27

Nov

2026

தீபத்தை ஏற்றுவோம்!…

மனிதனின் வாழ்க்கையானது இயற்கையோடு இணைந்து வாழும்வரை அவனுக்குப் பாதுகாப்பாகவும், பலனுள்ளதாகவும் அமைந்தது. இயற்கையோடு இணைந்து வாழும்போது அவனது இயல்பு வாழ்க்கைக்கு தேவையானதை எல்லாம்; தனது மதி நுட்பத்தால் இயற்கையிலிருந்து தேவையான அளவு எடுத்துக் கொண்டான் அறிவு வழிநடத்தியபடி நடந்தான்.

மனிதன் இயற்கையோடு வாழும்போது அவனுக்கு இருட்டில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள வழிதேடினான் அதற்கு உரிய ஒரே வழி ஒளியை ஏற்றுவது! அவனை சுற்றி இருள் சூழ்ந்த நேரத்தில் இருட்டில் இருந்து தன்னைக் காப்பது ஒளியே என்பதால் ஒளியை இறைவனாக வழிபட்டான். மாலை நேரத்து இறைவழிபாடு என்பது ஒளியை ஏற்றுவது! அந்த இறைவன் (ஒளி) காலைவரை விழித்து (எரிந்து) இருந்து அவர்களைக் காக்கும் கடவுளே தீபம் ஆகும்.

இந்தத் தீபம் ஆபத்து விளைவிக்கும் உயிர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்காக அவற்றை நமக்கு அடையாளம் காட்டி அவற்றிலிருந்து நம்மைக் காக்கவோ, அல்லது அதனை அழிக்கவோ இரவு நேரத்தில் நம் கண்ணுக்கு ஒளியைக் கொடுக்க தீபம் ஏற்றும் திருவிழாக்கள் அரங்கேறியது. இதனால்தான் கார்த்திகை மாதம் வந்து விட்டால் ஒவ்வொருவரும் தீபம் ஏற்றுவதைச் சடங்காகவும் கடமையாகவும் செய்து வந்தார்கள்.

தீபங்கள் சில நேரங்களில் தீப்பந்தங்களாக உருமாறும். குறிப்பாக மலையோரங்களிலோ மலையின் மீதோ வாழ்கின்ற மக்களுக்குக் காட்டு விலங்குகளால் ஆபத்து ஏற்படும். அதுவும் இரவு நேரங்களில் ஆபத்தான விலங்குகளின் நடமாட்டங்களும், வேட்டையாடுதலும் இருப்பதாலும் கார்த்திகை மாதம் இருளாக இருப்பதாலும், ஊர்கூடி மலைமீது தீப்பந்தம் ஏற்றுவது வழிபாடாகவும், சடங்காகவும், கடமையாகவும் செய்து வந்தார்கள். ஏனென்றால் தீப்பந்தங்களுக்கு விலங்குகள் பயந்து ஓடும். ஆகவே பயங்கரமான, ஆபத்தான விலங்குகளிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள இரவு நேரங்களில் தீப்பந்தங்கள் ஏற்றுவதும் தீப்பந்தங்களுடன் நடமாடுவதும், வாடிக்கையாகிவிட்டது.

இப்போது நாடு முன்னேறிவிட்டது. நாகரீகம் பெருகிவிட்டது. வண்ண விளக்குகளும், கண்ணைப்பறிக்கும் ஒளிவிளக்குகளும், கணக்கற்றுப் பெருகிவிட்டன. சூரிய வெளிச்சம் வரும்போது யாரும் சுடர் விளக்கு ஏற்றுவார்களா? வண்ண விளக்குகள் கண்ணைப் பறிக்கும்போது மெழுகுவர்த்தியை ஏற்றி என்ன செய்யப் போகிறீர்கள்? இரவைக்கூட பகல்போல் மாற்றி வண்ண விளக்குகள் அமைத்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது அங்கு அகல்விளக்கை ஏற்றி என்ன செய்யப்போகிறீர்கள்?

இப்போது விளக்கு எதற்கு? அது நமக்குச் சொல்லும் பாடம் என்ன? அதனை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும்? எனச் சிந்திப்பது அறிவார்ந்த சமூகத்திற்குப் பலன் தரக்கூடிய ஒன்று! ஆனால் மதவாதிகள் இருக்கும் வரை விளக்குகளை வைத்து வியாபாரம் நடத்தத்தான் செய்வார்கள். அவர்களுக்கு வழிபாடு என்பது விளக்குகள், மலர்கள், காப்புகள், காணிக்கைகள், பரிகாரங்கள், பாவமன்னிப்புகள் இவைகள்தான் வியாபாரச் சந்தைகள் ஆகும். இவற்றில் மட்டும் விழிப்பாயிருங்கள். விண்ணுலகச் சொர்க்கங்களை நீங்களே உருவாக்கலாம். இறைவனை அடைவதற்கு இடைத்தரகர்கள் எதற்கு?

சிந்தனைகள் தெளிவாக வேண்டுமென்றால் கல்வியின் தரம் உயர வேண்டும். கல்வியின் தரம் உயரும்போது மாணவர்களின் பகுத்தறிவு வளரும். பகுத்தறிவு வளரும்போது நல்லது எது? கெட்டது எது? என்று புத்திக்குத் தெளிவாகத் தெரியவரும். மனிதன் பிரச்சனைகளைத்; தவிர்க்கவும், பிரச்சனைகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.

கல்வியைப் பெருக்க வேண்டும். அது பகுத்தறிவை வளர்க்க வேண்டும். அதற்காக அரசும், அரசு அதிகாரிகளும், ஆசிரியப் பெருமக்களும் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். ஆயினும் ஆங்கில மோகமும், மேலைக் கலாச்சாரமும் நமது மாண்பினைக் குலைத்து மதிப்பெண்ணை மட்டும் அடைவதற்குத் துடிக்கிறது. ஆனால் அடிப்படை நற்பழக்கங்களை அடியோடு அழித்துவிட்டது.

பெற்றோர்களின் அறியாமை ஆங்கிலக் கல்வி மோகம் இதனால் இன்று கல்வி வியாபாரமாகிவிட்டது. மாணவர்கள் எஜமானராகிவிட்டார்கள். ஆசிரியர்கள் வேலைக்காரர்களாகிவிட்டார்கள். கல்வி நிலையங்கள், வாடகை இல்லமாகிவிட்டது. அங்கு ஒழுக்கங்களும், ஒற்றுமை உணர்வும் மட்டும் காணாமல் போய்விட்டது. சொந்த மொழியைப் பேச முடியாமலும் ஆசிரியர் தந்த மொழியைப் புரிஞ்சுக்க முடியாமலும் பெற்றோர்களின் கட்டாயத்திற்காகவும், ஆடம்பர வேசத்திற்காகக் குழந்தைகள் தன் சுயத்தை இழந்து சுடுகாட்டு ஆவிபோல் சுற்றித்திரியும் அவலநிலைதான் எங்கும் காணப்படுகிறது.

தமிழ் வழிக்கல்வியானது தாயில்லாக் குழந்தைபோல்! ஆசிரியர்களே இல்லாமல் அரசுப்பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆங்கில மோகத்தால் குழந்தைகள் ஆங்கில வழிக் கல்விக்கு அலைமோதுவதால்தான். குழந்தைகள் இல்லா வீடுகள்போல் தமிழ்வழிக் கல்வியின் பள்ளிக் கட்டிடங்கள் பல இங்கு மலடாகி மடிந்து கொண்டிருக்கிறது.

குழந்தைகளுக்குக் கற்றலில் ஆர்வமின்மை, பெற்றோர்களின் பொறுப்பற்ற நிலை, தமிழ் வழிக்கல்வியின் அலட்சியம், அரசு கொடுக்கும் நெருக்கடி, சமுதாயத்தின் வறுமை நிலை, சாதிமத ஏற்றத்தாழ்வுகள் இதனால் பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கு வராமலும், பாதியிலேயே பள்ளிப் பயணத்தைத் தொடராமலும் நின்றுவிடுவது அதிகரித்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகள் இருக்கின்றது. 2061013010451035 என்று தொடக்கப்பள்ளி தொடங்கி மேல்நிலைப்பள்ளிகள் வரை இயங்கி வருகிறது. ஏறக்குறைய 1.11 இலட்சம் மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

பத்து 7000பேர், 101 5000பேர், 102 4000பேர் பயின்று வருகிறார்கள். இதில் என்ன வருத்தம் என்றால் நடுநிலைப்பள்ளியில் பயில்கின்ற மாணவ மாணவிகள் மேல்நிலைக்கு வரும்போது பாதியாகக் குறைந்து விடுகிறார்கள். அதாவது பாதியிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். 2025ஆம் ஆண்டு மட்டும் மாநகராட்சிப் பள்ளிகளில் 7032 குழந்தைகள் பள்ளியை பாதியில் நிறுத்திவிட்டார்கள்.

இந்தப் பாதியில் நிற்கின்ற சிறுவர்கள் மீது குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் குறிவைத்து தூக்குகிறது. இக்குழந்தைகளைப் போதையில் பழக்கி, பிச்சை எடுப்பது, களவு செய்வது, உளவு பார்ப்பது, போதைப்பொருள் விற்பது, என்ற சட்டத்திற்குப் புறம்பான சதிச் செயல்களில் ஈடுபடுத்தி வருகிறார்கள். இதனால் அரசு சிறப்புத் திட்டம் தீட்டி அதிகாரிகளின் கடின முயற்சியாலும் அயராத உழைப்பாலும் தற்போது 1066 குழந்தைகளை மீட்டு மீண்டும் கல்வியைத் தொடர ஏற்பாடு செய்துள்ளார்கள்.

எல்லாம் இலவசம் என்று சொல்லியும் இடைநிற்றல் யோசிக்க வைக்கிறது. எனவே அனைவரும் இணைந்து குழந்தைகளின் அறிவுத் தீபத்தை ஏற்றுவோம். பெற்றோரின் அலட்சியப் போக்கினைத் தடுப்போம். இதனைவிட்டுவிட்டு கல்லில் தீபம் ஏற்றுவதற்கு எதற்கு நமக்குள் கைகலப்பு?

தீபம் ஏற்ற வேண்டியது மலையில் அல்ல! நமது மனதில் ஏற்ற வேண்டும்! எண்ணெயை வைத்து ஏற்றுவதல்ல. நல்ல எண்ணங்களை வைத்து ஏற்றுவது! எனப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தத் தெய்வங்கள் உங்களை நேரில் சந்தித்து எண்ணெய் எடுத்துவரச் சொன்னது? அது உங்கள் நம்பிக்கை! இருக்கலாம். அதே நேரத்தில் அடுத்தவர்கள் நம்பிக்கையை அணைத்து விடாதபடி உங்கள் தீபத்தை ஏற்றுங்கள்.

திருவண்ணாமலை 2668 அடி, திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் மண்டபம் 1048 அடி, திருச்சி மலைக்கோட்டையில் கூட தீபம் ஏற்றுங்கள்…! சர்வே கல்லில் அதுவும் 8 அடி உயரத்தில் வெறும் 1 அடி அகலத்தில் இருக்கும் கல்லுக்கு இவ்வளவு சண்டையா? இதுதான் உங்கள் சாதனையா? சட்டம் இருக்கலாம் நீதி இருக்கலாம் அங்கு சண்டை வேண்டாமே! என்று நினைத்துப் பார்த்து நீங்கள் எழுத வேண்டாமா? தேவைப்பட்டால் திருத்தி எழுதலாமே!

நீங்கள் நினைத்தது நேர்மையாக இருந்தாலும் தவறான மனிதர்களிடம் அதைத் தந்து விடாதீர்கள்! அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு தரமற்ற செயல்களைச் செய்துவிடுவார்கள். தமிழ்நாடு தாங்காது!

வாருங்கள் தீபம் ஏற்றுவோம்! அறியாமல் இருக்கும் பாமரனிடமும், அசிங்கத்தை விதைக்கும் ஆன்மீகத்திலிருந்து விலகவும்! மனிதநேயம் காக்கப்படவும்! சமூக ஒற்றுமை ஒங்கவும், சகோதரப்பாசம் நிலைக்கவும் நாடு முழவதும், வீடுதோறும் கல்வித் தீபத்தை ஏற்றுவோம். உங்கள் கைகளில் அல்ல மனதில் ஒளியை எடுங்கள்! உங்கள் மனைகளில் ஒளிர விடுங்கள்!

“தேவைப்படும் இடத்தில்
தீபத்தை ஏற்றுங்கள்
தேவையில்லாத செயலுக்காய்
பற்ற வைப்பதை நிறுத்துங்கள்”

ARCHIVES