் காத்துக் கொண்டடு மகிழ்ச்சியால் ஆர்பரித்தார்கள்.
ஸ்மித் மச்சார் படுகாயத்துடன் தரையில் விழுந்து கிடந்தபோது ஜார்ஜியாவைத் சேர்ந்த பல் மருத்துவர் ஷோட்டா முசாயேவ் என்பவர் கேப்டனுக்கு 45 நிமிடங்கள் அவசரச் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினார். இருப்பினும் இரத்தக் கசிவு அதிகமாக இருந்தது T-Shirt மாறி மாறி கட்டி ஒரளவு அதனை சரிசெய்தார். வலி பொறுக்க முடியாமல் வலி நிவாரண மாத்திரைகள் கேட்டபோதும் அதனை கொடுக்காமால் அவரை உறங்கவும் விடாமல் பேசிக்கொண்டே இருந்தார். இவ்வாறு உயிரைக் காப்பாற்றி தற்போது துபாய் மருத்துவமனையில் ஆபத்தான கட்டங்களை எல்லாம் தாண்டி இன்று சீரான மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார். காயங்கள் ஆழமாக இருப்பதனால் குணமாக கொஞ்சம் நாட்கள் ஆகலாம்.

அக்டோபர் 2ந்தேதி பாரதப் பிரதமர் நமது விமானியிடம் அலைபேசியில் பேசினார். உங்களுக்காக நாடே பூசை செய்து கொண்டிருக்கிறது. காந்தி ஜெயந்தி அன்று அகிம்சையை அகிலத்திற்கே கற்றுக் கொடுத்து விட்டீர்கள் உங்களால் இந்திய நாடும் 140 கோடி மக்களும் பெருமைப்படுகிறோம் என்றார்.
இஸ்ரேல் பிரதமர் இந்த விமானத்தில் 180பேரில் 166பேர் இஸ்ரேல் பயணிகள் எங்கள் மக்களைக் காத்ததால் இஸ்ரேல், இந்தியா ஏன் உலகத்தின் கதாநாயகனே நீங்கள்தான் நீங்கள் எங்களின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் அதாவது 2027 மே மாதம் எங்களது பாரம்பரிய சோதியை இயற்ற உங்கள் பிரதமரோடு ஸ்மித் மச்சாரும் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும் அவர் உயிரைப் பணயம் வைத்து எப்படி பயணிகளைக் காப்பாற்றினார் என்பதனையும் கேட்டுத் தெரிந்து கொண்டு நெஞ்சார நன்றி கூறினார்.

விமான விபத்தைத் தடுத்து இத்தனை மக்களைக் காப்பாற்றியவர் ஸ்மித் மச்சார், அவருக்கு மருத்துவச் சிகிச்சையளித்தவர் ஜார்ஜியா பல் மருத்துவர் ஷோடா முசாயேவ், விமானியின் நிலையை பயணிக்குத் தெரிவித்த 6 வயதுச் சிறுமி நினா, விமானி அறைக்குள் சென்று விமானத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தவர் இஸ்ரேயலைச் சேர்ந்த ஜெய்யோன். மீண்டும் விமானத்தை இயக்கியவர் ஒரு விமானி ஆகிய ஒவ்வொருவரும் இறைவனைப் போல அந்த மக்களைக் காத்து நின்றவர்கள். இவர்களது ஒவ்வொரு பணியும் பயணிகளின் உயிரைக் காத்தது. இவர்கள் எல்லோரும் இறைவனா? அல்லது இறைத்தூதர்களா? அல்லது இறைவனால் அனுப்பப்பட்ட மனிதர்களா? அனைத்திற்கும் ஆண்டவனுக்கு நன்றி!.
இவ்வளவு ரணகளத்திற்கு மத்தியிலும் இது இஸ்ரேயல் தேர்தலுக்காக பிற நாடுகளில் மீது பழியைப் போடுவதற்காக அதுவே நடத்துகின்ற நாடகம் என்று கூட சிலர் விமர்சிக்கிறார்கள்.

இவையனைத்தும் ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் நீங்கள் அறிந்த செய்திதான் ஆனால் இதிலிருந்து எனக்குத் தோன்றுவது இறைவன் தன்னை நம்புகிறவர்களை எந்த உருவத்தில் வந்தாவது கட்டாயமாக வந்து காத்து நிற்பான் என்று நம்புவோம்.
மற்றொன்று மறந்தும் இதற்கு மதச்சாயம் பூசும் மடையர்களாக மாறிவிடாதீர்கள் கெடுத்தவன் ஒரு மதம், காப்பாற்றியவன் ஒரு மதம், காப்பாற்றப்பட்டவர்கள் ஒரு மதம் என்று அதன் காரணமாக மதத்தை அரசியலாக்கி நம்மை மடையர்களாக்கும் மதவாதிகளை உங்கள் மனதிற்குள் அனுமதிக்காதீர்கள். காப்பது நல்ல சக்தி அது கடவுள். அழிப்பது தீய சக்தி அது சாத்தான். எனவே அனைவரும் காக்கின்ற சக்தியாக கடவுளின் தூதர்களாகப் பிறரைக் காப்பாற்றி, காத்து வழிநடத்தி கடவுளாக! கடவுளின் தூதனாக! வாழ்ந்து வழிகாட்ட காலத்தைக் கையிலெடுத்து வாழ்வோம்! மற்றவர்களை வாழ வைக்க மரணத்தைக் கூட சந்திப்போம்!
“நமக்காக யாரும்
கண்ணீர் சிந்தலாம்
நம்மால் யாரும்
கண்ணீர் சிந்தக் கூடாது”