08

Mar

2026

மகளீர் தினம்…

மார்ச் – 8

மகளிர் தினம் வருகிறது கருவிலே ஆணாதிக்கத்தை விதைத்து விட்டு பெண்களை அடக்கி ஆள கட்டுப்பாடுகளைக் கொடுத்துவிட்டு பெண் பெருமை பேசும் பித்தர்கள் பெருகிவிட்டார்கள். பெண்ணியம் பேணுகிறீர்களோ இல்லையோ! இந்த ஆணாதிக்கத்தை அப்புறப்படுத்துங்கள். மதச்சடங்குகளை மறுபரிசிலனை செய்யுங்கள். கற்பைக் காப்பாற்ற பெண்மையை கொல்கின்ற உண்மைகளை உணர்த்துங்கள். ஆண்-பெண் உறவுகளை அசிங்கப்படுத்தாதீர்கள் உறவுகளின் புனிதத்தை உணர்த்துங்கள். அதன்பிறகு மனம் திறந்து மகளிர் தினம் கொண்டாடலாமே!

மகளிர் தினம் வருகிறது இனி எல்லா இடங்களிலும் பெண்ணியம் பற்றிய பேச்சு எதிரொலிக்கும். பெண்கள் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார்கள். கதைகள், கவிதைகள், கட்டுரைகள் பெண்களைப் பற்றி இறக்கை கட்டிப்பறக்கும். பெண்களை மதிக்காமல் இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் கல்லறையில் தூவப்படுகின்ற பூக்களுக்குச் சமம். பெண்கள் தினம் வேண்டாம் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும்.

மகளிர் தினத்தைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை இதனை அனுபவியுங்கள், ஆராயாதீர்கள் சில தொடும். சில சுடும். இருப்பினும் கற்பனையே! இது விவாதத்திற்கல்ல பாடத்திற்கு…!

ஒரு பெரிய கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாட எண்ணுகிறார்கள். ஆகவே அக்கல்லூரியின் பலத்தையும், வளத்தையும் காட்ட நினைத்த கல்லூரி நிர்வாகம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத, நெருங்க முடியாத ஒரு தலைவரை அழைத்து வந்து தலைமை ஏற்க வைத்து இந்த உலகத்தையே உற்றுப் பார்க்க வைக்க வேண்டும் என நினைத்து ஆலோசனைக் கூட்டம் கூட்டி முடிவு எடுக்கிறார்கள்.

முதலில் அவர்கள் இயேசுவிடம் சென்று மகளிர் தினத்திற்கு நீங்கள் தான் தலைமை தாங்க வேண்டும் என அழைக்க, அவரோ சிறதுநேரம் யோசித்துவிட்டு மன்னித்துவிடுங்கள் ஒருமுறை நான் பணியில் இருக்கும் போது எனது தாய் எனைச் சந்திக்க வந்தார்கள். அவர்களைப் பார்த்து நீங்க மட்டுமா? இங்கு இருக்கிற அனைவரும் எனக்குத் தாய்கள்தான் உங்களுக்கு மட்டுமல்ல இந்த உரிமை? என்று வருந்தும்படி பேசிவிட்டேன்.

மற்றொரு முறை ஒரு பெண் நம்பிக்கையோடு என்னிடம் வந்து எனக்கு இரங்குங்கள் என்று கேட்டபோது பிள்ளைகளுக்கு உரியதை நாய்களுக்குப் போடக் கூடாது என்று முகத்திலடித்ததுபோல மரியாதை குறைவாகக் கூறிவிட்டேன். ஆகவே எனக்கு பெண்களை மதிக்கவில்லையோ என்ற வருத்தம் இருக்கிறது. மேலும் நான் திருமணம் முடிக்காதவன் ஆகவே நான் தலைமையேற்பது பொருத்தமாக இருக்காது எனது வளர்ப்புத் தந்தையிடம் சென்று கேட்டுப் பாருங்களேன் என்றார்.

உடனே அங்கு வந்த அவரின் வளர்ப்புத் தந்தை சூசையிடம் சென்று கேட்க அவர் எல்லாம் தெரிந்தும் என்னிடம் வந்து கேட்கறீர்களே? நானோ ஒரு சமயத்தில் மனைவியையே சந்தேகப்பட்டவன் என்னைப் பொறுத்தமட்டில் தனது மனைவியைச் சந்தேகப்படுகிற மாபாதகன், அவனது வாழ்நாள் முழுவதும் தினம் ஒரு பெண்ணைக் கெடுத்துக் கொடூரமாகக் கொல்வதற்கு சமமானவன். ஆகவே எனக்கு எந்தத் தகுதியுமில்லை என்னை விட்டுவிடுங்கள் என்றார்.

அருகில் பணிசெய்து கொண்டிருந்த இயேசுவின் தாய் மரியாளைக் கேட்டார்கள் ஐயையோ, நான் இதோ அடிமை என்று அடங்கியவள் அப்படிப்பட்டவள் பெண்ணியம் பேசினால் பொருத்த மற்றதாக இருக்கும் என்னை விட்டுவிடுங்கள் என்றாள்.

உடனே நபிகள் நாயகத்தைச் சந்திக்கச் சென்றார்கள். அவரோ நான் ஒரு விதவைப் பெண்ணை அதுவும் வயதில் மூத்த பெண்ணை திருமணம் முடித்தவன். இங்குள்ளவர்கள் அவர்களுக்கு என்று ஒரு சட்டத்தை வகுத்து அதன்படி நடப்பவர்களே! நாங்கள் தான் நல்லவர்கள் என்று நினைப்பார்கள். இரக்கம், அன்பு, உதவி எல்லாம் இங்கு நடிப்புத்தான். ஆகவே இந்த நாடக உலகில் நடிப்பினை நம்பும் இந்த மூடர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

உடனே புறப்பட்டு அயோத்தி சென்றார்கள். இராமனைச் சந்தித்து நீங்கள் மகளிர் தினத்திற்குத் தலைமை ஏற்க வேண்டும் என்றார்கள். அவரோ அசட்டுத் தனமாகச் சிரித்துவிட்டு என்னை நம்பி காட்டுக்குள் வந்த சீதையையே இடையிலேயே பறிகொடுத்துவிட்டேன். பலரின் உதவியோடு மீட்டெடுத்தபோதும் அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு தீக்குளிக்க வைத்தேனே! இது எவ்வளவு பெரிய பாவம்! கணவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் தெறிக்கும் நெருப்பைவிட எரிக்கும் நெருப்பு எவ்வளவோ மேல்! என்னைப் போன்ற கணவர்களுக்கு இந்தத் தகுதி கிடையாது என்றார்.

அருகில் இருந்த இலட்சுமணனிடம் கேட்டதற்கு அண்ணன்மேல் உள்ள பாசத்தால் கட்டிய மனைவியை இடையிலேயே விட்டுவிட்டு ஒடிவந்த நான் எப்படி? வேண்டாங்க என்றார். தருமனிடம் சென்றபோது ஏங்க கேலி செய்கிறீர்களா? நானோ மனைவியை வைத்து சூதாடியவன் எனக்கு மன்னிப்பு உண்டா? என்று மனம் வருந்திக் கொண்டிருக்கிறேன் விட்டுவிடுங்கள்.

கண்ணனைக் கேட்டோம் அவனோ எனைக் காதல் மன்னன் என்பார்கள்! என்றான். முருகனைக் கேட்டோம் நான் வள்ளியை ஏமாற்றித் திருமணம் செய்தவன் என்பார்கள் என்றான், சிவனைக் கேட்டோம் எங்களுக்குள் சிறிய சண்டை சிவன் பெரிதா? சக்தி பெரிதா? என்ற சண்டை இன்னும் ஒயவில்லை என்றார்.

புத்தனைக் கேட்டோம் நானே மனைவியை விட்டுவிட்டு இரவோடு இரவாக ஒடிவந்தவன் என்றான். ஆதிமனிதன் ஆதாமைக் கேட்டோம். நான் கடவுளாக ஆசைப்பட்டு என் மனைவி எடுத்த முயற்சியை அவள் தவறு செய்ததாக ஆண்டவனிடமே புகார் சொன்னவன் நான் என்றான்.

காந்தியைக் கேட்டால் என் மனைவியின் மனதைப் புரிந்து கொள்ளாமல் மலம் அள்ள வைத்தவன் என்றார். பாரதியைக் கேட்டால் கடைசிவரை அவளைப் பைத்தியமாக்கியவன் நான் என்றார். காமராசர், தேவர்மகன் இருவரும் நாங்கள் திருமணம் முடியாதவர்கள் என்றார்கள்.

இப்படியே பலநாள் அலைந்து பலபேரைச் சந்தித்து ஏறக்குறைய தெய்வங்களே தெளிவாகச் சொன்னது இன்னும் பெண்மை மதிக்கப்படவில்லை பெண்ணியம் பேணப்படவில்லை என்பதுதான்.

என்னைப் பொறுத்தமட்டில் வயதுவந்த ஒவ்வொரு ஆணுக்கும் பகலில் வேலைக்காரியாகவும், இரவில் விபச்சாரியாகவும் வாழும் ஒரு பெண் மனைவி என்ற பெயரில் கல்யாணம் என்ற கூத்தில் கண்டிப்பாக வேண்டும் என்ற அயோக்கியத்தனம் இருக்கும்வரை இந்தப் பூமியில் பெண்ணியம் வளர வாய்ப்பே இல்லை.

அழகை முழுவதும் அனுபவிக்கத் துடிக்கிற ஆண்கள் இருக்கிற வரையில், மகளிர் தினம் விழாவாகத்தான் இருக்கும். ஒரு விடியலாக இருக்காது. ஊர் உலகத்திற்காக தன் மனைவியின் கற்பைக் காப்பாற்றத் தீக்குளிக்கச் சொல்லும் இராமர்கள் இருக்கும்வரை தன் மனைவியையே சந்தேகப்படுகின்ற ஆண்மையற்ற ஆண்கள் குடும்பத்தலைவராக இருக்கும் வரை, சாதியைக் காப்பாற்ற தன் மகளை ஆணவக்கொலையில் அழிய வைக்கின்ற தகப்பன்கள் இருக்கும் வரை, மகளிர் தினம் என்பது இறந்த குழந்தைக்குப் பாடும் தாலாட்டுத்தான் இருக்கும். அதனால் எந்தப் பயனும் இல்லை.

ஆகவே இந்த மகளிர் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?, அதில் யாரைத் தலைவராக அழைக்கலாம்? அவர்கள் எந்த வகையில் பொருத்தமானவர்கள்? உங்களுக்கு இவ்விழாவிற்கு தலைமைத் தாங்கவும் வழிகாட்டவும் தகுதி இருக்கிறதா? இருந்தால் தட்டிக் கொடுங்கள் உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

ஒவ்வொருவரும் ஒன்றை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள் அம்மா?, அக்கா, தங்கை, மனைவி, மகள், தோழி என்ற வரிசைகள் தரமாக இருந்தால் நாம் பெண்களை மதித்து நடக்க நமது வாழ்வில் அது உரமாக இருக்கும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கலாம். உங்களின் பலத்தால் எத்தனை பெண்கள் வெற்றியைப் பெற்று இருக்கிறார்கள். சிந்திப்போம்! செயல்படுவோம்!.

இறைவா சந்தேகப்படுகின்ற மனிதர்களுக்கு மனைவியோ, மகளோ இருந்தால் எடுத்துவிடு! இல்லையென்றால் அவர்கள் நிதமும் நெருப்பில் எறிய வேண்டியதிருக்கும். இரக்கப்படு!

“சந்தேகத்தோடு
பார்ப்பவனுக்கு
சம்மனசும்
சாத்தானாகத் தெரியும்…”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES