13

Nov

2026

வாசிப்போம்! நேசிப்போம்!

தான் கடந்து வந்த பாதையில் எல்லாம் வாசிப்போம், நேசிப்போம் என்று கற்றவர்களை வாசிக்கச் செய்து புத்தகத்தைக் கையிலெடுக்கும் போராளிகளாய் உருவாக்கிவரும் புதிய போர் முரசு கொட்டும். நெல்லை முதன்மைக் கல்வி அதிகாரி மதிப்புமிகு. சிவகுமார் அவர்களின் புதிய போர் முறையான வாசிப்போம், நேசிப்போம் இயக்கத்தைப் பற்றியதல்ல இது. வாசித்தல் பற்றி எனது பார்வையில் யோசித்ததை உங்கள் பார்வைக்கு பகிர விரும்புகிறேன்.

எழுத்துக்கள் இல்லையென்றால் மொழிகள் இல்லை. மனிதர்கள் இல்லையென்றால் உலகம் நிறைவாக இல்லை. எழுத்துக்களை மனிதர்களாக எண்ணிப்பார்க்கும் போது எழுந்த நினைவுகள் இது. மனிதனுக்குத் தலையெழுத்து என்பது அவனை மரணம் வரை நடத்திச் செல்லும்.

இங்கு எழுத்துக்களைக் கூட்டி வார்த்தைகள் அமைப்பதுபோல் இங்கு மனிதர்களைக் கூட்டி மானிடச் சமூகம் அமைகிறது. சில எழுத்துக்கள் தனியாக நின்றாலே பொருள் தரும் (எ.கா) தை, கை, மை, ஆ, மா. அதுபோல சில மனிதர்கள் தனித்து நின்றாலும் புகழ் பெறுவார்கள் புத்தன், இயேசு, காந்தி, காமராஜர் போன்றோர்கள்.

சில எழுத்துக்கள் கூட்டு எழுத்துக்கள் கௌ, வெள இதுபோன்ற எழுத்துக்கள் சேர்ந்து இருந்தால்தான் பொருள் தரும். கெ, ள, இப்படிப் பிரித்தால் பொருள் அற்றுப் போய்விடும். அதுபோல்தான் மானிடத்தில் குடும்பங்கள்! அவர்கள் சேர்ந்து இருக்கும் வரைதான் புகழ் இருக்கும் பொருள் இருக்கும். பிரிந்துவிட்டால் மதிப்பற்று மான்பிழந்து போய்விடுவார்கள்.

சில எழுத்துக்கள் சேர்ந்தால் பொன்மொழிகளாக உருவாகும். அதேபோல் சில மனிதர்கள் இணைந்தால் அவர்கள் செய்யும் செயல் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய புண்ணியச் செயல்களைச் செய்து முடிப்பார்கள்.

சில எழுத்துக்களைச் சேர்ந்தால் கெட்ட வார்த்தையாகவோ! சபிக்கப்பட்ட வார்த்தையாகவோ! இருக்கும். அதே போன்றுதான் சில மனிதர்கள் சேர்ந்து விட்டால் அடுத்தவர்களைக் கெடுக்க, அசிங்கப்படுத்த, அவமானப்படுத்தவும் அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள்!

சில எழுத்துக்கள் சேர்ந்தால் பண்ணாகும், கவிதையாகும். அதேபோல் சில மனிதர்கள் சேர்ந்தால் அவர்களுடைய பேச்சும், செயலும் மற்றவர்களின் மனம் கவரும் மகத்தான செயலாக அமையும்.

சில எழுத்துக்கள் இணைந்தால் மந்திரங்களாக ஒலிக்கும் இறைவனைத் துதிக்கும். அதேபோல் தான் சில மனிதர்கள் இணைந்தால் எப்போதும் கடவுளைத் துதித்துக் கொண்டிருப்பார்கள் இறையடியார்களாகவும் இருப்பார்கள்.

சில எழுத்துக்கள் தனியாக வராது. சில எழுத்துக்களோடு இணைந்துதான் வரும். குறிப்பாக ல, ர, ற என்ற எழுத்துக்கள் அ, இ, உ என்ற எழுத்துக்களின் துணையோடுதான் வரும். அதுபோல இங்கு சில மனிதர்கள் சுயமாக வாழாமல் அடுத்தவர்கள் தயவிலே வாழ்வார்கள். அடுத்தவர்கள் துணையோடு, அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு அடிமையாய் வாழ்பவர்கள் இதில் அதிகமாகப் பெண்கள்தான் இருப்பார்கள். நமது சமுதாயத்தில் சுயமாகச் சிந்திக்காமல் ஆண்களை அனுசரித்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அடிமைகளாக! விழிப்புணர்வு உள்ளவர்கள் விடுதலைப் பெண்கள் ஆகிவிடுகிறார்கள்.

ற், என்ற புள்ளி வைத்த எழுத்திற்குப் பக்கத்தில் எந்தப் புள்ளி வைத்த எழுத்துக்களும் வராது. அதேபோல் தான் சில மனிதர்கள் யாரோடும் சேர்ந்து வாழமாட்டார்கள். சுயநலவாதிகள்! தனக்கு எதிராக யாரும் வளர்ந்துவிடக்கூடாது என நினைத்து அடுத்தவர்களை வளரவிடாமல் தடுப்பதிலேயே குறியாய் இருப்பார்கள். சிலரின் தாழ்வு மனப்பான்மையும், சாதி, மதம், பணம், பட்டம், அந்தஸ்து என்ற வெறியால் யாரையும் தன்னோடு இணைத்துக் கொண்டு வாழமாட்டார்கள்.

சில எழுத்துக்களைக் கூட்டினால் இலக்கிய வார்த்தைகளைப் போன்று இருக்கும். அவர்கள் இனிமையானவர்கள்தான். ஆனால் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அவர்களைப் பற்றி புரிந்தவர்கள் நம்மிடம் சொல்லி அதன் மூலமாகத்தான் அவர்களை நாம் தெரிந்து, புரிந்து அன்பு செய்ய முடியும். இனிமையானவர்கள் ஆனால் எளிதில் அன்பு செய்ய முடியாதவர்கள். நமது முயற்சி இல்லையென்றால் அவர்கள் நம்மால் புரிந்து கொள்ள முடியாமலும், அன்பு செய்ய முடியாமலும் அவர்கள் நமக்கு எப்போதும் அந்நியர்களாகவே இருப்பார்கள்.

எழுத்துக்களில் இரட்டைக் கிளவி என்பதும் உண்டு அது ஏதோ சொல்ல வருவது போல் தோன்றும். ஆனால் வேறு ஒரு வார்த்தையை வலுச்சேர்க்கும் தமக்கென்று எந்தப் பொருளும் கிடையாது. அதுபோல்தான் சாதி, மதம், கட்சி, ரசிகர்கள் கூட்டம் என்று பயங்கர ஆர்பரிப்பாக சில மனிதர்கள் சேர்ந்து இருப்பார்கள். ஆனால் இவர்களால் தனக்கோ, பிறருக்கோ எந்தப் பயனும் கிடையாது. சலசல, வழவழ, பளபள என்ற வார்த்தைகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

சில வார்த்தைகள் சேரும்போது அடுக்கு மொழியாக வரும். அது கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அதுபோல்தான் சில மனிதர்கள் ஒன்று இணைந்தால் எந்த வேறுபாடும் இன்றி ஏற்றத்தாழ்வுகள் இன்றி, பணிசெய்யும் இடத்தால், வசிக்கும் இடத்தால் ஒன்றிணைந்து உடன்பிறப்புகளை விட நமக்கு உயர்ந்து நிற்பார்கள்.

எழுத்துக்களில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று உண்டு. அதுபோல்தான் மனிதர்களில் மென்மையானவர்கள், வன்மையானவர்கள், மிதவாதிகள் என்று நமது குணங்களை வைத்துப் பிரிப்பார்கள். நீங்கள் எவராய் வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் உண்மையுள்ளவர்களாகவும் நன்மை செய்கிறவர்களாகவும் இருங்கள்.

எழுத்துக்களில் சில துணை எழுத்துக்கள் என்று உண்டு இவை தனக்கென எந்தப் பெருமையையும் வைத்துக் கொள்ளாமல் தான் சார்ந்து இருக்கிற எழுத்துக்களுக்குப் பொருள் சேர்க்கும். அதேபோல் இங்கு பலர் தனக்கென்று எந்தப் பெருமைக்காகவும் உழைக்காமல் தான் சார்ந்து இருக்கிறவர்களுக்காக உயிரையும் கொடுப்பார்கள்.

சில எழுத்துக்கள் சேரும்போது ஆச்சர்யக்குறி! சில எழுத்துக்கள் சேரும்போது கேள்விக்குறி! சில எழுத்துக்கள் வரும்போது முற்றுப்புள்ளி! இதுபோல் சிலரின் சேர்க்கை ஆச்சர்யத்தைக் கொடுக்கும். சிலரின் சேர்க்கை சிந்திக்க வைக்கும். சிலரின் சேர்க்கை நமக்கு ஒரு நிறைவான முடிவினைத் தரும்.

சில எழுத்துக்கள் சேர்ந்து இருந்தாலும் தனித்து இருந்தாலும் நமக்கு எந்தப் பொருளும் தெரியாது. காரணம் அது நமக்கு அறியாத, தெரியாத மொழியாக இருக்கும். அதுபோல் நமது வாழ்க்கைப் பயணத்தில் தெரியாத புரியாத ஆயிரக்கணக்கான மனிதர்களை சந்தித்துக் கொண்டேதான் பயணிக்கிறோம். அவர்களை நமக்குத் தெரியாது. நம்மைப் பற்றி அவர்களுக்குப் புரியாது. இதுதான் நாம் ஒவ்வொருவருடைய தினசரி வாழ்க்கைப் பயணம்.

எழுத்துக்களை நாம் வாசிப்போம், நமது எண்ணங்களை நேசிப்போம். சில எழுத்துக்கள் சேர்ந்து நமக்குப் பெயரைத் தந்தது. இது நமது பெற்றோர்கள் என்று நினைத்துக் கொள்வோம். சில எழுத்துக்கள் சேர்ந்து நமக்கு ஊர் பெயரைத் தருகிறது. சிலர் சேர்ந்து நமக்குப் படிப்பு, பட்டம், பதவி கொடுத்துள்ளார்கள். சில எழுத்துக்கள் சிறப்புப் பட்டங்களாக நமக்கு முன்பின் நின்று நமக்கு மிகுந்த பெருமையைத்தரும். இது நம்மைச் சுற்றியுள்ளவர்கள், குழந்தைகள், குடும்பம், உறவுகளாலும் நாம் பெருமைப்படுகிறோம்.

இப்போது சொல்லுங்கள் நீங்கள் யார்? யாரோடு சேரப்போகிறீர்கள்? என்ன பலனைத்தரப் போகிறீர்கள்? சிந்தித்துப்பாருங்கள்!

எழுத்துக்கள் எனக்குச் சொல்வதென்ன? தனித்து நின்றாலும் சேர்ந்து நின்றாலும் பலன் கொடுப்போம். எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாய் இருப்போம். நல்லவர்களோடு இணைந்திருப்போம். தீயவர்களைவிட்டு விலகியிருப்போம்! வாயிலிருந்து வருவதெல்லாம் வாழ்த்துக்களாக இருக்கட்டும்! சபிக்கின்ற வார்த்தைகளைச் சாகடிப்போம்! தரம்கெட்ட மனிதர்களிடமிருந்து தள்ளி இருப்போம். ஆயுத எழுத்துக்களை பயன்படுத்தாமல் இருப்போம். வாருங்கள் வாசிப்போம். பிறர் எளிதில் வாசிக்கும் படியாகவும் நம் வாழ்க்கையை அமைப்போம். நம் வாழ்க்கையின் அன்பு பிறரால் நேசிக்கப்படட்டும் வாருங்கள் வாசிப்போம்! நேசிப்போம், பிறர் நேசிப்பதையும் நம் வாழ்க்கையாய் வாசிப்போம்!

“சாலை மனிதர்களை வாசிப்போம்
சாகும் வரை யோசிப்போம்!
பிறரை அன்பு செய்ய…
பிறரால் அன்பு செய்யப்பட…”

ARCHIVES